இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1273



மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு

(அதிகாரம்:குறிப்பறிவுறுத்தல் குறள் எண்:1273)

பொழிப்பு (மு வரதராசன்): (கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப்போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.

மணக்குடவர் உரை: கோவைப்பட்ட நீலமணியின்கண்ணே தோற்றுகின்ற நூல்போல, இம்மடந்தை அழகினுள்ளே இவள் மறைக்கவும் தோற்றுகின்றதொரு துன்பம் உண்டு.
அழகு - புணர்ச்சியால் வந்த அழகுபோலுமென்னும் குறிப்பு.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) மணியில் திகழ்தரும் நூல்போல் - கோக்கப்பட்ட பளிக்கு மணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாம் நூல் போல; மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு - இம்மடந்தையது அணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்றதொரு குறிப்பு உண்டு.
(அணி - புணர்ச்சியான் ஆய அழகு. அதனகத்துக் கிடத்தலாவது, அதனோடு உடன் நிகழ்தற்பாலதன்றி வைத்து உடனிகழ்தல். 'அதனை யான்அறிகின்றிலேன், நீ அறிந்து கூறல் வேண்டும்', என்பது கருத்து.)

இரா சாரங்கபாணி உரை: கோத்த பளிங்கு மணியாரத்தில் விளங்கும் நூல்போலப் பெண்ணின் அழகில் விளங்கும் குறிப்பு ஒன்றுள்ளது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன்று உண்டு.

பதவுரை: மணியில்-பளிங்கில் (கண்ணாடியில்); திகழ்தரு- தோன்றும், தெரியும், விளங்கும்; நூல்போல்-நூலைப் போன்று; மடந்தை- பெண். இங்கு காதலியைக் குறித்தது; திகழ்வது- விளங்குவதாகிய; ஒன்று உண்டு-ஒன்று உளது. ஒரு குறிப்பு உண்டு எனக் கொள்வர்.


மணியில் திகழ்தரு நூல்போல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கோவைப்பட்ட நீலமணியின்கண்ணே தோற்றுகின்ற நூல்போல;
பரிப்பெருமாள்: கோவைப்பட்ட நீலமணியின்கண்ணே தோற்றுகின்ற நூல்போல;
பரிதி: முத்துக்குள்ளிருந்த நூல் மேல் காட்டுப்போல;
காலிங்கர் ('மணியுள்' பாடம்): பளிங்கினுள் கிடந்தே புறத்தில் திகழ்தரும் நூல்போல;
பரிமேலழகர்: (இதுவும் அது.) கோக்கப்பட்ட பளிக்கு மணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாம் நூல் போல;

'கோக்கப்பட்ட மணியின் உள்ளே உள்ள நூல் போல' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணி என்பதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் நீலமணி என்றும் பரிதி முத்து மாலை என்றும் கூற காலிங்கரும் பரிமேலழகரும் பளிங்கு எனச் சொல்கின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மணிக்கோவையுள் நூல் தெரிவது போல', 'மணிகள் (கோத்த ஒரு மாலையில்) நூல் இருப்பது நிச்சயமாகத் தெரியக்கிடக்கிற உண்மைபோல', 'கோக்கப்பட்ட மணிகளுக் கிடையேயுள்ள நூல் தெரிதல்போல', 'கோக்கப்பட்ட பளிங்கு மணியுள் விளங்குகின்ற நூலே போல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மணி மாலையுள் தோன்றுகின்ற நூல் போல் என்பது இப்பகுதியின் பொருள்.

