இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1269ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு

(அதிகாரம்:அவர்வயின் விதும்பல் குறள் எண்:1269)

பொழிப்பு (மு வரதராசன்): தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பிவரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல(நெடிதாகக்) கழியும்.

மணக்குடவர் உரை: நெடுநெறிக்கட்சென்றார் வருநாளைக்குறித்து இரங்குமவர்களுக்கு ஒருநாளைப்பொழுதுதானே ஏழுநாளைப் போலச் செல்கின்றது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) சேண் சென்றார் வருநாள் வைத்து ஏங்குபவர்க்கு - சேணிடைச் சென்ற தம் காதலர் மீண்டுவரக் குறித்தநாளை உட்கொண்டு, அது வரும் துணையும் உயிர்தாங்கி வருந்தும் மகளிர்க்கு; ஒரு நாள் எழுநாள் போல் செல்லும் - ஒரு நாள் பல நாள் போல நெடியதாகக் காட்டும்.
('ஏழ்' என்பது அதற்குமேலாய மிக்க பன்மை குறித்து நின்றது; 'ஒருவர் கூறை எழுவர் உடுத்து' என்றாற்போல. தலைமகள் வருத்தம் பிறர்மேலிட்டுக் கூறியவாறு. இதனான் இதுவும் தலைமகள் கூற்றாகாமையறிக. 'இரு நாள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)

வ சுப மாணிக்கம் உரை: தொலை சென்றார் வரும்நாளை எண்ணுபவர்க்கு வாராத ஒருநாள் ஏழுநாள்போல் தோன்றும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சேண் சென்றார் வருநாள் வைத்து ஏங்கு பவர்க்கு ஒருநாள் எழுநாள்போல்செல்லும்.

பதவுரை: ஒரு-ஒன்றாகிய; நாள்-நாள்; எழு நாள்-பல நாள்; போல்-போல; செல்லும்-கழியும், காட்டும்; சேண்-நெடுந்தொலைவு; சென்றார்-போனவர்; வருநாள்-திரும்பி வரும் நாள்; வைத்து-உட்கொண்டு, நினைந்து-எண்ணி; ஏங்குபவர்க்கு-ஏங்கிக் கொண்டு இருப்பவர்க்கு, வருந்துபவர்க்கு.


ஒருநாள் எழுநாள்போல் செல்லும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருநாளைப்பொழுதுதானே ஏழுநாளைப் போலச் செல்கின்றது;
பரிப்பெருமாள்: ஒருநாளைப்பொழுதுதானே ஏழுநாளைப் பொழுது போலச் செல்லாநின்றது;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது 'தலைமகன் குறித்த நாள் வருவதன் முன்னம் வருந்துகின்றது என்னை' என்ற தோழிக்கு அதுதானும் கடிது வருகின்றது இல்லை' என்று தலைமகள் சொல்லியது.
பரிதி: ஒருநாள் ஏழுநாள் போல இருக்கும்;
காலிங்கர்: கேளாய் தோழீ! ஒருநாள் எழுநாள் போலத் தோன்றும்; எனவே ஒருநாள் தானே அநேக நாளின் காலம் நீட்டம் கொண்டு கடுந்துயர் உறுவார் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: எனவே ஒருநாள் தானே அநேக நாளின் காலம் நீட்டம் கொண்டு கடுந்துயர் உறுவார் என்றவாறு.
பரிமேலழகர்: (இதுவும் அது.) ஒரு நாள் பல நாள் போல நெடியதாகக் காட்டும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'ஏழ்' என்பது அதற்குமேலாய மிக்க பன்மை குறித்து நின்றது; 'ஒருவர் கூறை எழுவர் உடுத்து' என்றாற்போல. ['ஒருவர் கூறை எழுவர் உடுத்து'- 'ஒருவரது ஆடையைப் பலர் உடுத்தி']

'ஒரு நாள் ஏழுநாளைப் போல போல நெடியதாகக் காட்டும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். எழுநாள் என்பதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் 'ஏழு நாள்' எனக் கூற காலிங்கர் 'அநேக நாள்' என்றும் பரிமேலழகர் 'பலநாள்' என்றும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருநாள் எழுநாள் போல (பல நாளாக) நெடிதாகத் தோன்றும்', 'ஒரு நாள் கழிவது ஏழு நாட்கள் கழிவது போல நீட்டித்துத் தோன்றும்', 'ஒருநாட் செல்லுதல் ஏழுநாட் கழிதல் போலும்!', 'ஒருநாள் ஏழு நாள்கள் போல நீண்டு தோன்றும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும் என்பது இப்பகுதியின் பொருள்.

சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெடுநெறிக்கட்சென்றார் வருநாளைக்குறித்து இரங்குமவர்களுக்கு.
பரிப்பெருமாள்: நெடுநெறிக்கட்சென்றார் வருநாளைக் குறித்து இருந்து இரங்குமவர்களுக்கு.
பரிதி: விருப்பமுள்ள நாயகர் பிரிந்தபோது ஏங்கும் நாயகிக்கு என்றவாறு.
காலிங்கர்: நம்மைப் பிரிந்து சேணிடைச் சென்ற நம் காதலர் வருநாள் வருவதற்கு நெஞ்சினுள் வைத்து ஏங்கி இருப்பவர்க்கு.
பரிமேலழகர்: (இதுவும் அது.) சேணிடைச் சென்ற தம் காதலர் மீண்டுவரக் குறித்தநாளை உட்கொண்டு, அது வரும் துணையும் உயிர்தாங்கி வருந்தும் மகளிர்க்கு.
பரிமேலழகர் குறிப்புரை: தலைமகள் வருத்தம் பிறர்மேலிட்டுக் கூறியவாறு. இதனான் இதுவும் தலைமகள் கூற்றாகாமையறிக. 'இரு நாள்' என்று பாடம் ஓதுவாரும் உளர். [சேணிடை - சேய்மையான (தொலைவான) இடம்; அது வருந்துணையும் - மீட்டுவார்க் குறித்த நாள் வருமளவும்]

'நெடுநெறிக்கட்சென்றார் வருநாளைக்குறித்து இரங்குமவர்களுக்கு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிரிந்து தொலைவிற் சென்ற காதலர் வருகின்ற நாளை எதிர்நோக்கி ஏங்கிக் கிடக்கும் மகளிர்க்கு', '(தொழில் முறையாக) தூரதேசம் போயிருக்கிற கணவன் திரும்பிவரும் நாளை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கிற மனைவிக்கு', 'தூரதேயத்திற்குப்போன தலைவர் வருநாளை எதிர்பார்த்து விருப்ப்புற்றிருப்போர்க்கு', 'நெடுஞ்தொலை சென்ற காதலர் மீண்டும் வரும் நாளைக் குறித்து ஏங்குபவர்கள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தொலைவிற் சென்ற காதலர் திரும்பிவருகின்ற நாளை எதிர்நோக்கி ஏங்குபவர்களுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தொலைவிற் சென்ற காதலர் திரும்பிவருகின்ற நாளை எதிர்நோக்கி ஏங்குபவர்களுக்கு ஒருநாள் எழுநாள்போல் நெடிதாகத் தோன்றும் என்பது பாடலின் பொருள்.
'ஒருநாள் எழுநாள்போல்' என்றால் என்ன?

'ஏன் இப்பொழுதெல்லாம் நாட்கள் மெதுவாகக் கழிகின்றன?' - கேட்கிறாள் தலைவி.

