இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1266வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட

(அதிகாரம்:அவர்வயின் விதும்பல் குறள் எண்:1266)

பொழிப்பு (மு வரதராசன்): என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லாம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.

மணக்குடவர் உரை: கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்: வந்தானாகில் என் பசலைநோயெல்லாங் கெடப் பருகுவேன்.
இது வரவு வேட்கையாற் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) கொண்கன் ஒருநாள் வருக - இத்துணைநாளும் வாராக் கொண்கன் ஒருநாள் என்கண் வருவானாக; பைதல் நோயெல்லாம் கெடப் பருகுவன் - வந்தால் பையுளைச் செய்கின்ற இந்நோயெல்லாம் கெட அவ்வமிழ்தத்தை வாயில்கள் ஐந்தானும் பருகக் கடவேன்.
('வருக' என்பதற்கும் 'மன்' என்பதற்கும் மேல் உரைத்தவாறே கொள்க. அக்குறிப்பு 'அவ்வொரு நாளைக்குள்ளே இனி வரக்கடவ நோய்களும் கெடுப்பல்' என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவான்; என்நோயெல்லாம் கெட அவனை நுகர்வேன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கொண்கன் வருகமன் ஒருநாள்; பைதல்நோய் எல்லாம் கெடப் பருகுவன்.

பதவுரை: வருக-வருவானாக; மன்-(ஒழியிசை); கொண்கன்-கணவன்; ஒருநாள்-ஒரு நாள் (இங்கு திரும்பி வரும் நாள் குறித்தது); பருகுவன்-அள்ளி அள்ளி உண்டு விடுவேன், இன்பம் நுகர்வேன்; பைதல்-துன்பம் மிக்க; நோய்-நோய்; எல்லாம்-அனைத்தும்; கெட-நீங்க, அழிய.

.

வருகமன் கொண்கன் ஒருநாள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்;
பரிப்பெருமாள்: கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்;
பரிதி: ஒரு நாள் என் நாயகர்வரில்;
காலிங்கர்: தோழீ! மற்று அவர் வருக;
பரிமேலழகர்: (இதுவும் அது.) இத்துணைநாளும் வாராக் கொண்கன் ஒருநாள் என்கண் வருவானாக;
'வருக' என்பதற்கும் 'மன்' என்பதற்கும் மேல் உரைத்தவாறே கொள்க.

'கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இதுவரை வாராத என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக', 'கணவன் இத்தனை நாளும் வராது ஒருநாள் வருவானாக', 'இத்தனை நாளும் வாராத கணவன் ஒரு நாள் என்னிடம் வருவானாக', 'கணவர் மட்டும் வந்துவிடட்டும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கணவன் சிலநாளில் வரத்தான் போகிறான் என்பது இப்பகுதியின் பொருள்.

பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வந்தானாகில் என் பசலைநோயெல்லாங் கெடப் பருகுவேன்.
மணக்குடவர் குறிப்புரை: இது வரவு வேட்கையாற் கூறியது.
பரிப்பெருமாள்: வந்தானாகில் என் பசலைநோயெல்லாங் கெடப் பருகுவேன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வரவு வேட்கையாற் கூறியது.
பரிதி: பலநாளுற்ற துயரம் கெடக் கூடுவேன் என்றவாறு.
காலிங்கர்: வந்தால் பருகுவல் என்றது என்னையோ எனில், இங்ஙனம் இற்றை நாள் அன்றேனும் மற்று ஒருநாள் ஆயினும் கடிதின் வருவார்; அவ்வாறு வந்தபொழுதே யான் நெஞ்சு இரக்கத்தோடு உழந்த, தனித்துயர் எல்லாம் கெடுமாறு மெய் வாய் கண் மூக்கு செவி என்கின்ற ஐம்புலன்களும், அவரிடத்து அவாவிச் செல்கின்ற வேட்கை மிகுதி நோக்கிப் பருகிக்கொள்வேன் என்றவாறு.
பரிமேலழகர்: வந்தால் பையுளைச் செய்கின்ற இந்நோயெல்லாம் கெட அவ்வமிழ்தத்தை வாயில்கள் ஐந்தானும் பருகக் கடவேன். [பையுள் - துன்பம்; இந்நோய் எல்லாம் - (இக்காம) நோயெல்லாம்; அவ்வமிழ்தத்தை - கொண்கனாகிய அம்மருந்தினை; வாயில்கள் ஐந்தானும் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகள் ஐந்தாலும்]
பரிமேலழகர் குறிப்புரை: அக்குறிப்பு 'அவ்வொரு நாளைக்குள்ளே இனி வரக்கடவ நோய்களும் கெடுப்பல்' என்பதாம். [அக்குறிப்பு - கொண்கன் ஒருநாள் வருக என்னும் குறிப்பு; கெடுப்பல் - கெடுப்பேன்]

