ஊடல்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு
(அதிகாரம்:புணர்ச்சிவிதும்பல்
குறள் எண்:1284)
பொழிப்பு (மு வரதராசன்): தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்: ஆனால் என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.
|
மணக்குடவர் உரை:
தோழி! யான் ஊடலைக் கருதிச்சென்றேன். அவனைக் கண்டபொழுதே அதனை மறந்து கூடலைக்கருதிற்று என்னெஞ்சு.
இது நீ அவனோடு புலவாது கூடியதென்னை யென்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) தோழி - தோழி; ஊடற்கண் சென்றேன் - காதலரைக் காணாமுன் அவர் செய்த தவற்றைத் தன்னோடு நினைந்து யான் அவரோடு ஊடுதற்கண்ணே சென்றேன்; என் நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது - கண்டபின் என் நெஞ்சு அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது.
(சேறல் நிகழ்தல் நினைத்த நெஞ்சிற்கும் ஒத்தலின், 'அது மறந்து' என்றாள். அச்செலவாற் பயன்என் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'அவ்வெல்லையிலே நெஞ்சு அறைபோகலான், அது முடிந்ததில்லை' என்பதாம்.)
சி இலக்குவனார் உரை:
தோழி! காதலரைக் காண்பதற்கு முன் அவரோடு ஊட வேண்டுமென்ற எண்ணத்தில் மிகுந்திருந்தேன். அவரைக் கண்ட பிறகு என் நெஞ்சு அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
தோழி! ஊடல்கண் சென்றேன்; மன் அதுமறந்து என் நெஞ்சு கூடற்கண் சென்றது.
பதவுரை: ஊடல்கண்-ஊடுதல் கொள்ள நினைத்து; சென்றேன்-போனேன்; மன்-(ஒழியிசை); தோழி-தோழியே; அது-அதனை; மறந்து-நினைவொழிந்து; கூடற்கண்-கூடுதலில் நாட்டம் கொண்டு; சென்றது-போய் விட்டது; என்-எனது; நெஞ்சு-உள்ளம்.
|
ஊடல்கண் சென்றேன்மன் தோழி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தோழி! யான் ஊடலைக் கருதிச்சென்றேன்;
பரிப்பெருமாள்: தோழி! யான் ஊடலைக் குறித்துச்சென்றேன்;
பரிதி: ஊடற்பிணக்கு உரைக்கச்சென்று;
காலிங்கர்: கேளாய் தோழீ! யான் அப்பொழுதே ஊடற்கண் ஒருப்பட்டுச் சென்றேன்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) தோழி காதலரைக் காணாமுன் அவர் செய்த தவற்றைத் தன்னோடு நினைந்து யான் அவரோடு ஊடுதற்கண்ணே சென்றேன்; [தன்னோடு -நெஞ்சொடு]
'தோழி! யான் ஊடலைக் கருதிச்சென்றேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தோழி! நான் ஊடச் சென்றேன்', 'தோழி! நான் தலைவனிடம் அவன் முன் செய்த குற்றம் நினைந்து ஊடல் கொள்ளச் சென்றேன்', 'தோழீ! (நானென்ன செய்வேன்) அவருடன் என் வருத்தத்தைக் காட்டிக் கொள்ள எண்ணித்தான் அவர் முன் போனேன்', 'தோழியே! பிணங்கும் கருத்தோடு சென்றேன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தோழி! ஊடல் கொள்ள எண்ணித்தான் சென்றேன் என்பது இப்பகுதியின் பொருள்.
அதுமறந்து கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவனைக் கண்டபொழுதே அதனை மறந்து கூடலைக்கருதிற்று என்னெஞ்சு.
மணக்குடவர் குறிப்புரை: இது நீ அவனோடு புலவாது கூடியதென்னை யென்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் கூறியது
பரிப்பெருமாள்: அவனைக் கண்டபொழுதே அதனை மறந்து கூடலைக்கருதிற்று என்னெஞ்சு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நீ அவனோடு புலவாது கூடியதென்னை யென்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது
பரிதி: ஊடலை மறந்து கூடினேன்; என்ன மாயமோ என்றவாறு.
காலிங்கர்: முன்னம் என்னோடு இதற்கு உடம்பட்டு நின்ற நெஞ்சானது அவரைக் கண்டபொழுதே அதனை மறந்து கூடற்கண் சென்றது என்றவாறு.
