இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1293கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்

(அதிகாரம்:நெஞ்சொடுபுலத்தல் குறள் எண்:1293)

பொழிப்பு (மு வரதராசன்): நெஞ்சே! நீ உன் விருப்பத்தின் படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்க்கு நண்பர் இல்லை என்னும் எண்ணமோ?

மணக்குடவர் உரை: நெஞ்சே! நீ என்னிடத்து நில்லாது வேண்டின வண்ணமே அவர் பின்பே செல்கின்றது, கெட்டார்க்கு நட்டார் இல்லையென்பதனானேயோ?

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; நீ பெட்டாங்கு அவர்பின் செலல் - என்மாட்டு நில்லாது நீ விரும்பியவாறே அவர்மாட்டுச் செல்லுதற்குக் காரணம்; கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ? - கெட்டார்க்கு நட்டார் உலகத்து இல்லை என்னும் நினைவோ? நின்னியல்போ? கூறுவாயாக.
('என்னை விட்டு அவர்மாட்டுச் சேறல் நீ பண்டே பயின்றது', என்பாள், 'பெட்டாங்கு' என்றும், தான் இதுபொழுது மானமிலளாகலின், 'கெட்டார்க்கு' என்றும் கூறினாள். 'பின்' என்பது ஈண்டு இடப் பொருட்டு. 'செலல்' என்பது ஆகுபெயர். 'ஒல்கிடத்து உலப்பிலா உணர்விலார் தொடர்பு' (கலித்,பாலை 25)ஆயிற்று, நின் தொடர்பு என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: மனமே! என் பக்கம் நில்லாமல் விரும்பியவாறே அவர் பக்கம் செல்லக் காரணம் கேடுற்றவர்க்கு நண்பர் இல்லை என்னும் பழமொழி கருதியோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
நெஞ்சே! நீ பெட்டாங்கு அவர் பின் செலல் கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ?

பதவுரை: கெட்டார்க்கு-தன் நிலையில் குறைந்தவர்க்கு-இங்கு நிறையழிந்தவர்க்கு என்ற பொருள் தருவது; நட்டார்-நண்பர்கள்; இல்-இல்லை; என்பதோ-என்பதனாலாயோ?; நெஞ்சே-உள்ளமே; நீ-நீ; பெட்ட-விரும்பிய; ஆங்கு-போல; அவர்-அவர்; பின்-பின்னால்; செலல்-செல்லுதல்.


கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கெட்டார்க்கு நட்டார் இல்லையென்பதனானேயோ?
பரிப்பெருமாள்: கெட்டார்க்கு நட்டார் இல்லையென்பதனானேயோ?
பரிதி: கெட்டார்க்கு உற்றாரில்லை என்பது உன்னளவிலே கண்டேன்;
காலிங்கர்: 'உலகில் கெட்டார்க்கு நட்டார் இல்' என்று சொல்லும் முதுசொல் வழக்கேதான். எனவே யான் இங்ஙனம் எம்மை விரும்பாதாவர் தம்மேல் விழுதல் முறைமையோதான் என்றவாறு.
பரிமேலழகர்: (இதுவும் அது.) கெட்டார்க்கு நட்டார் உலகத்து இல்லை என்னும் நினைவோ? நின்னியல்போ? கூறுவாயாக.

'கெட்டார்க்கு நட்டார் இல்லையென்பதனானேயோ?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கெட்டவர்க்கு நண்பரில்லை என்பது கருத்தோ?', 'தரித்திரமடைந்தவர்களுக்கு நண்பர்கள் இருக்கமாட்டார்கள் என்ற நியாயத்தைச் சேர்ந்ததோ?', 'நீ அவர்பின் என்னைக் கேளாது விரும்பியபடி செல்லுதல்', 'கெட்டுப்போனவர்க்கு நண்பர் இலர் என்னும் நினைவோ?', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கேடுற்றவர்க்கு நண்பர் இல்லை என்பதனாலேயோ? என்பது இப்பகுதியின் பொருள்.

நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெஞ்சே! நீ என்னிடத்து நில்லாது வேண்டின வண்ணமே அவர் பின்பே செல்கின்றது,
பரிப்பெருமாள்: நெஞ்சே! நீ என்வரை நில்லாது வேண்டின வண்ணமே அவர் பின் செல்கின்றது,
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வாயில் மறுத்த தலைமகள் அவனோடு கூட்டம் வேண்டிய நெஞ்சோடு புலந்து கூறியது.
பரிதி: நெஞ்சே, நீ என்னைவிட்டும் நாயகர் பின் செல்லுவதால் என்றவாறு.
காலிங்கர்: நெஞ்சே! அவர்க்கு நம்மோடு அன்பு இல்லை; ஆயினும் பின்னும் நீ அவரைக் காதலித்து அவர்பின் செல்லுதல்.
பரிமேலழகர்: (இதுவும் அது.) நெஞ்சே! என்மாட்டு நில்லாது நீ விரும்பியவாறே அவர்மாட்டுச் செல்லுதற்குக் காரணம்.
பரிமேலழகர் குறிப்புரை: 'என்னை விட்டு அவர்மாட்டுச் சேறல் நீ பண்டே பயின்றது', என்பாள், 'பெட்டாங்கு' என்றும், தான் இதுபொழுது மானமிலளாகலின், 'கெட்டார்க்கு' என்றும் கூறினாள். 'பின்' என்பது ஈண்டு இடப் பொருட்டு. 'செலல்' என்பது ஆகுபெயர். 'ஒல்கிடத்து உலப்பிலா உணர்விலார் தொடர்பு' (கலித்,பாலை 25)ஆயிற்று, நின் தொடர்பு என்பதாம். பின்' என்பது காலத்தையும் இடத்தையும் உணர்த்திவரும். இங்கு பொருட்டு என்னும் இடப்பொருள் உணர்த்தும்.

'நெஞ்சே! என்மாட்டு நில்லாது நீ விரும்பியவாறே அவர்மாட்டுச் செல்லுதற்குக் காரணம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சே! உன்நோக்கப்படி அவரிடம் செல்லுதல்', 'மனமே! நீ (என் விருப்பத்தை மதிக்காமல்) உன் விருப்பத்தின்படியே அவரிடம் தஞ்சமடையப் போவது', 'நெஞ்சே! கெட்டவர்க்கு உலகத்தில் நட்பினர் இல்லை என்கிற நினைவினாலோ?', 'நெஞ்சே! நீ விரும்பியவாறு அவரிடம் செல்லுதற்குக் காரணம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நெஞ்சே! நீ விரும்பியபடி அவரிடம் செல்லுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நெஞ்சே! நீ விரும்பியபடி அவரிடம் செல்லுதல் கெட்டார்க்கு நட்டார்இல் என்பதனாலேயோ? என்பது பாடலின் பொருள்.
'கெட்டார்' யார்

நெஞ்சே! நான் நிறையழிந்து கேடுற்றேன் என்றா என்னைக் கைவிட்டு அவர் பின்னால் செல்கிறாய்?- தலைவி.

நெஞ்சமே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின்னாகச் செல்லுதல், நிறையழிந்து கெட்டார்க்கு நண்பரில்லை என்பதனாலா?
காட்சிப் பின்புலம்:
தொழில் காரணமாகச் சென்ற கணவர் இல்லம் திரும்பியிருக்கிறார். அவரை வரவேற்கத் தன்னை நன்கு ஒப்பனை செய்து மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன், பெண்மை நிறைந்த பொலிவுடன் இல்லத்துள் வலம் வருகிறாள் தலைவி. இடையில் தனக்கு முன்னரே தன்நெஞ்சு அவரிடம் சென்றுவிட்டதாகப் புனைந்து அதனால் அதனோடு பிணங்குவதுபோல் பேசுகிறாள் அவள்.
'நெஞ்சே! அவருடைய நெஞ்சம் அவரை விட்டு நம்மிடம் வராமல் அவர் பக்கமே நின்று அவர்க்குத் துணையாக இருக்கின்றது. நீ மட்டும் என் பக்கமாய் நில்லாது அவரிடம் விரைந்து சென்றுவிடுகிறாயே. ஏன்?; நமக்கு அளிசெய்ய அவர் விரைந்து வரவில்லை என்று அறிந்தும் நம்மை வெறுக்க மாட்டார் என்று கருதி அவரிடம் செல்கின்றாய். ஏன்? இவ்வாறாகத் தன் நெஞ்சிடம் பொய்யாகச் சினந்து உரையாடிக் கொண்டிருக்கிறாள் அவள்.

இக்காட்சி:
'என் நெஞ்சே! நீ விரும்பியபடி அவரிடம் சென்றுவிட்டாயே. கெட்டார்க்கு நண்பர்கள் இல்லை என்று சொல்வார்களே, அது போன்றதா இது?' எனத் தலைவி கேட்கிறாள். நிறையழிந்து கெட்டுப்போன எனக்கு நண்பராக இருக்க வேண்டாம் என்று எண்ணிவிட்டாயா என் நெஞ்சே! என்று அவள் கேட்பதுபோல் உள்ளது இது.

