இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1265காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு

(அதிகாரம்:அவர்வயின் விதும்பல் குறள் எண்:1265)

பொழிப்பு (மு வரதராசன்): என் காதலனைக் கண்ணாரக் காண்பேனாக; கண்டபிறகு, என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலைநிறம் தானே நீங்கி விடும்.

மணக்குடவர் உரை: என்கண்கள் கொண்கனை நிறையக் காண்பனவாக; அவனைக் கண்டபின்பு எனது மெல்லிய தோளிலுண்டான பசலை நீங்கும்.
இது காண்டல் வேட்கையால் கூறியது.

பரிமேலழகர் உரை: (தலைமகன் வரவு கூற ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை என்ற தோழிக்குச சொல்லியது.) கண் ஆரக் கொண்கனைக் காண்க - என் கண்கள் ஆரும் வகை என் கொண்கனை யான் காண்பேனாக; கண்ட பின் என் மென்தோள் பசப்பு நீங்கும் - அங்ஙனம் கண்டபின் என் மெல்லிய தோள்களின்கண் பசப்புத் தானே நீங்கும்.
('காண்க' என்பது ஈண்டு வேண்டிக் கோடற்பொருட்டு. அதுவேண்டும் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண்வந்தது. 'கேட்ட துணையான் நீங்காது' என்பதாம்.)

தமிழண்ணல் உரை: என் கண்கள் நிறையும்வகை என் கணவனை யான் நன்றாகக் காண்பேனாக. அங்ஙனம் கண்ணாரக் கண்டவுடன் என் மெல்லிய தோளின் பசலை நோய் தானே நீங்கும்.
கண்ணாரக் காணல், மனம் நிறையும்படி ஒரே ஆர்வமாய்ப் பருகுவதுபோல் பார்த்தல். அவ்வாறு கண்ணாரப் பார்த்தாலே பசலை நோய் நீங்கிவிடுமாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காண்கமன் கொண்கனைக் கண்ணார; கண்டபின் என் மென்தோள் பசப்பு நீங்கும்.

பதவுரை: காண்க-காண்பேனாக, காணவேண்டும்; மன்-(ஓழியிசை); கொண்கனை-கணவனை; கண்ணார-கண்கள் நிறைவுபெறும் வகை; கண்டபின்-பார்த்த பிறகு; நீங்கும்-அகலும், மறையும்; என்-எனது; மென்-மென்மையான; தோள்-தோள்; பசப்பு-நிறம் வேறுபடுதல்.


காண்க மன் கொண்கனைக் கண்ணார:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்கண்கள் கொண்கனை நிறையக் காண்பனவாக;
பரிப்பெருமாள்: என்கண்கள் கொண்கனை காண்பனவாக;
காலிங்கர்: நெஞ்சமே யான் அங்ஙனம் நோக்குகின்ற இடத்து மற்று எம் கண்ணார யாம் அவரைக் காணப்பெறுவோமாக;
காலிங்கர் குறிப்புரை: மன் என்பது அசைச்சொல்.
பரிமேலழகர்: (தலைமகன் வரவு கூற ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை என்ற தோழிக்குச் சொல்லியது.) என் கண்கள் ஆரும் வகை என் கொண்கனை யான் காண்பேனாக; [பசக்கற்பாலை யல்லை- பசலை நிறம் அடையாதே; கொண்கன் - கொழுநன் (கணவன்)]
பரிமேலழகர் குறிப்புரை: 'காண்க' என்பது ஈண்டு வேண்டிக் கோடற்பொருட்டு. அதுவேண்டும் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண்வந்தது. 'கேட்ட துணையான் நீங்காது' என்பதாம். [வேண்டிக் கோடற்பொருட்டு - வேண்டிக் கொள்ளுதல் என்னும் பொருளுடையது; அது வேண்டும் - கொண்கனைக் காண்டல் வேண்டும்]

