இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1325



தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள்
அகறலின் ஆங்கொன்று உடைத்து

(அதிகாரம்:ஊடலுவகை குறள் எண்:1325)

பொழிப்பு (மு வரதராசன்): தவறு இல்லாதபோதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது,

மணக்குடவர் உரை: தாம் தவறிலராயினும் தாம் காதலிக்கப்பட்டாரது மென்றோள்களை நீங்குதலானே, அஃது ஓரின்பமுடைத்து.
இது குற்றம் உண்டாயினும் இல்லையாயினும் ஊடலிற் கூடல் நன்றென்றது.

பரிமேலழகர் உரை: (தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது.) தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென்தோள் அகறலின் - ஆடவர் தங்கண் தவறிலராயினும், உடையார்போல ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களைக் கூடப்பெறாத எல்லைக்கண்; ஆங்கு ஒன்று உடைத்து - அவர்க்கு அப்பெற்றியதோர் இன்பம் பயத்தல் உடைத்து.
(உடையராயக்கால் இறந்த இன்பத்தோடு வரும் இன்பமுமெய்துவர் ஆகலின், அது மிக நன்று. மற்றை இலராயக்காலும் வரும் இன்பத்தை இகழ்ந்ததில்லை என்னும் கருத்தால், 'தவறிலராயினும் ஆங்கு ஒன்று உடைத்து' என்றான். ஊடலினாய இன்பம் அளவிறத்தலின், 'கூறற்கரிது' என்பான், 'அப்பெற்றியதொன்று' என்றான். 'தவறின்றி' ஊடியதூஉம் எனக்கு இன்பமாயிற்று' என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: காதலர் தவறில்லாதவரானாலும் ஊடல் காரணமாகத் தாம் விரும்பும் மகளிருடைய தோள்களை முயங்காது நீங்குதலில் ஓர் இன்பம் உண்டு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள் அகறலின் ஆங்கொன்று உடைத்து.

பதவுரை: தவறு-குற்றம்; இலர்-இல்லாதவர்; ஆயினும்-ஆனாலும்; தாம்-தாங்கள்; வீழ்வார்-விரும்புவர் (காதலி); மென்-மென்மையான; தோள்-தோள்; அகறலின்-நீங்குதலின்; ஆங்கு-அப்பொழுது; ஒன்று உடைத்து-ஒன்று உள்ளது.


தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள் அகறலின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் தவறிலராயினும் தாம் காதலிக்கப்பட்டாரது மென்றோள்களை நீங்குதலானே;
பரிப்பெருமாள்: தாம் தவறு இல்லார் ஆயினும், தாம் காதலிக்கப்பட்டாரது மென்றோள் நீங்குதலானே;
பரிதி: நாயகர்பேரில் தவறில்லை ஆயினும் குற்றம் உண்டாக்கி ஊடுதல்;
காலிங்கர்: தாம் தவறு இல்லாராயினும் காதலிக்கப்பட்டாளது மென்தோள் நீங்குதலால்;
பரிமேலழகர்: (தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது.) ஆடவர் தங்கண் தவறிலராயினும், உடையார்போல ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களைக் கூடப்பெறாத எல்லைக்கண்; [கழி உவகையன் - மிகுந்த மகிழ்ச்சி யுடையவன்; ஊடப்பட்டு - தம் காதலியால் பிணங்கப்பட்டு; எல்லைக்கண் - சமயத்தில்]

'தாம் தவறு இல்லாராயினும் காதலிக்கப்பட்டாளது மென்தோள் நீங்குதலால்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தவறில்லை யாயினும் தன்காதலியின் தோளைச் சிறுது பிரிந்திருத்தலில்', 'அவளுடைய குற்றம் ஒன்றுமில்லையென்றாலும் தான் பிரியப்படுகிற தன் காதலியின் மென்மையுள்ள தோள்களைத் தழுவிக் கொண்டிருப்பதிலிருந்து (தானாகவே காதலன்) விலகிவிடுவதால்', 'பிழையில்லாதவராயிருந்தாலும் தம்மால் விரும்பப்பட்ட மகளிருடைய தோள்களைக் கூடப் பெறாத சமயத்தில்', 'குற்றம் இலர் ஆனாலும் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களை நீங்கலின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தவறில்லாதவரானாலும் ஊடப்பட்டாராகத் தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களை நீங்குதலில் என்பது இப்பகுதியின் பொருள்.

