புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என்
உள்ளம் உடைக்கும் படை
(அதிகாரம்:ஊடலுவகை
குறள் எண்:1324)
பொழிப்பு (மு வரதராசன்): காதலரைத் தழுவிக் கொண்டு விடாமலிருப்பதற்குக் காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.
|
மணக்குடவர் உரை:
என் உள்ளத்தை அழிக்குங் கருவி, புல்லினவிடத்து விட்டுப் புலந்தவிடத்துத் தோன்றும்.
அது புணர்ந்த பின்பு தோன்றாமையால் அதனைக் கெடுக்கும் இன்பமுடைத்தென்று கூறியவாறு. படை- பணிமொழி. இவை யெட்டும் தலைமகன் கூற்று.
பரிமேலழகர் உரை:
(அப்புலவி இனி யாதான் நீங்கும்? என்றாட்குச் சொல்லியது.) புல்லி விடாப் புலவியுள் தோன்றும் - காதலரைப் புல்லிக் கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே உளதாம்; என் உள்ளம் உடைக்கும் படை - அதன் மேற்சென்ற என்னுள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம்.
('புலவியுள்' என்னும் ஏழாவது வினைநிகழ்ச்சிக்கண் வந்தது. என்னுள்ளம் உடைக்கும் படைக்கலம் என்றது, வணக்கத்தையும் பணிமொழியையும் . படைக்கலம் என்றாள், அவற்றான் அப் புலவிஉள்ளம் அழிதலின். புலவி நீங்கும் திறம் கூறியவாறு.)
இரா இளங்குமரனார் உரை:
துணைவரைத் தழுவிக் கொண்டு விடாமல் இன்புறச் செய்தற்கு உதவும் ஊடலிலே என் மன உறுதியை உடைக்கும் படைக்கலம் உருவாகின்றது!
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என் உள்ளம் உடைக்கும் படை.
பதவுரை: புல்லி-தழுவி; விடாஅ-விடாமைக்கு ஏதுவாகிய; புலவியுள்-ஊடலுள்; தோன்றும்-உண்டாகும்; என்-எனது; உள்ளம்-நெஞ்சம்; உடைக்கும்-கெடுக்கும்; படை-அழிக்கும் கருவி (ஆயுதம்).
|
புல்லி விடாஅப் புலவியுள்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புல்லினவிடத்து விட்டுப் புலந்தவிடத்து;
பரிப்பெருமாள்: புல்லினவிடத்து துனியாம்படி இவளைப் பொருந்தி விடாதே நிற்கின்ற புலவிக்கண்ணே;
காலிங்கர்: புல்லின இடத்துவிட்டுப் புலந்த இடத்து;
பரிமேலழகர்: (அப்புலவி இனி யாதான் நீங்கும்? என்றாட்குச் சொல்லியது.) காதலரைப் புல்லிக் கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே உளதாம்; [யாதான் - எதனால்]
பரிமேலழகர் குறிப்புரை: 'புலவியுள்' என்னும் ஏழாவது வினைநிகழ்ச்சிக்கண் வந்தது.
மணக்குடவரும் காலிங்கரும் 'புல்லினவிடத்து விட்டுப் புலந்தவிடத்து' என்று இப்பகுதிக்கு பொருளுரைத்தனர். பரிப்பெருமாள் 'புல்லினவிடத்து துனியாம்படி இவளைப் பொருந்தி விடாதே நிற்கின்ற புலவிக்கண்ணே' என்றார். பரிமேலழகர் 'காதலரைப் புல்லிக் கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே' என வருவித்துரைத்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'காதலரை உடனே தழுவிவிடாத ஊடலில்', 'காதலரைத் தழுவிக்கொண்டு பின் நீங்காமைக்குக் காரணமாகிய புலவி இடத்தே', 'புணர்ச்சி செய்து தீர்த்துவிடாமல் (வெறும்) பிணக்கத்தில் இருந்தபோது', 'காதலரைத் தழுவிக்கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக் கண்ணே' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
காதலரைத் தழுவிவிடாத ஊடலில் என்பது இப்பகுதியின் பொருள்.
தோன்றும் என்உள்ளம் உடைக்கும் படை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தோன்றும் என் உள்ளத்தை அழிக்குங் கருவி.
மணக்குடவர் குறிப்புரை: அது புணர்ந்த பின்பு தோன்றாமையால் அதனைக் கெடுக்கும் இன்பமுடைத்தென்று கூறியவாறு. படை- பணிமொழி. இவை யெட்டும் தலைமகன் கூற்று.
