இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1298எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு

(அதிகாரம்:நெஞ்சொடுபுலத்தல் குறள் எண்:1298)

பொழிப்பு (மு வரதராசன்): உயிரின்மேல் காதல்கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது,

மணக்குடவர் உரை: அவர் திறத்தைத் தானும் இகழ்ந்தால் அதனானே தனக்கு இளிவரவு உளவாகக் கருதி நினையாநின்றது சாவமாட்டாத நெஞ்சு.
இது தலைமகள் நெஞ்சு அவரைப்போலத் தானும் இகழலாயிருக்க, இகழா நின்றதுமில்லை: அவர் செயலைக் கேளாது சாவவும் வல்லுகின்றதில்லை யென்று அதனோடு புலந்து கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) உயிர்க் காதல் நெஞ்சு - உயிர்மேல் காதலையுடைய என் நெஞ்சு; எள்ளின் இளிவு ஆம் என்று எண்ணி -நம்மை எள்ளிச் சென்றார் என்று நாமும் எள்ளுவேமாயின் பின் நமக்கு இளிவாம் என்று கருதி; அவர் திறம் உள்ளும் - அவர் திறத்தினையே நினையாநின்றது.
(எள்ளுதல் - வாயில் மறுத்தல். இளிவு - வழிபடாமையானும், பிரிவாற்றாமையானும் , நாணும் நிறையும் முதலிய இழத்தலானும் உளதாவது. திறம் - வாயில் நேர்தலும் வருதலும் கூடலும் முதலாயின. இளிவிற்கு அஞ்சுதலானும் இறந்துபட மாட்டாமையானும் கூடக் கருதாநின்றது என்பதாம்.)

தமிழண்ணல் உரை: காதலர்பால் உயிரனைய காதல்கொண்ட என் நெஞ்சம், நம்மை இகழ்ந்து போயினாரை நாமும் இகழ்ந்தால் அது நமக்கே இளிவாம் என்று கருதி, அவர் பக்கம் சேர்வதற்கான நெறிகளையே நினைக்கும். உயிர்க்காதல் நெஞ்சல்லவா? உலகியலை நினைத்துப் பொறுமையைப் போதிக்கிறது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உயிர்க்காதல் நெஞ்சு எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் உள்ளும்.

பதவுரை: எள்ளின்-இகழ்ந்தால், சொல்லால் அல்லது செயலால் இகழ்ந்தால். பொருட்படுத்தாதிருந்தால்; இளிவாம்-இகழ்ச்சி உண்டாகும்; என்று-என்பதாக; எண்ணி-கருதி; அவர்-அவர்; திறம்-பக்கம்; உள்ளும்-நினைக்கின்றது; உயிர்-உயிரனைய; காதல்-காதல்; நெஞ்சு-உள்ளம்.


எள்ளின் இளிவாம்என்று எண்ணி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தானும் இகழ்ந்தால் அதனானே தனக்கு இளிவரவு உளவாகக் கருதி;
பரிப்பெருமாள்: தானும் இகழ்ந்தால் அதனானே தனக்கு இளிவரவு உளவாகக் கருதி;
பரிதி: நாயகரை நாம் இகழ்ந்து கூறின் இழிவாம் என்று நெஞ்சு வருந்தி அழகுகுறைந்து;
காலிங்கர்: தோழீ! அவர் நம்மாட்டுக் குற்றம் செய்து அகன்றனர் ஆயினும் அவர் திறம் பிறர்க்கு யாம் இகழ்ந்து உரைப்பின் பெரிதும் இளிவாம் என்று எண்ணி;
பரிமேலழகர்: (இதுவும் அது.) நம்மை எள்ளிச் சென்றார் என்று நாமும் எள்ளுவேமாயின் பின் நமக்கு இளிவாம் என்று கருதி;
பரிமேலழகர் குறிப்புரை: எள்ளுதல் - வாயில் மறுத்தல். இளிவு - வழிபடாமையானும், பிரிவாற்றாமையானும் , நாணும் நிறையும் முதலிய இழத்தலானும் உளதாவது. [வழிபடாமையானும் - காதலர் வரவை ஏற்றுக் கொள்ளாமையாலும்]