ஆங்கொன்று உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃது ஓரின்பமுடைத்து.
மணக்குடவர் குறிப்புரை: இது குற்றம் உண்டாயினும் இல்லையாயினும் ஊடலிற் கூடல் நன்றென்றது.
பரிப்பெருமாள்: அஃது ஓரின்பம் உடைத்தாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது குற்றம் உடைத்தாயினும் இல்லையாயினும் ஊடலால் கூடல் நன்று என்று கூறியது.
பரிதி: காமத்துக்கு இன்பம் என்றவாறு.
காலிங்கர்: அஃது ஓர் இன்பம் உடைத்து ஆம் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: குற்றம் உண்டாயினும் இல்லையாயினும் ஊடலால் கூடல் நன்று என்று கூறியது.
பரிமேலழகர்: அவர்க்கு அப்பெற்றியதோர் இன்பம் பயத்தல் உடைத்து. [பயத்தல் உடைத்து - தருதல் உடையது]
பரிமேலழகர் குறிப்புரை: உடையராயக்கால் இறந்த இன்பத்தோடு வரும் இன்பமுமெய்துவர் ஆகலின், அது மிக நன்று. மற்றை இலராயக்காலும் வரும் இன்பத்தை இகழ்ந்ததில்லை என்னும் கருத்தால், 'தவறிலராயினும் ஆங்கு ஒன்று உடைத்து' என்றான். ஊடலினாய இன்பம் அளவிறத்தலின், 'கூறற்கரிது' என்பான், 'அப்பெற்றியதொன்று' என்றான். 'தவறின்றி' ஊடியதூஉம் எனக்கு இன்பமாயிற்று' என்பதாம். அப்பெற்றியது ஓர் இன்பம் - தவறின்றி ஊடியது அவ்வூடல் நீங்கிக் கூடிய போது உண்டாகும் இன்பம் போன்றதோர் இன்பம். [உடையர் ஆயக்கால் - ஆடவர் தவறுடையராயவிடத்து; இறந்த இன்பத்தோடு - கழிந்த இன்பத்துடன்; இலர் ஆயக்காலும் - தவறில்லாத விடத்தும்; அளவுஇறத்தலின் -அளவு கடந்திருத்தலால்; ஊடியதூஉம் - தலைவி பிணங்கியதும்]

'அஃது ஓரின்பமுடைத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஓரின்பம் உண்டு', 'அதில் ஒரு நன்மை உண்டு', 'அங்கே தோன்றும் புலவியொன்றுளது', 'அதிலும் ஓர் இன்பம் உண்டு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அங்கேயும் ஓர் இன்பம் உண்டு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தவறில்லாதவரானாலும் ஊடப்பட்டாராகத் தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களை நீங்குதலில், ஆங்கொன்று உடைத்து என்பது பாடலின் பொருள்.
'ஆங்கொன்று உடைத்து' என்ற தொடர் குறிப்பது என்ன?

தலைவி - தலைவரது ஊடல் விளையாட்டு கூறற்கரிய இன்பம் தருவதாம்.

