இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1326



உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது

(அதிகாரம்:ஊடலுவகை குறள் எண்:1326)

பொழிப்பு (மு வரதராசன்): உண்பதைவிட முன் உண்ட உணவு செரிப்பது இன்பமானது; அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.

மணக்குடவர் உரை: உண்பதினும் உண்டது அறுதல் உடம்பிற்கு இன்பமாம்: அதுபோலக் காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல் இன்பமாம்.
பசியினால் உண்ணும் உணவு இன்பந்தருவது போல ஊடலினால் கூடல் இன்பந் தரும் என்றவாறு.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) உணலினும் உண்டது அறல் இனிது - உயிர்க்கு, மேலுண்பதனினும் முன் உண்டது அறுதல் இன்பந்தரும்; காமம் புணர்தலின் ஊடல் இனிது - அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தலினும் முன்னைத் தவறு பற்றி ஊடுதல் இன்பம் தரும்.
('காமத்திற்கு' என்புழிச் சாரியையும் நான்கனுருபும் விகாரத்தால் தொக்கன. பசித்துண்ணும்வழி மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம்; அது போல, அகன்று கூடும்வழி ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம் எனத் தன் அனுபவம் பற்றிக் கூறியவாறு.)

சி இலக்குவனார் உரை: உண்பதைவிட உண்டது செரித்தல் இன்பம் தருவது; அது போலக் காதல், கூடுதலைவிட ஊடுதலில் இன்பம் தருவது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது.

பதவுரை:
உணலினும்-உண்ணுவதை விட; உண்டது-உண்ணப்பட்டது; அறல்-அற்றுப் போதல். (செரித்தல்); இனிது-இன்பம் தருவதாகும்; காமம்-காதல்; புணர்தலின்-கூடலைக் காட்டிலும்; ஊடல்-ஊடுதல்; இனிது-நன்று.


உணலினும் உண்டது அறல்இனிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உண்பதினும் உண்டது அறுதல் உடம்பிற்கு இன்பமாம்;
மணக்குடவர் குறிப்புரை: பசியினால் உண்ணும் உணவு இன்பந்தருவது போல.
பரிப்பெருமாள்: உண்டலினும் உண்டது அறுதல் உடம்பிற்கு இன்பமாம்:
பரிப்பெருமாள் குறிப்புரை: பசியினால் உண்ணும் உணவு இன்பம் தரும்.
காலிங்கர்: உண்டலினும் உண்டது அறுதல் உடற்கு இன்பம் ஆவது:
காலிங்கர் குறிப்புரை: பசித்து உண்டான உண்ணும் உணவு இன்பம் தருவது போல.
பரிமேலழகர்: (இதுவும் அது.) உயிர்க்கு, மேலுண்பதனினும் முன் உண்டது அறுதல் இன்பந்தரும்; [அறுதல்-செரிமானம் ஆதல்]

'உண்பதினும் உண்டது அறுதல் இன்பந்தரும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உண்பதைவிட உண்டது செரித்தல் இன்பம்', 'உண்பதைக் காட்டிலும் உண்டது செரித்தல் ஒருவர்க்கு இன்பம் பயக்கும்', '(உணவு அனுபவத்தில் மறுபடியும்) உண்பதைவிட முன் உண்டது சீர்ணித்துவிடப் (பொறுத்திருப்பது) நல்லது', 'சாப்பிடுவதிலும் சாப்பிட்டது செரித்தல் இனிதாதல் போல' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உண்பதைவிட உண்டது செரித்தல் இன்பமாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

