இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1278



நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து

(அதிகாரம்:குறிப்பறிவுறுத்தல் குறள் எண்:1278)

பொழிப்பு (மு வரதராசன்): எம்முடைய காதலர் நேற்றுத்தான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.

மணக்குடவர் உரை: எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார், யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம்.
இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி இன்புற்றிலமென்று தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) எம் காதலர் சென்றார் நெருநற்று - எம்காதலர் பிரிந்து போயினார் நெருநற்றே; யாமும் மேனி பசந்து எழுநாளேம் - அப்பிரிவிற்கு யாமும் மேனி பசந்து எழுநாள் உடையமாயினேம்.
('நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு துணியப்பட்டது' என்பாள், 'நெருநற்றுச் சென்றார்' என்றும், அதனை ஐயுற்றுச் செல்கின்றது ஏழுநாளுண்டாகலின்,அன்றே மேனி பசந்தது என்பாள். 'மேனி பசந்து எழுநாளேம்' என்றும் கூறினாள். இவ்வாற்றான் தலைமகனது பிரிதற் குறிப்பினை உணர்த்தி நின்றது.)

இரா சாரங்கபாணி உரை: என் காதலர் நேற்றுத்தான் பிரிந்து போயினார். ஆனால், நாம் மேனி பசந்து ஏழுநாள் உடையோம் ஆயினோம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எம் காதலர் நெருநற்றுச் சென்றார் யாமும் மேனி பசந்து எழுநாளேம்.

பதவுரை: நெருநற்று-நேற்று; சென்றார்-(பிரிந்து) போனார்; எம்-எமது; காதலர்-காதலர்; யாமும்-நாமும்; எழு-ஏழு; நாளேம்-நாள்களையுடையோம்; மேனி-நிறம்; பசந்து-நிற வேறுபாடுற்று.


எம் காதலர் நெருநற்றுச் சென்றார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார்;
பரிப்பெருமாள்: எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார்;
பரிதி: நாயகர் நம்மை நேற்றுப் பிரிந்தார்;
காலிங்கர்: தோழீ! யான் உனக்கு அங்ஙனம் குறித்து உரைத்தேன் ஒன்று முதல்நாள் இரவின்கண்; மற்று அதற்கு நெருநற்றுச் சென்றார் நம் காதலர்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) எம்காதலர் பிரிந்து போயினார் நெருநற்றே; [நெருநற்று -நேற்று]

'எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நேற்றுத்தான் காதலர் பிரிந்தார்', 'என்னுடைய காதலர் என்னைவிட்டு நேற்றுப் போனார்', 'எம்முடைய தலைவர் நேற்றுத்தான் பிரிந்து போயினார்', 'எம் காதலர் நேற்றுப் போயினார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எம் காதலர் நேற்றுத்தான் பிரிந்து போயினார் என்பது இப்பகுதியின் பொருள்.

யாமும் மேனி பசந்து எழுநாளேம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி இன்புற்றிலமென்று தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அவர் 'பிரியப்பட்ட தலைமகனை இத்துணைக் காலமும் இன்பம் துய்த்தாட்கு இன்றே இவ்வேறுபாடு வந்தது' என்று தோழி நோக்கிய குறிப்புக் கண்டு அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென்று ஏங்கி இன்புற்றிலேம் என்று தலைமகள் கூறியது.
பரிதி: எழு நாள் மேனி பசந்தது என்றவாறு.
காலிங்கர்: அஃது அறிந்து என்மேனி பசப்பு உற்று இன்று ஏழுநாள் உடையேம்; காலிங்கர் குறிப்புரை: எனவே அன்று முதலாகக் காணாய் நீ முன்னமோடு இயையாமை உற்றது அறிந்து மெய்யுற்ற பசப்பு என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அப்பிரிவிற்கு யாமும் மேனி பசந்து எழுநாள் உடையமாயினேம். [மேனி பசந்து - உடம்பு நிறவேறுபாடு அடைந்து]
பரிமேலழகர் குறிப்புரை: 'நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு துணியப்பட்டது' என்பாள், 'நெருநற்றுச் சென்றார்' என்றும், அதனை ஐயுற்றுச் செல்கின்றது ஏழுநாளுண்டாகலின்,அன்றே மேனி பசந்தது என்பாள். 'மேனி பசந்து எழுநாளேம்' என்றும் கூறினாள். இவ்வாற்றான் தலைமகனது பிரிதற் குறிப்பினை உணர்த்தி நின்றது.. [அதனை- அப்பிரிவை; அன்றே- அப்பொழுதே- அதாவது காதலரது பிரிவு உண்டாவதற்கு ஏழாவது நாளே.]

'யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதற்குள் ஏழு நாள் அளவு பசலை அடைந்து விட்டேன்', 'இன்றைக்கு அவர் பிரிந்து ஏழு நாட்கள் ஆகிவிட்டது போல் என் மேனி நிறம் அவ்வளவு பசந்துவிட்டது', 'எமக்கு மேனி நிறவேற்றுமைப்பட்டு ஏழுநாளாயின', 'நாமும் மேனி பசப்புற்று ஏழு நாள் உடையம் ஆயினோம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அதற்குள் ஏழு நாள் அளவு மேனி நிறவேற்றுமை அடைந்து விட்டேன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எம் காதல்கணவர் நேற்றுத்தான் பிரிந்து போயினார்; அதற்குள் எழுநாளேம் உடல் நிறவேற்றுமை அடைந்து விட்டேன் என்பது பாடலின் பொருள்.
'எழுநாளேம்' என்பதன் பொருள் என்ன?

பிரிந்துவிடப் போகிறாரே என்ற எண்ணத்திலேயே உடல் பசலைத் துன்பம் அடைகிறது தலைவிக்கு!

கணவர் நேற்றுத்தான் எம்மைப் பிரிந்து சென்றார்; ஆனால் எவ்வளவோ நாட்கள் ஆயின போன்று என் உடலெங்கும் பசலை பரவிவிட்டதே என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
நீண்ட நாட்கள் பிரிவுக்குப் பின் கடமையிலிருந்து இப்பொழுதுதான் கணவர் இல்லம் திரும்பியுள்ளார். இதுகாறும் துயர் தாங்காதிருந்த தலைவி இப்பொழுது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறாள். இருவரும் இன்னும் தனிமையில் சந்திக்க இயலாதிருக்கின்றனராதலால் அவர்கள் தங்களுக்குள் குறிப்புகள் மூலமே உரையாடிக் கொண்டிருக்கின்றனர்.
நீ சொல்லாது மறைத்தாலும் உன் கண்கள் 'என்னைவிட்டு நீங்காமல் என்னுடனேயே நீங்கள் எப்பொழுதும் இருக்கவேண்டும்' என்ற செய்தியை எனக்குச் சொல்கின்றனவே என்கிறார் தன் மனைவியைப் பார்த்து; கண்நிறைந்த அழகுடனும் மூங்கிலை ஒத்த உடலும் கொண்டு விளங்கும் இவளுக்கு பெண்மைக் குணமும் நிறைந்து தோன்றுகிறது என எண்ணுகிறார்; மணியில் கோக்கப்பட்டுள்ள நூல் புறத்துத் தெரியாமல் இருப்பது போன்று, தலைவியின் உள்ளத்தில் அவரைப் பெரிதும் காதலிக்கிறாள் என்பதும் விரைந்து கூட விரும்புகிறாள் என்பதும் இழையோடி இருப்பதும் அவர்க்குக் குறிப்பாகத் தெரிந்தது; பூ மொட்டினுள்ளே இருக்கும் நறுமணம் எப்படிப் புறத்துப் புலனாவதில்லையோ அது போன்று இவள் சிரிக்க விரும்பும் சமயத்தில் ஒரு குறிப்பு தோன்றுகிறது; தன் கணவர்க்கு மட்டுமே புரிகின்றவகையில் தன் கைநிறைய உள்ள வளையல்களைக் குலுக்கி ஒலி எழுப்பிக் கள்ளத்தனமாகத் தந்த குறிப்பில் தன் துயரம் எல்லாம் நீங்கியதுபோல் அவர் உணர்ந்தார்; நீண்ட பிரிவிற்குப் பின் கூடும் இச்சமயத்தில் மனைவியின் நெஞ்சம் இன்னொன்றையும் நினைத்துப் பார்க்கிறது - அவர் உடனிருக்கும் இந்த இன்பம் இப்படியே நிலைக்குமா? அல்லது தனக்குத் தண்ணளி செய்யாமல் அவரை மீண்டும் பிரிய வேண்டியிருக்குமா?- இன்னும் சிறிது நேரத்தில் அன்புடன் கூடிக் கலப்பார் என்பதும் அவள் அறிந்ததேயானாலும் மீண்டும் அன்பற்றுப் பிரிந்து போய் விடுவாரோ என்று அவள் கவலையுறுகிறாள்; அவரோடு கூடி இன்பத்தை நுகரப்போகிற நேரத்தில் தலைவியின் மனமானது அவர் விரைவில் பிரியப் போகிறாரோ என்ற ஐயத்தை உண்டு பண்ணுகிறது. பிரிவச்ச மனநிலையில் உள்ளதால் அவர் பிரிந்தேவிட்டார் என்பது போலக் கலக்கமுற்றாள். உடல் வாடியதால் வளையல்கள் கைகளினின்று கழலத் தொடங்கி விட்டனவாக உணர்ந்து தான் அவரது பிரிவை அறிந்துகொள்வதற்கு முன்னரே தன்னுடைய வளையல்கள் அறிந்து விட்டன என்கிறாள்.
தலைவர் உடன் இருக்கும் போதே பிரிந்துவிட்டார் போன்றதோர் அச்சநிலையில் அவள் இப்பொழுது இருக்கிறாள்.

