இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1272கண்நிறைந்த காரிகைக் காம்புஏர்தோள் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது

(அதிகாரம்:குறிப்பறிவுறுத்தல் குறள் எண்:1272)

பொழிப்பு (மு வரதராசன்): கண்நிறைந்த அழகும் மூங்கில்போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.

மணக்குடவர் உரை: காண்பார் கண்ணிறைந்த அழகினையும் காம்பையொத்த தோளினையும் உடைய பேதைக்குப் பெண்மை நிறைந்த நீர்மை பெரிது.

பரிமேலழகர் உரை: (நாணால் அவள் அது சொல்லாளாயவழி அவன் தோழிக்குச் சொல்லியது.) கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்கு - என் கண்ணிறைந்த அழகினையும் வேயையொத்த தோளினையும் உடைய நின் பேதைக்கு; பெண் நிறைந்த நீர்மை பெரிது - பெண்பாலரிடத்து நிறைந்த மடமை அவ்வளவன்றி மிகுந்தது.
(இலதாய பிரிவினைத் தன்கண் ஏற்றி அதற்கு அஞ்சுதலான், இவ்வாறு கூறினான்.)

இரா சாரங்கபாணி உரை: கண்ணிறைந்த அழகினையும் மூங்கில் போன்ற தோள்களையும் உடைய காதலிக்குப் பெண்ணுக்குரிய இயல்பு மிகுதியாக உள்ளது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்நிறைந்த காரிகைக் காம்புஏர்தோள் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது.

பதவுரை: கண்நிறைந்த- கண்ணுக்கு நிறைவு அளிக்கும்; காரிகை- அழகு, பெண்; காம்பு- மூங்கில்; ஏர்- போன்ற, அழகிய; தோள்-தோள், உடல்; பேதைக்கு-இளம் நங்கைக்கு; பெண்நிறைந்த நீர்மை- பெண்மை நிறைந்த தன்மை; பெரிது-மிகுதி.


கண்நிறைந்த காரிகைக் காம்புஏர்தோள் பேதைக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காண்பார் கண்ணிறைந்த அழகினையும் காம்பையொத்த தோளினையும் உடைய பேதைக்கு;
பரிப்பெருமாள்: காண்பார் கண்ணிறைந்த அழகினையும் காம்பையொத்த தோளினையும் உடைய பேதைக்கு;
பரிதி: என் கண்ணிறைந்து அடங்காத பேரெழில் பெற்றபசு மூங்கில் ஒத்த தோளையுடைய பேதைக்கு;
காலிங்கர்: பசும்பணை யொத்த பெருந்தோள் பேதையாட்குப் பண்மைநிறக் கவின் அன்றி இன்று தன்கண் எங்கும் புகுந்து நிறைந்த நிற அழகானது;
காலிங்கர் குறிப்புரை: கண்ணிறைந்த காரிகை என்பது பண்டை நலன் ஒழியாத தன்னிடம் எங்கும் புகுந்து நிறைந்து நிற்கின்ற புத்தழகு என்றவாறு.
பரிமேலழகர்: (நாணால் அவள் அது சொல்லாளாயவழி அவன் தோழிக்குச் சொல்லியது.) என் கண்ணிறைந்த அழகினையும் வேயையொத்த தோளினையும் உடைய நின் பேதைக்கு; [அவள்-தலைவி; அது- தான் அஞ்சியது; வேய் - மூங்கில்]

'கண்ணிறைந்து அழகினையும் வேயையொத்த தோளினையும் உடைய பேதைக்கு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் 'காண்பார் கண்ணிறைந்த' என உரைக்க பரிதியும் பரிமேலழகரும் 'என் கண்ணிறைந்த' என்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கண் நிறைந்த அழகும் மூங்கில்போன்ற தோளும் பெற்ற காதலிக்கு', 'என் கண்ணை நிறைவு செய்யும் அழகும் மூங்கில் போன்ற வளைந்த தோள்களுமுடைய நினக்கு', 'கண் நிறைந்த அழகினையும் மூங்கிலை ஒத்த தோளினையும் உடைய நின் பேதைக்கு', 'கண்ணில் நிரம்பித் தோன்றும் பேரழகமைந்த மூங்கில் போன்ற அழகிய தோள்களையுடையவளுக்குள்ள', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கண் நிறைந்த அழகினையும் மூங்கில் போன்ற தோளினையும் உடைய இளம்பெண்ணுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

