இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1322



ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்அளி
வாடினும் பாடு பெறும்

(அதிகாரம்:ஊடலுவகை குறள் எண்:1322)

பொழிப்பு (மு வரதராசன்): ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.

மணக்குடவர் உரை: ஊடலிற் றோன்றும் சிறியதுனி, மிக்க அருள் பெறாதொழியினும் அழகு உடைத்து.
புணராதொழியினும் இன்பமாமென்று கூறியவாறு.

பரிமேலழகர் உரை: (புலவாக்காலும் அத்தலையளி பெறலாயிருக்க, அஃது இழந்து புலவியான் வருந்துவது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது.) ஊடலின் தோன்றும் சிறுதுனி - ஊடல் ஏதுவாக நங்கண் தோன்றுகின்ற சிறிய துனிதன்னால்; நல்லளி வாடினும் பாடு பெறும் - காதலர் செய்யும் நல்ல தலையளி வாடுமாயினும் பெருமை எய்தும்.
('தவறின்றி நிகழ்கின்ற ஊடல் கடிதின் நீங்கலின் அத்துன்பமும் நில்லாது' என்பாள், 'சிறு துனி' என்றும், 'ஆராமைபற்றி நிகழ்தலின் அதனான் நல்லளி வாடாது' என்பாள், 'வாடினும்' என்றும், 'பின்னே பேரின்பம் பயக்கும்' என்பாள் 'பாடு பெறும்' என்றும் கூறினாள். அது வருத்தமெனப்படாது என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: ஊடல் காரணமாகத் தோன்றும் சிறுதுனி (வெறுப்பு) காதலர் காட்டும் அன்பு வாடுவதற்குக் காரணமாயினும் பெருமை அடையும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்அளி வாடினும் பாடு பெறும்.

பதவுரை: ஊடலில்-ஊடலில்; தோன்றும்-உண்டாகும்; சிறு-சிறியதான; துனி-துன்பம், வெறுப்பு; நல்-நல்ல; அளி-தலையளி; வாடினும்-குறையினும்; பாடு-பெருமை; பெறும்-அடையும்.


ஊடலில் தோன்றும் சிறுதுனி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஊடலிற் றோன்றும் சிறியதுனி;
பரிப்பெருமாள்: ஊடலின்கண் தோன்றுகின்ற சிறியதுனி;
பரிதி: ஊடலில்தோன்றும் சிறுதுனி;
பரிமேலழகர்: (புலவாக்காலும் அத்தலையளி பெறலாயிருக்க, அஃது இழந்து புலவியான் வருந்துவது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது.) ஊடல் ஏதுவாக நங்கண் தோன்றுகின்ற சிறிய துனிதன்னால்; [புலவாக்காலும்-பிணங்காதிருக்கின்ற காலத்தும்; அஃது இழந்து - அத்தலையளியை இழந்து; துனிதன்னால் - துன்பத்தினால்]

'ஊடலிற் றோன்றும் சிறியதுனி' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊடலால் சிறுபொழுது தோன்றும் வெறுப்பு', 'பிணங்கிப் புணராதிருக்கும் வரையிலும் ஏற்படும் சிறு காமத் துன்பத்தினால்', 'பிணக்கிலே தோன்றுஞ் சிறிய வருத்தத்தால்', 'ஊடல் ஏதுவாக நம்மிடம் தோன்றுகின்ற சிறிய புலவியால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஊடலால் சிறுபொழுது தோன்றும் பூசல் என்பது இப்பகுதியின் பொருள்.

நல்அளி வாடினும் பாடு பெறும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிக்க அருள் பெறாதொழியினும் அழகு உடைத்து.
மணக்குடவர் குறிப்புரை: புணராதொழியினும் இன்பமாமென்று கூறியவாறு.
பரிப்பெருமாள்: மிக்க அருள் பெறாதொழியினும் அழகு உடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: புணர்தல் இன்பம் என்றார்; இது புணராது ஒழியினுமாம் என்று கூறப்பட்டது.
பரிதி: இருந்த ஊடலும் சற்றே அன்பு பெறினும் பாடுபெறும் என்றவாறு.
பரிதி குறிப்புரை: புணர்தலும் இன்பமாம்; புணராது ஒழியினும் இன்பமாம்.
பரிமேலழகர்: காதலர் செய்யும் நல்ல தலையளி வாடுமாயினும் பெருமை எய்தும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'தவறின்றி நிகழ்கின்ற ஊடல் கடிதின் நீங்கலின் அத்துன்பமும் நில்லாது' என்பாள், 'சிறு துனி' என்றும், 'ஆராமைபற்றி நிகழ்தலின் அதனான் நல்லளி வாடாது' என்பாள், 'வாடினும்' என்றும், 'பின்னே பேரின்பம் பயக்கும்' என்பாள் 'பாடு பெறும்' என்றும் கூறினாள். அது வருத்தமெனப்படாது என்பதாம். [அத்துன்பமும் - ஊடல் காரணமாக உண்டாகின்ற அத்துன்பமும்; ஆராமை - (புணர்ச்சி விருப்பம்) தணியாமை; அதனான் - அத்துனியினால்; அது - சிறுதுனி (சிறுதுன்பம்)]

'அருள் பெறாதொழியினும் அழகு உடைத்து' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். 'சற்றே அன்பு பெறினும் பாடுபெறும்' என்பது பரிதி உரை. பரிமேலழகர் 'நல்ல தலையளி வாடுமாயினும் பெருமை எய்தும்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவரன்பை வருத்தினும் பெருமைக்கு உரியது', 'பிரியம் வாட்டமுற்றாலும் (பின்னால்) அதனால் அதிகமான இன்பம் உண்டு', 'தலைவர் செய்யுங் கருணை, வாடின காலத்தும் அது பெருமை யடைவதாகும்', 'காதலர் செய்யும் நல்ல தலையளி பெருமை எய்தும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நல்லன்பு குறையினும் பெருமை எய்தும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஊடலால் சிறுபொழுது தோன்றும் பூசலால், தலைவரது நல்லன்பு குறையினும் பாடு பெறும் என்பது பாடலின் பொருள்.
'பாடுபெறும்' குறிப்பது என்ன?

