இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1288இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு

(அதிகாரம்:புணர்ச்சிவிதும்பல் குறள் எண்:1288)

பொழிப்பு (மு வரதராசன்): கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.

மணக்குடவர் உரை: பிறர் இகழத்தக்க இன்னாமையை நீ எமக்குச் செய்யவும் மதுவுண்டு களித்தார்க்கு அதனாலுள்ள குற்றத்தினைக்கண்டு வைத்தும் அதனை யுண்ணல்வேட்கை நிகழுமாறுபோலப் புணர்வு வேட்கையைத் தாராநின்றது, வஞ்சகா! நின் மார்பு.
இது புலவிக்குறிப்பு நீங்கின தலைமகள் தலைமகற்குச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (தலைமகள் புணர்ச்சி விதுப்பு அறிந்த தோழி, தலைமகற்குச் சொல்லியது.) கள்வ - வஞ்சக; களித்தார்க்கு இளித்தக்க இன்னா செயினும் கள் அற்றே - தன்னை உண்டு களித்தார்க்கு இளிவரத்தக்க இன்னாதவற்றைச் செயினும் அவரால் மேன்மேல் விரும்பப்படுவதாய கள்ளுப் போலும்; நின் மார்பு - எங்கட்கு நின் மார்பு.
(அவ்வின்னாதன நாணின்மை, நிறையின்மை ஒழுக்கமின்மை, உணர்வின்மை என்றிவை முதலாயின. 'எங்கட்கு நாணின்மை முதலியவற்றைச் செய்யுமாயினும், எங்களால் மேன்மேல் விரும்பப் படா நின்றது' என்பதாம். 'கள்வ' என்றதும், அது நோக்கி.)

சி இலக்குவனார் உரை: ஏமாற்றுபவனே, தன்னை உண்டு களித்தார்க்கு இழிவு தரத்தக்க, இன்னாதவற்றைச் செய்தாலும் அவரால் விரும்பப்படுவதாய கள் போலும் நின் மார்பு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு.

பதவுரை: இளித்தக்க-இழிவு தரத்தக்க; இன்னா-துன்பம் தருவனவற்றை; செயினும்-செய்தாலும்; களித்தார்க்கு-உண்டு மகிழ்ந்தவர்க்கு; கள்ளற்றே-கள் போன்றதே; கள்வ-வஞ்சகா!; நின் மார்பு-உன் மார்பு.


இளித்தக்க இன்னா செயினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர் இகழத்தக்க இன்னாமையை நீ எமக்குச் செய்யவும்;
பரிப்பெருமாள்: பிறரால் இகழத்தக்க இன்னாமையை நீ எமக்குச் செய்யவும்;
பரிதி: நீ என்னை எத்தனை பிணக்குச் செய்யினும்;
காலிங்கர்: நீ எமக்கு இளிவு ஆவதற்குத் தக்க இன்னாதனவற்றைச் செய்யினும் நின்னைப் பிழைத்து ஒழுகேன் யான்;
பரிமேலழகர்: (தலைமகள் புணர்ச்சி விதுப்பு அறிந்த தோழி, தலைமகற்குச் சொல்லியது.) தன்னை உண்டு களித்தார்க்கு இளிவரத்தக்க இன்னாதவற்றைச் செயினும்;
பரிமேலழகர் குறிப்புரை: அவ்வின்னாதன நாணின்மை, நிறையின்மை ஒழுக்கமின்மை, உணர்வின்மை என்றிவை முதலாயின. [நாண்இன்மை- இழிவாயின செய்தற்கண் விலக்குவது இன்மை; நிறைஇன்மை-மனத்தே அடக்கத்தக்கனவற்றை வேட்கை மிகுதியால் அடக்க மாட்டாது வாய்விடுதல்]