இக்காட்சி:
சென்ற குறளில் உள்ளத்துள் தலைவர் பிரிந்து விட்டதாக எண்ணியதால் வளையல்கள் கழன்றுவிட்டன என்றாள் தலைவி. பிரிவு அச்ச எண்ணம் மேலோங்கிய மனநிலையில் அவள் 'என் தலைவர் நேற்றுத்தான் என்னை விட்டுப் பிரிந்தார். ஆனால், அவர் பிரிவை உணர்ந்து என் உடல் பசந்து ஏழுநாள்களாகிவிட்டன' என்கிறாள் இப்பொழுது.
நேற்று என்னைவிட்டுப் பிரிந்தார் என்று அவள் கூறியதிலிருந்து நேற்று அவர்கள் கூடி மகிழ்ச்சியுற்றனர் என்பதும் பேரின்பம் பெற்றதால் மீண்டும் பிரிவு உண்டாகி விடுமோ என அவள் அச்சப்படுகிறாள் என்பதும் பெறப்படுகிறது. தான் செய்யும் தொழிலின் இயல்பு காரணமாக அவர் அடிக்கடி பிரிந்து செல்பவராக இருக்கவேண்டும். எனவேதான் அவர் வந்ததில் பெரு மகிழ்வு கொண்டாலும் மறுபடியும் திரும்பப் போவதற்காகத்தானே வந்திருக்கிறார் என்று தலைவி கருதியதால் 'நேற்றுத்தான் (மனத்தளவில்) பிரிந்து சென்றார்; என் உடல் மீது இந்த பசலை ஏழு நாட்களாய் இருப்பதுபோன்று தோற்றம் அளிக்கிறது' என்று தலைவி கூறுகிறாள். அதாவது ஒருநாள் பிரிவு ஏழு நாட்கள் போன்று பெரிதாக தோன்றுகிறதாம். தலைவர் பிரியப்போகிறார் என்பதை முன்னமே, கூடி இருக்கும்பொழுது அவள் உள்ளம் உய்த்தறிந்து, பசலையை இவள் மேல் படரவிட்டிருக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறது பாடல். பிரிவுத் துயர் வந்து தாக்கினால், தலைவியின் உடல், விரிவான பசலை நிறத்தை உடனே பெற்றுவிடுகிறது!
முன்னரும் ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு (அவர்வயின் விதும்பல் 1269 பொருள்: தொலைவிற் சென்ற காதலர் திரும்பிவருகின்ற நாளை எதிர்நோக்கி ஏங்குபவர்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும்) என அவர் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கும்பொழுது 'ஏன் நாட்கள் மெதுவாகக் கழிகின்றன?' எனக் கேட்டாள் தலைவி.