பெண்நிறைந்த நீர்மை பெரிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெண்மை நிறைந்த நீர்மை பெரிது.
பரிப்பெருமாள்: பெண்மை நிறைந்த நீர்மை பெரிது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது 'இவள் வேறுபாடு எற்றினான் ஆயிற்று' என்று வினாவிய செவிலிக்கு, 'இவள் வடிவுக்குத்தக்க பெண்மை நிரப்பம் உடையவள் ஆனமையான் வந்தது போலும்' என்று தலைமகள் குறிப்பைக் கூறியது. பெண்மை நிரப்பம், கற்பு, பூத்தரு புணர்ச்சியானும் புனல்தரு புணர்ச்சியானும் ஒன்றைச் சொல்லுவதாகக் குறித்துக் கூறினாள். இத்துணையும் களவு.
பரிதி: பெண்ணுக்குள்ள பக்குவம் பெரிது என்றவாறு.
காலிங்கர்: தனக்கு இயல்பாகிய நாணும் குடிகொண்ட தன்மை மிகப் பெரியதாய் இருந்ததுகாண்.
காலிங்கர் குறிப்புரை: எனவே, தன் உள்ளத்துக் குறிப்பு எதிர் நின்றுரைத்தலைப் பெறாது குறிப்பிற் கண்ட தலைமகன் செலவு அழுங்கினான் என்றவாறு.
பரிமேலழகர்: பெண்பாலரிடத்து நிறைந்த மடமை அவ்வளவன்றி மிகுந்தது.
பரிமேலழகர் குறிப்புரை: இலதாய பிரிவினைத் தன்கண் ஏற்றி அதற்கு அஞ்சுதலான், இவ்வாறு கூறினான்.

'பெண்மை நிறைந்த நீர்மை பெரிது' என்றபடி மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'பெண்ணுக்குள்ள பக்குவம் பெரிது' என்றார். காலிங்கர் 'நாண் பெரிது' என்றார். பரிமேலழகர் 'பெண்பாலரிடத்து நிறைந்த மடமை அவ்வளவன்றி மிகுந்தது' என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெண் தன்மை மிகுதி', 'பெண்களுக்குள்ள மடமை அதிகமாயிருக்கின்றது', 'பெண் தன்மை நிறைந்த பண்பு அளவு கடந்தது', 'பெண்மைக் குணம் பிறரினும் மிகுதியானதே யாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பெண்மை நிறைந்த தன்மை மிகுதி என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கண் நிறைந்த அழகினையும் மூங்கில் போன்ற தோளினையும் உடைய இளம்பெண்ணுக்கு, பெண்நிறைந்த நீர்மை மிகுதி என்பது பாடலின் பொருள்.
'பெண்நிறைந்த நீர்மை' குறிப்பது என்ன?

பேரழகுடன் தன் காம விருப்பத்தைத் தனக்குள் வைத்துக் காக்கும் பெண்மையும் நிரம்பியவளாம் இவள்.

'கண் கொள்ளா அழகும் மூங்கில் போன்ற வளவளப்பான உடலும் கொண்ட இளம்பெண் பெண்மையின் நிறைவாக இருக்கிறாள்' எனத் தலைவன் கூறுகிறான்.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாக நீண்ட காலம் பிரிந்து சென்றிருந்த கணவன் இல்லம் திரும்பிவிட்டான். அவன் வரப்போகிறான் என்ற செய்தி வந்தது முதல் இதுகாறும் வருந்திக்கிடந்த தலைவி புத்துணர்ச்சி பெற்றாள். எனினும் அவளுக்கு மறுபடியும் பிரிந்து சென்றுவிடுவானோ என்ற அச்சமும் அவள் மனத்துள் எப்பொழுதும் தோன்றிக் கொண்டேயிருக்கும். அதை அவள் மறைத்தாலும் அதற்கு உடன் படாது அவளையும் மீறி அவளது கண்கள் சொல்ல வருவது ஒன்றிருக்கின்றது என்பதைக் கண்டுகொண்டுவிட்டான் தலைவன். 'என்னைவிட்டு நீங்காமல் என்னுடனேயே நீங்கள் எப்பொழுதும் இருக்கவேண்டும் என்பதைத் தலைவி கண்வழி சொல்கிறாள்' என எண்ணிக் கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:
இதோ இங்கே தன் கண் முன்னேதான் இருக்கிறார் தன் கணவர் என்பதால் பூரிப்பு அடைந்து தன் உடலில் எங்கும் புகுந்து நிறைந்து நிற்கின்ற புது அழகுடன் தோன்றுகிறாள் தலைவி. பசுமூங்கில் போன்ற மென்மையான உடல் அழகுநலம் உடையவள் கண்நிறைந்த பேரழகுடன் காட்சி அளிக்கிறாள். வெறும் உடல் அழகு மட்டுமல்லாது பெண்மைத் தன்மையும் மிகவும் நிறைந்த பெண்ணாகவும் உள்ளாள். புற அழகும் அக அழகும் முழுமையாக அமைந்த பெண்ணாகக் காதலனுக்குத் தன்னைத் தர நிற்கிறாள்.
இயல்பிலேயே பெண்களுக்கு அடக்கமும், பொறுமைக் குணமும் நிறைய உண்டு; தங்கள் உள்ளத்தில் ஓடும் காதல் எண்ணங்களை வெளிப்படுத்தமாட்டார்கள். இக் குணங்களை இவள் இன்னும் மிகையாகப் பெற்றிருப்பதால், அவள் மனநிலையை அவனிடத்தும் சொல்லாமல் குறிப்பினால் உணரும்படி வைக்கிறாள் எனத் தலைவன் கருதுகிறான். நாண்குணத்தால் அவள் பேசவில்லை; புற அழகு நலம் மிகக் கொண்டுள்ள இவ்விளம் பெண்ணுக்கு நாணம் என்னும் அக அழகும் நிறைந்துள்ளது இன்னும் பேரழகாம் என அவளது கண்களின் குறிப்பால் அறிந்து மகிழ்ந்து போற்றுகிறான்.