'என் கண்ணார என் கொண்கனை யான் காண்பேனாக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என் காதலனைக் கண்ணாரக் காண்பேன்', 'என்னைப் பிரிந்த காதலனை ஒருநாள் மன மகிழக் காண்பேனாக', 'காதலரை என் கண்களின் ஆசைதீர நான் பார்த்துவிட்ட உடனே', 'காதலரைக் கண் நிறைவடையும்படி காணவேண்டும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கணவனை என் கண்கள் நிறைவுபெறும் வகை காணவேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

கண்டபின் நீங்கும்என் மென்தோள் பசப்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவனைக் கண்டபின்பு எனது மெல்லிய தோளிலுண்டான பசலை நீங்கும்.
மணக்குடவர் குறிப்புரை: இது காண்டல் வேட்கையால் கூறியது.
பரிப்பெருமாள்: அவை நிறையக் கண்டபின்பு எனது மெல்லிய தோளிலுண்டான பசலை நீங்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது காண்டல் வேட்கையால் கூறியது.
பரிதி: பலநாளுற்ற பசலைநாயகனைக் கண்டால் நீங்கும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவரைக் கண்டபொழுதே எம் தோள் பசப்பு அனைத்தும் விட்டு நீங்கும் என்றவாறு.
பரிமேலழகர்: அங்ஙனம் கண்டபின் என் மெல்லிய தோள்களின்கண் பசப்புத் தானே நீங்கும்.

'அவனைக் கண்டபின்பு எனது மெல்லிய தோளிலுண்டான பசலை நீங்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பின்பு என் தோளின் பசலைநிறம் நீங்கிவிடும்', 'அங்ஙனம் கண்ணாரக் கண்டபின் என் மென்மையான தோளின்மேல் படர்ந்த பசப்பு தானே நீங்கிவிடும்', 'மெலிந்து போன என மேனியின் பசப்பு மறைந்துவிடும். அதை நீயே பார்க்கப் போகிறாய்', 'கண்ட பின்னேயே எனது மெல்லிய தோளிற் படர்ந்த பசலை நீங்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கண்ட பின்பு எனது மெல்லிய தோளில் படர்ந்த பசலை நீங்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கணவனை காண்கமன் கண்ணார; கண்ட பின்பு எனது மெல்லிய தோளில் படர்ந்த பசலை நீங்கும் என்பது பாடலின் பொருள்.
'காண்கமன் கண்ணார' குறிப்பது என்ன?

திரும்பி வரும் கணவரை நான் விரும்பும்வரை கண்டுகளிக்க வேண்டும்.

திரும்பிவரப்போகும் என் தலைவரைக் கண்ணாரக் காணவேண்டும்; அவ்வாறு கண்ட பின் பொலிவிழந்த என் மெல்லிய உடலில் உண்டாகியுள்ள பசலைநோயும் உடனே நீங்கிப் போய்விடும்.
காட்சிப் பின்புலம்:
பிரிவிற் சென்ற கணவர் இல்லம் திரும்பும் வேளை நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. அவரது பிரிவால் இதுவரை பெருந்துயர் எய்திவிட்டாள் தலைவி. உறக்கம் தொலைந்தது. உடல் மெலிந்தது. பசலை படர்ந்தது. பிரிவுக் காலத்தில் நினைவிலும் கனவிலும் மட்டுந்தான் அவர் வந்துபோய் ஆறுதல் தந்து கொண்டிருந்தார். இப்பொழுது அவர் நேரில் வரப்போகிறார். அவரை நனவிலே காணப்போகிறாள். அவரைக் காண்பதற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறாள். சென்ற நாட்களின் நிகழ்வுகள் நினைவுக்கு வந்து செல்கின்றன.
அவர் வரும் வழி பார்த்திருந்த கண்களும் ஒளியிழந்து போயின; சுவற்றைத் தொட்டு நாட்களை எண்ணிக் கொண்டிருந்த விரல்களும் தேய்ந்து விட்டன; அவரை மறந்தால் என் அழகு நீங்கி என் தோள்களில் உள்ள அணிகலன்களும் நீங்கும்; பணியை வெற்றியுடன் நிறைவேற்றித் திரும்பிவருவேன் என்று ஊக்கத்துடன் சொல்லிச் சென்றார்; அவர் திரும்பி வருதலை எண்ணியே யான் உயிருடன் உள்ளேன்; நிறைந்த காதல்கொண்ட நேரத்தில் பிரிந்த அவர் வரவை எதிர்பார்த்து என் உள்ளம் மரத்தின் கிளைகள் தோறும் ஏறிப்பார்க்கிறது; இவ்வாறு அவர் வரும் நாளை நினைத்துக்கொண்டு ஏக்கத்துடன் காத்திருக்கிறாள் தலைவி.