'நாமும் எள்ளுவேமாயின் பின் நமக்கு இளிவாம் என்று கருதி' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இகழ்தல் இழிவென்று', 'காதலரின் கொடுமையை நினைந்து இகழ்ந்துரைத்தால் இழிவாகும் என்று கருதி', '(அவரை) மறந்தால் (உயிருக்குக்) கேடு வரும் என்று எண்ணுவதால்', 'தலைவன் இகழ்ந்தால், உயிர்க்கு இழிவு வருமென்று கருதி', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இகழ்ந்தால் இழிவாகும் என்று கருதி என்பது இப்பகுதியின் பொருள்.

அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் திறத்தை நினையாநின்றது சாவமாட்டாத நெஞ்சு
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் நெஞ்சு அவரைப்போலத் தானும் இகழலாயிருக்க, இகழா நின்றதுமில்லை: அவர் செயலைக் கேளாது சாவவும் வல்லுகின்றதில்லை யென்று அதனோடு புலந்து கூறியது.
பரிப்பெருமாள்: அவர் திறத்தை நினையாநின்றது சாவமாட்டாத நெஞ்சு
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் நெஞ்சு அவரைப்போலத் தானும் இகழலாயிருக்க, இகழா நின்றதுமில்லை: அவர் செயலைக் கேளாது சாவவும் வல்லுகின்றதில்லை யென்று அதனோடு புலந்து கூறியது.
பரிதி: என் நெஞ்சு உள்ளுள்ளே அவர் தன்மையை நினைந்திருக்கும் என்றவாறு.
காலிங்கர்: அவர் திறமே எப்பொழுதும் சிந்தியாநிற்குங்காண். அவரோடு உயிர்க்காதல் உற்ற என் நெஞ்சானது என்றவாறு.
பரிமேலழகர்: (இதுவும் அது.) உயிர்மேல் காதலையுடைய என் நெஞ்சு அவர் திறத்தினையே நினையாநின்றது.
பரிமேலழகர் குறிப்புரை: திறம் - வாயில் நேர்தலும் வருதலும் கூடலும் முதலாயின. இளிவிற்கு அஞ்சுதலானும் இறந்துபட மாட்டாமையானும் கூடக் கருதாநின்றது என்பதாம். [வருதலும் கூடலும்- தலைவர் வருதலும் அவரைக் கூடுதலும்]

'என் நெஞ்சு அவர் திறத்தினையே நினையாநின்றது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். உயிர்க்காதல் நெஞ்சு என்ற தொடர்க்கு 'சாவமாட்டாத நெஞ்சு' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் கூற, 'அவரோடு உயிர்க்காதல் உற்ற என் நெஞ்சானது' என்று காலிங்கரும் 'உயிர்மேல் காதலையுடைய என் நெஞ்சு' என்று பரிமேலழகரும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவர் பண்புகளையே உயிர்ப்பற்றுடைய நெஞ்சு எண்ணும்', 'உயிர்மேல் காதலுடைய என் நெஞ்சம் அவரது பண்பின் திறங்களையே நினைக்கும்', 'உயிரின் மேல் மிகுந்த ஆசை வைத்துள்ள என் மனம் (எப்போதும்) அவரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறது', 'உயிர்மேற் காதல்வைத்த என் நெஞ்சு அவரது பெருமையையே நினைக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவரோடு உயிர்க்காதல் உற்ற என் நெஞ்சானது அவர் பக்கம் செல்லுதலையே நினைக்கின்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இகழ்ந்தால் இழிவாகும் என்று கருதி அவரோடு உயிர்க்காதல் உற்ற என் நெஞ்சானது அவர் பக்கம் செல்லுதலையே நினைக்கின்றது என்பது பாடலின் பொருள்.
'உயிர்க்காதல் நெஞ்சு' என்ற தொடர் குறிப்பது என்ன?

என் நெஞ்சு எப்பொழுதும் அவரை விட்டுக்கொடாது அவரது நல்ல குணங்களையே எண்ணும்.