'வந்தானாகில் பையுளைச் செய்கின்ற இந்நோயெல்லாம் பருகுவேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் கணவரை அமிழ்தமாக உருவகிக்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பம் தரும் காம நோய் முழுவதும் நீங்குமாறு ஐம்புல இன்பங்களை யான் ஆரத் துய்ப்பேன்', 'எனது பசலைநோய் முழுவதும் ஒழியும்படி அவனை நுகர்வேன்', 'வந்தால் வருத்தும் துன்பங்கள் எல்லாம் நீங்க அவனைக் குடித்துவிடுவேன்', 'இந்த வேதனை மிகுந்த காம நோயும் (அதையொட்டிய துன்பங்கள்) எல்லாம் ஒரேநாளில் ஒழிந்து போகும்படியாகக் காம இன்பம் பருகி (பரிகாரம் செய்து கொள்வேன்)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

துன்பம் தரும் நோய்கள் எல்லாம் தீர அவனை ஆரத் துய்ப்பேன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கணவன் சிலநாளில் வரத்தான் போகிறான்; வரும்நாளில் துன்பம் தரும் நோய்கள் எல்லாம் தீர அவனை ஆரப் பருகுவேன் என்பது பாடலின் பொருள்.
'பருகுவேன்' என்ற சொல் குறிப்பது என்ன?

இப்பொழுது கணவர் வரத்தானே போகிறார்! பிறகு தெரியும் அவரை எப்படி நான் ஆசைதீர நுகர்வேன் என்று!

கணவர் என்னிடம் வரும் நேரம்தான் இது. அவர் வரும்போது என் காதல் துன்பம் எல்லாம் தீரும்படியாக, அவருடன் இன்பம் துய்ப்பேன்.
காட்சிப் பின்புலம்:
பணிக்காக தொலைவு சென்றுள்ள கணவர் இல்லம் திரும்பிக் கொண்டிருக்கிறார் பிரிவு நீண்டுவிட்டதால் தலைவி ஆற்றமாட்டாதவளாயிருக்கிறாள். அவரையே எந்த நேரமும் நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறாள். அவர் வருகிறார் என்ற செய்தி கிடைத்தனால் அவரை மீண்டும் காணப்போவதை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள். அவர் வரும் வழி பார்த்துப் பார்த்துக் கண்களும் ஒளியிழந்து புல்லியவாயின; சுவற்றைத் தொட்டு நாட்களை எண்ணிய விரல்களும் தேய்ந்துபோயின; தோள் மெலிந்து அணிகள் உடலிலிருந்து நீங்குகின்றன. கடமையை நிறைவேற்றி வருவேன் என்று ஊக்கத்துடன் சொல்லிச் சென்றவர் வெற்றியுடன் திரும்பி வருதலை எண்ணியே யான் உயிருடன் உள்ளேன் என்கிறாள்; அவர் வரவை எதிர்நோக்கி என் நெஞ்சு மரக்கிளைகள் தோறும் ஏறிப் பார்க்கின்றது; அவரை நேரில் பார்த்தபின் என் தோள்களில் படர்ந்துள்ள பசலை நீங்குமே! என எண்ணிக்கொண்டும் சொல்லிக்கொண்டும் நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள் தலைவி.

இக்காட்சி:
கணவரின் வருகையை நோக்கி ஆவல் மிகுபடத் தலைவி கிளர்ச்சியுற்றவளாகக் காணப்படுகிறாள். 'கணவர் திரும்பி வருங்காலை எனக்குத் துன்பம் தரும் காதல் நோய்கள் எல்லாம் நீங்குமாறு, அவரைப் பருகித் தீர்ப்பேன்' என்கிறாள்.
'காதலர் வரட்டும்; வந்த அந்த நாளில் என் விருப்பம் தீர அவரைத் துய்த்து விடுவேன். இத்தனை நாளும் பட்ட பாடெல்லாந் தீர, என் துன்பநோய்கள் எல்லாம் நீங்க, எல்லா இன்பங்களையும் ஒருசேரப் பெற்று மகிழ்வேன்' எனத் தன் வேட்கையையும், அவர் வந்தால் அவள் என்ன செய்யப் போகிறாள் என்பதனையும் கூறுகின்றாள்.
ஒருநாள் என்றது கணவன் திரும்பி வரும் நாள் குறித்தது. வந்த ஒரே நாளில் எனவும் கொள்ளலாம்.

