பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரைப்பெறுவேமென்று இருந்ததனாற் பயன் என்னுண்டாம்? முன்பே பெற்றேமானேம், அதனால் பயன் என்னுண்டாம்? இப்பொழுது உற்றேமாயின் அதனால் பயன் என்னுண்டாம்?
பரிப்பெருமாள்: அவரைப் பெறுவேம் என்றதனால் பயன் என்னுண்டாம்? முன்பே பெற்றேமானேம், அதனால் பயன் என்னுண்டாம்? இப்பொழுது உற்றேமாயின் அதனால் பயன் என்னுண்டாம்?
பரிதி: நாயகர் வந்தால் என்ன? காதலின்பம் விளைந்தால் என்ன பயன்?
காலிங்கர் ('உறில்' பாடம்): தோழீ! காலை பகல் மாலை என்னும் முக்காலங்களிலும் யாம் அவரை எய்தப் பெறுவோமாயினும் என்? மற்றும் பெற்றோம் ஆயினும் என் ஆம்?......
காலிங்கர் பதவுரை: உறிலென்பது இன்புறுதல் என்றது.
பரிமேலழகர்: (இதுவும் அது.) நம்மைப் பெறக்கடவளானால் என்? அதுவன்றியே பெற்றால் என்? உறின் என்? அதுவன்றியே மெய்யுறக் கலந்தால்தான் என்? இவையொன்றானும் பயன் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: இம்மூன்றும் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டன. அதன்மேலும் முன்னை வழக்குண்மையின், அதற்கு முன்னே யான் செல்ல வேண்டும் என்பது கருத்தாகலின், விதுப்பாயிற்று. [இம்மூன்றும்-பெறின் என்னாம், பெற்றக்கால் என்னாம், உறின் என்னாம் என்னும் இம்மூன்றும்; உடம்பொடு புணர்த்தல் என்பது உத்தி வகைகளுள் ஒன்று. ஒருவன் கூற வேண்டியதை வெளிப்படையாகக் கூறாது தான் கூறுவதன் குறிப்பினால் விளங்கச் செய்தல்; அதன் மேலும் - ஆற்றாமை மேலும்; அதற்கு முன்னே - காதலி இறந்துபடுவதற்கு முன்னே]
'அவரைப்பெறுவேமென்று இருந்ததனாற் பயன் என்னுண்டாம்? முன்பே பெற்றேமானேம், அதனால் பயன் என்னுண்டாம்? இப்பொழுது மெய்யுறக் கலந்தால்தான் அதனால் பயன் என்னுண்டாம்?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவரைப் பெற்றால் என்ன? தழுவினாலும் என்ன?', 'அவள் அவரைப் பெற்றால் என்ன பயன்? பெற்ற பின்னர் என்ன பயன்? தழுவினாலும் என்ன பயன்?', '(நான் வந்த அலுவலில்)வெற்றி பெற்றுதான் என்ன பயன்? அந்த வெற்றிக்காக மன்னனிடம் பரிசும் பணமும் பெற்றுவிட்டால்தான் என்ன பயன்? (அந்த செல்வங்களுடன்) மனைவியிடம் போய்த்தான் என்ன பயன்? (ஒரு பயனுமில்லை)', 'பெறப்போவதனாலும், பெற்றதனாலும் மெய்யுறப் பொருந்தியதனாலும் என்ன பயன்?', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அவரைப் பெற்றால் என்ன ஆகப் போகிறது? முன்னர் பெற்றதனாலும் என்னவாம்? கூடி இன்புற்றாலும் என்ன ஆகிவிடும்? என்பது இப்பகுதியின் பொருள்.
உள்ளம் உடைந்துஉக்கக் கால்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எனது உள்ளம் உடைந்து போயின் பின்பு.
மணக்குடவர் குறிப்புரை: இது வருவாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: எனது உள்ளம் உடைந்து போயினதாயின் பின்பு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வருவாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: பக்குவம் தப்பி உள்ளம் உடைந்து உக்கிப்போன தினமே என்றவாறு.
காலிங்கர்: மற்று அதன் முன்னமே உள்ளமானது உடைந்து உக்க காலத்து என்றவாறு.
பரிமேலழகர்: காதலி நம் பிரிவினையாற்றாது உள்ளம் உடைந்து இறந்துபட்டவழி.
பரிமேலழகர் குறிப்புரை: இது தலைமகள் கூற்றாயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை அறிக.
'உள்ளம் உடைந்து போயின்' என்று மணக்குடவர்/பரிபெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'உள்ளம் உடைந்து உக்கிப்போன தினமே' என்றும் காலிங்கர் 'உள்ளமானது உடைந்து உக்க காலத்து' என்றும் உரைத்தனர். பரிமேலழகர் 'உள்ளம் உடைந்து இறந்துபட்டவழி' எனக் கூறினார்.
இன்றைய ஆசிரியர்கள் 'உள்ளம் உடைந்து சிதறியபின்', 'தலைவி துன்பம் தாங்காது உள்ளம் உடைந்து சிதறியபின்', '(என்னைப் பிரிந்திருக்கும் ஏக்கத்தால்) என் மனைவி மனமுடைந்தவளாகி அவளுக்கு ஏதேனும் கெடுதியுண்டாகி விட்டால்', 'பிரிதலை ஆற்றாது மனம் உடைந்து இறந்துபட்ட பொழுது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
உள்ளம் உடைந்து சிதறியபின் என்பது இப்பகுதியின் பொருள்.
|