இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1299துன்பத்திற்கு யாரே துணையாவார் தாம்உடைய
நெஞ்சம் துணையல் வழி

(அதிகாரம்:நெஞ்சொடு புலத்தல் குறள் எண்:1299)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகாவிட்டால், வேறு யார் துணையாவார்?மணக்குடவர் உரை: துன்பமுற்றால் அதற்குத் துணையாவர் உண்டோ? தம்முடைய நெஞ்சும் தமக்குத் துணையல்லாத காலத்து.
இது தலைமகள் 'துணையாவார் யார்' என்ற தோழிக்குக் கூறியது.

பரிமேலழகர் உரை: (உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.) துன்பத்திற்கு - ஒருவர்க்குத் துன்பம் வந்துழி, அது நீக்குதற்கு; தாம் உடைய நெஞ்சம் துணை அல் வழி - தாம் உரித்தாகப் பெற்ற தம்முடைய நெஞ்சம் துணையாகாவழி; துணையாவார் யாரே - வேறு துணையாவார் ஒருவரும் இல்லை.
(ஈண்டுத் துன்பமாவது - ஊடலுணர்ப்புவயின் வாராமை. அதற்கு நெஞ்சம் துணையாகாமையாவது, அவளை அன்பிலள் என்றொழியாது கூடற்கண்ணே விதும்பல். 'ஒரு துணையும் இன்மையின், இஃது உற்று விடுதலே உள்ளது', என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: ஒருவர்க்குத் துன்பம் நேர்ந்தவிடத்து அதனைப் போக்கத் தமக்குரிமையுடைய நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்? (ஒருவருமிலர்)


பொருள்கோள் வரிஅமைப்பு:
தாம் உடைய நெஞ்சம் துணை அல் வழி துன்பத்திற்குத் துணையாவார் யாரே?

பதவுரை: துன்பத்திற்கு-துன்பமுறும்போது; யாரே-எவர்; துணை-உதவி; யாவார்-ஆவார்: தாம்உடைய-தம்முடைய; நெஞ்சம்-உள்ளம்; துணையல் வழி-உதவியல்லாத பொழுது.


துன்பத்திற்கு யாரே துணையாவார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('துணையாவர்' பாடம்): துன்பமுற்றால் அதற்குத் துணையாவர் உண்டோ?
பரிப்பெருமாள்: துன்பமுற்றால் துணையாவார் உண்டோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: துணையாவார் யார் என்றது தோழியைக் குறித்து தலைமகள் வாயில் மறுத்த இடத்துத் தோழி நெருங்கிக் கூறிய வழி உடன்பட்ட நெஞ்சொடு புலந்து வாயில் நேர்வாள் சொல்லியது.
பரிதி: மயல் கொண்டார்க்கு யாரே துணையாவார்;
காலிங்கர்: தோழி! உலகத்து ஒருவர்க்கு உற்ற இடத்து உதவும் உறுதுணையாவார் யாரேதான்;
பரிமேலழகர்: (உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.) ஒருவர்க்குத் துன்பம் வந்துழி, அது நீக்குதற்கு; வேறு துணையாவார் ஒருவரும் இல்லை. [உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் - தலைமகள் தணியாத பிணக்குடையள் ஆகிய இடத்து; அது நீக்குதற்கு-அத்துன்பத்தை விலக்குதற்கு]
பரிமேலழகர் குறிப்புரை: ஈண்டுத் துன்பமாவது - ஊடலுணர்ப்புவயின் வாராமை. அதற்கு நெஞ்சம் துணையாகாமையாவது, அவளை அன்பிலள் என்றொழியாது கூடற்கண்ணே விதும்பல். 'ஒரு துணையும் இன்மையின், இஃது உற்று விடுதலே உள்ளது', என்பதாம். [கூடற்கண்ணே விதும்பல்-புணர்ச்சியிடத்தே விரைதல்; இஃது உற்று விடுதலே உள்ளது-இத்துன்பத்தை அடைந்து விடுதலே உள்ளது] .

'துன்பமுற்றால் அதற்குத் துணையாவர் உண்டோ?' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பக் காலத்து வேறு யார் துணையாவார்?', 'ஒருவருக்குத் துன்பம் வந்துவிட்ட சமயத்தில்மற்ற யார் உதவி செய்யப்போகிறார்கள்? (நீயே சொல்லு மனமே!)', 'ஒருவர்க்குத் துன்பம் வந்தவிடத்து அவர்க்கு வேறு துணையாவார் யார்?', 'ஒருவர்க்குத் துன்பம் வந்த இடத்து வேறு துணையாவார் யார்?', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவரது துன்பக் காலத்து யார்தான் துணையாவார்? என்பது இப்பகுதியின் பொருள்.