பரிப்பெருமாள்: வெளிப்படும் எனது உள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம் போன்ற துன்பம் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: நீடுங்கால் புலவி துன்பம் எனவே, புலவி கடிது நீங்க வேண்டும் என்றது. விட்டுப் புலந்த இடத்துத் தோற்றும் எனது உள்ளத்தை அழிக்கும் கருவி என்றவாறு. அஃதாவது தலைமகள் புலவியால் கூறும் சொற்கள், அது புணர்ந்த பின்பு தோற்றாமையால் அதனைக் கேட்டால் இன்பம் உடைத்து என்று கூறியது.
இவை எட்டும் தலைமகன் கூற்று. .
காலிங்கர்: தோன்றும் எனது உள்ளத்தை அழிக்கும் கருவி என்றவாறு.
காலிங்கர்: அஃதாவது தலைமகள் புலவியால் கூறும் சொற்கள் புணர்ந்த பின்பு தோற்றாமையால் அதனைக் கேட்டல் இன்பம் உடைத்து என்று கூறியது. இவை எட்டும் தலைமகன் கூற்று.
பரிமேலழகர்: அதன் மேற்சென்ற என்னுள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம்.
பரிமேலழகர் குறிப்புரை: என்னுள்ளம் உடைக்கும் படைக்கலம் என்றது, வணக்கத்தையும் பணிமொழியையும் . படைக்கலம் என்றாள், அவற்றான் அப் புலவிஉள்ளம் அழிதலின். புலவி நீங்கும் திறம் கூறியவாறு.
'தோன்றும் எனது உள்ளத்தை அழிக்கும் கருவி/படைக்கலம் போன்ற துன்பம்' என்றவாறு பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிறக்கின்றது என் நிறையை உடைக்கும் படை', 'உள்ளது என் நெஞ்சத்தை உடைக்கும் படைக்கலம். (படைக்கலம் பணிமொழியைக் குறிக்கும்)', 'என் மனதைக் கோடாரி கொண்டு பிளப்பதைப் போன்ற துன்பம் இருந்தது', 'என் உள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம் தோன்றும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
என்உள்ள உறுதியை உடைக்கும் கருவி தோன்றுகிறது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
புல்லி விடாஅப் புலவியுள் என்உள்ள உறுதியை உடைக்கும் கருவி தோன்றுகிறது என்பது பாடலின் பொருள்.
'புல்லி விடாஅப் புலவியுள்' என்ற பகுதி குறிப்பதென்ன?
|
தலைவரது இத்துணை இறுக்கமான தழுவலில் அவளது ஊடல் எங்கே தாக்குப்பிடிக்கும்?
அணைப்பை விடமுடியாமலிருக்கும் தலைவி அவளது ஊடலை உடைத்தெறியும் கருவி தோன்றிவிட்டதை உணர்கிறாள்.
காட்சிப் பின்புலம்:
நெடுநாள் பிரிவிற் சென்றிருந்த கணவர் பணி முடிந்து இல்லம் திரும்பியுள்ளார்.
அவரைக் கண்ட மகிழ்ச்சியில் முழுப் பெண்மைப் பொலிவுடன் மலர்ந்த முகத்துடன் காட்சி அளிக்கிறாள் தலைவி. இரவில் இருவரும் படுக்கையறையில் இருக்கின்றனர்.
நீண்ட பிரிவாதலால் அவரும் காமமிகுதி கொண்டிருப்பார் என்பதைத் தெரிந்தும் தலைவி, காம இன்பம் நன்கு துய்க்கவேண்டும் என்ற நோக்கில், நேரே கலவியில் ஈடுபடாமல் முதலில் ஊடிக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறாள்.
தலைவர் மீது தவறு இல்லையென்றாலும், பிணக்கத்தை நீக்கும்பொருட்டுத் தண்ணளி செய்வாரே அதற்காக ஊடலைத் தொடர்வது நல்லது; ஊடலில் ஏற்படும் சிறு புலவியால் உண்டாகும் தலையளி பெருமைக்குரியதே; நிலத்தோடு நீர் கலந்தாற்போல ஒற்றுமையுடைய கணவரிடம் சிறு சண்டை போடுவதுபோன்ற இன்பம் தருகின்ற உலகம் வேறெங்கும் உண்டோ? இத்தகைய எண்ணங்களோடு தலைவர் காட்டும் அன்பை எதிர்நோக்கி இருக்கிறாள் மனைவி.
இக்காட்சி:
தலைவி ஊடல் நாடகத்திற்கு ஆயத்தமாகிறாள். கணவர் படுக்கையறைக்குள் வருகிறார். காதல்கணவரை ஆர்வமுடன் வரவேற்காமலும், இன்முகம் காட்டாமலும், நெருங்கிச் செல்லாமலும் தலைவி அவர்மீது வெறுப்புடன் சினம் கொண்டவள் போல் காட்டிக் கொண்டு தழுவவரும் அவரைவிட்டு விலகிச் செல்கிறாள்;
தலைவரோ ஊடல் உணரும் (ஊடலுக்கான காரணத்தை அறிந்து தெளியும்) வண்ணம் அவளை கட்டித்தழுவிப் பணிமொழி கூறி அவளை அமைதிப்படுத்த முயல்கிறார்.