'பிறர் இகழத்தக்க இன்னாமையை நீ எமக்குச் செய்யவும்' என்று மற்றவர்கள் தலைவனுக்கு ஏற்றிக் கூற பரிமேலழகர் 'தன்னை உண்டு களித்தார்க்கு இளிவரத்தக்க இன்னாதவற்றைச் செயினும்' எனக் கள்ளுக்கேற்றி இப்பகுதிக்கு உரை நல்கினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இழிவான துன்பங்கள் செய்யினும்', 'வஞ்சக! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும்', '(பிறர்) இகழத்தக்க துன்பங்களை உண்டாக்குவதானாலும்', 'இழிவு வரத்தக்க கெடுதிகள் எவ்வளவு செய்தாலும்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இழிவு வரத்தக்க இன்னாதவற்றைச் செய்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மதுவுண்டு களித்தார்க்கு அதனாலுள்ள குற்றத்தினைக்கண்டு வைத்தும் அதனை யுண்ணல்வேட்கை நிகழுமாறுபோலப் புணர்வு வேட்கையைத் தாராநின்றது, வஞ்சகா! நின் மார்பு.
மணக்குடவர் குறிப்புரை: இது புலவிக்குறிப்பு நீங்கின தலைமகள் தலைமகற்குச் சொல்லியது.
பரிப்பெருமாள்: அதுகண்டு களித்தார்க்கு அதனாலுள்ள குற்றத்தினைக்கண்டு வைத்தும் உண்டல் வேட்கை நிகழுமாறுபோலப் புணர்வு வேட்கையைத் தாராநின்றது, வஞ்சகா! நின் மார்பு.
பரிப்பெருமாள் குறிப்புரை: நின்தொழில் மார்பும் உடைத்தாயிற்று என்றது. இது புலவிக்குறிப்பு நீங்கின தலைமகள் தலைமகற்குச் சொல்லியது.
பரிதி: உன் மார்பு கண்டளவில் குற்றமறிந்து கூடுதற்கு இடமாயிற்று. ஆதலால் என்மனம் களிப்பதற்குக் கள் ஒக்கும் கள்ளா உன் மார்பு என்றவாறு.
காலிங்கர்: நினது சூளுறவு எடுத்து உரைக்கும் வஞ்சனையை உணர்ந்து பின்னும் நின் மார்பு எமக்கு எத்தன்மைத்தோ எனின், சில காலம் கள்ளுண்டு களித்தவர்க்குப் பின்னும் அக்கள் அவர்க்கு எத்தன்மைத்து, மற்று அத்தன்மைத்து.
காலிங்கர் குறிப்புரை: எனவே இது அவன் தவறியது நோக்காதது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: வஞ்சக; அவரால் மேன்மேல் விரும்பப்படுவதாய கள்ளுப் போலும் எங்கட்கு நின் மார்பு.
பரிமேலழகர் குறிப்புரை: 'எங்கட்கு நாணின்மை முதலியவற்றைச் செய்யுமாயினும், எங்களால் மேன்மேல் விரும்பப் படா நின்றது' என்பதாம். 'கள்வ' என்றதும், அது நோக்கி. [அதுநோக்கி- இளித்தக்க இன்னா செய்தலைக் கருதி]

'கள்ளுண்டு களித்தவர்க்குப் பின்னும் அக்கள் உண்ணல்வேட்கை நிகழுமாறுபோல வஞ்சகா! நின் மார்பு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கள்வனே! நின்மார்பு குடியர்க்குக் கள் போன்றது', 'கள்ளுண்டு களிப்படைந்தவர்க்கு அவரால் மேன்மேலும் விரும்பப்படும் கள்ளைப்போல, நீ குறைபாடுகள் உடையை ஆனாலும் உன் மார்பு மேன்மேலும் எங்களால் விரும்பப்படுகின்றது', 'திருடரே! குடிப்பழக்கமுள்ளவர்களுக்குக் கள் எப்படியோ அப்படி எனக்கு உம்முடைய மார்பு', 'கள்வனே! கள்ளுண்டவர்க்குக் கள்ளைப் போல நின் மார்பானது எனக்கு மேலும்மேலும் விருப்பத்தைத் தருகின்றது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கள்வனே! கள்ளுண்டவர்க்குக் கள்ளைப் போல, எனக்கு மேன்மேலும் தழுவும் விருப்பத்தைத் தருகின்றது உனது மார்பானது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கள்வனே! இளித்தக்க இன்னா செய்தாலும் கள்ளுண்டவர்க்குக் கள்ளைப் போல, எனக்கு மேன்மேலும் தழுவும் விருப்பத்தைத் தருகின்றது உனது மார்பானது என்பது பாடலின் பொருள்.
'இளித்தக்க இன்னா' குறிப்பன எவை?