தாம்உடைய நெஞ்சம் துணையல் வழி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்முடைய நெஞ்சும் தமக்குத் துணையல்லாத காலத்து.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் 'துணையாவார் யார்' என்ற தோழிக்குக் கூறியது
பரிப்பெருமாள்: தம்முடைய நெஞ்சும் தமக்குத் துணையல்லாத காலத்து.
பரிதி: தம்முடைய நெஞ்சு தம்முடன் வாராதபொழுது என்றவாறு.
காலிங்கர்: (தமரல் வழி என்பது பாடம்) நாம் நமக்கு உள்ளுறு துணையா உடைய நெஞ்சமே கூட ஒன்று உற்ற இடத்து உதவும் தமரல்லாத இடத்து என்றவாறு.
பரிமேலழகர்: தாம் உரித்தாகப் பெற்ற தம்முடைய நெஞ்சம் துணையாகாவழி.

'தம்முடைய நெஞ்சும் தமக்குத் துணையல்லாத காலத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்னுடைய நெஞ்சமே துணையாகாத போது', 'அவருடைய மனமே அவருக்கு உதவாவிட்டால்', 'அதனைத் தவிர்த்தற்குத் தம்முடைய மனமானது துணையாகாத விடத்து', 'தம்முடைய நெஞ்சமே துணையாகாதபோது ' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தம்முடைய நெஞ்சமே தமக்குத் துணையாகாதபோது என்பது இப்பகுதியின் பொருள்.


நிறையுரை:
தம்முடைய நெஞ்சமே தமக்குத் துணையாகாதபோது ஒருவரது துன்பத்திற்கு யாரே துணையாவார்? என்பது பாடலின் பொருள்.
'துன்பத்திற்கு யாரே துணையாவார்' குறிப்பது என்ன?

'நான் துயருறும்போது என்னுடன் நில்லாமல் அவரிடம் சென்றுவிட்டாயே என் நெஞ்சமே!' - தலைவி

தலைவி தன் நெஞ்சு அவளைக் கைவிட்டு விட்டுத் தலைவருடன் சென்றுவிட்டதால் தான் துணையின்றி தனித்து நிற்பதாகக் கூறுகிறாள்.
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாகச் சென்றிருந்த தலைவர் இல்லம் திரும்பி வந்துவிட்டதால், இதுகாறும் பிரிவால் துயருற்றிருந்த தலைவி அவர் வருகை அறிந்து தன்னை நன்கு ஒப்பனை செய்து பெண்மைப் பொலிவுடன் காட்சி அளிக்கிறாள். கணவரைக் கண்டவுடன் மிக்க மகிழ்ச்சி அடைகிறாள். அவரைத் தனிமையில் சந்திக்கும் வேளையை எதிர்நோக்கி இருக்கிறாள். கூடும்வரை பொறுத்துக் கொள்ள இயலாத துன்பம் ஒருபுறம். இணையும் சமயம் நெருங்கிவிட்டதை நினைத்து மகிழ்ச்சி இன்னொருபுறம். புலவியா கலவியா என்ற தடுமாற்றம் வேறு. இந்த மனநிலையில் தலைவி தன் நெஞ்சோடு புலந்து பேசியவைகளை எண்ணிப் பார்க்கிறாள்:
'தலைவருடைய நெஞ்சு அவர்க்குத் துணையாதலைப் பார்த்தும் நீ எனக்குத் துணையாகாதது ஏன்?'; 'அன்பில்லமல் நம்மைப் பிரிந்து சென்றுவிட்டவர் என்று அறிந்தும் வெறுக்கமாட்டார் எனக் கருதி அவரிடம் செல்கின்றாயே!; 'கேடுற்றவர்க்கு நண்பர் இலர் என்று நினைத்தா நீ விரும்பியவாறு அவரிடம் செல்கிறாய்?'; 'அவருடன் சிறுசினம் கொண்டு பின் சேர்தல் போன்ற ஆலோசனைகளை உன்னோடு யார் கலந்து பேசுவார்?'; 'அவர் உடனில்லாதபோது நம்முடன் இல்லையே என்று வருந்துகிறாய் வந்து சேர்ந்தபின் அவர் மீண்டும் பிரிந்து சென்றுவிடுவாரே என எண்ணிக் கலங்குகிறாய்; உன்னால் எனக்கு எப்பொழுதும் துன்பம்தானே இருக்கிறது'; 'நான் தனித்திருந்து தலைவரை நினைத்த போது என்னைத் தின்பதுபோல வருத்தினாய்; அவர் வந்துள்ள இப்போது அவரிடம் விரைந்து சென்று சேர நினைக்கிறாயே'; 'அவரை மறக்க முடியாத என் அறியாமை மிகுந்த நெஞ்சுடன் சேர்ந்து எனது நாணினையும் மறந்தேனே'; 'அவரைப் பொருட்படுத்தாதிருந்தால் அது இழிவான செயலாகவே ஆகுமமாதலால் அவரைப் புண்படுத்தும் எச்செயலையும் செய்யாமல், அவரது நற்குணங்களையே எண்ணி, அவரை நாடி அவர் பக்கமே நெஞ்சு செல்கிறாயே!'.