தொழில் காரணமாகத் தொலைவாகப் பிரிந்து சென்றுள்ள காதலர், திரும்பி வருவதாகச்சொன்ன நாளை மனத்தில் குறித்து வைத்துக்கொண்டு, அந்நாள் எப்பொழுதுவருமென ஏங்கி இருக்கும் மகளிர்க்கு, ஒருநாள் பலநாட்களைப் போல நீண்டு செல்லும்.
காட்சிப் பின்புலம்:
தொழில் காரணமாகப் பிரிந்து சென்றுள்ள கணவர் இல்லம் நோக்கி வருகிற வேளை இது. பிரிவின் துயர் தாங்கமாட்டாதிருந்த காதலிக்கு அவரை விரைவில் காணவேண்டும் என்னும் துடிப்பு மிகுதியாகிறது. விரல்கள் தேய எண்ணிக் கொண்டிருந்த அந்த வருநாள் இதோ நெருங்கிக் கொண்டிருக்கிறது. 'தம் ஊக்கத்தைத் துணையாகக்கொண்டு சென்ற அவர் தொழிலில் வெற்றியுடன் திரும்பி வருதலைக் காண்பதை விரும்பியே இன்னும் உயிரோடு உளேன்;. அவர் மிகுந்த காதலுடன் பிரிந்தார்; என் உள்ளம் மரத்தின் கிளைகள் தோறும் ஏறி அவர் வரவைக் காண எண்ணுகிறது; கணவரைக் கண்ட பின்பு எனது மெல்லிய தோளில் படர்ந்த பசலை நீங்கிவிடுமே; அவர் வந்தபின் எனக்குத் துன்பம் தரும் நோய்கள் எல்லாம் தீர அவரை ஆரத் துய்ப்பேன்; சரி, அவர் திரும்பிவரும்பொழுது ஊடுவேனோ? தழுவுவேனோ? இரண்டறக் கலந்து விடுவேனோ?; வென்று வந்தவனுக்கு வீட்டில் ஒன்றாகக் கலந்து மாலைப் பொழுதில் விருந்துண்ணப் போகிறோம்' - தலைவன் திரும்பிவரும் நாள் நெருங்க நெருங்க, தலைவியின் சிந்தனையோட்டங்கள் இவ்விதமாக இருந்தன.

இப்போது:
கணவர் சென்றதிலிருந்து கழிந்த நாட்களையும், திரும்பி வருவதற்கான மீதமுள்ள நாட்களையும் ஒவ்வொரு நாளாகத் தலைவி கணக்கிட்டுவருகிறாள். துன்புறும் மாந்தர்க்கு ஒருநாள் பலநாள்போல் நீண்டதாகத் தோன்றுவது ஒரு உளநிலை. இங்கே காதலிக்கு ஒரு நாள் கழிவது என்பது ஏழு நாள் கழிவதுபோல் நெடிதாகத் தோன்றுகிறதாம். அவ்வளவு மெல்ல நகர்கின்றன நாட்கள்!
தலைமகன் இன்னநாள் கடமை முடித்துத் திரும்பிவந்துவிடுவேன் எனக் குறித்த நாள் இன்னும் வரவில்லையே, பின் ஏன் தலைவி வருந்துகின்றாள்? வருநாள் விரைந்து வரமாட்டேன் என்கிறதே என்று காதலி ஒவ்வொருநாளும் பொறுமையின்றித் துடித்துக்கொண்டிருப்பதால்தால்தான்.

'சேண் சென்றார்' என்ற தொடர் நெடுந்தொலைவு சென்றுள்ளவர் என்ற பொருள் தரும். சேண் என்ற சொல் சேய்மை அதாவது தொலைவான இடம் என்ற பொருள் தருவது. கணவன்-மனைவி பிரிவை சேயிடைப்பிரிவு, ஆயிடைப்பிரிவு என்றும் பகுப்பர். சேயிடைப் பிரிவு என்பது தொலைவான இடத்துப் பிரிவைக் குறிப்பது. ஆயிடை என்பது குறுகிய தூரத்துப் பிரிவைக் குறிக்கும். (பரத்தையிற் பிரிவொன்றே ஆயிடைப்பிரிவு. மற்றவை எல்லாம் சேயிடைப் பிரிவாகும். குறளில் எங்குமே பரத்தையிற் பிரிவு சொல்லப்படவில்லை என்பது அறியத்தகும்.)
மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிதி, காலிங்கர் ஆகிய தொல்லாசிரியர்கள் இக்குறளைத் தலைவி கூற்றாகக் கொள்ள, பரிமேலழகர் இதைத் தலைவன் கூற்றாகக் கொண்டுள்ளார். 'வருநாள்வைத்து ஏங்குபவர்க்கு’ என்ற பகுதியை நோக்கும்போது, இப்பாடல் தலைவியின் கூற்றாக அமைந்தது என்பது புலப்படுகிறது.

