இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1275செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து

(அதிகாரம்:குறிப்பறிவுறுத்தல் குறள் எண்:1275)

பொழிப்பு (மு வரதராசன்): காதலி என்னை நோக்கிச் செய்துவிட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு. என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.

மணக்குடவர் உரை: செறிந்தவளையினை யுடையாள் செய்து அகன்ற களவு நீ உற்றதொரு துன்பத்தைத் தீர்ப்பதொரு மருந்தாதலை உடைத்து.
தோழி மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தவழி, கேளாரைப்போலத் தலைமகள் அகன்ற செவ்வியுள் எதிர்ப்பட்ட தலைமகற்கு நின்குறை முடியும்; நீ இவ்விடைச்செல் லென்று தோழி கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) செறி தொடி செய்து இறந்த கள்ளம் - நெருங்கிய வளைகளையுடையாள் என்கண் இல்லாததொன்றனை உட்கொண்டு அது காரணமாக என்னை மறைத்துப் போன குறிப்பு; உறுதுயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து - என் மிக்க துயரைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை உடைத்து.
(உட்கொண்டது - பிரிவு. கள்ளம் - ஆகுபெயர். மறைத்தற் குறிபபுத் தானும் உடன்போக்கு உட்கொண்டது. உறுதுயர் - நன்று செய்யத் தீங்கு விளைதலானும் அதுதான் தீர்திறம் பெறாமையானும் உளதாயது. மருந்து - அப்பிரிவின்மை தோழியால் தெளிவித்தல். 'நீ அது செய்தல் வேண்டும்' என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: வளை நிறைந்தவள் செய்து போன கள்ளத்தில் என் துயர் தீர்க்கும் மருந்து உண்டு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

பதவுரை: செறிதொடி- நெருக்கமாக வளையல்கள் அணிந்தவள் அதாவது நிறைய வளையல்கள் அணிந்தவள்; செய்து இறந்த - செய்து விட்டுப்போன; உறுதுயர் - அனுபவிக்கும் துன்பம்; தீர்க்கும் - நீக்கும்; மருந்து ஒன்று உடைத்து - மருந்து ஒன்று உண்டு.


செறிதொடி செய்திறந்த கள்ளம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செறிந்தவளையினை யுடையாள் செய்து அகன்ற களவு;
பரிப்பெருமாள்: செறிந்தவளையினை யுடையாள் செய்து அகன்ற களவு;
பரிதி: செறியப்பட்ட வளையுடையாள் செய்தகுறி வளையின் ஒலிகாட்டி அடக்கியது;
காலிங்கர்: நெஞ்சே! யான் அவள் தன்னைப் பெரிது அளிக்கவும் அவள் முன்கைச் செறிந்த வளையானது பின்பு செய்து போன கள்ளம் யான் அறிந்தேன்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) நெருங்கிய வளைகளையுடையாள் என்கண் இல்லாததொன்றனை உட்கொண்டு அது காரணமாக என்னை மறைத்துப் போன குறிப்பு; [அது காரணமாக-அப்பிரிவு காரணமாக]
பரிமேலழகர் குறிப்புரை: உட்கொண்டது - பிரிவு. கள்ளம் - ஆகுபெயர். மறைத்தற் குறிப்புத் தானும் உடன்போக்கு உட்கொண்டது.

