இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1285



எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து

(அதிகாரம்:புணர்ச்சிவிதும்பல் குறள் எண்:1285)

பொழிப்பு (மு வரதராசன்): மை தீட்டும் நேரத்தில் தீட்டும் கோலைக் காணாத கண்களைப்போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

மணக்குடவர் உரை: கண்ணெழுதுங் காலத்துத் தன் இமையகத்துப் புகுந்த கோலைக் காணாத கண்ணைப் போலக் கொண்கனது குற்றத்தினையும் அவனைக்கண்ட விடத்துக் கண்டிலேன்.
இது மேற்கூறிய சொற்கேட்டு நீ அவனைக்கூறிய குற்றமெல்லாம் யாண்டுப்போயின வென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல் - முன்னெல்லாங் கண்டிருந்தும் எழுதுங்காலத்து அஞ்சனக் கோலின் இயல்பு காணமாட்டாத கண்ணேபோல; கொண்கன் பழி கண்டவிடத்துக் காணேன் - கொண்கனது தவறு காணாதவிடத் தெல்லாம் கண்டிருந்து. அவனைக் கண்டவிடத்துக் காணமாட்டேன்.
(கோல்: ஆகுபெயர். இயல்பு: கருமை. 'என் இயல்பு இதுவாகலின் மேலும் அது தப்ப முடியாது' என்பதாம்.)

தமிழண்ணல் உரை: கண்ணுக்கு மை எழுதும்போது, எழுதுங்கோல் கண்ணின் இமையருகே செல்லுதலால், அக்கோல் கண்ணுக்குத் தெரியாது. அது போலக் கணவனைக் காணாதபொழுது அவனது குறைகளையே எண்ணும் நான், அவள் அருகில்வரக் கண்டதும் அக்குறைகளைக் கண்டிலேன். இதுவும் உளவியலே, பாராதபோது ஆயிரம் பேசியவள், பார்த்ததும் எல்லாவற்றையும் மறந்துவிடுவாள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து.

பதவுரை: எழுதுங்கால்-(கண்ணிற்கு மை) எழுதும்போது; கோல்-தீட்டும்கோல்; காணா-காணாத; கண்ணேபோல்-கண்களைப் போன்று; கொண்கன்-கணவன்; பழி-குற்றம்; காணேன்-காண மாட்டேன்; கண்ட இடத்து--பார்த்த போது.


எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்ணெழுதுங் காலத்துத் தன் இமையகத்துப் புகுந்த கோலைக் காணாத கண்ணைப் போல;
பரிப்பெருமாள்: கண்ணெழுதுங் காலத்துத் தன் இமையகத்துப் புகுந்த கோலைக் காணாத கண்ணைப் போல;
பரிதி: மையெழுதும்பொழுது தூரிகைக்கோல் காணாத கண்ணேபோல;
காலிங்கர்: தோழீ! முன்னம் எல்லாம் அவன் பழி நின்னினும் மற்றும் யான் கருதி இருப்பேன்; பின்பு அஞ்சனம் எழுதும் காலத்து அவ்வெழுதுகோலினை முன்னம் கண்டாங்குக் காணமாட்டாக் கண்ணேபோல;
பரிமேலழகர்: (இதுவும் அது.) முன்னெல்லாங் கண்டிருந்தும் எழுதுங்காலத்து அஞ்சனக் கோலின் இயல்பு காணமாட்டாத கண்ணேபோல; [அஞ்சனக் கோல் - கண்ணிற்கு மைதீட்டும் கோல்]
பரிமேலழகர் குறிப்புரை: கோல்: ஆகுபெயர். இயல்பு: கருமை.

'கண்ணெழுதுங் காலத்துத் தன் இமையகத்துப் புகுந்த கோலைக் காணாத கண்ணைப் போல' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மற்றவர்கள் 'எழுதும் கோலைக் காணாத' எனச் சொல்ல பரிமேலழகர் 'அஞ்சனக் கோலின் இயல்பு (கருமை) காணாத' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'மைதீட்டுங்கால் தூரிகை கண்ணுக்குத் தெரியாது', 'மை தீட்டும் காலத்து அஞ்சனக் கோலின் இயல்பினைக் காணாத கண் போல', 'அஞ்சனக் கோலால் கண்ணுக்கு மையெழுதும் போது அஞ்சனக் கோலை கண்கள் பார்க்க முடிவதில்லை', 'கண்ணில் மை எழுதப்படுங்கால் கோலைக் காணாத கண்களைப்போல' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மை எழுதப்படும் காலத்து அஞ்சனக் கோலைக் காணாத கண் போல என்பது இப்பகுதியின் பொருள்.

கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொண்கனது குற்றத்தினையும் அவனைக்கண்ட விடத்துக் கண்டிலேன்.
மணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறிய சொற்கேட்டு நீ அவனைக்கூறிய குற்றமெல்லாம் யாண்டுப்போயின வென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: கொண்கனது குற்றத்தினையும் அவனைக்கண்ட விடத்துக் கண்டிலேன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேற்கூறிய சொற்கேட்டு 'நீ அவனைக்கூறிய குற்றமெல்லாம் யாண்டுப்போயிற்று' வென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: நாயகனைக் காணாத போழ்து உண்டான குற்றம் கூடி இருந்த இடத்துக் காணேன் என்றவாறு.
காலிங்கர்: நம் துணைவன் செய்யும் பழி சிறுதும் காணேன். மற்று அவனைக் கண்டவிடத்து.
காலிங்கர் குறிப்புரை: எனவே மற்று அப்பொழுது பிறிது நினையாது கலவி நினையும் பேதைமை உடையேன்.
பரிமேலழகர்: கொண்கனது தவறு காணாதவிடத் தெல்லாம் கண்டிருந்து. அவனைக் கண்டவிடத்துக் காணமாட்டேன்.
பரிமேலழகர் குறிப்புரை: 'என் இயல்பு இதுவாகலின் மேலும் அது தப்ப முடியாது' என்பதாம். [அது - பிணங்குதல்]

'கொண்கனது குற்றத்தினையும் அவனைக்கண்ட விடத்துக் கண்டிலேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவரைக்கண்டபோது பழி எனக்குத் தெரியாது', 'காதலனைக் கண்டவிடத்து அவனுடைய குற்றங்களை நான் காண மாட்டேன்', 'அதுபோலவே கணவனைக் கண்ட உடன் (எனக்கு அவர் செய்த) குற்றங்கள் மறைத்துவிடுகின்றன', 'கணவனைக் கண்டபொழுது அவன் தவறுகளைக் காணேன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கணவனை அருகில் கண்டவிடத்து அவனுடைய தவறுகள் எனக்குத் தெரிவதில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எழுதுங்கால் கோல்காணாக் கண் போலக் கணவனை அருகில் கண்டவிடத்து அவனுடைய தவறுகள் எனக்குத் தெரிவதில்லை என்பது பாடலின் பொருள்.
'எழுதுங்கால் கோல்காணாக் கண்' குறிப்பது என்ன?

நேற்றுவரை காதலரைப் பற்றி அவ்வளவு குறைசொன்னாயே! இன்று அவரைப் பார்த்ததும் அவை எல்லாம் எங்கே போய்விட்டன?

மையெழுதுங்கோல் கண் அருகே செல்லச் செல்ல எப்படி அது எழுதப்படுவார் கண்ணுக்குத் தெரிவதில்லையோ அதுபோல் கணவர் திரும்பி வந்தபின் அவரை நெருக்கத்தில் கண்டபோது அவர்மீதான வருத்தங்கள் எல்லாம் மறைந்தொழிந்துவிட்டன என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
தொழில் காரணமாகப் பிரிவில் சென்றிருந்த கணவர் இல்லம் வந்துவிட்டார். கண்ணுக்கு மையெழுதி மணிமாலை யணிந்து, கைநிறைய வளைஏந்தி, புன்னகை பூத்த முகத்துடன், பெண்மை நிறைந்த பொலிவுடன் விளங்கும் தலைவி அவரை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பார்த்த களிப்பில் உள்ளாள். வீட்டில் மற்றவர்கள் இருந்ததால் இருவரும் இன்னும் நெருங்கிக் கொள்ளமுடியாதிருக்கிறது.
இதுகாறும் கணவரை நினைத்துக்கொண்டு இன்பம் அடைந்த தலைவி அவரை நேரில் பார்த்தபின் மிகக் களிப்புற்றாள்; பனையளவு காமம் நெஞ்சில் நிறைந்திருந்தாலும் தினையளவு கூட ஊடாதிருக்க வேண்டும் என எண்ணிக்கொள்கிறாள்; அவள் கண்கள் அவர் செல்லும் பக்கமெல்லாம் சென்று சுழன்று கொண்டிருக்கின்றன; இவ்வளவு காலம் தன்னைக் கவலையில் ஆழ்த்தியதற்காக அவருடன் சிறு சண்டை போடவேண்டும் என மனம் கூற நெஞ்சோ அவரைக் கூடவேண்டும் என்றே விரும்புகிறது.
அவர் வருகைக்காக பள்ளியறையில் காத்திருக்கிறாள் தலைமகள்.