கள்ளா! நீ என்ன தவற்றை எனக்குச் செய்தாலும் உன் மார்பு கண்டவுடன் எனக்கு காதல்களிப்பு உண்டாகி விடுகிறதே!

'இழிவு வரத்தகுந்தவற்றை உண்டாக்கினாலும், கள் உண்பவர்களுக்கு கள்ளை மேலும் மேலும் உண்ண வேட்கை நிகழுமாறுபோல நீ எனக்கு இழிவு வருமாறு நடந்து கொண்டாலும் உன் மார்பு மீண்டும் மீண்டும் தழுவிக் கிடக்குமாறு விருப்பமூட்டுகிறதே கள்வனே!' என்று தலைவனைப் பார்த்து கூறுகிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
தொழில் காரணமாகச் சென்றிருந்த கணவர் இல்லம் திரும்பிவிட்டார். பிரிவால் துயருற்றிருந்த தலைவி அவர் வருகை அறிந்து கண்ணுக்கு மைதீட்டி, கைநிறைய வளையணிந்து, பெண்மைப் பொலிவுடன் இருக்கிறாள். அவரைக் கண்டவுடன் மிக்க மகிழ்ச்சி அடைகிறாள். அவரைத் தனிமையில் சந்திக்கும் வேளையை எதிர்நோக்கி இருக்கிறாள்.
காதல் கணவரை நினைப்பதனாலும் இன்பம் உண்டானது; அவரைக் காணும்போது பெருமகிழ்ச்சி உண்டாகிறது; இந்தக் களிப்பு கள் உண்டார்க்கு இல்லையே என ஒப்பு நோக்கி இன்புறுகிறாள் தலைமகள்; காம உணர்வு பனையளவினும் மிகுதியாகத் தோன்றியுள்ள இப்பொழுது தினையளவும் ஊடாமலிருப்பது நல்லது என்ற உணர்வும் அவளுக்குத் தோன்றுகிறது; அவர் வந்ததிலிருந்து அவர் விருப்பப்படியே எல்லாம் செய்து என்னை இகழ்கின்றாரென்றாலும் அவரைக் காணாது என் கண்கள் அமைவதில்லையே; அவருடன் பிணக்கம் கொள்ளவே எண்ணுகிறேன். ஆனால் அதை மறந்து என் மனம் அவரைக் கூட நினைக்கிறதே!; கணவர் தொலைவில் இருக்கும்போது அவர் பிரிந்து சென்றது பழியாகப் பெரிதாகப்பட்டது, இப்பொழுது அவர் என்னருகில் உள்ளபோது அது எதுவும் தோன்றவில்லை; இப்பொழுது அவரை நேரில் பார்த்தபின் அவரது தவறுகள் ஒன்றும் தெரிவதேயில்லையே; அவரைக் காணாதபோது எல்லாமே தவறாகத் தோன்றினவே!; ஓடும்நீர் தம்மை இழுத்துக் கொண்டு போய்விடும் என்பதை அறிந்தும் அதில் பாய்வார்போல, புலவி நீண்டு நிற்காது என்றறிந்தும் ஏன் இன்னும் ஊடிக்கொண்டிருக்கிறாய்?
அவரைக் கூடும் வேளை நெருங்கும்போது மனைவியின் எண்ண ஓட்டங்கள் இவ்வாறாக இருக்கின்றன.