ஊடலில் தொடங்கிப் பெறும் கூடல் பெருமகிழ்ச்சி தரும்.

காதல் கணவர்மீது கொள்ளும் ஊடற்பூசலால் சிறிதளவு வெறுப்பு தோன்றி, அதனால் அவர் தம்மீது செய்யும் தண்ணளிக்குக் குறைவு உண்டாகும் என்றாலும், அதுவும் பெருமைக்குரியதே என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாகப் பிரிவில் சென்றிருந்த கணவர் பணி முடிந்து இல்லம் திரும்பியுள்ளார். நீண்ட காலத்திற்குப் பின் அவரை நேரில் காண்பதால் மிகுந்த மகிழ்ச்சியுற்றிருக்கிறாள் தலைவி. தன்னை நன்கு அழகுசெய்த தோற்றத்துடன் காணப்படுகிறாள் அவள். தலைவரும் காமமிகுதி கொண்டிருப்பார் என்பதை அறிந்து வைத்திருந்தும், காமவின்பம் நன்கு துய்க்கவேண்டும் என்ற நோக்கில், முதலில் ஊடிக்கொண்டு பின் கலவியில் ஈடுபடலாம் என்பதில் உறுதியோடு இருக்கிறாள்.
அவர் தவறு செய்தவர்போன்று ஏதாவது புனைந்து உரைத்து ஊடலைத் தொடங்க வேண்டும்; அவரிடம் தவறு எதுவும் இல்லையாயினும் தன் பிணக்கை நீக்குவதற்காக அவர் தலையளி செய்வார் என்று எண்ணிக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
கணவரோடு ஊடுதலாலே தோன்றும் சிறு துன்பம், அப்பொழுதிற்கு அவர் செய்யும் நல்ல அன்பை வாடச் செய்தாலும், பின்னர்ப் பெருமை பெறுமளவு இன்பம் உண்டாக்கும்.
காமம் புணர்தலின் ஊடலினிது என்ற எண்ணப்போக்குடையவள் தலைவி. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தலைவரும் மனைவியும் ஒருவரையொருவர் காண்கின்றனர். காமம் மிகுந்த அப்பொழுதில் ஊடுதல் வெறுப்பை உண்டாக்கித் துன்பமே தரும். அத்துன்பம் தண்ணளி செய்து கொண்டிருக்கும் கணவர் முகத்தை மாறவைக்கத்தான் செய்யும். அவ்விதமாக தலைவனின் நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் அதுவே ஊடல்முடிந்து கூடல் கொள்ளும்போது இன்பப் பெருக்கமாக அமையும் என்று உள்ளூர எண்ணி மகிழ்கிறாள் அவள். துன்பம் விரைவில் மறைந்துவிடும் என்பதால் சிறுதுனி எனப்பட்டது; சிறுதுனியாற் பெரும்பயன் விளைதலின் அவளுக்கு வருத்தம் ஏற்படவில்லை; உடலின் முடிவில் கிடைக்கும் பேரின்பத்தைப் பாடுபெறும் அதாவது பெருமையுடையது என்றும் குறிக்கிறாள் தலைமகள்.

துனி என்ற சொல்லுக்குத் துன்பம், வெறுப்பு, சினம் என்ற பொருள்கள் உண்டு. இங்கு அது துன்பம் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. சிறுதுனி என்பதற்குச் சிறுபொழுது துன்பம் எனப் பொருள் கொள்வர்.

'பாடுபெறும்' குறிப்பது என்ன?

'பாடுபெறும்' என்றதற்கு அழகு உடைத்து, பெருமை எய்தும், பெருமை பெறும், பெருமைக்கு உரியது, பெருமை அடையும், அதிகமான இன்பம் உண்டு என்றவாறு உரைகாரர்கள் பொருள் கூறினர்.

‘பாடுபெறும்’ என்பதற்கு நேர் பொருள் பெருமை எய்தும் என்பது. இங்கு என்ன பெருமை உள்ளது? ஊடலின் முடிவில் பெறப்படும் மிகைஇன்பத்தையே பாடுபெறும் என்ற தொடர் குறிக்கிறது. அதுவே பெருமைக்குரியது எனத் தலைவி கருதுகிறாள். இதை மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகிய உரைகாரர்கள் 'புணராதொழியினும் இன்பமாம்' என நயம் தோன்ற விளக்கினர். ஊடலின் முடிவில் பயக்கப்படும் பேரின்பமே பெருமை பெறும் எனச் சொல்லப்பட்டது.

'பாடுபெறும்' என்ற தொடர்க்குப் பெருமைக்குரியது என்பது பொருள்.

ஊடலால் சிறுபொழுது தோன்றும் பூசலால், தலைவரது நல்லன்பு குறையினும், பெருமை எய்தும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சீண்டலால் தோன்றும் துன்பம் ஊடலுவகையைச் சிறக்கச் செய்யும்.

பொழிப்பு

ஊடலால் சிறுபொழுது தோன்றும் பூசல் காதலரது நல்லன்பைக் குறைப்பினும் அது பெருமைப்படத்தக்கது.