இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1277



தண்ணம் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை

(அதிகாரம்:குறிப்பறிவுறுத்தல் குறள் எண்:1277)

பொழிப்பு (மு வரதராசன்): குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மைவிட முன்னமே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!

மணக்குடவர் உரை: குளிர்ந்த துறையையுடையவன் நம்மை நீங்கினமையை நாமறிவதற்கும் முன்னே வளைகள் அறிந்தன.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) தண்ணந்துறைவன் தணந்தமை - குளிர்ந்த துறையை உடையவன் நம்மை மெய்யாற் கூடியிருந்தே மனத்தாற் பிரிந்தமையை; நம்மினும் வளை முன்னம் உணர்ந்த - அவன் குறிப்பான் அறிதற்குரிய நம்மினும் இவ்வளைகள் முன்னே அறிந்தன.
(கருத்து நிகழ்ந்ததாகலின், 'தணந்தமை' என்றும், 'யான் தெளிய உணர்தற்கு முன்னே தோள்கள் மெலிந்தன' என்பாள், அதனை வளைமேலேற்றி, அதுதன்னை உணர்வு உடைத்தாக்கியும் கூறினாள்.)

சி இலக்குவனார் உரை: குளிர்ந்த துறையை உடையவன் பிரிய நினைத்தமையை நம்மைவிட நம்முடைய வளையல்கள் முன்பே அறிந்து விட்டன.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தண்ணம் துறைவன் தணந்தமை நம்மினும் வளை முன்னம் உணர்ந்த.

பதவுரை:
தண்ணம் துறைவன் - குளிர்ந்த துறையை உடைய தலைவன்; தணந்தமை- பிரிய இருக்கின்ற செயலை, பிரிந்தமை; நம்மினும் - நம்மை விட; முன்னம்-முன்னதாக; உணர்ந்த-அறிந்து விட்டன; வளை -வளையல்கள்.


தண்ணம் துறைவன் தணந்தமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குளிர்ந்த துறையையுடையவன் நம்மை நீங்கினமையை;
பரிப்பெருமாள்: குளிர்ந்த துறையையுடையவன் நம்மை நீங்கினமை;
பரிதி: குளிர்மையுடைய கடற்றுறைக்கு நாயகன் துறந்தமை;
காலிங்கர்: தோழீ! நம் தண்ணந் துறைவன் நம்மை இடையிட்டமை;
பரிமேலழகர்: (இதுவும் அது.) குளிர்ந்த துறையை உடையவன் நம்மை மெய்யாற் கூடியிருந்தே மனத்தாற் பிரிந்தமையை; [துறைவன் - நெய்தல் நிலத்தலைவன்]

'குளிர்மையுடைய துறையையுடையவன் நீங்கினமை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் மட்டும் 'மனத்தாற் பிரிந்தமையைச்' சொல்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'குளிர்ந்த துறைவன் பிரிவான் என்பதை', 'குளிர்ந்த துறையையுடைய துறைவன் (நெய்தல் தலைவன்) பிரிந்து சென்றதை', 'அன்புள்ள என் காதலர் என்னை விட்டுப் பிரிந்து போனார் என்பதை', 'குளிர்ந்த துறையையுடைய தலைவன், நம்மை மனத்தினாற் பிரிந்தமையை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குளிர்ந்த துறையையுடையவன், நம்மை மனத்தினாற் பிரிந்தமை என்பது இப்பகுதியின் பொருள்.

நம்மினும் முன்னம் உணர்ந்த வளை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாமறிவதற்கும் முன்னே வளைகள் அறிந்தன.
பரிப்பெருமாள்: நாம் அறிவதன் முன்னே வளைகள் அறிந்தன.
பரிப்பெருமாள் குறிப்புரை: தலைமகன் சொல்லாது பிரிந்துழி அதனை அறிந்த தோழி, 'இதனை அறிவித்தால் இவள் ஆற்றுங் கொல்லோ ஆற்றாள் கொல்லோ' என்று உட்கொண்டு பிரிவுணர்த்தச் சென்ற குறிப்பு நோக்கி, 'இதனை இப்பொழுது சொல்லுமாறு என்னை என்று பரியல்வேண்டா; யான் முன்பே அறிந்தேன்' என்று தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
பரிதி: நாம் அறிவதற்கு முன்னே நம்முனாக வளை அறிந்தது என்றவாறு.
காலிங்கர்: நம்மினும் முன்னமே தாம் அறிந்த, நம் கைக்கு அணி ஆகிய வளை, எனவே யாம் அவர் இடையீடு இன்று அறிந்தமை; இவை அவர் பெரிது அணிந்த அன்றே அறிந்தன காண்;
காலிங்கர் குறிப்புரை: எனவே யான் அவர் குணம் அயிர்க்க, அன்றுதொட்டு மெலிந்தன என் தோள் இணை என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அவன் குறிப்பான் அறிதற்குரிய நம்மினும் இவ்வளைகள் முன்னே அறிந்தன.
பரிமேலழகர் குறிப்புரை: கருத்து நிகழ்ந்ததாகலின், 'தணந்தமை' என்றும், 'யான் தெளிய உணர்தற்கு முன்னே தோள்கள் மெலிந்தன' என்பாள், அதனை வளைமேலேற்றி, அதுதன்னை உணர்வு உடைத்தாக்கியும் கூறினாள். [கருத்து நிகழ்ந்தது ஆகலின் - பிரியும் எண்ணம் உண்டாயிற்று ஆதலால்; அதனை - தோள்களின் மெலிவை; அது தன்னை - வளையலை]