'செறிந்தவளையினை யுடையாள் செய்து அகன்ற களவு' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினர். வளைகளாலே குறிப்பு அறிவித்தாள் என்ற பொருளில் 'செறியப்பட்ட வளையுடையாள் செய்தகுறி வளையின் ஒலிகாட்டி அடக்கியது' 'முன்கைச் செறிந்த வளையானது பின்பு செய்து போன கள்ளம்' எனப் பரிதியும் காலிங்கரும் கூறினர். பரிமேலழகர் 'நெருங்கிய வளைகளையுடையாள் என்கண் இல்லாததொன்றனை உட்கொண்டு அது காரணமாக என்னை மறைத்துப் போன குறிப்பு' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'செறிந்த வளையணிந்தவள் செய்து போன கள்ளக் குறிப்பில்', 'ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருக்கிற வளையல்களுடைய இவள் சகித்திருக்கிற துன்பங்கள்', 'நெருங்கிய வளையணிந்தவள் பிரிவை நினைத்துக் காட்டிப் போன சூழ்ச்சிக் குறிப்பு', 'நெருங்கிய வளையல்களை உடையாள் செய்துவிட்டுப் போன மறைப்புக் குறிப்பு', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அடுக்கிய வளையணிந்தவள் செய்து போன கள்ளக் குறிப்பில் என்பது இப்பகுதியின் பொருள்.

உறுதுயர் தீர்க்கும் மருந்தொன்று உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நீ உற்றதொரு துன்பத்தைத் தீர்ப்பதொரு மருந்தாதலை உடைத்து.
மணக்குடவர் குறிப்புரை: தோழி மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தவழி, கேளாரைப்போலத் தலைமகள் அகன்ற செவ்வியுள் எதிர்ப்பட்ட தலைமகற்கு நின்குறை முடியும்; நீ இவ்விடைச்செல் லென்று தோழி கூறியது.
பரிப்பெருமாள்: நீ உற்றதொரு துன்பம் தீர்ப்பதொரு மருந்தாதலை உடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: தோழி மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தவழி, கேளாதாரைப்போலத் தலைமகள் அகன்ற செவ்வியுள் எதிர்ப்பட்ட தலைமகற்கு நின்குறை முடிய; நீ அவ்விடைச்செல் லென்று தோழி கூறியது.
பரிதி: வருவதற்கும் இடமாக்கி ஆசை நோய்க்கு ஒரு மருந்தாயிற்று.
காலிங்கர்: பிரிவு அஞ்சி இவள் தன் உள்ளத்து நின்ற துயரத்தைத் தான் தணிக்கும் உபாயம் ஒன்று உடைத்து;
காலிங்கர் குறிப்புரை: எனவே, அவ்வளையானது இவள் தன் நெஞ்சிற் குறிப்பினை நமக்கு அறிவுறுத்திய அதனானும் செலவு ஒழிவதே பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: என் மிக்க துயரைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: உறுதுயர் - நன்று செய்யத் தீங்கு விளைதலானும் அதுதான் தீர்திறம் பெறாமையானும் உளதாயது. மருந்து - அப்பிரிவின்மை தோழியால் தெளிவித்தல். 'நீ அது செய்தல் வேண்டும்' என்பதாம். [நீ அது செய்தல் வேண்டும்- தோழியே நீ யான் பிரியாமையைத் தலைமகளுக்குச் சொல்லி அவளைத் தெளியச் செய்தல் வேண்டும்]

'உற்றதொரு துன்பத்தைத் தீர்ப்பதொரு மருந்தாதலை உடைத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என் பெருந்துயரைத் தீர்க்கும் மருந்து ஒன்று உள்ளது', 'எனக்கு வரும் துயரங்களையும் மாற்றிவிடக்கூடிய மருந்தின் தன்மை உள்ளன', 'எனக்கு நேர்ந்த துயரத்தைத் தீர்க்கு மருந்தாகிய உடன்போக்கினை யுட்கொண்டது', 'என்னுடைய மிகுந்த துயரத்தைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை உடையது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நான் துய்க்கும் துயரைத் தீர்க்கும் மருந்து ஒன்று உள்ளது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அடுக்கிய வளையணிந்தவள் செய்து போன கள்ளக் குறிப்பில் நான் துய்க்கும் துயரைத் தீர்க்கும் மருந்து ஒன்று உள்ளது என்பது பாடலின் பொருள்.
'கள்ளம்' என்ற சொல் குறிப்பது என்ன?

'கள்ளி அவள் தந்த குறிப்பு ஒன்றிலேயே எனது சோர்வெல்லாம் நீங்கிவிட்டது' - தலைவர்.