மடந்தை அணியில் திகழ்வதொன்று உண்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இம்மடந்தை அழகினுள்ளே இவள் மறைக்கவும் தோற்றுகின்றதொரு துன்பம் உண்டு.
மணக்குடவர் குறிப்புரை: அழகு - புணர்ச்சியால் வந்த அழகுபோலுமென்னும் குறிப்பு.
பரிப்பெருமாள்: இம்மடந்தையுடைய அழகினுள்ளே இவள் மறைக்கவும் தோற்றுகின்றதொரு துன்பம் உண்டு.
பரிப்பெருமாள் குறிப்புரை: அழகு - புணர்ச்சியால் வந்த அழகுபோலுமென்னும் குறிப்பு ஒன்று உண்டு என்பது. அதனுள் தோன்றுகின்றதனால் வந்தது ஒன்றையுற்ற குறிப்பு. நொதுமலர் வரைய வந்துழி வேறு பட்ட தலைமகள் குறிப்புக்கண்டு, 'அதற்குக் காரணம் என்னை' என்று தோழியைச் செவிலி வினவியது.
பரிதி: நாயகி மனநிலை காட்டும் என்றவாறு.
காலிங்கர்: இம்மடந்தையானது வடிவு அழகினுள் கிடந்தே அவ்வழகின்மீதே வந்து தோன்றுவது ஒரு மயக்கம் உண்டு என்றவாறு.
பரிமேலழகர்: இம்மடந்தையது அணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்றதொரு குறிப்பு உண்டு.
பரிமேலழகர் குறிப்புரை: அணி - புணர்ச்சியான் ஆய அழகு. அதனகத்துக் கிடத்தலாவது, அதனோடு உடன் நிகழ்தற்பாலதன்றி வைத்து உடனிகழ்தல். 'அதனை யான்அறிகின்றிலேன், நீ அறிந்து கூறல் வேண்டும்', என்பது கருத்து. [அதனை - அக்குறிப்பினை]

'இம்மடந்தையானது அழகினுள்ளே இவள் மறைக்கவும் தோற்றுகின்றதொரு துன்பம்/மனநிலை/மயக்கம்/குறிப்பு உண்டு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மங்கை அழகில் ஒரு குறிப்புத் தெரிகின்றது', 'இப்பெண்ணின் ஆபரணங்களில் (அவள் எவ்வளவு துன்பம் சகித்திருக்கிறாள் என்று) அறியச் செய்கிற உண்மை ஒன்று விளங்குகின்றது', 'இம் மங்கையது அழகிற்குள்ளாகத் தோன்றும் ஒரு குறிப்பு உண்டு', 'இப் பெண்ணின் (தலைவியின்) அழகினுள் கிடந்து விளங்குவதொரு குறிப்புண்டு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இப்பெண்ணின் அழகினுள் இருந்து விளங்குகின்ற ஒரு குறிப்பு உண்டு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மணி மாலையுள் தோன்றுகின்ற நூல் போல், இப்பெண்ணின் அணியில் இருந்து விளங்குகின்ற ஒரு குறிப்பு உண்டு என்பது பாடலின் பொருள்.
இங்குள்ள 'அணி' என்ற சொல்லின் பொருள் என்ன?

மனைவியின் எழில்மிகு தோற்றத்தில் காமத்தால் திகழ்வதொரு குறிப்பு விளங்குகிறது என்கிறான் தலைவன்.