தவறு இல்லாதவரான போதும் ஊடிக்கொண்டிருக்கும், தான் விரும்பும், தலைவியின் மென்மையான உடலை அகற்றும் போது, ஒருவிதமான இன்பம் தோன்றுகிறது.
காட்சிப் பின்புலம்:
நீண்ட பிரிவிற் சென்றிருந்த கணவர் பணி முடிந்து இல்லம் திரும்பியுள்ளார். அவரை நேரில் கண்டதுமுதல் பெருமகிழ்வுற்றிருக்கிறாள் தலைவி; தன்னை நன்கு அலங்கரித்து மலர்ந்த முகத்துடன் காட்சி அளிக்கிறாள். நெடிய பிரிவாதலால் தலைவரும் காமமிகுதி கொண்டிருப்பார் என்பதைத் தெரிந்தும் தலைவி, காம இன்பம் நன்கு துய்க்கவேண்டும் என்ற நோக்கில், நேரே கலவியில் ஈடுபடாமல் முதலில் ஊடிக்கொள்ள வேண்டும் என எண்ணிக்கொண்டு இருக்கிறாள்:
தலைவர் மீது தவறு ஏதும் இல்லையென்றாலும், ஊடலைத் தீர்க்கும்பொருட்டுத் தண்ணளி செய்வாரே அதற்காக ஊடலைத் தொடர்வது நல்லது; பிணக்கத்தில் உண்டாகும் சிறு புலவியால் உண்டாகும் நல்ல தலையளி பெருமைக்குரியதே; நிலத்தோடு நீர் கலந்தாற்போல ஒற்றுமையுடைய கணவரிடம் சிறு சண்டை போடுவதுபோன்ற இன்பம் தருகின்ற உலகம் வேறெங்கும் உண்டோ?; கணவர் ஊடல் உணர்த்தும் நோக்கில் அவளை இறுகக் கட்டித்தழுவும்போது, தனது ஊடாமல் கூடுவதில்லை என்ற உள்ள உறுதியைச் சிதறவைக்கும் கருவி தோன்றிவிட்டதை உணர்கிறாள் அவள்.

இக்காட்சி:
இருவரும் அமளியில் உள்ளனர். அவள் அவர் மீது குற்றம் கற்பித்து ஊடுகிறாள். தான் தவறில்லாதவனாக இருந்தாலும் தலைவி தன்னுடன் சண்டையிடுகிறாள் என்கிறார் கணவர்; தவறு செய்யாதவர் என்ற நிலையிலும் என்றதால் அவர்மீது குற்றம் உண்டாக்கி ஊடுகிறாள் என்பது பெறப்படுகிறது. இவ்விதம் குற்றமுடையவராக ஊடப்படுவதிலும் பேருவகை உண்டு. இப்பொழுது தலைவர் மனைவியின் அருகில் சென்று அவளைத் தழுவுகிறார். அது சில வினாடிகள்தான். பின் அவளது மெல்லிய உடலினின்று சற்றே அகன்று தலைவரும் ஊடுகிறார். அவ்விதம் நீங்குவதும் பேரின்பமாகவே அவர்க்குத் தோன்றுகிறது. இந்த ஊடல் ஆட்டம் இருவர்க்கும் சொல்லமுடியாத இன்பம் உண்டாக்கியது.
உடன் புணராமல் தலைவி ஊடல் கொள்வதிலும் தான் எதிர்ஊடல் மேற்கொள்வதிலும் இன்னது எனக் கூற இயலாத 'ஒரு இன்பம்' இருக்கத்தான் செய்கிறது எனச் சொல்கிறார் தலைவர். அது ஒரு தனிச் சிறப்புடைய இன்பமாக உள்ளதாம்.

இக்குறள் தலைவர் கூற்றாகச் சொல்லப்படுவது. அவர் ஊடலின்பம் பெறுவது பற்றிப் பேசுகிறார். ஊடலுக்குப் பின்வரும் கூடலில் இன்பம் மிக்கிருக்கிறது என்பதால் தலைவரும் காதலி தன்னோடு ஊடல் கொள்வதையும் தான் அவளிடம் புலப்பதையும் விரும்பித் துய்க்கிறார்.

'ஆங்கொன்று உடைத்து' என்ற தொடர் குறிப்பது என்ன?