பரிமேலழகர்: கண்டபின் என் நெஞ்சு அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது. [கண்டபின்-காதலரைக் கண்ட பின்னர்]
பரிமேலழகர் குறிப்புரை: சேறல் நிகழ்தல் நினைத்த நெஞ்சிற்கும் ஒத்தலின், 'அது மறந்து' என்றாள். அச்செலவாற் பயன்என் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'அவ்வெல்லையிலே நெஞ்சு அறைபோகலான், அது முடிந்ததில்லை' என்பதாம். [சேறல் நிகழ்தல்-ஊடற்கண் செல்லுதல் நிகழ்தல்; அச்செலவால் - பிணங்குதலிலே செல்லுதலால்; அவ்வெல்லையிலே-பிணங்குதற்கண் செல்லும் சமயத்திலே; அது - பிணங்குதல்]
'அவரைக் கண்டபொழுதே அதனை மறந்து கூடற்கண் சென்றது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'என் நெஞ்சோ அது மறந்து கூடச்சென்றது', 'ஆனால் அவனைக் கண்டபோதே அதனை மறந்து என் நெஞ்சம் அவனை முயங்குதற்குச் சென்றது', 'ஆனால் அவரைக் கண்டதும் என் மனம் அதை மறந்துவிட்டு அவருடன் புணரவேண்டுமென்ற எண்ணத்தில் புகுந்து விட்டது', 'அதை மறந்து என் நெஞ்சம் புணர்ச்சியை நாடிச் செல்வதாயிற்று' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
என் நெஞ்சோ அது மறந்து அவரைக் கூடுதற்குச் சென்றது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தோழி! ஊடல்கண் சென்றேன்; அது மறந்து கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு என்பது பாடலின் பொருள்.
'ஊடல்கண் சென்றேன்' என்ற தொடர் குறிப்பது என்ன?
|
கணவரைப்பற்றி நெஞ்சில் நிறைந்திருந்த சினம் எல்லாம் அவரைக் கண்டவுடன்மாயமாய் மறைந்துவிட்டதே!
'தோழி! நான் அவரோடு ஊடநினைத்தே சென்றேன்; ஆனால் என் மனமோ, அதை மறந்துவிட்டு, அவரோடு இணைந்து கூடுவதிலே இருந்தது' - தலைவி
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாக அயல் சென்றிருந்த தலைவர் வீட்டுக்குத் திரும்பி வந்து விட்டார். தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்ட தலைவி அவரை வைத்தகண் எடுக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கிறாள். இல்லத்தில் கணவன்-மனைவி இருவரும் இன்னும் தனிமையில் சந்திக்கவில்லை, ஆனாலும் இருவரும் ஒருவரையொருவர் நேரில் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்; குறிப்புகளால் பேசிக் கொள்கின்றனர்.
காதலுடையாரை நினைப்பதனாலும் களிப்பு உண்டாகிறதே; அவரைக் காணும்போது பெருமகிழ்ச்சி உண்டாகிறதே என எண்ணி இன்புறுகிறாள் தலைமகள்;
கூடலுக்கு முன் ஊடல் கொள்ளவேண்டும் என முதலில் நினைத்தவள் பின் ஊடல் விளையாட்டு பிழைத்துவிட்டால் அது காமஇன்பப்பயனை இழக்கச் செய்யுமே என்பதையும் எண்ணுகிறாள்;
அவர் விருப்பப்படியே எல்லாம் செய்கின்றார் என்று கணவர்மேல் சினம் கொண்டாலும் அவரைப் பார்க்காமல் என் கண்கள் அமைவதில்லையே எனவும் கூறுகிறாள்.
இத்தகைய மனவோட்டங்களுடன் அவரை அணுகச் செல்கிறாள்.
இக்காட்சி:
'அவர் வரட்டும்! என்னைத் தனிமையில் தவிக்க விட்டுச் சென்ற கொடுமைபற்றி நன்றாகக் கேட்கத்தான் போகிறேன்' எனக் கணவருடன் பிணங்கும் கருத்தோடுதான் சென்றேன். ஆனால் அவரை நேரில் நெருக்கமாகப் பார்த்ததும் என் மனத்தில் புணர்ச்சி விருப்பம் மேலிட அதை நாடிச்செல்வதாயிற்று. இவ்விதம் கணவர் இல்லம் திரும்பிய பின்னர் அவருடன் சென்று எப்பொழுது சேருவோம் என்பதைத் தவிர வேறு எந்த எண்ணமும் அவள் உள்ளத்தில் இல்லை என்கிறாள் தலைவி.
அக்காதல் மிகுதியைத் தோழியிடமும் வெளிப்படுத்துகின்றாள்: 'தோழீ! பிரிவில் நேர்ந்த துன்பங்களை நினைந்து ஊடல் கொள்ளத்தான் அவரை நெருங்கினேன். ஆனால் அவரைக் கண்டவுடன் உண்டான களிப்பினால் என் நெஞ்சு நெகிழ்ந்து, அத்துணிவை மறந்து, கூடலையே விரும்புகிறது' என்று.
