புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் வரின்
(அதிகாரம்:அவர்வயின் விதும்பல்
குறள் எண்:1267)
பொழிப்பு (மு வரதராசன்): என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?
|
மணக்குடவர் உரை:
..............................
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) கண் அன்ன கேளிர் வரின் - கண்போற்சிறந்த கேளிர் வருவராயின், புலப்பேன் கொல் - அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக்கடவேனோ; புல்லுவேன் கொல் - அன்றி என் ஆற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ; கலப்பேன்கொல் - அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ? யாது செய்யக் கடவேன்?
(புலவியும் புல்லலும் ஒரு பொழுதின்கண் விரவாமையின், 'கலப்பேன் கொல்' என்றாள். மூன்றனையுஞ் செய்தல் கருத்தாகலின், விதுப்பாயிற்று. இனிக் 'கலப்பேன்கொல்' என்பதற்கு 'ஒரு புதுமை செய்யாது பிரியாத நாட்போலக் கலந்தொழுகுவேனோ'? என்று உரைப்பாரும் உளர்.)
வ சுப மாணிக்கம் உரை:
கண்போன்ற காதலர் வந்தால் ஊடுவேனா? தழுவுவேனா? கூடுவேனா?
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்அன்ன கேளிர் வரின், புலப்பேன்கொல், புல்லுவேன் கொல்லோ, கலப்பேன்கொல்?
பதவுரை: புலப்பேன்- பிணங்கக் கடவேன், ஊடல் கொள்ளுவேன்; கொல்-(ஐயம்); புல்லுவேன்-தழுவுவேன்; கொல்லோ-(ஐயம்); கலப்பேன்-கூடுவேன்; கொல்-(ஐயம்); கண்-விழி; அன்ன-போன்ற; கேளிர்-காதலர், உறவினர்; வரின்-வந்தால், வரும்பொழுது.
|
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: நம்மை நினையாமையை நினைத்துப் புலந்து நிற்பேனா? நெட்டாறு நீந்தி வருகின்றார் ஆதலின் எதிர் சென்று புல்லிக் கொள்வேனோ? இவை இரண்டும் செய்யாதே வேட்கை தீரக் கலப்பேனோ? இவை மூன்றிலும் யாது செய்வேன்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, கண்டாற் செய்வன இவை ஆதலின் இவை மூன்றும் செய்ய வேண்டா நின்றது என்று ஆராமை கூறியது.
பரிதி: ஊடுவோமோ? தழுவுவோமோ? கலவி நலம் கட்டுரைப்போமோ? என் செய்வோம்;
காலிங்கர்: தோழீ! அப்பொழுது சிறுது புலந்துகொள்வேனோ? அல்லது புல்லிக் கொள்வேனோ? இரண்டும் ஒருநாளே கலந்து கொள்வேனோ? யாது செய்வேன்? இக்குறி மெய்க்குறி யாயின் நினது நினைவினைச் சொல்வாயாக;
பரிமேலழகர்: (இதுவும் அது.) அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக்கடவேனோ, அன்றி என் ஆற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ, அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ? யாது செய்யக் கடவேன்? [அவ்விரு செயல்களையும் - புலத்தல் (பிணங்குதல்) புல்லல் (தழுவுதல்) என்னும் அவ்விரு செயல்களையும்; விரவக்கடவேனோ? - கலக்கக் கடவேனோ]
பரிமேலழகர் குறிப்புரை: புலவியும் புல்லலும் ஒரு பொழுதின்கண் விரவாமையின், 'கலப்பேன் கொல்' என்றாள். மூன்றனையுஞ் செய்தல் கருத்தாகலின், விதுப்பாயிற்று. இனிக் 'கலப்பேன்கொல்' என்பதற்கு 'ஒரு புதுமை செய்யாது பிரியாத நாட்போலக் கலந்தொழுகுவேனோ'? என்று உரைப்பாரும் உளர். [மூன்றனையும் - புலத்தல், புல்லல், கலத்தல் என்னும் மூன்று தொழிலையும்; புதுமை - ஊடலுடையவர் போன்று நடித்தல்; கலந்து ஒழுகுதல் - கூயொழுகுதல்]
புலக்கக் கடவேனோ, புல்லக்கடவேனோ, அவ்விரு செயல்களையும் விரவக் கடவேனோ/வேட்கை தீரக் கலப்பேனோ? என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். கலப்பேன்கொல் என்றதற்கு காலிங்கர், பரிமேலழகர் இருவரும், இரண்டும் (புல்லல், புலத்தல்) கலந்து கொள்வேனோ? என்று பொருள் கூற பரிப்பெருமாளும் பரிதியும் கலத்தல் பற்றி மட்டும் பேசுகின்றனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'காலத்தாழ்ச்சி கருதி புலவி கொள்வேனா? முயங்குவேனா? வேட்கை தீரச் செறியக் கூடுவேனா?', '(தாமதித்து வந்ததற்காகப்) பிணக்கம் காட்டுவேனா! (காம ஆசையால் உடனே ஓடி) தழுவிக் கொல்வேனா! அல்லது பிணக்கமும் ஆசையும் கலந்து தடுமாறுவேனா! (ஒன்றும் தெரியவில்லையே)', 'பிணங்குவேனோ; அல்லது தழுவுவேனோ; அல்லது இரண்டையும் கலந்து செய்வேனோ? தெரியவில்லை', 'ஊடுவேனோ? தழுவுவேனோ? வேற்றுமையின்றி இரண்டறக் கலந்து விடுவேனோ?', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஊடுவேனோ? தழுவுவேனோ? இரண்டறக் கலந்து விடுவேனோ? என்பது இப்பகுதியின் பொருள்.