இக்காட்சி:
இப்பொழுது அவர் வருகிறார் என்ற செய்தி கிடைக்கிறது. அவரை மீண்டும் காணப்போவதை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள் தலைமகள். 'இவ்வளவு நாள் காணமுடியாமற் போனதையெல்லாம் சேர்த்துவைத்து என் கண்கள் நிறைவடையும்படி காணப் போகிறேன்; அதன்பின் என் மென்மையான உடலில் படர்ந்திருக்கிற பசப்பு எல்லாம் உடன் மறைந்தொழியும்' எனக் கூறுகிறாள் அவள்.
அவளது இக்கூற்று தலைவரைக் காண விரைதலை வெளிப்படுத்திற்று. அவர் நீங்கிய நாளுற்ற பசலை நிறம் அவரை நான் நேரில் கண்ணால் கண்டாலன்றி நீங்காது என்பதையும் அவளது சொற்கள் உணர்த்தின.

'காண்கமன் கண்ணார' குறிப்பது என்ன?

'காண்கமன் கண்ணார' என்ற தொடர்க்கு கண்கள் நிறையக் காண்பனவாக, கண்ணார யாம் காணப்பெறுவோமாக, என் கண்கள் ஆரும் வகை யான் காண்பேனாக, என் கண்கள் நிறையும்வகை யான் நன்றாகக் காண்பேனாக, கண்ணாரக் காண்பேன், மன மகிழக் காண்பேனாக, கண்ணின் ஆசைதீர கண்டுவிடுதல், கண்ணாரக் காண வேண்டும், கண் நிறைவடையும்படி காணவேண்டும், நன்றாகப் பார்ப்பேனாக!, கண்கள் நிறைவு பெறும் வகை நான் காண்பேனாக, கண்கள் முழுக்க நான் காண்பேனாகுக, கண்ணானது ஆசைதீர காணவேண்டும், கண்கள் தன்னுடைய ஆவல் தணிய என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'காண்க' என்றது இங்கு வேண்டிக் கொள்ளுதல் பொருட்டு. அதாவது காணவேண்டும் என்ற பொருள்பட நிற்கிறது; இது தலைவியின் ஆர்வமிகுதியையும் குறிக்கிறது. கண்ணாரக் காணுதலாவது ஆசை தீரக் காண்டல். கணவரை நிறைவுபெறும் வகை கண்டபின்பு என் உடலில் படர்ந்துள்ள பசலை நீங்கும் என்றும் கூறுகிறாள் காதல்தலைவி.

'காண்கமன் கண்ணார' என்பது கண்கள் நிறைவுபெறும் வகை பார்க்க வேண்டும் என்ற பொருள் தரும்.

கணவரை என் கண்கள் நிறைவுபெறும் வகை காணவேண்டும்; கண்ட பின்பு எனது மெல்லிய தோளில் படர்ந்த பசலை நீங்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதல்கணவரைக் காண்டல் விரும்புதலே அவர்வயின் விதும்பல் ஆகும்.

பொழிப்பு

கணவனைக் கண்ணாரக் காணவேண்டும்; கண்டபின்பு என் மெல்லிய தோளின் பசலைநிறம் நீங்கிவிடும்.