காமம் புணர்தலின் ஊடல் இனிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோலக் காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல் இன்பமாம்.
மணக்குடவர் குறிப்புரை: ஊடலினால் கூடல் இன்பந் தரும் என்றவாறு.
பரிப்பெருமாள்: அதுபோலக் காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல் இன்பமாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பசியினால் உண்ணும் உணவு இன்பம் தரும். அதுபோல ஊடினால் கூடல் இன்பந் தரும் என்றவாறு.
காலிங்கர்: அதுபோலக் காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல் இன்பம் ஆம்.
காலிங்கர் குறிப்புரை: ஊடினால் கூடல் இன்பம் தரும் என்றவாறு.
பரிமேலழகர்: அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தலினும் முன்னைத் தவறு பற்றி ஊடுதல் இன்பம் தரும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'காமத்திற்கு' என்புழிச் சாரியையும் நான்கனுருபும் விகாரத்தால் தொக்கன. பசித்துண்ணும்வழி மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம்; அது போல,அகன்று கூடும்வழி ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம் எனத் தன் அனுபவம் பற்றிக் கூறியவாறு. [இன்சுவைத்து-இனிமையாகிய சுவையைத் தருவது; ஆராதது - தணியாதது; பேரின்பத்தது - அளவு கடந்த இன்பத்தைத் தருவது]

'அதுபோலக் காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல் இன்பமாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமம் சேர்தலைவிடப் பிணங்குதல் இன்பம்', 'அதுபோலக் காமத்திற்கு மேலும் புணர்தலினும் ஊடுதல் ஒருவர்க்கு இன்பம் பயக்கும்', 'அதுபோல, காம இன்பம் (அனுபவத்தில் முன் புணர்ந்த அலுப்பு தீர்ந்துவிடப்) பிரிந்திருப்பது நல்லது', 'காமவின்பத்திற்குப் புணர்தலைப் பார்க்கிலும் பிணக்கம் நன்றாகின்றது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

காமஇன்பத்திற்குப் புணர்தலைவிட ஊடுதல் நன்றாகின்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உண்பதைவிட உண்டது செரித்தல் இன்பமாகும்; காமஇன்பத்திற்குப் புணர்தலைவிட ஊடுதல் நன்றாகின்றது என்பது பாடலின் பொருள்.
உணல் காமத்துப்பாலில் எப்படிப் பொருந்துகிறது?

பசித்துப் புசி; நெடிது ஊடிக் கூடு.

முன்னுண்டது செரித்தலே உண்பதைக் காட்டிலும் இன்பமாகும்; புணர்தலுக்கு முன் ஊடுதல் மிகுந்த இனிமையானது,
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாகத் தொலைவு சென்றிருந்த கணவன் நீண்ட இடைவெளிக்குப் பின் இல்லம் திரும்பியுள்ளான். அவன் காதல்மிகுதி கொண்டிருப்பான் எனத் தெரிந்திருந்தும் தலைவி அவனுடன் உடனே கலவாமல் அவன்மேல் பிணக்கம் கொண்டவளாகக் காட்டிக் கொண்டிருக்கிறாள். 'அவரிடம் ஒரு தவறும் இ்ல்லையாயினும், ஊடலால் அவருடைய முழு அன்பைப் பெறுவேனே என்பதால்தான் ஊடுகிறேன்' என்று அவள் கூறுகிறாள். ஊடற்பூசலால் வெறுப்புற்று, காதலரது நல்லன்பு குறையலாம் என்றாலும், அச்சிறுசண்டை, சுவைக்கத்தக்கதாக உள்ளது என்கிறாள். ஊடுதலைவிட துறக்க உலகம் (சொர்க்கலோகம்) இன்பம் தரவல்லதோ? என வினவி ஊடலை இன்புற்று மகிழ்கிறாள் காதலி. தழுவவரும் காதலனை விலகி விலகிச் செல்கிறாள்; அதில் மிகுந்த இன்பம் காண்கின்றனர்.