கோத்த மாலையுள் நூல் தெரிவது போல, என் காதலியின் அழகினுள்ளேயும் அமைந்து, புறத்தே விளங்குகின்ற குறிப்பும் ஒன்று தெரியக் கிடக்கிறது.
காட்சிப் பின்புலம்:
கடமை கருதி நெடுந்தொலைவு பயணம் செய்து நீண்டகால இடைவெளிக்குப் பிறகு தலைவன் இல்லம் திரும்பியுள்ளான். அதுகாறும் பிரிவுத்துன்பத்தால் வாடியிருந்த மனைவி இப்பொழுது புத்துணர்வோடு காட்சி தருகிறாள். ஆனாலும் அவன் மறுபடியும் பிரிந்து சென்றுவிடுவானோ என்ற எண்ணமும் தோன்றி அவளைத் துயரத்துள்ளாக்குகிறது. அதை அவள் கண்கள் காட்டிவிடுவதைத் தலைவன் அறிந்துகொள்கிறான். இனி, மென்மையான உடல் அழகு கொண்டவள் கண்கொள்ளாப் பேரழகுடன் இன்று காட்சி தருகிறாள். அத்துடன் பெண்மைத் தன்மை நிறைந்த நாண் குணமும்சேர்ந்து, புற அழகும் அக அழகும் முழுமையாக அமைந்த பெண்ணாக இல்லத்துள் வலம் வந்து கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
பணி முடித்து இல்லம் சேர்ந்த தலைவன் தன் மனைவியின் அழகைப் பார்வையால் துய்த்துக்கொண்டிருக்கிறான். அதுபோழ்து, அவள் உள்ளத்தில் ஓடும் எண்ண ஓட்டங்களையும் புரிந்துகொள்கிறான். மணியில் கோக்கப்பட்டுள்ள நூல் புறத்துத் தெரியாமல் தெரிவது போன்று, காதலியின் உள்ளத்தில் இழையோடி இருப்பது அவளது தோற்றப்பொலிவில் வெளிப்படுகிறது என்கிறான். தலைவியின் அழகினுள் உள்ள அக்குறிப்பு யாது?
அவளிடம் உள்ளோட்டமாக அவனைப் பெரிதும் காதலிக்கிறாள் என்பதும் விரைந்து கூட விரும்புகிறாள் என்பதும் அவளது மயக்கம் தரும் தோற்றப் பொலிவு வெளிப்படுத்துகின்றது. இதுவே அக்குறிப்பு.

அதிகாரத் தலைப்பு நோக்கி ‘ஒன்று’ என்பதற்குப் புறத்துப் புலனாகும் குறிப்பு எனப் பொருள் கூறினர். அக்குறிப்பு துன்பம், மனநிலை சுட்டுவதாகக் கூறினர். பலரும் பிரிவுத் துன்பத்தைக் குறித்தே பொருள் கூறினர். காமவிருப்பம் என்பதே அக்குறிப்பு எனக்கொள்வதே பொருந்தும்.
’மணி’ என்பதற்கு நீலமணி, முத்து, பளிங்கு என வேறுவேறாகப் பொருள் கூறினர். மணியினூடே உட்கோக்கப்பட்ட நூல் புலப்படுதல் குறிக்கப்படுவதனால் அது பளிங்கு மணியில் ஆனதாகவே இருத்தல் வேண்டும்.
மடந்தை என்ற சொல் பெண் என்ற பொருள் தருவது.

இங்குள்ள 'அணி' என்ற சொல்லின் பொருள் என்ன?

'அணி' என்ற சொல்லுக்கு அழகு, மனநிலை, வடிவு அழகு, புணர்ச்சியான் ஆய அழகு, ஆபரணங்கள், மங்கல வனப்பு, கலவியாலான அழகு, அழகான உருவம் எனப் பலவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

இப்பாடலிலுள்ள அணி என்ற சொல்லுக்கு அழகு என்ற பொருளே சிறக்கும். தலைவி இயற்கையிலேயே அழகு நிறைந்தவள். இன்று மேலும் அழகாகத் திகழ்வதாகத் தலைவனுக்குத் தோன்றுகிறாள். நீண்ட பிரிவுக்குப் பின் தலைவனைப் பார்க்கப் போகிறோம்; அவனுடன் கொஞ்சி விளையாடிக் கூடப்போகிறோம் என்ற பேருவகையில் அவள் பொலிவு மேலும் கூடியது. அந்த அழகினூடே அவளது காதல் விருப்பத்தையும் அறிந்து கொள்கிறான்.

'அணி' என்ற சொல்லுக்கு அழகு என்பது பொருள்.

மணி மாலையுள் தோன்றுகின்ற நூல் போல், இப்பெண்ணின் அழகினுள் இருந்து விளங்குகின்ற ஒரு குறிப்பு உண்டு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தோற்றப்பொலிவுடன் விளங்கும் இவளுள் காமவிருப்பம் உள்ளது என்ற குறிப்பறிவுறுத்தல்.

பொழிப்பு

மணி மாலையுள் நூல் தெரிவது போல மங்கை அழகில் விளங்கும் குறிப்பு ஒன்றுள்ளது.