இக்காட்சி:
பிரிந்து சென்று துயரத்தில் ஆழ்த்தியது, அவன் காலம் தாழ்த்து வந்தது, செய்தி ஏதும் அனுப்பாதது போன்ற வருத்தங்கள் தலைவிக்குக் கணவர் மீது இருந்தன. அவரை நேரில் கண்டவுடன் அக்குற்றங்கள் எல்லாம் மறைந்து போய்விட்டனவாம். இதைச் சொல்லும்போது இதற்கு உவமையாக மையெழுதுங்கோலைக் காட்டுகிறாள் அவள்.
பெண்கள் தங்கள் கண்களுக்கு மையூட்டி அழகு செய்வர். பெண்கள் குழைத்த மையை ஒரு குச்சியில்(கோல்) தோய்த்து, தன் கண்களுக்கு அருகில் கொண்டு சென்று கண்ணில் மை தீட்டுவார்கள். மையிடும்போது எழுதுகோல் இமையருகே செல்லுதலால் அதைக் கண்களால் முற்றும் பார்த்தல் இயலாது. கண்களுக்கு மிகஅருகில் கோல் இருப்பதால் கண்களுக்கு அது தெரிவதில்லை. அது போன்று தலைவர் தலைவியுடன் இல்லாது தொலைவில் இருந்தபோது அவருடைய குற்றங்கள் பெரிதாகத் தோன்றின. அதனால் அவரை வைதாள். அவர் வந்தால் அவரது தவறுகளைக் கூறி அவருடன் பேசமாட்டேன் எனச்சூளுரைத்தாள். ஆனால், இன்று அவள் அருகில் அவர் வந்து விட்டபின், நேரில் பார்த்தபின்னால், 'அவரது குறைபாடு எதுவும் தோன்றவேயில்லை' என்கிறாள். தலைவரைக் கண்ட மகிழ்வில் அவளுறுதி குலைந்து விட்டது.

''எழுதுகோல்' இன்றைய ஆட்சி. இக்கலைச் சொல்லை வழங்கியவர் திருவள்ளுவர் தாம்! 'எழுதுங்கால் கோல்' என்பதில் இடைநின்ற கால் என்பதைத் தள்ளி எழுதுகோல் ஆக்கிக் கொண்ட அருமையால் ஒருகலைச் சொல் ஆகிவிட்டது. காலை ஒதுக்கிவிட்டுக் கோலொடு ஒட்டிவிட்டார்கள். 'எழுது கோல்' எனக் கலைச்சொல் ஆகிவிட்டது' என எழுதுகோல் என்ற சொல் உருவான வரலாறு கூறுவார் இரா இளங்குமரன்.
தலைவியை மனைவியாகக் கொண்டவன் என்ற கருத்தில் கொண்கன் என்ற சொல் பயிலப்பெறுகின்றது. கொண்கன் என்பது கொண்டான் என்றும் வழங்கப்பெறும். நீரைக் கொண்டு மேலெழுதலின் மேகம் கொண்மூ எனப் பெயர் பெறுதல் போலத் தன்னைக் கொண்டு இல்லறம் நடத்துதலின் இல்லாளுக்குரிய கணவன் கொண்டான் எனப்பட்டான் (இரா சாரங்கபாணி).

'எழுதுங்கால் கோல்காணாக் கண்' குறிப்பது என்ன?

