இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1276



பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வது உடைத்து

(அதிகாரம்:குறிப்பறிவுறுத்தல் குறள் எண்:1276)

பொழிப்பு (மு வரதராசன்): பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல் கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.

மணக்குடவர் உரை: ஊடினகாலத்து அதன் அளவின்றி மிகவுமாற்றிப் புணருங்காலத்து முன்புபோலாகாது மேன்மேலும் விரும்புமாறு புணர்தல், யான் அரிதாக ஆற்றியிருந்து தம்மன்பின்மையை யெண்ணுவதொரு பிரிவுடைத்து.
இது பிரியலுற்ற தலைமகனது குறிப்பறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (தலைமகன் குறிப்பறிந்த தலைமகள், அதனை அது தெளிவிக்கச் சென்ற தோழிக்கு அறிவுறுத்தது.) பெரிது ஆற்றிப் பெட்பக்கலத்தல் - காதலர் வந்து தம் பிரிவினானாய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணம் கலக்கின்ற கலவி; அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து - இருந்தவாற்றான் மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினையும் தன்மையுடைத்து.
(பிரிதற் குறிப்பினாற் செய்கின்றதாகலான் முடிவில் இன்னாதாகா நின்றது என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: மிக அன்பு காட்டி ஆசையாகக் கூடுவதில் பிரியும் கொடுமைக் குறிப்பு உண்டு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து.

பதவுரை: பெரிது ஆற்றி- மிகவும் ஆறுதலைச் செய்து; பெட்ப-மகிழ; கலத்தல்-சேர்தல், கூடுதல், பொருந்தல்; கூட்டுறவாதல்; அரிது ஆற்றி - அரியதைச் செய்து; அன்பின்மை-அன்பற்ற செயலைச் செய்வதற்கு; சூழ்வது உடைத்து- எண்ணுவதை உடையது.


பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஊடினகாலத்து அதன் அளவின்றி மிகவுமாற்றிப் புணருங்காலத்து முன்புபோலாகாது மேன்மேலும் விரும்புமாறு புணர்தல்;
பரிப்பெருமாள்: ஊடினகாலத்து அதன் அளவின்றி மிகவுமாற்றிப் புணருங்காலத்து முன்புபோலாது மேன்மேலும் விரும்புமாறு புணர்தல்;
பரிதி: பெரிதான துயரத்தை ஆற்றி மிகவும் களிப்புடன் கூடுதல்;
காலிங்கர்: தோழீ! மிகவும் என் ஊடலைத் தீர்த்து யான் விரும்ப இப்பொழுது புணர்ந்த புணர்ச்சியானது;
பரிமேலழகர்: (தலைமகன் குறிப்பறிந்த தலைமகள், அதனை அது தெளிவிக்கச் சென்ற தோழிக்கு அறிவுறுத்தது.) காதலர் வந்து தம் பிரிவினானாய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணம் கலக்கின்ற கலவி; [அதனை - தலைமகனது பிரிவுக் குறிப்பினை; அது - அப்பிரிதற் குறிப்பு; மிகவும் ஆற்றி - பெரிதும் நீக்கி]

'பெரிதான துயரத்தை ஆற்றி மிகவும் களிப்புடன் கூடுதல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிரிவால் எய்திய துன்பத்தைக் காதலர் வந்து மிகவும் ஆற்றி விரும்பியபடி கூடிய முயக்கம்', '(நான் நெடுநாள் பிரிந்து விட்டதால்) மிகுந்த துன்பங்களைச் சகித்துக்கொண்டிருந்து (அந்த வருத்தத்தால் முன்போல்) ஆசையோடு தழுவிக்கொள்ளல்', 'தலைவர் தமது பிரிவாலான துன்பத்தை மிகவுமாற்றி நாம் மகிழும்வண்ணம் கூடுவது', 'மிகுதியான அன்பினைச் செய்து விரும்புமாறு கூடுதல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மிகுதியான ஆறுதலைச் செய்து மிகவும் மகிழுமாறு உரையாடுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

அரிதாற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யான் அரிதாக ஆற்றியிருந்து தம்மன்பின்மையை யெண்ணுவதொரு பிரிவுடைத்து.
மணக்குடவர் குறிப்புரை: இது பிரியலுற்ற தலைமகனது குறிப்பறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பரிப்பெருமாள்: யான் அரிதாக ஆற்றியிருந்து தம்மன்பின்மை யெண்ணுவதொரு பிரிவையுடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிரியலுற்ற தலைமகன் குறிப்பு அறிந்தமை தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பரிதி: நாயகர் பிரியும் குறி என்று அறிக என்றவாறு.
காலிங்கர்: நாம் பின்பு அரிதாக ஆற்ற அன்பின்மையால் வரும் பிரிவினைச் செய்வது ஒன்று உண்டு என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: அன்பின்மை என்றது அவர் பிரிவினைக் குறித்தது என்றது.
பரிமேலழகர்: இருந்தவாற்றான் மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினையும் தன்மையுடைத்து. [அத்துன்பத்தினை - பிரிவினாலாகிய அத்துன்பத்தினை]
பரிமேலழகர் குறிப்புரை: பிரிதற் குறிப்பினாற் செய்கின்றதாகலான் முடிவில் இன்னாதாகா நின்றது என்பதாம்.

'அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினையும் தன்மையுடைத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யான் அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினைக்கும் தன்மை உடையது', '(இவள் இப்படி நிற்பது) என்னுடைய அன்பில்லாமையே இடித்துக் கூறுவது போன்ற தன்மையுடையதாக இருக்கிறது', 'நாம் மீண்டும் அரிய அத்துன்பத்தைப் பொறுத்திருந்து அவரது அன்பின்மையைக் கருதுதற் கேதுவாய் குறிப்புடையது', 'பொறுக்க முடியாததனைச் செய்து அன்பின்மையை நினைக்கும் தன்மையை உடையது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

துன்பத்தை அரிதாகத் தாங்கிக்கொண்டு அவரது அன்பின்மையை நினையும் தன்மையை உடையது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மிகுதியான ஆறுதலைச் செய்து மிகவும் மகிழுமாறு உரையாடுதல், துன்பத்தை அரிதாகத் தாங்கிக்கொண்டு அவரது அன்பின்மையை நினையும் தன்மையை உடையது என்பது பாடலின் பொருள்.
இப்பாடலில் என்ன குறிப்பு உள்ளது?

தலைவரது செய்கைகள் மீண்டும் பிரிந்து பயணம் செல்லப் போகிறார்போல உள்ளனவே!

பெரிதாக அன்பு பாராட்டி, மிகவும் மகிழுமாறு உரையாடுதல், அரிதான அன்பில்லாப் பிரிவு வர இருப்பதை உணர்த்துகிறது தலைவிக்கு.
காட்சிப் பின்புலம்:
கடமை கருதி நெடுந்தொலைவு சென்ற கணவர் நீண்டகால இடைவெளிக்குப் பிறகு இல்லம் சேர்ந்துள்ளார். அதுகாறும் பிரிவுத்துன்பத்தால் வாடியிருந்த மனைவி இப்பொழுது புத்துணர்வோடு காட்சி தருகிறாள்.
'தன்னைவிட்டு நீங்காமல் தன்னுடனேயே தான் எப்பொழுதும் இருக்கவேண்டும்' என்ற செய்தியை மனைவியின் கண்களினூடே கண்டுகொள்கிறார் தலைவர்; தன் கண் அவரை நேரிலேயே பார்க்கமுடிகிறது என்ற பெருமகிழ்வில் புதுப்பொலிவுடன் தோன்றுகிறாள் அவள். கண்கொள்ளா அழகுநலம் கொண்டுள்ள இவளுக்கு நாணம் என்னும் அக அழகும் இருப்பதால் அவள் இன்னும் பேரழகியாகத் தோன்றுகிறாள் என அவள் அழகைச் சுவைத்து மகிழ்கிறார்; தெரியாமல் தெரியும் மணியில் கோக்கப்பட்டுள்ள நூல் போன்று, அவள் அவரைப் பெரிதும் காதலிக்கிறாள் என்பதும் விரைந்து கூட விரும்புகிறாள் என்பதும் அவளது தோற்றப்பொலிவில் இழையோடி இருப்பதன் வழி தெரிந்து கொள்கிறார்; புறத்துப் புலனாகாமல் நறுமணம் அரும்பினுள்ளே இருப்பதை உணர்வதுபோல் தலைவியின் முறுவலில் அவளகத்திலுள்ள காதல்ஆசைகளை அறிந்து கொள்கிறார்; வளையல்கள் நிறைந்த கைகளைக் குலுக்கி ஒலி எழுப்பிக் கள்ளத்தனமாகக் குறிப்புத் தந்தபோது தலைவரது மனவுளைச்சல் எல்லாம் நீங்கிப்போய்விட்டதாம்.