இப்போது:
உண்பதற்கு பசி நல்லது; ஊடல் மிகுவிக்கும் காதற்பசியும் இனிமையாம். புணர்ச்சியினும் ஊடல் நன்று. நன்றாகப் பசி வந்தபின் உண்பது இன்பமளிக்கும். பசிக்கும் முன்பே உண்பதால் முன்பு உண்ட உணவு செரிக்காத நிலையில், புதிய உணவு கலந்து அது செரிமானப் பாதிப்பையும் நோய்களையும் உண்டாக்கும்; புதிதாகச் சாப்பிடுவதும் சுவை தராது. பசி எடுக்க வேண்டுமென்றால் முன் உண்டது செரிக்க வேண்டும். உண்டது செரித்தால், பின் உண்பது இனிமையாய் இருக்கும். அதுபோல கூடல் இன்பம் சிறப்பதற்கு, முதலில் ஊடல் உவகை பெற்று காதற்பசியை ஏற்படுத்துதல் நலம்.
காமத்தின் சிறந்த பகுதி புணர்ச்சி அல்ல; ஊடல் ஆகும். இயல்பானநிலையில் புணர்வு நீடிப்பது தோராயமாக ஏழு மணித்துளிகள்தாம். எனவே புணர்வு மட்டுமே குறிக்கொண்டால் துய்க்கும் காமஇன்பம் மிகச்சிறிதளவே ஆகி முற்றுப் பெற்றுவிடும். நீண்ட நேரம் பாலியல் நுகர்வு இன்பம் காணவேண்டும் என்றால் ஊடலில் மிகையாக ஈடுபடுவது நன்று. இதனால்தான் ஊடலில் கிடைக்கும் மகிழ்ச்சி கூடலில் காணும் இன்பத்தை விடவும் மிகையாம் என்கிறது பாடல்.
ஓருயிர் ஈருடலாய்க் காதலர்கள் ஒருவரோடொருவர் பின்னிப் பிணைந்து, உடலென்னும் மொழியால்-மெய்யுறு புணர்ச்சியால், தம் காதலை வெளிப்படுத்துதல் இனிமையானதுதான். ஆனால் கூடுவதை விட அதற்கு முன் ஊடுவது மிக இனிது. இங்கு ஊடுதல் என்பது உணர்தலையும் குறிக்கும். ஊடுதலில் தலைவி பிணக்கங்கொண்டு தழுவ வந்த காதலனை நீங்கிச் செல்வாள். முன் நிகழ்ந்த தவறுகளைச் சுட்டிக்காட்டுவர். தொடரும் உணர்தலில் தலைவன் காதலியிடம் தண்ணளி செய்து பணிமொழி பகர்வான், தொட்டுப் பயில்வான். இவை ஒருவர்மேல் மற்றொருவர் அக்கறை காட்டுவதாகவும் அமையும். இது இரவு முழுவதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கும். அதே சமயம், ஊடல் முடிந்து மீண்டும் ஆரத் தழுவிக் கொள்ள, உடலும் உள்ளமும் மீண்டும் ஒன்று சேரத் தவிப்போடு காத்திருப்பர். ஊடல் நடந்துகொண்டிருக்கும்போது கூடுதற்கான காலத்தையும் நினைந்து கொண்டிருப்பர். இவ்வாறு நெடிய ஊடல் நிகழ்வுகள் நடக்கும். அதன் பின்வரும் கூடல் தணியாததும் பேரின்பம் தருவதாகவும் இருக்கும். கூடிக்களித்தலைவிட ஊடித்திளைத்தல் நல்லின்பம் நல்கும். ஆதலின் 'புணர்தலின் ஊடல் இனிது' எனப்பட்டது. ஊடலுக்கும் கூடலுக்கும் இன்பத்தில் வேறுபாடுண்டு எனச்சொல்லப்பட்டாலும், காமத்திற்கு அவ்விரண்டுமே இன்றியமையாதனவாம்.

உணல் காமத்துப்பாலில் எப்படிப் பொருந்துகிறது?

இக்குறளில் இரண்டு கருத்துகள் இடம் பெற்றுள்ளன. 'காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது' என ஒரு கருத்தும் அதற்கு உவமையாக, எவரும் நினைவில் வைத்துக் கொள்ளத்தக்கதாக, 'உண்பதை விட முன் உண்ட உணவு செரிப்பது இன்பமானது' என மற்றொரு கருத்தும் இடம் பெற்றுள்ளன. உண்டல் பற்றிய கருத்து பால் மாறி இங்கு கூறப்பட்டிருக்கிறதா? இவையிரண்டினையும் ஒருங்கே ஏன் கூறப்பட்டது?