தலைவிக்கு ஊடல் இன்பமும் வேண்டும்; அதேசமயம் அளிதரும் தலைவரது தழுவுதலை நெகிழ்த்துவிடவும் மனமில்லை. புலவிதான் அவர்களது தழுவுதலைப் பிரியவிடாமல் செய்கிறது. இப்பொழுது அவரது அணைப்பு இறுகுகிறது. அதுபொழுது தனது ஊடாமல் கூடுவதில்லை என்ற உள்ள உறுதியைச் சிதறவைக்கும் கருவி தோன்றிவிட்டதாக உணர்கிறாள் அவள்.
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை (நிறையழிதல் 1258 பொருள்: பலவிதமான மாயங்களைச் செய்து மயக்கும் காதலனது மென்மையான இனிய சொற்களல்லவா பெண்தன்மையை உடைக்கும் கருவி) என்று முன்னரும் காதலனது பணிமொழியானது தலைவியின் நிறையை உடைக்கும் கருவி எனச் சொல்லப்பட்டது.
|
'புல்லி விடாஅப் புலவியுள்' என்ற பகுதி குறிப்பதென்ன?
'புல்லி விடாஅப் புலவியுள்' என்றதற்குப் புல்லினவிடத்து விட்டுப் புலந்தவிடத்து, புல்லினவிடத்து துனியாம்படி இவளைப் பொருந்தி விடாதே நிற்கின்ற புலவிக்கண்ணே, காதலரைப் புல்லிக் கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே, காதலரைத் தழுவிக் கொண்டு விடாமலிருப்பதற்குக் காரணமான ஊடலுள், தலைவரைத் தழுவுதலைக் கைவிடாதிருந்தே புலக்கின்ற ஊடலின்போது, காதலரை உடனே தழுவிவிடாத, காதலரைத் தழுவிக்கொண்டு பின் நீங்காமைக்குக் காரணமாகிய புலவி இடத்தே, புணர்ச்சி செய்து தீர்த்துவிடாமல் (வெறும்) பிணக்கத்தில் இருந்தபோது, துணைவரைத் தழுவிக் கொண்டு விடாமல் இன்புறச் செய்தற்கு உதவும் ஊடலிலே, அன்பரைத் தழுவிவிடாமைக்கு ஏதுவாகிய பிணக்கினுள்ளே, காதலரைத் தழுவிக்கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக் கண்ணே, என் காதலரைத் தழுவிப் பிரியாதிருப்பதற்காகச் செய்யும் ஊடலில் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
தழுவிக்கொண்டிருக்கும்போதே உணர்தல் அதாவது ஊடல் தெளிவித்தல் நடைபெறுகின்றது. தலைவியை அமைதிப்படுத்தக் கணவர் அவளைத் தழுவிக்கொண்டு கெஞ்சிக் கொஞ்சுகிறார். தலைவிக்கும் தழுவுதலை விட எண்ணமில்லை. அவளது ஊடலில்லாமல் கூடலில்லை என்னும் மனவுறுதி குலைந்துகொண்டு வருகிறது, தலைவரின் பணிமொழியும் தண்ணளி செய்தலும் தழுவுதலும், இன்னும் ஊடவேண்டும் என்ற மனைவியின் மன உறுதியைக் கரைத்து விடுகிறது. அது சமயம் அவள் உள்ளத்தை அழிக்கும் கருவி புலவியுள் உண்டாகியதாகச் சொல்கிறாள். அதன்பின்னர், இயல்பாகவே, காதலரோடு கூடலுக்கான வேட்கை தோன்றுகிறது, காதலரின் வணக்கங்களும் கெஞ்சும் மொழிகளும், நீக்கமுடியாத தழுவலுடன் நிகழும் புலவியுள் வேட்கையை தலைவியின்கண் உண்டாக்கி ஊடலில் கொள்ளும் உறுதியை உடைக்கவல்ல கருவியானது.
'புல்லி விடாஅப் புலவியுள்' என்ற பகுதிக்குத் தழுவுதலைக் கைவிடாதிருந்தே ஊடும்போது என்பது பொருள்.
|
காதலரைத் தழுவிவிடாத ஊடலில் என்உள்ள உறுதியை உடைக்கும் கருவி தோன்றுகிறது என்பது இக்குறட்கருத்து.
ஊடலுவகையில் நிறையுடைதலும் நிகழ்கிறது.
காதலரைத் தழுவிவிடாத ஊடலில் என் நெஞ்சத்தை உடைக்கும் கருவி தோன்றுகிறது.
|