தலைவரைக் கண்ட மனைவியின் நெஞ்சு அவர்பால் விரைந்து சென்றுவிட்டதாகக் கற்பித்துக் கொண்டு அதனுடன் பேசுகிறாள்.
'அவரைக் கண்டவுடன் என்னைக் கைவிட்டு நீ அவரிடமே செல்கிறாய்' என்று நெஞ்சிடம் கூறிய தலைவி, 'துன்பத்தால் கெட்டு நொந்தவர்களை உலகத்தில் உறவினர்களும் நண்பர்களும் கைவிட்டு ஒதுங்குவார்கள். அதைப்போல நான் காதலரை பிரிந்து நீண்டகாலம் துன்புற்றிருக்கிறேன். இந்த வேளையில் என்னை விட்டு உன் விருப்பப்படி அவருடன் போய்விட்டாயே! 'கெட்டார்க்கு நட்டாரில்லை' என்ற உலகியலைச் எனக்குச் சொல்வதற்காக இப்படிச் செய்கிறாய் போலும்' எனத் தலைமகள் அவரோடு கூட்டம் வேண்டிச் சென்றுள்ள தன்நெஞ்சோடு மாறுபட்டுப்‌ பேசுகிறாள்.

'கெட்டார்' யார்?

கெட்டார் என்ற சொல் கெட்டுப்போனவர் என்று பொருள்படும். இங்கு சொல்லப்பட்ட கெட்டார் என்றது நிறையழிந்த நிலையிலுள்ள தலைவியைக் குறிப்பதாக உள்ளது.
தலைவி நிறையழிதலும், கணவரைக் காண்பதற்கும் கூடுதற்கும் விரைதலும் இதற்கு முந்தைய அதிகாரங்களில் கூறப்பட்டன. தலைவரது வரவு நீட்டிப்பால் தலைவி புணர்வு பெறாமல் காமம் மிகப் பெற்று உள்ளம் வருந்தி தன் காதல் மிகுதியைக் கூறத்தொடங்குகிறாள். எனவே காதல் கைம்மிகல் அதாவது காதலுணர்வு வரம்பிகந்த நிலையில் உள்ள தலைவி கெட்டார் எனச் சொல்லப்படுகிறாள்.

காமத்துப்பாலிலும்கூட அறக்கருத்துகளும் பழமொழிகளும் காணப்படுகின்றன. இங்கு 'கெட்டார்க்கு நட்டார் இல்லை' என்ற முதுமொழி (பழமொழி நானூறு 59) வழக்கு சொல்லப்படுகிறது. ஒருவர் நலிவுற்ற காலத்தில், நண்பர்கள் இல்லாமல் போய்விடுவர் என்பது இதன் பொருள். 'தான் இதுபொழுது மானமிலளாகலின், 'கெட்டார்க்கு' என்றும் கூறினாள்' என ஏன் தலைவி கெட்டார் எனச் சொல்லப்பட்டாள் என்பதை விளக்குவார் பரிமேலழகர். மேலும் அவர் ...மற்று அவர் ஒல்கத்து நல்கிலா உணர்விலார் தொடர்பு போல்... (கலித்தொகை 25 பொருள்: வறுமை நேர்ந்தவிடத்து அவர்க்கு ஒன்றை உதவுதல் இல்லாத அறிவில்லாதவருடைய உறவு போல) என்ற பாடல் வரியை இதற்கு ஒப்பும் காட்டுகிறார்.

தலைவியின் இக்கூற்று வருத்த மேலீட்டால் வெளிப்பட்டது அல்ல; கணவரது வரவால் களிப்பு மிகுந்த மனநிலையில் உள்ள தலைமகள் சொல்வது இது. கேடுற்றவரை அவரது நண்பர்களும் உறவுகளும் விட்டு அகன்று சென்றுவிடுவதுபோல தலைவியின் நெஞ்சு அவளைக் கைவிட்டுவிட்டது என்று அவளே தன்னுடன் நட்பாயிருந்த நெஞ்சு பற்றி நகைச்சுவையாகக் கூறுகிறாள்.

'கெட்டார்' என்று நிறையழிந்த தன்னையே தலைவி சுட்டுகிறாள்!

நெஞ்சே! நீ விரும்பியபடி அவரிடம் செல்லுதல் கேடுற்றவர்க்கு நண்பர் இல்லை என்பதனாலேயோ? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தன்னைக் கைவிட்டுத் தலைவனிடம் சென்றுவிட்டதாகத் தன் நெஞ்சொடுபுலத்தல் செய்கிறாள் காதலி.

பொழிப்பு

நெஞ்சே! நீ விரும்பியவாறே அவர் பக்கம் செல்லல் கெட்டவர்க்கு நண்பரில்லை என்பதனாலேயோ?