செறிவான தொடியணிந்துள்ள தலைவி செய்துவிட்டுப் போன கள்ளமான குறிப்பானது, தான் உற்றிருக்கும் துயரத்தைத் தீர்க்கும் ஒரு மருந்தை உடையது என்கிறார் கணவர்.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகப் பிரிந்து சென்றிருந்த கணவர் இல்லம் திரும்பியுள்ளார். பிரிவாற்றாமல் இருந்த தலைவி அவர் வரப்போகிறார் என்ற செய்தி கேட்டதிலிருந்தே மகிழ்ச்சி மிகுந்து காணப்பட்டாள். இதோ அவரும் வந்துவிட்டார். இப்பொழுது கண்ணுக்கு மை எழுதி, மணிமாலை அணிந்து கைநிறைய வளை பூண்டு புன்னகை பூத்து புத்துணர்ச்சி பெற்றவளாக உள்ளாள்.
மனைவியை விட்டு நீங்காமல் தான் எப்பொழுதும் அவள் முன்இருக்கவேண்டும் என்ற செய்தியை அவள் கண்வழி அறிந்துகொள்கிறார் தலைவர்; அவரை நேரிலேயே பார்க்கமுடிகிறது என்ற பெருமகிழ்வில் மேலும் அழகுடன் அவள் விளங்கக் காண்பதால் பேரழகியான இவள் புறஅழகுடன் அக அழகும் மிகுந்துள்ளாள் என அவள் எழில்நலத்தைச் சுவைத்து இன்புறுகிறார்; தெரிந்தும் தெரியாமல் இருக்கும் மணியிடை நூல்போல, அவளது காதல்நோக்கும் அவரை விரைந்து கூட விரும்புகிறாள் என்பதும் அவளது அழகுத்தோற்றத்தினூடே இழையோடி இருந்தது; அரும்பினுள்ளே இருக்கும் நறுமணம் போல அவள் புன்னகை புரிகையில் அவள் அகத்திலுள்ள காதல் ஆசைகளை உணர்ந்து கொள்கிறார் தலைவர்.

இக்காட்சி:
கைநிறைய வளையல்கள் அணிந்த தலைவி, நெருங்கி வந்து, அவற்றைக் குலுக்கி ஒலி எழுப்பிக் கள்ளத்தனமாகக் குறிப்புத் தந்து அகன்றாள்; அச்சமயம் தன் துயரம் எல்லாம் நீங்கியதுபோல் உணர்கின்றார் கணவர்.
கைநிரம்ப நெருக்கமாக வளைகள் அணிவதே பெண்ணின் மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அடுக்கிய வளைகளில் ஒலி எழுவது இயல்பானதே. ஆனால், இப்பொழுது தலைவி, மற்றவர்களுக்குத் தெரியாதவாறு, கள்ளத்தனமாக, தன் கணவனுக்கு மட்டுமே புரிகின்றவகையில் கைகளிலுள்ள நெருக்கமான வளைகளைச் சற்றே அசைத்து குறிப்பிட்ட ஒலி எழுமாறு செய்கிறாள். இதுபோன்ற சிறு சிறு செய்கைகள் அவள் அவர்மீது கொண்ட பேரன்பை வெளிப்படுத்துவதாகவும் இருந்தன. அந்த வளைஓசையின் குறிப்பை உணர்ந்துகொண்ட தலைவர் பிரிவில் தான் துய்த்த துயர் தீர்க்க வந்த மருந்து கிடைத்துவிட்டதாகவும் சொல்கிறார். அது என்ன மருந்து? பிரிந்திருந்த வேளையில் அவள் நினைவாலே உண்டான காதல் நோய்க்கு இப்பொழுது அவளே மருந்தாகப் போகிறாள் என்பதுதான் அது.

