இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1283பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணாது அமையல கண்

(அதிகாரம்:புணர்ச்சிவிதும்பல் குறள் எண்:1283)

பொழிப்பு (மு வரதராசன்): என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

மணக்குடவர் உரை: தம்மை விரும்பாது தன்மனம் விரும்புவனவே செய்தானாயினும் கொண்கனைக் காணாது என்கண்கள் அமையமாட்டா.
இவையெல்லாம் ஊடற்பகுதியானமையும் முன்னுறுபுணர்ச்சி யின்மையும் ஆமாறு கண்டுகொள்க.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) பேணாது பெட்பவே செய்யினும் - நம்மை அவமதித்துத் தான் செய்ய வேண்டியனவே செய்யுமாயினும்; கொண்களைக் கண் காணாது அமையல - கொண்கனை என் கண்கள் காணாது அமைகின்றன இல்லை.
(தன் விதுப்புக் கண்கள்மேல் ஏற்றப்பட்டது. 'அத்தன்மையேன் அவனோடு புலக்குமாறு என்னை'? என்பதாம்.)

இரா இளங்குமரனார் உரை: காதலர் நாம் விரும்புமாறு நடவாமல் அவர், தாம் விரும்புமாறே நடந்து கொண்டார் என்றாலும் அவரைக் காணாமல் இருக்க என் கண்கள் இசைவதில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் கண் காணாது அமையல.

பதவுரை: பேணாது-(விரும்பிப்) போற்றாது; பெட்பவே-விரும்பியவையே; செய்யினும்-செய்தாலும்; கொண்கனை-கணவனை; காணாது-பார்க்காது; அமையல-அமைகின்றன இல்லை, தணிவெய்துகின்றில்; கண்-விழி.


பேணாது பெட்பவே செய்யினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மை விரும்பாது தன்மனம் விரும்புவனவே செய்தானாயினும்;
பரிப்பெருமாள்: நம்மை விரும்பாது தன்மனம் விரும்புவனவே செய்தானாயினும்;
பரிதி: பேணாத பெரிய ஊடலிலே செய்யினும்;
காலிங்கர்: தோழீ! இங்கு நம்மை விரும்பாது புறத்துத் தனக்கு விரும்புவன செய்து வரினும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) நம்மை அவமதித்துத் தான் செய்ய வேண்டியனவே செய்யுமாயினும்;

'விரும்பாது/அவமதித்து தன்மனம் விரும்புவனவே செய்தானாயினும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'புறக்கணித்துத் தாம் விரும்பியனவே செய்தாலும்', 'என்னை மதியாமல் தான் விரும்பியவற்றையே காதலன் செய்தாலும்', 'என் விருப்பத்தை மதிக்காமல் தாம் விரும்பியபடியே தாமதித்து வந்தவரானாலும்', 'கணவன் நம்மை யவமதித்துத் தான் விரும்பியவற்றையே செய்தாலும்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தன்னைப் பொருட்படுத்தாமல் தான் விரும்பியவற்றையே செய்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

கொண்கனைக் காணாது அமையல கண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொண்கனைக் காணாது என்கண்கள் அமையமாட்டா.
மணக்குடவர் குறிப்புரை: இவையெல்லாம் ஊடற்பகுதியானமையும் முன்னுறுபுணர்ச்சி யின்மையும் ஆமாறு கண்டுகொள்க.
பரிப்பெருமாள்: கொண்கனைக் காணாது என்கண்கள் அமையமாட்டா.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவையெல்லாம் ஊடற்பகுதியானமையும் முன்னுறுபுணர்ச்சி யானமையும் ஆமாறு கண்டுகொள்க. இது மேற்கூறிய சொற் கேட்டு ஊடல் வேண்டுவார் தலைமகற் காணாதொழிதலே உளது என்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் கூறியது. பிரிந்து கூடல் முடிந்தது.
பரிதி: நாயகரைக் காணாமல் நித்திரை வராது என்றவாறு.
காலிங்கர்: கொண்கனை அப்படி அதற்கு உரியன் என்று அறிந்தும் ஒரு பொழுது காணாது அமையமாட்டா மற்று இக்கண்கள் ஆனவை; வறிதே நீ என்னை முனிவது எவன் என்றவாறு.
பரிமேலழகர்: கொண்கனை என் கண்கள் காணாது அமைகின்றன இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: தன் விதுப்புக் கண்கள்மேல் ஏற்றப்பட்டது. 'அத்தன்மையேன் அவனோடு புலக்குமாறு என்னை'? என்பதாம். [அத்தன்மையானொடு- நம்மை அவமதித்துத் தான் விரும்பியவற்றையே செய்யும் காதலனுடன்]