பிரிவில் சென்றவர் இப்பொழுதுதான் வந்திருக்கிறார், அதற்குள் மீண்டும் அவர்பிரிந்துவிடுவாரோ என அச்சம் கொள்கிறாளே இப்பேதை! தலைவர் இன்னும் பிரிந்து செல்லவில்லை; நேற்று அவர் செய்த தலையளியால் பிரிந்து செல்வது உறுதியென்று தெளிந்து அவர் பிரிந்து சென்று விட்டதாகவே அவளது உள்ளம் உணர்ந்தது. பிரியப் போகிறார் என்றே உள்ளுணர்வே பிரிவுத் துன்பத்தை உண்டாக்கி அவளது உடல் பசந்தது. ஏழு நாட்கு முன்பே ஐயுற்றதனால் அன்றே மேனி பசந்தது என்பதைக் குறிக்க 'பசந்து ஏழு நாட்கள் கழிந்த நிலையில் இருக்கின்றேம்' என்கிறாள். தலைவர் பிரிவார் என்ற குறிப்பால் நிகழ்ந்தது இது. கண்முன் அவர் இருந்தாலும் அவர் பிரிந்து சென்று விட்டதாகவே நினைக்கத் தொடங்கி விட்டாள் அவள். கணவர் உடன் இருக்கும் போதே பிரிவாரே என்று ஏக்கக் குறிப்பால் நிகழ்ந்ததாக அமைந்த காட்சி இது. இதனால் தலைமகன் பிரிதற்குறிப்பு உணர்த்தப் பட்டது.

'எழுநாளேம்' என்பதன் பொருள் என்ன?

'எழுநாளேம்' என்றதற்கு ஏழுநாளுடையம், எழு நாள், இன்று ஏழுநாள் உடையேம், ஏழுநாள்களாகிவிட்டன, ஏழு நாட்களானது போல, ஏழு நாள்கள் ஆய்விட்டன, ஏழுநாளாயின, ஏழுநாள் ஆகிவிட்டது போல், பல நாட்கள் ஆயின, எழுநாட் கழிந்த நிலையில் இருக்கின்றேம் என்று உரையாளர்கள் பொருள் கூறினர்,

நாள் என்பதற்கு ஞாயிறு தோன்றி மறைந்து மறுபடியும் தோன்றும்வரை என்ற இயற்கையின் வரம்பு இருந்தாலும், மாந்தர் ஒவ்வொருவர்க்கும் நாட்கணக்கு வேறு வேறா அமைகிறது. காலம் நகராமல் கிடக்கின்றது போல் சிலருக்குத் தோன்றும், அதே காலம் மற்றும் சிலருக்கு ஒரே ஓட்டமாக ஓடவும் செய்கிறது. கால அளவீடு தவறாது உலகஇயக்க விதிப்படியே நிகழ்கின்றது. ஆனால் ஒருவரது இன்ப துன்ப உளப்பாட்டைப் பொறுத்துக் காலம் சுருக்கமாகவும் பெருக்கியும் தோன்றுகின்றது. தலைவிக்கு இங்கு ஒருநாள் ஏழுநாட்களாய்த் தோன்றியதால் பசலை உடலில் மிகுதியாகப் படர்ந்துள்ளது என்பது குறிப்பு.

'எழுநாளேம்' என்பதற்கு ஏழுநாள் ஆகிவிட்டது போல் என்பது பொருள்.

எம் காதல்கணவர் நேற்றுத்தான் பிரிந்து போயினார்; அதற்குள் ஏழு நாள் அளவு மேனி நிறவேற்றுமை அடைந்து விட்டேன் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தலைவர் பிரிவார் என்ற குறிப்பறிவுறுத்தல் உணர்ந்து மனைவி கூறியது.

பொழிப்பு

நேற்றுத்தான் காதல்கணவர் பிரிந்து சென்றார்; அதற்குள் ஏழு நாள் அளவு நிறவேற்றுமை உண்டாயிற்று.