இக்காட்சி:
பிரிவு காலத்தில், கணவர் தம்மை விட்டுப் பிரிந்து சென்ற 'கொடுமை', பலநாட்களாகச் செய்தி அனுப்பாதிருந்தது, விரைந்து இல்லம் திரும்பாதது போன்ற பிற 'குற்றங்களு'க்காக இதுகாறும் அவரை வசை பாடிக் கொண்டே இருந்தாள். பலநாள் தன்னைப் பிரிந்து எப்படி அவரால் ஆற்றி இருக்க முடிந்தது என்பதற்காகவும் அவர் மீது சினம் கொண்டாள். அவன் வந்தால் அவருடன் நன்றாகச் சண்டை போடவேண்டுமென்று வஞ்சினம் கொண்டாள். ஆனால் கணவரை நேரில் கண்டதும் எல்லாம் மறந்து போய்விட்டது. அவரது தவறுகள் ஒன்றுமே அவளுக்குத் தெரியவில்லை. அவருடன் கூடினாலும் அதற்கு முன் ஊடவேண்டும் என்று உறுதி பூண்டிருந்தவள் அதையும் கைவிட்டாள். காம வெள்ளத்தில் ஊடுதல் அடித்துச் சென்றுவிடும் என்ற உணர்வைப் பெறுகிறாள். புலவிக்குறிப்பு நீங்கியது.
பிரிவிற்குப் பின் வந்த அவரை இப்பொழுது மிக நெருக்கமாகச் சந்திக்கிறாள். அவளது இயற்கை நாணும் எங்கோ மறைந்து விட்டது. நேராகச் சென்று அவர் மார்பை இறுகத் தழுவிச் சொல்கிறாள்: 'கள்ளானது உண்பவர்க்கு களிப்பைத் தரும். அந்தக் களிப்பில் இழிவான செயல்கள் செய்து புகழ் இழப்பர். ஆனாலும் மீண்டும் கள் அருந்தவே செய்வர். அதுபோல், உம் பிரிவால் எனக்கு இகழ்வு நேர்ந்தாலும், உம்மைப் பார்த்தபின் அத்துன்பங்கள் எல்லாம் மறைந்து திரும்பத் திரும்ப உம் மார்பைத் தழுவவே தோன்றுகிறது எனக்கு.'

எத்துணை இழிவைச் செய்தாலும் கள்ளை அருந்திக் களித்தவர்க்குக் கள் விருப்பம் குறையாது; மேலும் மேலும் கள்ளை உண்ண முற்படுவர். அதுபோன்று பிரிவால் அவர் துன்பம் கொடுத்திருந்தாலும், கணவர் மார்பைக் கூடி இன்பம் துய்த்த தலைவி மீண்டும் அவர் மார்பைத் தழுவவே விரும்புவாள். ஆகவே, அவருடன் ஊடல் கொள்ள அவளால் இயலாது.
பலநாள் தன்னைப் பிரிந்து ஆற்றி இருந்தார் என்பதற்காக 'அவர்வரும்பொழுது அவரோடு ஒரு சொல்லும் மொழியேன்' என சூளுரைத்திருந்தாள். ஆனால் அவரை நேரில் கண்டதும் அவரது மார்பு தன்னை மயக்குகிறது என்கிறாள். தலைவருடைய கூட்டுறவில் கருத்தூன்றிய மனைவிக்கு, தலைவர் செய்த தவறும் பழியும் நினைவிற்கு வரவில்லை; அவள்‌ முன்‌ நிகழ்ச்சிகளை மறந்து, அவரோடு கூடி இன்புறவே விழைகிறாள்.

கள்ளும் அவனது மார்பு தழுவதலும், வேட்கையும் இன்பமும் தரும் தன்மையன எனச் சொல்கிறாள் தலைமகள். களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது (அலர் அறிவுறுத்தல் 1145 பொருள்: மகிழ மகிழ கள்ளுண்டலை விரும்புமாறு போல, காமம் அலராகும் தோறும் இனிதாகின்றது), என்றும் உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது (நினைந்தவர்புலம்பல் 1201 பொருள்: காதலிக்கப்பட்டவரை நினைத்தாலுமே அது நீங்காத பெரு மகிழ்ச்சியை அளிப்பதலால் கள்ளினும் காதல் இன்பம் இனிமையானது) என்றும் கள் தரும் களிப்பை முன்னரும் குறள் கூறியது.

பிரிவால் அவளை வஞ்சித்தான் என்றதால் தலைவனைக் 'கள்வ' என விளிக்கின்றாள். அவன் அவளது உள்ளங்கவர்ந்த கள்வன்தானே! தனக்கு இழிவு வரக்கூடியவனவற்றைச் செய்தாலும், மேன்மேலும் விருப்பமுண்டாகுமாறு மாயம் செய்ய வல்லவனும் அவன் என்பதால் 'கள்வ' எனத் தன் காதல்கணவனைக் கொஞ்சலாக அழைக்கிறாள் தலைவி.

'இளித்தக்க இன்னா' குறிப்பன எவை?