செறிவு என்பதற்கு, நெருக்கம், மிகுதி என்னும் பொருள்கள் உள. செறிதொடி என்றது நெருக்கமான வளையல்கள், மிகுதியான வளையல்கள் எனப் பொருள்படும்.
இக்குறளிலுள்ள 'செய்திறந்த' என்ற தொடர் செய்து+இறந்த என விரியும். இறந்த என்ற சொல் கடந்த அல்லது அகன்ற என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. செய்திறந்த கள்ளம் என்றது தலைவரிடத்து கள்ளத்தால் மறைத்து ஓர்குறிப்பு தந்து அகன்றாள் என்பதைச் சொல்வது.

'கள்ளம்' என்ற சொல் குறிப்பது என்ன?

'கள்ளம்' என்ற சொல்லுக்குக் களவு, குறி, கள்ளம், மறைத்தற் குறிப்பு, கள்ளமான குறிப்பு, கள்ளக் குறிப்பு, கள்ளக் குறிப்பு, குறிப்பு, சூழ்ச்சிக் குறிப்பு, மறைப்புக் குறிப்பு, மாயக்கள்ளம், மறைத்து வைத்த குறிப்பு, மறைத்து வைத்திருக்கும் கள்ளத்தனம் என்றவாறு பொருள் கூறினர்.

கள்ளமாக அதாவது மறைவாகச் செய்ததனைக் கள்ளம் என்ற சொல் குறிப்பிடுகிறது. நிறைய வளையல்கள் அணிந்த தலைவி என்ற பொருளில் செறிதொடி என்ற தொடர் இருப்பதால் வளையல் செய்த கள்ளம் என்பது தெரிகிறது. அக்கள்ளம் வளைகளால் எழுப்பப்பட்ட ஒலியைக் குறித்தது. வளையல்களை தலைவர் மட்டுமே அறிய மறைத்து ஒலித்துக் காட்டிச் சென்ற கள்ளக் குறிப்பு கள்ளம் என்ற சொல்லால் குறிக்கப்பெறுகிறது. தனது உள்ளத்திலுள்ள எண்ணத்தைக் கள்ளமாக மறைத்தாள். அந்தக் கள்ளக் குறிப்பு சொல்வது என்ன? மெய்யுறு புணர்ச்சி, குறை நயப்பித்தல் (குறையைப் போக்குவித்தல்), செலவழுங்குவித்தல், உடன்போக்கு, ஆற்றியிருக்கும் நோக்கில், எனப்பலவாறு விளக்கினர். பலரும் உடன்போக்குக் குறிப்பு என்றே உரை செய்தனர். அது இவ்விடத்தில் பொருத்தமகத் தோன்றவில்லை. அக்குறிப்பு புணர்ச்சி விருப்பம் என்பது பொருந்தும்.
தலைவி கணவர்பால் கொண்டுள்ள காதலையும் அவரைக் கூட வேண்டுமென்ற தன் விருப்பத்தையும் குறும்புத்தனமாக கள்ளக் குறிப்பால் சொல்லிவிட்டு அகன்று விட்டாள். தலைவர் அவள் மறைவாகச் செய்த குறிப்பின் பொருளை அறிந்து அதாவது அவளும் புணர்ச்சி விருப்பைக் காட்டியது நோக்கி மகிழ்ந்து தனது காதல் நோய்க்கு மருந்து கிடைத்து விட்டதாகக் கருதுகின்றார்.

'கள்ளம்' என்ற சொல்லுக்கு இங்கு மறைத்து செய்த குறிப்பு என்பது பொருள். அக்குறிப்பு வளைகளால் செய்த ஒலியாகும்.

அடுக்கிய வளையணிந்தவள் செய்து போன கள்ளக் குறிப்பில் நான் துய்க்கும் துயரைத் தீர்க்கும் மருந்து ஒன்று உள்ளது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வளையல்கள் ஒலி எழுப்பித் தலைவி குறிப்பறிவுறுத்தல் செய்தாள்.

பொழிப்பு

வளை நிறைந்தவள் செய்து போன கள்ளக் குறிப்பில் நான் துய்க்கும் துயர் தீர்க்கும் மருந்து ஒன்று உள்ளது.