'ஆங்கொன்று உடைத்து' என்றதற்கு அஃது ஓரின்பமுடைத்து, அஃது ஓரின்பம் உடைத்தாம், காமத்துக்கு இன்பம், அப்பெற்றியதோர் இன்பம் பயத்தல் உடைத்து, ஓர் இன்பம் உள்ளது, அவர்களுக்கு ஒருவிதமான இன்பமுளது, ஓரின்பம் உண்டு, அது ஒரு நன்மை உடையது, ஒரு தனி இன்பம் உள்ளது, அவர்க்கு அத்தகையதோரின்பம் பயத்தலுடையது, அங்கே தோன்றும் புலவியொன்றுளது, ஆடவருக்கு அங்கே ஓர் இன்பம் இருக்கிறது. சொல்லமுடியாத இன்பம் ஒன்று இருக்கிறது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஆங்கு என்ற சொல் இங்கே 'அங்கேயும்' என்ற பொருள் தருகிறது. 'ஒன்று' என்ற சொல்லுக்கு இன்பம், நன்மை, புலவி என்று பொருள் கூறினர். ஒன்று என்ற சொல் இன்பம் என்னும் பொருள்படுவதாக உள்ளது. அதிகாரம் ஊடலுவகை என்பதால் அது ஊடல் தரும் இன்பமாம். தலைவரும் கூட காதல்மனைவி தன்னோடு ஊடல் கொள்வதைத்தான் விரும்புகிறார், இங்கு சொல்லப்படும் இன்பம் ஊடல்‌ நீங்கிய பிறகு உண்டாகும்‌ கூடல்‌ நிகழ்ச்சியில் உண்டாகும் இன்பத்தைக் குறிப்பதாகப் பலரும் உரை செய்தனர். இத்தொடர்க்கு முன் தாம்வீழ்வார் மென்தோள் அகறலின் எனத், தாம் விரும்பும் தலைவியின் மெல்லிய உடலை நீங்குவதில், எனசொல்லப்பட்டுள்ளதால், அவளின் நெருக்கத்திலிருந்து விலகுவதிலும் ஓர் இன்பம் என்ற பொருள் கிடைக்கிறது. இருவரது அணைப்பில்தான் இன்பம் இருக்கும். ஆனால் விலகுவதும் இன்பம் தருவதால் அங்கேயும் ஓர் இன்பம் உண்டு எனச் சொல்லப்பட்டது. இதை ஓர் தனிப்பட்ட இன்பம் என விளக்கினர். அவள் உடல் விலகும்போது அதை அகலவிடாமல் தடுத்து இன்னும் இறுகத்தழுவவேண்டும் என்ற உணர்ச்சி தோன்றும். அது ஒருவகை இன்பம்தான்.

பரிமேலழகர் இத்தொடர்க்கு அப்பெற்றியதோர் இன்பம் பயத்தல் உடைத்து என்று பொருள் கூறினார். ஊடலினாய இன்பம் அளவு கடந்திருத்தலால், 'கூறற்கரிது' என்பான், 'அப்பெற்றியதொன்று' என்றான் என விளக்கமும் தந்தார்.
'அகலும் நிலையில் உண்டாகும் ஒன்று பின்னர்க் கூடுங்கால் இன்பத்தைப் பெருக்குகின்றது. இன்பத்தைப் பெருக்குதற்குத் துணையாய் உள்ள நிலையை இன்னது எனக் கூற இயலாது 'ஒன்று' என்று குறிப்பிட்டுள்ளார்' என்பது இத்தொடர்க்கான சி இலக்குவனாரது உரைவிளக்கம்.

'ஆங்கொன்று உடைத்து' என்பதற்கு, இன்பத்தைப் பெருக்குதற்குத் துணையாய் உள்ள, இன்னது எனக் கூற இயலாத ஒரு நிலை என்பது பொருள்.

தவறில்லாதவரானாலும் ஊடப்பட்டாராகத் தாம் விரும்பும், மனைவியின் மெல்லிய தோள்களை நீங்குதலில் ஓர் இன்பம் உண்டு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புலவியில், அணைத்துப் பின் விலகி இருப்பதிலும் இனம் புரியாத ஊடலுவகை பெறுகின்றனர்.

பொழிப்பு

தவறில்லாதவரானாலும் ஊடப்பட்டாராகத் தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களை நீங்குதலில் ஓர் இன்பம் உண்டு.