''ஏர்' உருபு உவமநடையில் அருகிவரும் ஒன்றாகும். இதனைப் பேராசிரியரின் உரையாலும் அறியலாம். சிறுவரவின என்ற வகையால் உருபுவமத்திற்குக் கொள்ளப்படுகின்ற ஓர் உருபு என்பார் பேராசிரியர்' என்பது இ சுந்தரமூர்த்தியின் கருத்துரை.

'பெண்நிறைந்த நீர்மை' குறிப்பது என்ன?

'பெண்நிறைந்த நீர்மை' என்ற தொடர்க்குப் பெண்மை நிறைந்த நீர்மை, பெண்மை நிரப்பம் உடையவள், பெண்ணுக்குள்ள பக்குவம், பண்மைநிறக் கவின் அன்றி இன்று தன்கண் எங்கும் புகுந்து நிறைந்த நிற அழகானது தனக்கு இயல்பாகிய நாணும் குடிகொண்ட தன்மை, பெண்பாலரிடத்து நிறைந்த மடமை, பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு, பெண்மை நிறைந்த தன்மை, பெண் தன்மை, பெண்ணுக்குரிய இயல்பு, பெண்களின் இயல்பான நிறையுடைமை என்னும் குணம், பெண்மைக் குணம், பெண்களுக்குள்ள மடமை, பெண் தன்மை நிறைந்த பண்பு, பெருமை நிறைந்த பெண்மை, பெண்மை நிறைந்த இயல்பு, இயல்பாக அடைந்த பெண்ணின் தன்மை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் உரைத்தனர்.

'பெண்நிறைந்த நீர்மை' என்ற தொடர்க்கு தொல்காப்பிய உரையாசிரியரான நச்சினார்க்கினியர் 'தலைவியின் கதிர்ப்புக் கண்டு செவிலி கூறியது' எனவும், மற்றொரு தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணர், 'அளவுமிகத் தோன்றினும்': பெதும்பைப் பருவத்தளாகிய தலைவி புணர்ச்சியால் கதிர்த்து வீங்குகின்ற முலையும் புதிதுற்ற கவினும் என்பதற்கும் மேற்கோள் காட்டுவர்.
பரிப்பெருமாள், 'இவள் வடிவுக்குத்தக்க பெண்மை நிரப்பம் உடையவள்' எனக் கூறி 'பெண்மை நிரப்பம், கற்பு, பூத்தரு புணர்ச்சியானும் புனல்தரு புணர்ச்சியானும் ஒன்றைச் சொல்லுவதாகக் குறித்துக் கூறினாள்' என விளக்கம் தருவார். காலிங்கர், 'இன்று தன்கண் எங்கும் புகுந்து நிறைந்த நிற அழகானது தனக்கு இயல்பாகிய நாணும் குடிகொண்ட தன்மை' என்றார். தேவநேயப் பாவாணர், 'பெண்ணிறைந்த நீர்மை யென்றது அச்ச மட நாணங்களை மீண்டும் பிரிவுண்டென்று அஞ்சியதால் அச்சமும், இல்லாத பிரிவை ஏற்றிக்கொண்டாதால் மடமையும் . அதை வெளிவிட்டுச் சொல்லாமையால் நாணமும் வெளிப்பட்டன' என விளக்குவார்.

தலைவி அவளது காதல் விருப்பத்தை வாய்விட்டுக் கூறாமல் குறிப்பினால் உணரும்படியே செய்வது பெண்நிறைந்த நீர்மை எனச் சொல்லப்பட்டது.

கண் நிறைந்த அழகினையும் மூங்கில் போன்ற தோளினையும் உடைய இளம்பெண்ணுக்கு, பெண்மை நிறைந்த தன்மை மிகுதி என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பெண்மை மிகுந்த தோற்றத்தால் குறிப்பறிவுறுத்தல் செய்கிறாள் தலைவி.

பொழிப்பு

கண் நிறைந்த அழகும் மூங்கில்போன்ற தோளும் பெற்ற காதலிக்குப் பெண்மைத் தன்மை மிகுதி.