'கொண்கனைக் காணாது என்கண்கள் அமையமாட்டா' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலனைக் காணாமல் என் கண்கள் பொருந்தா', 'அவனை என் கண்கள் காணாமல் அமைதியுறுவதில்லை', 'அவரைப் பார்த்துக் கொண்டேயிருக்க ஆசைப்பட்டு என் கண்கள் அமைதியாக இருக்க மறுக்கின்றன', 'கணவனைப் பார்க்காமல் என் கண்கள் அமைவதில்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கணவரைப் பார்க்காமல் தன் கண்கள் அமைதியுறுவதில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பேணாது பெட்பவே செய்தாலும், கணவரைப் பார்க்காமல் தன் கண்கள் அமைதியுறுவதில்லை என்பது பாடலின் பொருள்.
'பேணாது பெட்ப' குறிப்பது என்ன?

'இங்கேதானே இருந்தார். எங்கே போய்விட்டார்?'; கணவரை எப்பொழுதும் தன் கண்முன்னே நிறுத்திவைத்துப் பார்க்க ஆசைப்படுகிறாள் தலைவி.

'என்னைப்பற்றி கொஞ்சமாவது நினைக்கிறாரா? இல்லவே இல்லை. அவர் விரும்பியபடிதானே எல்லாமே செய்கிறார். இருந்தாலும் அவர் இருக்குமிடம் தேடி என் கண்கள் அலைகின்றனவே!' எனக் கணவரைக் கூடுவதற்கு விரைவு கொள்ளும் தலைவி கூறுகிறாள்.
காட்சிப் பின்புலம்:
கடமைக்காகப் பிரிவிற் சென்றிருந்த கொண்கன் இல்லம் திரும்பிவிட்டார். தன்னை நன்கு அழகுபடுத்திக்கொண்ட தலைவி அவரைத் தனிமையில் பார்ப்பதை எதிர்நோக்கி இருக்கிறாள். உற்றார் உறவினர் சூழ்ந்திருப்பதால், கணவனும் மனைவியும் இன்னும் தனிமையில் சந்திக்கவில்லை. ஆனாலும் இருவரும் நேரில் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்து குறிப்புகளால் பேசிக் கொள்கின்றனர்.
காதலுடையாரை நினைப்பதனாலும் களிப்பு அடைகிறதே; அவரைக் காணும்போது பெருமகிழ்ச்சி உண்டாகிறதே என எண்ணி இன்புறுகிறாள் தலைவி; காமஇன்பம் மிகக்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் கூடலுக்கு முன் ஊடல் கொள்ளவேண்டும் என முதலில் நினைத்தவள் பின் ஊடல் விளையாட்டு பிழைத்துவிட்டால் அது காமஇன்பப்பயனை இழக்கச் செய்யுமே என்பதையும் எண்ணிப் பனைத்திணை காமம் வரின் தினைத்துணையும் ஊடாமை வேண்டும் என்ற புரிதல் பெறுகிறாள்;
இத்தகைய நினைவுகளுடன் தலைவரை வைத்தகண் எடுக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.

இக்காட்சி:
தன்னுடனிருந்து தன்னைப் பேண வேண்டும் என்று கருதாதவராய்த் தான் விரும்பிய செயல்களையே செய்து கொண்டிருந்தாலும் தன் கண்கள் கணவரைக் காணாமல் ஆறுதல் அடைகின்றில என்று சொல்கிறாள் தலைவி. 'என் கண் முன்னேதான் நடமாடிக் கொண்டிருக்கிறார். எனினும் என்னை ஏறெடுத்துப் பாராமல் - என்னைப் பொருட்படுத்தாமல் - அவர் பாட்டுக்கு அவர்க்கு விரும்பினவற்றையே செய்துகொண்டிருக்கிறாரென்றாலும், அவரைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற ஆசையில் அவளது கண்கள் அவரைத் தேடி அலைந்து அவர் செல்லுமிடமெல்லாம் பின்னால் போகின்றன. அவரை என் பார்வையிலிருந்து விலக மாட்டாமல் வைத்திருக்கின்றேன்' என்கிறாள். பயணத்திலிருந்து திரும்பி வந்துள்ள அவரைத் தனிமையில் சந்திக்கும் வரை அவளுக்கு இருப்புக் கொள்ளாது. அவரைக் கூடவேண்டுமென்ற விருப்ப விரைவும் அவள் கண்களில் தெரிகிறது. காம வழிபட்டு நிற்கும் நெஞ்சின் நிலையினைக் கண்ணின் மேல் வைத்துக் கூறினாள் தலைவி என்பதாம்.