இக்காட்சி:
பிரிந்து சென்று தலைவியைத் துன்பத்தில் ஆழ்த்தியதற்காக முதலில் அவளுடன் ஆறுதலாக பேசி அவளது சினத்தைத் தணிக்கிறார் கணவர். அவளை ஆற்றியபின் இவ்வளவு நாள் பிரிந்திருந்ததால் உண்டான இன்பக் குறைவை நீக்கும்படி இருவரும் ஆசை ஆசையாய்க் கலந்துபேசி மகிழ்கிறார்கள். அக்கூட்டம் முன்புபோன்று இல்லாமல் இன்று மிகவும் வன்மையுடையதாய் இருந்ததாக உணர்கிறாள். பணி முடிந்து நீண்ட கால இடைவெளிக்குப் பின் திரும்பி வந்திருக்கிற தலைவர்க்கு அவளுடன் உரையாடி இன்புறும் வேட்கை மிகுதியாய் இருப்பது இயல்புதான்.
இனி, தலைவியின் பேதை நெஞ்சம் இன்னொன்றையும் நினைத்துப் பார்க்கிறது. இந்த இன்பம் இப்படியே இருக்கவேண்டுமே. இருக்குமா? அவர் வந்து உடன் இருப்பது நிலைத்து இருக்கவேண்டுமே. நிலைக்குமா? எனினும் இன்று கணவர் பேரன்பு செலுத்தியதும் வழக்கத்திற்கு மாறாக கலத்தலில் மிகுந்த ஈடுபாடு காட்டியதையும் எண்ணியபோது அரிய துன்பத்தை பொறுத்துக் கொண்ட தனக்கு இன்னுமொரு கொடுமையான துன்பம் தரும் பிரிவிற்கு அவர் ஆயத்தமாகிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது தலைவிக்கு.

குறளின் காமத்துப்பால், கோவைகளைப் போலக் காதல் நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சியாகக் கூறாமல், சங்க கால அகப்பாக்களைப் போலக், காம இன்ப அன்பின் ஒவ்வொரு நிலையையும் ஒவ்வொரு குறளிலும் தனித்தனி உணர்ச்சி ததும்பப் பாடுவது என்பர். இதனால் சில குறட்பாக்கள் அதிகாரத்திற்குத் தொடர்பில்லாமல் மாறி வந்திருப்பதுபோல் தோன்றும். இப்பாடலிலும் 'கலத்தல்' வந்ததை விளக்குவதில் இடர் உண்டாகிறது. புணர்தல் இதன்பின் நான்கு அதிகாரங்களுக்கு அடுத்துதான் சொல்லப்படுகிறது. கலத்தல் என்பதற்குப் புணர்தல் தவிர்த்து சேர்தல், கூடுதல், பொருந்தல்; கூட்டுறவாதல் என்ற பொருள்களும் உண்டு. எனவே இங்கு கலத்தல் என்பதற்குப் புணர்ச்சி என்னாமல் 'கலந்து உரையாடி' எனப் பொருள் கொள்ளப்பட்டது.

இப்பாடலில் என்ன குறிப்பு உள்ளது?

இக்குறளிலுள்ள 'அன்பின்மை' என்ற சொல் பொறுத்தற்கு அரிய, அன்பில்லாத, பிரியும் கொடுமையைக் குறிப்பதாய் உள்ளது.
நீண்ட தொலைவு சென்றிருந்த கணவர் கடமை முடிந்து திரும்பி வந்துள்ளார். இவ்வளவு காலப் பிரிவுத்துயர் நீங்குமாறு இப்பொழுது அவள் எதிரே உள்ளார். இதுவே அவளுக்குப் பெரும் ஆறுதல்தான். மேலும் அவர் பெரும் அளவில் அவளைத்தேற்றி மிகுந்த அன்புகாட்டி உரையாடுகிறார். ஆனாலும் என்ன? அது பிரிவு வரப்போகிறது என்பதை விளக்குவதாகக் காதல்மனைவி கவலையுறுகிறாள். தாங்க முடியாத பிரிவுத்துன்பத்தை இதுவரைத் துய்த்து இப்பொழுதுதான் அதிலிருந்து மீண்டுகொண்டிருக்கிறேன். இனியும் பொறுக்க முடியாத அந்த அரிய கொடுமையான பிரிவுச் சூழ்நிலையை நினைவுபடுத்துவதாக இருக்கிறதே கணவரின் இப்போதைய செயல்பாடுகள் என எண்ணுகிறாள். இன்னுமொரு பிரிவு விரைவில் வரப்போகிறது என்பதை உணர்த்துமாறு அவை உள எனத் தலைவிக்குத் தோன்றுகிறது.

தலைவர் பிரியக் கருதும் அன்பின்மையே இக்குறளில் உள்ள குறிப்பு.

மிகுதியான ஆறுதலைச் செய்து மகிழுமாறு உரையாடுதல், துன்பத்தை அரிதாகத் தாங்கிக்கொண்டு அவரது அன்பின்மையை நினையும் தன்மையை உடையது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கணவரின் மிகையான அன்புபாராட்டுவதில் மறுபடியும் பிரிதலுக்கான குறிப்பறிவுறுத்தல் இருக்குமோ எனத் தலைவி அச்சமுறுகிறாள்.

பொழிப்பு

மிகவும் ஆறுதல் செய்து மகிழுமாறு உரையாடுதலில் அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினைக்கும் தன்மை உடையது.