'நாமறிவதற்கும் முன்னே வளைகள் அறிந்தன' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நம்மினும் முந்தி வளையல்கள் உணர்ந்தன', 'நம்மைக் காட்டிலும் நம் வளையல்கள் முன்னமே அறிந்து கொண்டன', 'எனக்கும் முன்னால் அறிந்தவை என் வளையல்களே. (ஆகையால் அவர் பிரிந்து நான் அடைந்துள்ள மெலிவை வளையல்களே சொல்லட்டும்.)', 'நாம் உணர்வதற்கு முன்னமேயே நம் வளையல்கள் தெரிந்துகொண்டன' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நம்மைவிட முன்னமேயே அறிந்து விட்டன நம் வளையல்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
குளிர்ந்த துறையையுடையவன் நம்மை மனத்தினாற் பிரிந்தமையை, நம்மைவிட முன்னமேயே உணர்ந்த வளை என்பது பாடலின் பொருள்.
'உணர்ந்த வளை' குறிப்பது என்ன?

இப்பொழுதுதானே வந்திருக்கிறார். அதற்குள்ளாக மறுபடியும் பயணமா?

'நம் வளையல்கள் நெகிழ்ந்து கழல்கின்றனபோல் உணர்கிறேன்; ஆம். தலைவன் பிரியத்தானே போகிறான், அதை அறிந்து அவை நீங்குகின்றன போலும்' என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாக தொலைவு சென்றிருந்த கணவன் நீண்ட காலத்துக்குப் பின் இப்பொழுதான் இல்லம் திரும்பியுள்ளான். இன்னும் மனைவியை நெருங்கித் தனிமையில் சந்திக்க இயலவில்லை. ஆனாலும் இருவரும் தங்கள் மனத்தில் எழுந்த உணர்வுகளை எண்ணங்களை, வாய்ச்சொற்களே இல்லாமல் குறிப்புக்களால் அறிவுறுத்திக் கொள்கின்றனர். இவ்வளவு நாட்கள் அவன் பிரிந்திருந்தமையால் சொல்லொண்ணா வேதனை அடைந்த மனைவி பெரு மகிழ்வெய்திய நிலையில் உள்ளாள். ஆனாலும் அந்த மகிழ்ச்சியை முழுதாக உணர முடியாமல் ஓர் எண்ணம் தடுக்கின்றது. அவர்கள் கூடி இன்பம் துய்க்கத்தான் போகிறார்கள். ஆனாலும் அவன் மறுபடியும் அன்பற்றுப் பிரிந்து விடுவானே என்ற அச்சம் அவளுக்குத் தோன்றிவிடுகிறது.

இக்காட்சி:
காதலன் அன்புடன் தலைவியை நோக்குகிறான். அந்த அன்பு நோக்கே அவளுக்கு விரைவில் பிரியப் போகிறானோ என்ற ஐயத்தை உண்டு பண்ணுகிறது. இவ்வளவு நாட்கள் பிரிவின் துயரத்தை அனுபவித்தவள் ஆதலால் இன்னொருமுறை அவன் அவளை விட்டு நீங்குவதை அவளால் தாங்கமுடியாது என உணர்கிறாள். பிரிவச்ச மனநிலையில் உள்ளதால் அவன் பிரிந்துவிட்டான் என்பது போலக் கலக்கமுற்றாள். அவன் பிரிவை ஆற்றியிருக்க முடியாது என உள்ளத்தால் வருந்தியதனால் அவள் உடல் வாட்டமுற்றதாகிறது. உடல் வாடியதால் வளையல்கள் கைகளினின்று கழலத் தொடங்கி விட்டனவாக உணர்கிறாள். ஆகவே, தான் தலைவனது பிரிவை தெரிந்துகொள்வதற்கு முன்னரே தன்னுடைய வளையல்கள் அறிந்து விட்டன என்று தலைவி கூறுகின்றாள்.