தலைமகள் தனது காதல் வேட்கையையும் காமவிருப்பத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்த பாடல்.
கணவன் -மனைவி ஓரிடத்து இல்லாது பிரிவில் உள்ளனர். தலைவன் பிரிவுக் காலத்து அவளுக்கு வேட்கை மனத்துள் நீள்கின்றது. அகற்சியில் இருப்பதால் புணர் வெண்ணம் உள்ளடங்கி நின்று பொறுக்கமாட்டாதவளாகிறாள். புணராக் காலம் நீடிப்பதால் தனிமைத் துயர் தாங்க முடியாததாகிறது. இதை பைதல் நோய் என்கிறது பாடல். இது பசலை படர்ந்த நிலையையும் குறிக்கும். கணவர் திரும்பி வந்தவுடன் பசலை, தனிமை, காமம் ஆகிய எல்லா நோயும் நீங்குமாறு அவரை அள்ளிப் பருகுவேன் என்கிறாள். நீர் வேட்கையுடையவன் தண்ணீர் பருகும்போது எவ்வளவு வேகத்தோடும் ஆர்வத்தோடும் உண்பானோ, அதுபோன்று அவரைக் குடித்து விடுவேன் என்கிறாள் அவள். பிரிவுக்காலம் தந்த நோய் முற்றிலும் விலகும் வரை இன்பம் நுகர்வாளாம்.

வருக என்பது வேண்டிக் கொள்ளல் பொருளிலும் மன் என்னும் இடைச்சொல் கணவன் வருதல் வேண்டும் என்னும் ஒழியிசைப் பொருளிலும் வந்தன என்பர்.

'பருகுவேன்' என்ற சொல் குறிப்பது என்ன?

'பருகுவேன்' என்ற சொல்லுக்குப் பருகுவேன், கூடுவேன், மெய் வாய் கண் மூக்கு செவி என்கின்ற ஐம்புலன்களும் அவரிடத்து அவாவிச் செல்கின்ற வேட்கை மிகுதி நோக்கிப் பருகிக்கொள்வேன், (கொண்கன் என்னும்) அவ்வமிழ்தத்தை வாயில்கள் ஐந்தானும் பருகக் கடவேன், நன்றாக நுகர்வேன், அவ்வின்பத்தை ஆசைதீரப் பருகுவேன், அவனை நுகர்வேன், ஐம்புல இன்பங்களை யான் ஆரத் துய்ப்பேன், அவரைக் கலந்து மகிழ்ச்சியடைவேன், இன்பம் துய்ப்பேன், அவனைக் குடித்துவிடுவேன், அவரை அள்ளிப் பருகிவிடுவேன், அவருடம்பாகிய அமிழ்தத்தை என் ஐம்புலனாலும் ஆசைதீரப் பருகி யின்புறுவேன், ஐம்புலன்களும் இன்பமடையும்வண்ணம் கூடி மகிழ்வேன் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நோய் கெடப் பருகுவன் என்னும் தொடர் நோக்கி மருந்தைக் குடிப்பேன் என்றும் 'பருகுவன்' என்னும் சொல்கருதி தலைவனது அதர பானமாகிய மருந்தைக் (இதழ் சுவைத்தல்) குடிப்பேன் என்றும் விளக்கினர். அவனுடன் நன்கு கூடிப் பல்வகையாலும் துய்ப்பேன் என்ற பொருளில் உரைக்கிறாள் தலைவி. 'பருகுவேன்' என்றது அவளது வேட்கையினது மிகுதியையும் துடித்துக்கொண்டிருக்கும் விதுப்பையும், முழு இன்பத்தையும் அடைவேன் எனச் சொல்ல வருவதையும் நன்கு புலப்படுத்துவதாக ஆளப்பட்டது.

'பருகுவேன்' என்றதற்குக் கணவன் வரவு என்னும் இன்பத்தை ஆசைதீர குடிப்பேன் என்பது பொருள்.

கணவன் சிலநாளில் வரத்தான் போகிறான்; வரும்நாளில் துன்பம் தரும் நோய்கள் எல்லாம் தீர அவனை ஆரத் துய்ப்பேன் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அவர் வந்து என் துன்பமெல்லாம் நீக்குவாராக என்னும் தலைவியின் அவர்வயின் விதும்பல்.

பொழிப்பு

கணவன் சிலநாளில் வரட்டும்; துன்பம் தரும் நோய்கள் எல்லாம் நீங்க அவனை ஆரத் துய்ப்பேன்.