இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1263உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்

(அதிகாரம்:அவர்வயின் விதும்பல் குறள் எண்:1263)

பொழிப்பு (மு வரதராசன்): வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக்கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர்; திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடிருக்கின்றேன்.

மணக்குடவர் உரை: இன்பத்தை நச்சாது வலிமையையே நச்சிப் பேசுகின்ற மனமே துணையாகச் சென்றவர் வருவாரென்கின்ற ஆசைப்பாட்டினால் இன்னும் உளேனானேன்.
இஃது அவர் வாராரென்று கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) உரன் நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் - இன்பம் நுகர்தலை நச்சாது வேறலை நச்சி நாம் துணையாதலை இகழ்ந்து தம்ஊக்கம் துணையாகப் போனார்; வரல் நசைஇ இன்னும் உளேன் - அவற்றை இகழ்ந்து ஈண்டு வருதலை நச்சுதலான், யான் இவ்வெல்லையினும் உளேனாயினேன்.
('உரன்' என்பது ஆகுபெயர். 'அந்நசையான் உயிர் வாழா நின்றேன்,அஃதில்லையாயின் இறந்துபடுவல்', என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: வெல்லுதற்குரிய வலிமையை விரும்பித் தம் ஊக்கமே துணையாகச் சென்றார் திரும்பி வருதலை விரும்பி இன்னும் உயிரோடு உளேன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன்.

பதவுரை: உரன்-வெல்லுதல், வலிமை, உறுதி; நசைஇ-நம்பி, விரும்பி; உள்ளம்-ஊக்கம்; துணையாக-உதவியாக; சென்றார்-போனவர்; வரல்- (திரும்பி)வருதல்; நசைஇ-ஆசைகொண்டு, விரும்பி; இன்னும்-இன்னும்; உளேன்-உயிர் வாழ்கின்றேன்.


உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன்பத்தை நச்சாது வலிமையையே நச்சிப் பேசுகின்ற மனமே துணையாகச் சென்றவர்;
பரிப்பெருமாள்: இன்பத்தை நச்சாது வலிமையையே நச்சிப் பேசி மனமே துணையாகச் சென்றவர்;
பரிதி: நாயகர் தனியே போகாமல் என் நெஞ்சைத் துணைக்கூட்டிப் போனவர்;
காலிங்கர்: அருங்கலை கற்றவர் அருகு சென்று பெருங்கலை ஞானம் பெறுதல் வேண்டித் தம் பண்பு அறிவு தான் ஒரு பருவம் செய்து எழுந்த உள்ளமே அதற்கு உறுதுணையாகக் கொண்டு ஓதற்குப் போனவரது;
காலிங்கர் குறிப்புரை: உரம் என்பது அறிவு.
பரிமேலழகர்: (இதுவும் அது.) இன்பம் நுகர்தலை நச்சாது வேறலை நச்சி நாம் துணையாதலை இகழ்ந்து தம்ஊக்கம் துணையாகப் போனார்; [(பகைவரை) வெல்லுதலை விரும்பி]
பரிமேலழகர் குறிப்புரை: 'உரன்' என்பது ஆகுபெயர்.

'இன்பத்தை நச்சாது வலிமையையே நச்சிப் பேசுகின்ற மனமே துணையாகச் சென்றவர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் உரம் என்ற சொல்லுக்கு அறிவு என்று பதவுரை கூறி இக்குறள் ஓதற்பிரிவு பற்றியது என உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உறுதியை நம்பி ஊக்கத்தோடு சென்றவர்', 'கலை அறிவை விழைந்து ஊக்கம் துணையாக ஓதற் பிரிவை மேற்கொண்ட காதலர்', '(வாழ்க்கைக்கு வலிமையான) பொருள் தேடும் ஆசையுடன் என்னைப் பிரிந்து போயிருக்கிற காதலர்', 'இன்பத்தை விரும்பாமல் வெற்றி விரும்பித் தமது ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு சென்றவர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வெல்லுதற்குரிய வலிமையை நம்பித் தம் ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு சென்றவர் என்பது இப்பகுதியின் பொருள்.

வரல்நசைஇ இன்னும் உளேன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வருவாரென்கின்ற ஆசைப்பாட்டினால் இன்னும் உளேனானேன்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அவர் வாராரென்று கூறியது.
பரிப்பெருமாள்: வருவாரென்கின்ற ஆசைப்பாட்டினால் இன்னும் உளேனானேன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பிரியப்பட்டாருக்கு இதனின்மேல் இறந்துபாடு அல்லது துன்பம் நிகழாமையின் குறிப்பறிவுறுத்தல் பின் கூறினார் ஆயினர்.
பரிதி: என் அருமையும் பெருமையும் உள்ள நெஞ்சைத் தனியே விடார் தாமும் கூட வருவார் என்றவாறு.
காலிங்கர்: வரவை நச்சி இது பற்றுக் கோடாக இன்னும் இறந்துபடாது உளேன் என் நெஞ்சமே;
காலிங்கர் குறிப்புரை: எனவே இதனாலும் இவளது தூது விடுதல் பயன் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அவற்றை இகழ்ந்து ஈண்டு வருதலை நச்சுதலான், யான் இவ்வெல்லையினும் உளேனாயினேன்.
பரிமேலழகர் குறிப்புரை: 'அந்நசையான் உயிர் வாழா நின்றேன்,அஃதில்லையாயின் இறந்துபடுவல்', என்பதாம்.