கண்அன்ன கேளிர் வரின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: என் கண்போன்ற காதலர் வருவர் ஆயின்.
பரிதி: நாயகர் வந்தால்.
காலிங்கர்: நம் கண் அன்ன கேளிர் ஆகிய எம் காதலர் மடித்து வருவராயின்.
பரிமேலழகர்: கண்போற்சிறந்த கேளிர் வருவராயின்.
'கண்போற்சிறந்த கேளிர் வருவராயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கண்போற் சிறந்த காதலர் வருவாரானால்', 'எனக்குக் கண்ணான என் காதலர் வந்துவிட்டால்', 'கண்போன்ற காதலர் வருவாராயின்', 'கண்போற் சிறந்த காதலர் வந்தால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
என் கண்போன்ற காதலர் திரும்பிவரும்பொழுது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
என் கண்போன்ற காதலர் திரும்பிவரும்பொழுது ஊடுவேனோ? தழுவுவேனோ? கலப்பேன்கொல்? என்பது பாடலின் பொருள்.
'கலப்பேன்கொல்?' குறிப்பது என்ன?
|
அவர் இல்லம் திரும்பும்போது என்ன செய்து அவரை மகிழ்விப்பது?
என் கண் போன்ற கணவர் வீடு வரும்போது, நெடுநாள் நீங்கிச் சென்ற அவரிடம் ஊடல் கொள்வேனா? தழுவிக் கொள்வேனோ? அல்லது கலந்து விடுவேனா?
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாக நெடுந்தொலைவு பிரிந்து சென்ற கணவர் திரும்பி வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பிரிவுக் காலம் நீண்டுவிட்டது. ஆற்றமாட்டாத தலைவி அவரையே எந்நேரமும் நினைத்து வருந்திக் கொண்டிருந்தாள். இப்பொழுது அவர் வரப்போகும் செய்தி வந்துள்ளது. அவள் மனம் இருப்புக் கொள்ளாமல் தவிக்கிறது.
அவர் வரும்வழி மீது விழி வைத்துக் கண்களும் பூத்தன; சுவற்றில் கோடிட்டு நாட்களை எண்ணியெண்ணி விரல்களும் தேய்ந்துபோயின; தோள் மெலிந்து அணிகள் நழுவுகின்றன. சென்ற கடமையின் நோக்கத்தில் வெற்றியுடன் அவர் திரும்பிவருதலைப் பார்ப்பதற்காகவே தான் இன்னும் உயிருடன் இருப்பதாகக் கூறுகிறாள் அவள். 'மனம் மரத்தின் கிளைகள்தோறும் ஏறி வரவை நோக்குகின்றதே! அவரைக் கண்ட பின்பு என்மீது படர்ந்த பசலை நீங்கிவிடுமே! அவர் வந்தபின் என்னை வருத்தும் நோய்கள் எல்லாம் தீர அவரை ஆரத் துய்ப்பேனே' என்றவாறு எண்ணிக்கொண்டு காத்திருக்கிறாள் அவள்.
இக்காட்சி:
இல்லறவாழ்வில் கண்ணைப்போல் கருத வேண்டியவர் துணைவர். கண்போன்ற கேளிர் விரைவில் வரப்போகிறார். காதல் கொண்டவர் கேளிர் என்ற சொல்லால் இங்கு குறிக்கப்பெறுகிறார்.