இப்பாடலிலுள்ள 'மன்' என்ற சொல் எண்ணியது நிறைவேறாமையைச் சுட்டுகின்றது.
குறளில் பெரிதும் தலைமக்களின் கூற்றினைக் கொண்டே காதலுணர்ச்சிகள் புலப்படுத்தப்படுகின்றன. அரிதாக சில இடங்களில் தலைவி தோழியை நேராகவே 'தோழி!' என்று விளித்துத் தன் கருத்தைத் தெரிவிப்பதாக உள்ளன. இப்பாடல் தலைவி தோழியிடம் வெளிப்படையாகச் சொல்வதாக அமைந்தது. இதுபோன்று வெளிப்படையாகத் தோழியை நோக்கித் தலைவி கூறுவதாக உள்ள மற்றொரு குறள் எண் 1262 ஆகும்.
|
'ஊடல்கண் சென்றேன்' என்ற தொடர் குறிப்பது என்ன?
'ஊடல்கண் சென்றேன்' என்றதற்கு ஊடலைக் கருதிச்சென்றேன், யான் ஊடலைக் குறித்துச்சென்றேன், ஊடற்பிணக்கு உரைக்கச்சென்று, அப்பொழுதே ஊடற்கண் ஒருப்பட்டுச் சென்றேன், அவர் செய்த தவற்றைத் தன்னோடு நினைந்து யான் அவரோடு ஊடுதற்கண்ணே சென்றேன், யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன், அவரொடு ஊடவேண்டுமென்று எண்ணிக்கொண்டு சென்றேன், நான் ஊடச் சென்றேன், அவன் முன் செய்த குற்றம் நினைந்து ஊடல் கொள்ளச் சென்றேன், என் வருத்தத்தைக் காட்டிக் கொள்ள எண்ணித்தான் அவர் முன் போனேன். பிணங்குவேன் என எண்ணிக் கொண்டு துணைவரிடம் யான் சென்றேன், பிணங்கும் கருத்தோடு சென்றேன், அவரோடு ஊட வேண்டுமென்ற எண்ணத்தில் மிகுந்திருந்தேன், அவர் செய்த தவற்றை நினைந்து அவரோடு ஊடுதலை மேற்கொண்டேன், சிறு கோபம் காட்டலாம் என்று சென்றேன் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
காதல்கணவர் பிரிந்திருக்கும் பொழுது ஆற்றாமையால் அவர்மீது சினங்கொள்வதும் அவர் வந்தவுடன் நன்றாகச் சண்டை போடவேண்டும் என்று எண்ணுவதும், ஆனால் அவரைக் கண்டதும் சினத்தையும் ஊடலையும் மறந்து அவரைக் கட்டித் தழுவி மகிழ்ச்சியோடு இருப்பதும் மகளிர்க்கு இயல்பு. இந்த உளவியலைச் சொல்வது இக்குறளின் நோக்கம். நீண்ட பிரிவிற்குப் பின் தன் தலைவரை நேரில் கண்ட களிப்பில் பழையது மறந்து போய்விட, ஊடல் செய்வதாயிருந்த எண்ணம் நிறைவேறவில்லை. அவளது நெஞ்சு அவரை நெருங்கி அவரருகிலேயே இருக்க வேண்டும் என்று இப்பொழுது விரைகிறது; கூடலை நாடச் செய்கிறது; அவள் என் செய்வாள்? கணவர் மீது கொண்ட தீராதகாதலும் அவனை விரைவில் கூடவேண்டும் என்ற மன நிலையும் புலப்படுகின்றன.
'ஊடல்கண் சென்றேன்' என்றது பிணக்கங் கொள்ளக் கருதியே சென்றேன் என்ற பொருளது.
|
தோழி! ஊடல் கொள்ள எண்ணித்தான் சென்றேன்; என் நெஞ்சோ அது மறந்து அவரைக் கூடுதற்குச் சென்றது என்பது இக்குறட்கருத்து.
பிரிவிலிருந்து திரும்பிய கணவரை விரைவில் கூடவேண்டும் என்பது தவிர வேறு எந்த எண்ணத்திற்கும் நெஞ்சில் இடம் இல்லை என்னும் தலைவியின் புணர்ச்சிவிதும்பல்.
ஊடல் கொள்ளச் சென்றேன்; என் நெஞ்சோ அது மறந்து கூடச்சென்றது.
|