பசித்துண்டால் உணவு இனிய சுவைகொண்டதாயிருக்கும்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் (மருந்து 942 பொருள்: முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை) என்றும் அற்றால் அளவறிந்து உண்க அஃதுஉடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு (மருந்து 943 பொருள்: முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும்; அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்) என்றும் இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய் (மருந்து 946 பொருள்: கழிவறிந்து உண்பவனிடம் இன்பம் நிலைப்பது போல மிகப்பெரும் இரையைத் தின்பவனிடம் நோய் குடிகொள்ளும்) என்றும் மருந்து அதிகாரம் கூறும். இப்பாடல்கள் உண்பதற்கிடையே முன்னது செரிமானமாக வேண்டும்; செரிமானமாகுமளவு இடைவெளி விட வேண்டும்; அளவறிந்து உண்ணவேண்டும் எனக் கூறுவன. இக்கருத்துக்கள் காதலன் -காதலி ஆகியோரிடையான காதல் உறவுகளுக்குப் பொருந்துவதாக அமைகின்றன. உணவைப் புணர்தலுக்கும், உண்டல் அறலை ஊடலுக்கும் உவமைப்படுத்தி பொருள் விளக்கப்பட்டது.
காதல் வேட்கை இயற்கையான உடற்பசியாகும். மிக்க உணவு, நோய்க்கு இடமாதல் போல, மிக்க காமமும் உடற்குக் கேடு பயக்கும். அளவான உணவு இன்பத்துக்குக் காரணமாதல் போல, அளவான இன்பத்துய்ப்பே நலம் பயக்கும் உணவுண்ட பின்னர்ப் பசிகுறைவது போலக் காதலர்தம் இணைவிழைச்சால் காமப்பசி தணிந்து நிற்கும். அடுத்து உண்டது செரித்து பசித்தபின்புதான் உண்ணவேண்டும். புறப்பசி நீங்குவதற்கு ஓர் ஒழுங்கு வேண்டுவது போலக் காமப்பசி தீர்வதற்கும் ஓர் ஒழுங்கு வேண்டும். உண்பது பசியைப் போக்குவதோடு உடலுக்கு நலத்தையும் வன்மையையும் பெருக்கும். அளவான புணர்ச்சியும் மனநலம் தருவதோடு மன்னுயிர்க்கு ஆக்கத்தையும் தரும் என இங்கு சொல்லப்பட்ட உவமப் பொருத்தத்தை விளக்குவர்.

உவமைப் பொருத்தம் பற்றிய உரைகளிலிருந்து சில:

  • பரிமேலழகர் 'பசித்துண்ணும்வழி மிக உண்ணலுமாய் இனிய சுவையைத் தருவதுமாம்; அது போல, அகன்று கூடும்வழி தணியாததுமாய் அளவு கடந்த இன்பத்தைத் தருவதுமாம்' என விரிவுரையில் எழுதுவார்.
  • அ மு பரமசிவானந்தம் 'இங்கே உவமை வாயிலாக நல்ல நோயற்ற உடல்நலம் உற்றவரே முற்றும் காமத்தைத் துய்க்க வல்லவர் என்பதை விளக்கி விட்டார். இந்த உவமை இங்கே அமைத்ததன் நோக்கம் அதுவே. நோயுற்றார் ஊடுவது, கூடுவது, குறையா இன்பம் துய்ப்பது ஆகிய நலன்களைப் பெறமுடியாது' என உரை வரைந்தார்.
  • 'உணவு வயிற்றுப் பசியைப் போக்கும். புணர்ச்சி (உறவு) உடற்பசியைப் போக்கும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம். பீலிபெய்சாகாடும் மிகுத்துப்பெயின் அச்சுமுறியும் என்பதுபோல் விந்து விட்டான் நொந்து கெட்டான் போன்ற கருத்துக்கள் வலிமையுடையன' என்கிறது மற்றுமோர் உரை.

உயிர் வாழ்வை இயக்குவது உணவு தேடுதல் இணைவிழைச்சு ஆகியனவாம். இவையிரண்டும் செவ்வி அறிந்து துய்க்கப் பெற்றால் வாழ்க்கை இனிதாகும்.

உண்பதைவிட உண்டது செரித்தல் இன்பமாகும்; காமஇன்பத்திற்குப் புணர்தலைவிட ஊடுதல் நன்றாகின்றது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஊடலுவகை மிகப்பெற்று கூடல்இன்பம் துய்க்க.

பொழிப்பு

உண்பதைவிட உண்டது செரித்தல் இன்பம்; காமம் புணர்தலைவிட ஊடுதல் நன்று.