பெண்களின் கண்களைக் குறிக்கும் உண்கண் என்னும் தொடர் பழம் இலக்கியங்களில் பெரிதும் பயிலப்பட்டு வந்தது. உண்கண் என்பது மையுண்ட கண்ணைக் குறிக்கும். பெண்டிர் தம் கண்ணிற்கு மையூட்டுவது பெரு வழக்கமா யிருந்தது; இன்றும் உள்ளது.
கண்ணுக்கு மைதீட்டிக்கொள்ளும்போது, மையிடுங்கோல் கண்ணை அணுகியவுடன், அதை மையிட்டுக் கொள்வோர் காண முடிவதில்லை. ஏனெனில் அது அவ்வளவு அருகில் இருக்கும். அதுபோல தலைவனில்லாத போது அவன் குற்றத்தை மறக்கவோ மன்னிக்கவோ முடியாமல் இருக்க அவன் தன் அருகில் வரவர அக்குற்றம் காதலிக்குத் தெரிவதில்லை. அதாவது கணவன் தொலைவில் இருக்கும்போது அவனது குறைகள் பெரிதாகத் தெரிகின்றன. கணவன் அருகிலே வந்ததும், அவனது பிழைகளும் தெரியாமல் மறைந்து விடுகின்றன. இதுதான் இந்த உவமை சொல்லும் கருத்து. மேலும் காதலனின் நெருக்கத்தில் இருக்க விரும்பும் விரைவும் தலைவியின் கூற்றில் புலனாகிறது.
கணவரின் குற்றங்களுக்கு ஒப்பாக கூறுவது மையின் கருமையை என்கிறது பரிமேலழகர் உரை.

இவ்வுவமையை வேறுவகையாகவும் விளக்குவர். மையெழுதுங்கோல் என்பதை ஓவியம் தீட்டப் பயன்படும் தூரிகை எனக் கொண்டு, ஓவியம் எழுதுபவன், ஓவியம் தீட்டும்போது, கருத்து, கைவழியே சென்று தூரிகையால் வழிவதைச் சரிபார்க்கக் கண்ணோட்டத்தைச் செலுத்துவானே அன்றி, எழுதுங்கோல் இயக்கத்தைக் கவனியான். இதனால் மனப் படத்தைக் கை எழுதக் கண், சரி பார்த்து ஒத்துக் கொள்ள இயங்கும்' என்று தூரிகைக் கோலை ஓவியம் எழுதும்போது கண்கள் காணமாட்டா எனக் 'கோல்காணாக் கண்'ணை விளக்குவர்.
கோல் என்பதற்கு அஞ்சனக்கோல், தூரிகைக் கோல், எழுதுகோல் எனப் பொருள் கூறியுள்ளனர். அவற்றுள் அஞ்சனக்கோல் என்னும் பொருளே பொருந்தும். 'எழுதுங்கால் கோல் காணா' எனக் கூறியிருப்பது பிற கோல்களுக்குப் பொருந்தா. அவை பார்வைக்கு உரியவாகலின், தலைவனின் குற்றங்களைத் தலைவி முற்றுங் காணாள் என்பதற்கு அஞ்சனக் கோல் உவமையே மிகப் பொருத்தமாகும். மை தீட்டுதலை எழுதுதல் என்னும் வழக்கு..... கண்ணும் எழுதேம் காப்பாக்கறிந்து (1127) என்னும் குறளாலும் அறியலாம் (இரா சாரங்கபாணி).

மை எழுதப்படும் காலத்து அஞ்சனக் கோலைக் காணாத கண் போலக் கணவனை அருகில் கண்டவிடத்து அவனுடைய தவறுகள் எனக்குத் தெரிவதில்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கணவனின் நெருக்கத்தில் அவன்மீது இருந்த வருத்தங்கள் எல்லாம் மறந்துபோன தலைவியின் புணர்ச்சிவிதும்பல் கூறுவது.

பொழிப்பு

மை தீட்டும்போது அஞ்சனக் கோலின் இயல்பினைக் காணாத கண் போலக் கணவனைப் பார்த்தபோது அவனுடைய குற்றங்கள் எனக்குத் தெரிவதில்லை.