'ஒருநாள் எழுநாள்போல்' என்றால் என்ன?

'ஒருநாள் எழுநாள்போல்' என்றதற்கு ஒருநாளைப்பொழுதுதானே ஏழுநாளைப் போல, ஒருநாளைப்பொழுதுதானே ஏழுநாளைப் பொழுது போல, ஒருநாள் ஏழுநாள் போல, ஒருநாள் எழுநாள் போல, ஒரு நாள் பல நாள் போல நெடியதாக, ஒருநாள் ஏழுநாள்களைப் போல நீண்டு, ஒருநாள் எழுநாள் போல (பல நாளாக) நெடிதாக, ஒரு நாள் கழிவது ஏழு நாட்கள் போல, ஒருநாள் செல்லுதல் ஏழுநாள் செல்லுதல்போல் நீண்டு, ஒருநாள் ஏழு நாள்கள் போல நீண்டு, ஒவ்வொரு நாளும் ஏழுநாள் போல், ஒருநாள் பலநாள் போல நெடிதாக, ஒரு நாளே பலநாள் போல் நெடிதாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

காலிங்கர் இத்தொடரை 'ஒருநாள் தானே அநேக நாளின் காலம் நீட்டம் கொண்டு கடுந்துயர் உறுவார்' என விளக்கினார். ஒன்று-எழு, அல்லது ஏழு என்னும் 'ஒரு-ஏழு' என்னும் இணையான எண்ணுப்பெயர் குறளில் அந்த எண்ணை மட்டுமே சுட்டாது, ஒன்று-பல என்னும் பொருளைக் குறிக்கும்.
ஒருவர் இன்பமும் மகிழ்வும் கொண்டுள்ள நிலையில் பொழுது போவதே தெரிவதில்லை. நெடிய பொழுதும் விரைவில் கடந்து விடுகின்றது. தொலைவிற் பிரிந்து சென்ற காதலனது வருநாளை எதிர்பார்க்கும் ஏக்கம் கொண்ட தலைவிக்கு பொழுது மெதுமெதுவாகக் கழிவது போல் தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் ஏழுநாள் போல் கனத்துக் கிடக்கும். ஆனால் மாறாக, காதல்மிகு கணவருடன் இருக்கும்போதோ ஒரு நாள் ஒர் நாழிகை போல் கழிந்து விடும். பொழுது அளவில் நீட்சியோ குறைவோ இல்லை; ஒருவர் மனத்தளவிலேயே நீட்சியும் குறைவும் ஆகின்றன. இன்ப துன்ப உளப்பாட்டில் காலச் சுருக்கத் தோற்றமும் காலப் பெருக்கத் தோற்றமும் உண்டாகின்றன; ஆனால் கால அளவீடு இயற்கை இயக்க விதியின்படி மாறாமல் நிகழ்ந்துகொண்டிருக்கும்.
முன்னர் கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா (படர்மெலிந்து இரங்கல், 1169 பொருள்: (பிரிந்து துன்புறுகின்ற நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையைவிட அவை கொடியவை) என இராக்காலங்கள் நெடியக் கழிந்தன என நொந்தாள் தலைவி.

தொலைவிற் சென்ற காதலர் திரும்பிவருகின்ற நாளை எதிர்நோக்கி ஏங்குபவர்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதலர் வருநாள் நீட்டித்துக்கொண்டே போகிறதே ஏன்? எனத் தலைவி அவர்வயின் விதும்பல்.

பொழிப்பு

தொலைவு சென்ற காதலர் திரும்பிவரும் நாளை எண்ணுபவர்க்கு வாராத ஒவ்வொரு நாளும் ஏழுநாள்போல் தோன்றும்.