கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கூடுதற்கு அரிய காமத்தைக் கூடப் பெற்றுப்பிரிந்தவர் வருவாராக நினைந்தே;
பரிப்பெருமாள்: கூடுதற்கு அரிய காமத்தைக் கூடப் பெற்றுப்பிரிந்தவர் வருவாராக நினைத்து;
பரிதி: கூடிப் பிரிந்த நாயகர் வரும் வழி பார்த்து;
காலிங்கர்: தோழி நம்மைப் பிரிந்த காதலர் பண்டு எம்மோடு கலந்த காலையினும் இன்னும் இங்ஙனம் வரும் என்று கொண்ட அவ்வரவை நினைத்து;
பரிமேலழகர்: (இதுவும் அது.) நீங்கிய காமத்தராய் நம்மைப் பிரிந்து போயவர் மேற்கூறிய காமத்துடனே நம்கண் வருதலை நினைந்து; [மேல் - பிரிதற்கு முன்]
பரிமேலழகர் குறிப்புரை: வினைவயிற் பிரிவுழிக் காமஇன்பம் நோக்காமையும், அது முடிந்துழி அதுவே நோக்கலும் தலைமகற்கு இயல்பாகலின், 'கூடிய காமமொடு' என்றாள். [அதுவே - காம இன்பத்தையே]
'காமத்தராய் நம்மைப் பிரிந்து போயவர் மேற்கூறிய காமத்துடனே நம்கண் வருதலை நினைந்து' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இக்குறளிலுள்ள காமம் என்பதற்குக் காலிங்கர் காலம் என்று பாடம் கொண்டு "நம்மைப் பிரிந்த காதலர் பண்டு எம்மோடு கலந்த காலையினும் இன்னும் இங்ஙனம் வரும் என்று கொண்ட அவ்வரவை நினைத்து" என்று இத்தொடர்க்குப் பொருள் கூறுகிறார்.
கூடிய காமம் என்பதற்கு மணக்குடவர் 'கூடுதற்கு அரிய காமத்தைக் கூடப் பெற்று' என்று பொருள் தந்தார்; பரிதியார் 'கூடிப் பிரிந்த' என்று உரைக்கிறார்;
பரிமேலழகர் 'நீங்கிய காமத்தராய் நம்மைப் பிரிந்து போயவர் மேற்கூறிய காமத்துடனே' என்று உரை தருவார்.
இன்றைய ஆசிரியர்கள் 'மிகுந்த காம வேட்கையோடு இன்றியமையாமை கருதிப் பிரிந்த காதலரின் வருகையை நினைத்து', 'பிரிந்திருக்கும் என் காதலர் வரவை விரும்பி நினைக்கும்போதெல்லாம் உண்டாகிற காம இன்பத்தை ஆதரவாகக் கொண்டுதான்', 'பிரிந்த தலைவர் காதலாற் கூடும்பொருட்டு வருதலை நினைந்து', 'நம்மைவிட்டுப் பிரிந்த காதலர் முன்பு கூடிய காதலோடு வருதலை நினைத்து', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
மிகுந்த காதலுடன் பிரிந்தவர் வருதலைக் காண எண்ணி என்பது இப்பகுதியின் பொருள்.
கோடுகொடு ஏறும்என் நெஞ்சு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்னெஞ்சம் மரத்தின்மேலேறிப் பாராநின்றது.
மணக்குடவர் குறிப்புரை: உயர்ந்த மரத்தின்மேல் ஏறினால் சேய்த்தாக வருவாரைக் காணலாமென்று நினைத்து அதனை ஏறிற்றாகக் கூறினாள்.
பரிப்பெருமாள்: என்னெஞ்சம் மரமேறிப் பாராநின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: உயர்ந்ததின்மேல் ஏறினால் சேய்த்தாய் வருவாரைக் காணலாம் என்று நினைத்து அதனை ஏறிற்றாகக் கூறி, வருவார் என்ற ஆசைப்பாடு
இன்னும் உடையேன் என்றவாறு. அவர் வாரார் என்று கூறியது.
பரிதி: ஆசை என்னும் மலையில் என் நெஞ்சு ஏறிப்பார்க்கும் என்றவாறு.
காலிங்கர்: மற்று இது பற்றுக் கோடாக முன்னம்போலுக்குச் செல்லாது பணைத்து ஏறுகின்றதுகாண் நெஞ்சமானது.
காலிங்கர் குறிப்புரை: எனவே இதுவும் அவர் வருதற்கு ஒரு குறியாகும் என்று இன்புற்றாள்.
பரிமேலழகர்: என் நெஞ்சு வருத்தமொழிந்து மேன்மேற் பணைத் தெழாநின்றது. [மேன்மேற் பணைத் தெழுதல் - மிகவும் உவகையுறுதல்]
பரிமேலழகர் குறிப்புரை: 'ஒடு' உருபு விகாரத்தால் தொக்கது. கோடு கொண்டேறலாகிய மரத்தது தொழில் நெஞ்சின்மேல் ஏற்றப்பட்டது. கொண்டு என்பது குறைந்து நின்றது. 'அஃதுள்ளிற்றிலேனாயின் இறந்து படுவல்', என்பதாம். [கொண்டு என்பது கொடு என நகரம் குறைந்து நின்றது; அஃது - பிரிந்தார் வருதலை; உள்ளிற்றிலேன் ஆயின் - நினையாமற் போவேன் ஆயின்]
'என்னெஞ்சம் மரமேறிப் பாராநின்றது' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் பொருள் கூறி 'என்னெஞ்சம் மரத்தின்மேலேறிப் பாராநின்றது' என்று பொருள் கூறி அதற்கு 'உயர்ந்த மரத்தின்மேல் ஏறினால் சேய்த்தாக வருவாரைக் காணலாமென்று நினைத்து அதனை ஏறிற்றாகக் கூறினாள்' என்று விளக்கமும் கூறினர். பரிதி 'ஆசை என்னும் மலையில் என் நெஞ்சு ஏறிப்பார்க்கும்' என உரைத்தார். காலிங்கர் பற்றுக்கோடாக பணைத்து ஏறுகின்றது என் நெஞ்சம் என்றார். பரிமேலழகரும் 'என் நெஞ்சு மேன்மேற் பணைத் தெழாநின்றது' எனப் பொருள் கூறி 'கோடு கொண்டேறலாகிய மரத்தது தொழில் நெஞ்சின்மேல் ஏற்றப்பட்டது' என விளக்கினார்.
இன்றைய ஆசிரியர்கள் 'என் மனம் மரத்தின் கிளைதோறும் ஏறிப் பார்க்கும்', 'என் மனம் (கவலை நீங்கி) தைரியமடைகிறது', 'என் மனமானது மேன்மேலும் பருத்தெழுகின்றது', 'கிளைகள் தோறும் ஏறிப் பார்க்கும் என் நெஞ்சு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
என் உள்ளம் மரத்தின் கிளைகள் தோறும் ஏறும் என்பது இப்பகுதியின் பொருள்.
|