இக்காட்சி:
காதல்கணவர் வந்துவிட்டார். தலைவியது நெஞ்சு காதலரைக் கண்டவுடன் விரைந்தோடி அவரிடம் சென்றடைந்துவிடுகிறது. தன் மனம் எப்பொழுதும் தலைவரையே நினைத்து, தனக்கு உதவியாக நில்லாமல் அவர் பின்னாடியே அலைவதைக் கண்டு, 'நெஞ்சே! எனக்குச் துன்பம் வந்தபோது என் மனத்தளர்வை நீக்குவதற்குத் துணையாகாமல் தலைவர் பின்னே சென்றுவிட எண்ணுகிறாயே! நான் என் செய்வேன்? என்னுடைய நெஞ்சைத்தானே நான் நம்பியிருக்கிறேன். இப்பொழுது எனக்கு வேறு யார் துணையாக வர முடியும்?' வந்தாலும் நெஞ்சத்துணை அல்லாத வழி எப்பயனும் கிட்டாதே எனப் புலந்து கூறுகிறாள். இவ்வாறு தனக்குத்தானே தேறுதல் கூறி தன் மனத்தை உயர்த்திக்கொண்டு காமநோய் தரும் துன்பத்திலிருந்து விடுதலை பெறவும் எண்ணுகிறாள்.
தலைவி, தலைவியின் நெஞ்சு இவை இரண்டும் ஒன்றுதான்; தான் ஏற்கனவே தலைவரிடம் சென்றுவிட்டதை உணர்த்தவே இப்படிக் கூறுகிறாள் அவள்.

'துன்பத்திற்கு யாரே துணையாவார்' குறிப்பது என்ன?

ஒருவர்க்கு அவருடைய நெஞ்சம்தான் எப்பொழுதும் கூடவே இருந்து வழிகாட்டுவது; துன்பத்தைக் கடக்க வழிகள் எத்தனையோ இருந்தாலும் மனம் மட்டுமே உள்ளுறு துணையாக இருந்து துன்பத்தை வெல்லத் துணையாக முடியும். துன்பம் வந்த காலத்தில் பிறர் உதவாவிடினும், அவருடைய நெஞ்சு தளராது துணை நிற்க வேண்டும். அவர் அதையே உறுதியாக நம்பியிருப்பார். ஆனால் அதுவே உறவாக இருந்து உதவாதபோது, பிறர் உறவாவது எங்ஙனம்? இது உனக்கும் தெரிந்ததுதானே நெஞ்சே என்று மெய்யுணர்வு அடைந்தவள்போல் பேசுகிறாள் தலைவி.

‘துன்பத்திற்கு யாரே துணை யாவார்’ என்பது நோய்க்கு மருந்து, பசிக்கு உணவு என்பன போல, எவ்விடத்தும் நீக்கப் பொருளையே தரும் உலகவழக்குத் தொடர் (இரா சாரங்கபாணி). துன்பத்திற்குத் துணை என்பது துன்பத்தை நீக்குவதற்குத் துணை எனப் பொருள்படும். "துன்பத்திற்கு யாரே துணையாவார்?" என்ற கேள்விக்கு யாரும் துன்பத்துக்கு துணை போக மாட்டார்கள் என்பதுதான் பதில். இங்கு தலைவி தன்நெஞ்சத் துணை தனக்குக் கிட்டவில்லை என்கிறாள்.
காமத்துப்பாலில் இடம்பெற்றுள்ள அறச்செய்தி இது. கருத்தூன்றிய கூற்றாக இருப்பினும் இங்கு அதை அவள் மேம்போக்காகவே கூறுகிறாள்.
தலைவரைப் பிரிந்துள்ள பொழுது பிரிவாற்றாமை தரும் துன்பத்திற்கு ஆறுதல் தரும் துணையாக இருக்கவேண்டியது நெஞ்சம். ஆனால் காதல்மனைவியின் நெஞ்சோ அவரையே நினைத்துக்கொண்டு இருக்கிறது. அவளுக்குத் துணை தேவையான நேரத்தில், அவளது நெஞ்சம் அவளை நீங்கித் தலைவரிடம் சென்றுவிட்டதே என்பதாம்.

காலிங்கர் என்ற பழம் ஆசிரியர் 'துணையல் வழி' என்பதற்குத் 'தமரல் வழி' எனப்பாடங்கொண்டு தமரல்லாத இடத்து எனப் பொருள்வருமாறு உரை வரைந்தார். இதனால் பொருள் வேறுபாடு தோன்றவில்லை; இப்பாடமும் சிறப்பாகவே உள்ளது.

'துன்பத்திற்கு யாரே துணையாவார்' என்பதற்குத் 'துன்பகாலத்து யார் துணை வருவார்' என்பது பொருள்.

தம்முடைய நெஞ்சமே தமக்குத் துணையாகாதபோது ஒருவரது துன்பக் காலத்து யார்தான் துணையாவார்? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தன்னெஞ்சம் தனக்கு துணையாகாவிட்டால் ஆற்றியிருத்தல் அரிது என்று தலைவி நெஞ்சொடு புலத்தல்.

பொழிப்பு

தன்னுடைய நெஞ்சமே தனக்குத் துணையாக நில்லாமல் தலைவர் பின் சென்று அவளைத் தவிக்க விட்ட நிலையில் வேறு யார் உதவுவார்?