'இளித்தக்க இன்னா' என்பதற்குப் பிறர் இகழத்தக்க இன்னாமை, பிறரால் இகழத்தக்க இன்னாமை, எமக்கு இளிவு ஆவதற்குத் தக்க இன்னாதன, இளிவரவைத் தரத்தக்க இன்னாதவை, இளிவரத்தக்க இன்னாதவற்றை, இழிவான துன்பங்கள், இழிவு வரத்தக்க துன்பங்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

‘இளித்தக்க இன்னா’ என்பதைக் கள் தலைவர் என இவ்விரண்டுக்கும் ஏற்றிப் பொருள் கொள்ள இயலும்.
பகைவர் அஞ்சாமை, பெரியோர் மதியாமை, ஈன்றவளும் கள்ளுண்டு இளிப்பவனை விரும்பாமை, நாணிழத்தல், பொருளிழத்தல், மயக்குற்று வீழ்ந்து நகைக்கு ஆளாவது, மறைகாக்க இயலாமை, கள்ளுண்டலை மறக்க மறுத்தல் போன்ற கள் தரும் இன்னாதனவற்றை-இழிவுகளைக் 'கள்ளுண்ணாமை' அதிகாரம் காட்டும்.

இனி, தலைவர் தந்த இன்னா எவை? தலைவியின் பார்வையில் கணவர் செய்த இழிவு வரத்தக்க துன்பங்களாவன:
திரும்பிவந்த தலைவரைப் பார்த்தவுடன் அவருடைய 'தவறாய காணேன்' அதாவது அவர் செய்த எந்தத்தவறும் தெரியவில்லை எனக் காதல்மனைவி சொல்கிறாள். தலைவி கணவர் மீது அளவு கடந்த காதல் கொண்டவள். அவர் தொழில் காரணமாகத்தான் பிரிந்து சென்றார். அவளிடம் விடைபெற்றுத்தான் போனார், எனினும் அப்பிரிவை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் திரும்பி வந்த இந்தவேளையில் 'இளித்தக்க இன்னா' செய்யினும் அதாவது இழிவு வரத்தக்க துன்பங்கள் அவர் செய்திருந்தாலும் அவர் மார்பு எப்பொழுது அவளுக்கு இன்பம் தருவதுதான் என்று காமமிகுதியில் கூறுகின்றாள். அவள் துன்பங்கள் என்று கூறியன; பிரிந்தவழி அருள் செய்யாமல் தன்னைத் தனியாக விட்டுத் தவிக்க வைத்தது, காலம் தாழ்த்து திரும்பி வந்தது, எந்தச் செய்தியும் அனுப்பாதது போன்றவற்றிற்காக அவளது தோழியரும் பிறரும் அவளை எள்ளி நகையாடி மனம் புண்படச் செய்தது, நாணம் நிறை தன்பொலிவு ஆகிய இவற்றை இழந்தது, சோர்வடைந்தது போன்றவற்றைத் துன்பங்கள் என்கிறாள். அவள் இவ்வாறு கூறுவது அவளது அன்புமிகுதியையே காட்டுகின்றது. காதல்பெருக்கால் தீயவும் நல்லவாகத் தோன்றும். காதலன் இளித்தக்க இன்னா செய்யினும் அவனை வெறுக்காது அவனை மேலும் மேலும் விரும்பவே செய்கிறாள்.

'இளித்தக்க இன்னா' என்றது அருள் செய்யாமல் தனிமையில் விட்டுப்பிரிந்து சென்றது, காலம் தாழ்ந்து திரும்பியது, நாண் நிறை அழகு இவற்றை இழந்தது போன்றவற்றைக் குறித்தது.

கள்வனே! இழிவு வரத்தக்க இன்னாதவற்றைச் செய்தாலும் கள்ளுண்டவர்க்குக் கள்ளைப் போல, எனக்கு மேன்மேலும் தழுவும் விருப்பத்தைத் தருகின்றது உனது மார்பானது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புணர்ச்சிவிதும்பல் உற்ற தலைமகளுக்குத் தன் காதல்கணவன் மார்பை மீண்டும் மீண்டும் தழுவுத் தோன்றுகிறதாம்.

பொழிப்பு

வஞ்சக! இழிவு வரத்தக்கவற்றைச் செய்தாலும் கள்ளுண்டு களிப்படைந்தவர்க்கு கள் மேன்மேலும் விரும்பப்படுவது போல, நீ எனக்குத் துன்பங்கள் உண்டாகச் செய்தாலும் உன் மார்பு மேன்மேலும் எனக்குக் களிப்புண்டாக்குகிறது.