என் காதல் கணவரை இகழ்ந்துரைத்தால் அது இழிவான செயல் என்பதால், அவரோடு உயிர்க்காதல் கொண்ட என் உள்ளம் அவர் பக்கமே செல்கின்றது.

காட்சிப் பின்புலம்:
தொழில் காரணமாகச் சென்றிருந்த தலைவர் இல்லம் திரும்பி வந்துவிட்டதால் பெருமகிழ்ச்சி அடைந்து காணப்படுகிறாள் மனைவி. அவரை நெருங்கிச் சந்திக்கும் நேரம் வந்து விட்டது. அதற்கிடையே முன் நிகழ்ந்தவை அவளது நினைவுக்கு வருகின்றன:
தன் கருத்துக்கு மாறாகத் தன் நெஞ்சு செயலாற்றுவதாகக் கற்பனை செய்து அதைக் கடிகிறாள்: 'அவருடைய நெஞ்சு அவர்க்குத் துணைநிற்றலைக் கண்டும் நீ ஏன் எனக்குத் துணையாக நிற்பதில்லை?' என்றும் 'அன்பற்று நம்மைப் பிரிந்து சென்றுவிட்டவர் என்று அறிந்தும் வெறுக்கமாட்டார் எனக் கருதி அவரிடம் செல்கின்றாயே!' என்றும் 'கேடுற்றவர்க்கு நண்பர் இல்லை என்று எண்ணியா நீ விரும்பியபடியே அவரிடம் செல்கிறாய்?' என்றும் 'படுக்கையறை ஆலோசனைகளை உன்னோடு யார் கலந்து பேசுவார்?' என்றும் 'அவர் உடனில்லாதபோது நம்முடன் இல்லையே என்று வருந்துகிறாய் வந்து சேர்ந்தபின் அவர் மீண்டும் பிரிந்து சென்றுவிடுவாரே என எண்ணிக் கலங்குகிறாய்; உன்னால் எனக்கு எப்பொழுதும் துன்பம்தானே இருக்கிறது' என்றும் 'தான் தனித்திருந்து தலைவரை நினைத்த போது என்னைத் தின்பதுபோல வருத்தினாய்; இப்போது அவரிடம் விரைந்து சென்று சேர நினைக்கிறாயே' என்றும் தன் நெஞ்சோடு புலந்து பேசினாள்.

இக்காட்சி:
திரும்பி வந்த கணவரைப் பார்த்துப் பார்த்து இன்பம் அடைகிறாள் தலைவி. சிறுது நேரத்தில் அவரைத் தனிமையில் கூடப் போகும் வேளைக்காகக் காத்திருக்கிறாள். அப்பொழுது தன்னைப் பிரிந்து சென்று தனக்குத் துயர் தந்ததால் அவர் மீது சினம் உண்டாவதையும் எண்ணுகிறாள். அவர் இவளைப் பார்க்கும்போது தன் முகம் காட்டாமல் தான் அவர்மேல் சினம் கொண்டுள்ளமையைக் காட்ட எண்ணுகிறாள். ஆனாலும் அது முடியவில்லை. அவர்பக்கமே அவளது நெஞ்சம் செல்கிறது. அவரை இகழ்வதுபோல் நடந்துகொள்ளாமல் அமைதி காப்பது ஏன் என விளக்கம் அளிக்க முற்பட்டுத் தன் எண்ண ஓட்டங்களைத் தன் நெஞ்சைப் புலப்பதுபோல் அதன் மேல் ஏற்றி உரைக்கிறாள்: 'என் நெஞ்சத்துக்கு அவர்மேல் உயிரனைய காதல் உண்டு; அவரை எள்ளினால் அதாவது பொருட்படுத்தாதிருந்தால் அது இழிவான செயலாகவே ஆகும்; எனவே அவரைப் புண்படுத்தும் எச்செயலையும் செய்யாமல், அவரது நற்குணங்களையே எண்ணி, அவரை நாடி அவர் பக்கமே நெஞ்சு செல்கிறது' என்கிறாள். உயிக்குயிராக காதலிக்கும் தன் கணவரை நோக்கி இன்முகம் காட்டாமல் தன்னால் இருக்க முடியாது-அவரை இழிவுபடுத்த இயலாது என்பதையே இவ்விதம் கூறுகிறாள் தலைவி.