தலைவரைக் காணுதலால் இன்பம் உண்டாதலை சங்கப்புலவர் பரணர் இவ்விதம் பாடினார்: காதலர் நல்கார் நயவார் ஆயினும், பல் கால் காண்டலும், உள்ளத்துக்கு இனிதே (குறுந்தொகை 60: 4-6 பொருள்: தலைவர் தண்ணளி செய்யாராயினும் பலமுறை பார்த்தலும் எனது நெஞ்சிற்கு இனிமை தருவது).

'பேணாது பெட்ப' குறிப்பது என்ன?

'பேணாது பெட்ப' என்றதற்குத் தம்மை விரும்பாது தன்மனம் விரும்புவனவே, நம்மை விரும்பாது தன்மனம் விரும்புவனவே, நம்மை விரும்பாது புறத்துத் தனக்கு விரும்புவன, என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே, தன்னைப் புறக்கணித்து, தான் விரும்புவனவற்றையே, புறக்கணித்துத் தாம் விரும்பியனவே, என்னை மதியாமல் தான் விரும்பியவற்றையே, என் விருப்பங்களை மதிக்காமல் தாம் விரும்புகிறபடியே, நாம் விரும்புமாறு நடவாமல் அவர், தாம் விரும்புமாறே, நம்மை யவமதித்துத் தான் விரும்பியவற்றையே, நம்மை இகழ்ந்து விரும்பியனவே, நம்மை விரும்பாது தம் மனம் விரும்பியனவே, மனத்தால் விரும்பாது செயலால் தான் விரும்பியபோது விருப்பத்தை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'பேணாது பெட்ப' என்ற தொடர் கருதாது விரும்புகின்றபடியே எனப் பொருள்படும். பணி முடிந்து வீடு திரும்பியுள்ள தலைவர் தன்மீது மட்டுமே ஈடுபாடு காட்டவேண்டும் என்று உரிமையுடன் நினைக்கிறாள் மனைவி. ஆனால். மனைவி என்று ஒருத்தி அங்கிருக்கிறாள் என்பதையே உணராதவர்போல், அவர் விருப்பப்படியே எல்லாம் செய்து கொண்டிருக்கிறாரே என அவர் மீது அவளுக்குச் சிறிதளவு சினம் உண்டாகிறது. இதை உணர்த்த பேணாது பெட்ப என்ற தொடர் ஆளப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தலைவரை இப்பொழுதுதான் பார்க்கமுடிகிறது. கணவர் தன்னை விரும்பிப் போற்றவேண்டும் தனக்கு முன்னுரிமை கொடுத்து நேரம் செலவிடவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். இது இயல்புதான். ஆனால் அவர்பாட்டுக்கு அவரது தொழிலில் மிக ஈடுபட்டு அவளைக் கருதாதவராக இருக்கிறார். அங்ஙனமிருந்தும் அவளது கண்கள் அமைதியுறாமல் அவர் இருக்குமிடம் தேடி அவரைத் தொடர்ந்து செல்கின்றன. அவரைக் கூட வேண்டுமென்ற விருப்பம் அவளை விரையச் செய்கின்றது என்பதைத் தன் கண்கள் மீது ஏற்றிக் கூறுகின்றாள்.

'பேணாது பெட்ப' என்றது (தன்னைக்) கருதாது (அவர் மனம்) விரும்புவனவே என்ற பொருள் தருவது.

தன்னைப் பொருட்படுத்தாமல் தாம் விரும்பியவற்றையே கணவர் செய்தாலும், அவரைப் பார்க்காமல் தன் கண்கள் அமைதியுறுவதில்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அவர் இல்லம் திரும்பியபின் தன் கண்கள் அவரை விட்டு நீங்குவதில்லை என்னும் தலைவியின் புணர்ச்சிவிதும்பல்.

பொழிப்பு

என்னைப் பொருட்படுத்தாமல் தான் விரும்பியவற்றையே செய்தாலும், கணவனைப் பார்க்காமல் என் கண்கள் அமைதியுறுவதில்லை.