கணவரில்லாதபோது கனவில் மட்டும் அவரைக் கண்டு அதில் களிப்புற்றாள். இப்பொழுது அவர் வரும்பொழுது, நேரில் எப்படி அவரிடம் நடந்து கொள்ளுவது என்று எண்ணத்தொடங்குகிறாள் தலைவி. அப்படி நடந்து கொள்ளலாமா? இல்லை இப்படிச் செய்யலாமா? அல்ல அல்ல, இவ்வாறு தான் நடக்க வேண்டும் என்று விரைந்து விரைந்து பலபட எண்ணுகிறாள்.
'என் கண்ணாளர் வரும்பொழுது என்னென்ன செய்யலாம்? காலம் தாழ்ந்து திரும்பியது ஏன் என்பது போன்று ஏதாவது ஒரு காரணத்திற்காக ஊடலுடையவள் போன்று காட்டிக்கொள்ளலாமா? அல்லது அவரை அப்படியே அள்ளி அணைத்துக்கொண்டுவிடலாமா? இல்லை அவரோடு ஒன்றிக் கரைந்து போகலாமா?' என அவள் மனதுக்குள் ஒரு போராட்டம் நிகழ்கிறது. உண்மையில் அம்மூன்றையுமே செய்ய அவள் விரும்புகிறாள். கண் அனையர் என்றாலும் தலைவி ஊடிக் கூடுவது பேரின்பம் தரும் என்ற கருத்துடையவள்.
அவனெதிரே ஊடுதல் நிலையில் மறித்து விளையாடுவதா? அவரை இறுகத் தழுவிக்கொள்வதா? அல்லது அவனுடன் இரண்டறக் கலந்து மகிழ்வதா? என ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவிக்கிறாள்.
அவர் வரும் முன்பே இவற்றையெல்லாம் கருதியதால் அவள் மனம் அவர் வரவை எத்துணை விரைவாக எதிர்நோக்கியிருக்கிறாள் என்பது காட்டப்பட்டது.
|
'கலப்பேன்கொல்?' குறிப்பது என்ன?
'கலப்பேன்கொல்?' என்ற தொடர்க்கு (இவை இரண்டும் (புலந்து நிற்பது புல்லிக் கொள்வது)செய்யாதே ) வேட்கை தீரக் கலப்பேனோ?, கலவி நலம் கட்டுரைப்போமோ?, இரண்டும் ஒருநாளே கலந்து கொள்வேனோ?, அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ?, ஆசைதீரக் கூடி மகிழ்வேனா?, கூடுவேனா?, வேட்கை தீரச் செறியக் கூடுவேனா?, இரண்டு ஆசையும் கலந்து தடுமாறுவேனா!, கூடிக் கலப்பேனோ?, இரண்டையும் கலந்து செய்வேனோ?, வேற்றுமையின்றி இரண்டறக் கலந்து விடுவேனோ?, அவரோடு ஒன்றிக் கரைந்து போகலாமா?, இருசெயல்களையும் விரவுவேனோ, இரண்டையும் இணைத்துச் செய்வேனோ?, இரண்டும் செய்ய முடியாது முன் கூடியிருந்தாற்போலக் கலந்து இருந்துவிடுவேனோ!, உடன் படுத்துக் கொள்வதா? என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.
இப்பாடலில் தலைவன் வரும் சமயம் என்ன செய்வது என்று அறியாமல் குழம்பி நிற்கிறாள் தலைவி.
கலப்பேன் என்ற சொல்லுக்கு 'ஊடலையும் தழுவதலையும் கலந்து செய்வேன் அதாவது விரவக் கடவுவேன்' என்று ஒரு சாராரும் 'அவருடன் கலந்து விடுவேன் அதாவது புணர்ச்சியில் அவருடன் ஒன்றிவிடுவேன்' என மற்றொரு பிரிவினரும் பொருள் கூறுவர்.
அவள் பேருவகையால் இறுகத் தழுவிக் கூடுவாள் என்பது தெளிவு.
'வேட்கை தீரக் கலப்பேன்' என்ற பொருள் அதிகாரத் தலைப்புடன் இயையும்.
'கலப்பேன்கொல்?' என்ற தொடர்க்குக் 'கூடுவேனோ' என்பது பொருள்.
|
என் கண்போன்ற காதலர் திரும்பிவரும்பொழுது ஊடுவேனோ? தழுவுவேனோ? இரண்டறக் கலந்து விடுவேனோ? என்பது இக்குறட்கருத்து.
அவருடன் ஊடிக் கூடுவதா அன்றி வெறுமனே தழுவிக்கொண்டே இருப்பதா எனப் பலமன இடையாட்டத்தால் அவர்வயின் விதும்பல்.
கண்போன்ற காதலர் வரும்பொழுது ஊடுவேனா? தழுவுவேனோ? கூடுவேனோ?
|