துறைவன் என்பவன் யார்? குளிர்ந்த நீர்த்துறை என்று சொல்லப்பட்டதால் அது நெய்தலைக் குறிப்பது என்பர். நெய்தல் நிலத்தலைவன் பெயர் துறைவன். அப்பெயர் குறளில் இரண்டிடங்களில் ஆட்சி பெற்றுள்ளது. துறைவன் துறந்தமை தூற்றாகொல்.... (பிரிவாற்றாமை 1157 பொருள்: காதலர் பிரிந்ததைத் தெரிவித்துவிடவில்லையா?.....) என்பது மற்றொரு இடம். இலக்கிய மரபுப்படி தலைவி அணிந்துள்ள வளை நெய்தல் நிலக் கருப்பொருளான சங்குவளை என்றாகிறது. நெய்தல் என்றதால் கடல், கடல் சார்ந்த இடத்திற்கான தொழிலில் உள்ள தலைவனைக் குறிப்பதாகலாம். தொழிலின் இயல்பு காரணமாக அவன் அடிக்கடி பிரிந்து செல்பவனாக இருக்கவேண்டும். எனவேதான் அவன் வந்ததும் மறுபடியும் திரும்பப் போவதற்காகத்தானே வந்திருக்கிறான் என்று தலைவி கருதுவதாகப் பாடல் அமைந்துள்ளது.

தேவநேயப்பாவாணர் 'தணந்தமை என்று இறந்த காலத்திற் கூறியது கருத்து நிகழ்வு பற்றியும் தேற்றம் பற்றியும் வந்த காலவழுவமைதி. மன நோவால் தோள் மெலிவும் தோள் மெலிவால் வளை கழல்வும் நிகழ்ந்திருக்கவும், மனத்திற்கு முன்னம் வளைகள் அறிந்து கழன்றன வென்று அவற்றை அறிவுஞ் செயலு முடையனவாகக் கூறியிருப்பது, துயர் மடமையின் (pathetic fallacy) பாற்படும்' என்று கருத்துரைத்தார். சி இலக்குவனார் 'தணப்பதற்கு முன்பே தணந்து விட்டான் என்பது அவன் தணப்பது உறுதி என்பதைக் காட்டும் கால வழுவமைதி-அவன் பிரிவான் என்பதை உணர்ந்தவுடன் அவள் உடல் வாடினாள் என்பது, அவள் மென்மையையும் தலைவனின்றி வாழ முடியாத தன்மையையும் வெளிப்படுத்துகின்றது' என்பார்.

'உணர்ந்த வளை' குறிப்பது என்ன?

'வளை உணர்ந்த' என்ற தொடர்க்கு வளைகள் அறிந்தன, வளை அறிந்தது, வளைகள் முன்னே அறிந்தன, நான் நன்கு அறிவதற்கு முன்னே எந்தோள்கள் மெலிந்தன என்பாள், வளையல்கள் அறிந்தன, மெலிந்தன என் தோள் இணை, நம்மை மனத்தினாற் பிரிந்தமையை நாம் உணர்வதற்கு முன்னமேயே நம் வளையல்கள் தெரிந்துகொண்டன, பிரிய நினைத்தமையை நம்மைவிட நம்முடைய வளையல்கள் முன்பே அறிந்து விட்டன என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர்.

வளை கழல்வது தலைவனது பிரிவுக் குறிப்பை உணர்த்தியது என்று தலைவி எண்ணுகிறாள். எனது கணவர், பிரிந்து செல்ல மனத்திற் கருதினார் என்பதைத் தான் அணிந்துள்ள வளை தாமே கையினின்று நழுவியதால் முன்னே சொல்லியது என்பது கருத்து.

'வளை உணர்ந்த' என்ற தொடர்க்கு தலைவன் (பிரிய நினைத்தமையை) தலைவியின் வளையல்கள் முன்பே அறிந்து விட்டன என்பது பொருள்.

குளிர்ந்த துறையையுடையவன் நம்மை மனத்தினாற் பிரிந்தமையை, நம்மைவிட முன்னமேயே அறிந்து விட்டன நம் வளையல்கள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வளை கழல்வது மீண்டும் தலைவனது பிரிவாம் என்னும் மனக்குறிப்பறிவுறுத்தல்.

பொழிப்பு

குளிர்ந்த துறையையுடையவன் பிரிவான் என்பதை நம்மினும் முந்தி வளையல்கள் அறிந்தன.