'உயிர்க்காதல் நெஞ்சு' என்ற தொடர் குறிப்பது என்ன?

'உயிர்க்காதல் நெஞ்சு' என்ற தொடர்க்குச் சாவமாட்டாத நெஞ்சு, என் நெஞ்சு, உயிர்க்காதல் உற்ற என் நெஞ்சானது, உயிர்மேல் காதலையுடைய என் நெஞ்சு, உயிரின்மேல் காதல்கொண்ட என் நெஞ்சம், காதலர்பால் உயிரனைய காதல்கொண்ட என் நெஞ்சம், உயிர்ப்பற்றுடைய நெஞ்சு, உயிர்மேல் காதலுடைய என் நெஞ்சம், உயிரின் மேல் மிகுந்த ஆசை வைத்துள்ள என் மனம், உயிரின் மேல் விருப்பம் மிகக் கொண்ட நெஞ்சு, உயிர்மேற் காதல்வைத்த என் நெஞ்சு, உயிர்மேல் விருப்பமுடைய என் நெஞ்சு, என் உயிரின்மேல் காதல்கொள்ளும் நெஞ்சு எனப்பலவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இல்லறத்தில் வெற்றிபெற ஒரு தலைவியானவள் தனது பன்முகங்களைக் காட்ட வேண்டியுள்ளது. பிரிவுத் துன்பம் தந்த கணவர் மேல் சினம் ஒரு புறம்; அவர் மீதுள்ள உயிர்க் காதல் இன்னொருபுறம். துயரம் தந்தவரைப் புறக்கணிக்காமல் அவரது நற்பண்புகளை எண்ணி அவரை அணைத்துக்கொள்ள விதும்புகிறது அவள் நெஞ்சு. கணவர்க்கும் தலைவிக்கும் இடையே உள்ளது உயிரனைய காதல்; ஒருவரின்றி மற்றவரால் வாழ முடியாது. அவர் பொருள்தேடத்தான் பிரிந்து சென்றாலும் அப்பிரிவை ஆற்றமுடியாமலிருந்தாள். அவர் வந்தால் அவருடன் பூசல் கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தாள். இதோ அவர் வந்துவிட்டார். உள்ளுரப் பெருமகிழ்ச்சி அடைந்தாள் என்றாலும் அவரைக் கண்டதும் இன்முகம் காட்டாமல் புறக்கணிப்பதுபோல் நடந்து கொள்வோமா என்ற எண்ணமும் தோன்றுகிறது. ஆனாலும் அந்த நினைப்பை உடன் மறையச் செய்கிறாள். அவளது நெஞ்சம் அவர் மேல் உயிர்க்காதல் கொண்டதாதலால், வந்தவரை அவ்வாறெல்லாம் இழிவுபடுத்துதற்கு அந்த நெஞ்சு இடம் கொடாது. எனவே பார்த்தவுடன் அவரோடு காதல் உற்ற அந்நெஞ்சு அவரிடம் நேரே சென்றுவிடுகிறது.

'உயிர்க்காதல் நெஞ்சு' என்ற தொடர் தலைவர்பால் உயிரனைய காதல் கொண்ட நெஞ்சம் குறித்தது.

இகழ்ந்தால் இழிவாகும் என்று கருதி அவரோடு உயிர்க்காதல் உற்ற என் நெஞ்சானது அவர் பக்கம் செல்லுதலையே நினைக்கின்றது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புறக்கணிக்க வேண்டிய வேளையில் அவர் பக்கமே செல்கிறாயே எனத் தலைவி நெஞ்சொடுபுலத்தல்.

பொழிப்பு

இகழ்தல் இழிவென்று கருதி அவரோடு உயிர்க்காதல் உற்ற என் நெஞ்சானது அவர் பக்கம் செல்லுதலையே நினைக்கின்றது.