'வருவாரென்கின்ற ஆசைப்பாட்டினால் இன்னும் உளேனானேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வருதலை நம்பி இன்னும் வாழ்கின்றேன்', 'விரைவில் வருதலை விரும்பி இன்னும் உயிர் வாழ்கின்றேன்', 'திரும்பி வருவதில் ஆசை வைத்து அந்த ஆசைக்கு என் மனமே அவரை மறவாமல் எனக்குத் துணை புரிவதனால் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்', 'மீண்டும் வருதலை விரும்பி யான இன்னும் உயிர் வைத்துக் கொண்டிருக்கிறேன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

திரும்பி வருதலில் ஆசைவைத்து இன்னும் உயிரோடு உளேன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வெல்லுதற்குரிய வலிமையை நம்பித் தம் ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு சென்றார்; அவர் திரும்பி வருதலில் ஆசைவைத்து இன்னும் உயிரோடு உளேன் என்பது பாடலின் பொருள்.
'இன்னும் உளேன்' என்ற தொடர் குறிப்பதென்ன?

இங்கே இன்பம் இருக்க, எங்கள் வாழ்வின் வெற்றி கருதியே, என்னைவிட்டு என் கணவர் தொலைவு சென்றுள்ளார்.

வெற்றிக்கான வலிமையுடன், ஊக்கமே துணையாக, அயல் சென்றுள்ள காதலர் திரும்பி வருதலைக் காண்பதற்கு விரும்பியே, இன்னும் உயிரோடுள்ளேன் என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
தலைவர் தொழில் காரணமாகப் பிரிந்து சென்றிருக்கிறார். அவர் திரும்பி வருகிற வேளை இது. பிரிவின் துயர் தாங்கமாட்டாதிருந்த காதலி இப்பொழுது அவர் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள். அவரை விரைவில் காணவேண்டும் என்னும் துடிப்பு அவளுக்கு உண்டாகிறது. விரல்கள் தேய எண்ணிக் கொண்டிருந்த அந்த வருநாள் இதோ நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இப்போது:
அவர் வரவு நோக்கியே தான் உயிருடன் இருப்பதாகக் கூறுகிறாள் தலைவி. 'தன் தொழில் வல்லமையை நம்பி ஊக்கமே துணையாக அவர் அயல் சென்றார். அவர் திரும்பி வருவதை விரும்பி நான் உயிருடன் உள்ளேன்' என்கிறாள் அவள்.
இப்பாடலில் தலைவி தன் துணையை நோக்காமல், ஊக்கத்தைத் துணைகொண்டு தலைவர் சென்றதை வருத்தமுடன் சொன்னாலும், தலைவர் உறுதியுடன் வெற்றியைத் தேடிச் சென்றிருப்பதையும் பெருமிதத்துடன் கூறுகிறாள். தண்ணளி செய்யாமல் சென்றுவிட்டாரே என்று இதுவரை புலம்பிக் கொண்டிருந்தவள் இப்பொழுது காதலரது கடமை உணர்வையும் பிரிவின் நோக்கத்தையும் பெருமையாக எண்ணிக் கொள்கிறாள். மேலும், அவர் திரும்பி வருவதைக் காண்பதை விரும்பியே அவள் உயிருடன் உள்ளதாகவும் கூறுகிறாள்.

உரனும் ஊக்கமும் முன்னிற்கத் தலைவர் பிரிந்து சென்றுள்ளார் எனப் பாடல் சொல்கிறது. இப்பாடலில் உள்ள உரன் என்ற சொல்லுக்கு வெற்றிகொள்ளுதல், வலிமை, அறிவு, பொருள், அறம் எனப் பலவாறு பொருள் கூறினர். வலிமை அல்லது உறுதி என்பது பொருத்தம்.
தலைவன் -தலைவி இடை பிரிவுவகைகள் பலவுண்டு. அரசுக்கு உதவும் பொருட்டு (வேந்தர்க்கு உற்றுழிப் பிரியும் பிரிவு அதாவது பகைதணிவினை) போர்ப்பணி, ஒற்று அறிதல் முதலியனவற்றிற்காகப் பிரிதல், வாழ்க்கைக்கு உரம் தரக்கூடிய செல்வபலம் பெற பொருள் தேடிப் பிரிதல், கல்வி பெறுவதற்காகப் (ஓதற்பிரிவு) பிரிதல் போன்றவை அவை. பரத்தையர் பிரிவு அதாவது மணவினை கடந்த இன்பம் தேடிப் பிரிந்துள்ளமை பற்றிப் பழம்இலக்கியங்களில் பேசப்படுகின்றது. ஆனால் அது குறளில் எங்கும் சொல்லப்படவில்லை. வள்ளுவர்க்கு அது ஒவ்வாததாதலால் அதைக் கூறமாட்டார். இப்பாடலில், வெற்றியுடன் வருவேன் என்ற மனஉறுதியுடன் ஊக்கமே துணையாகத் தன் கடமையாற்றுதற்கான பிரிவு எனப் பொதுவில் சொல்லப்பட்டது.

'இன்னும் உளேன்' என்ற தொடர் குறிப்பதென்ன?

'இன்னும் உளேன்' என்பது இன்னும் உயிருடன் உள்ளேன் என்பதைத் தெரிவிப்பது. காதலர் தன்னுடன் இல்லாத நிலையில் உயிர் வாழ்வதே பெருஞ்சுமையாக-பெருந்துன்பமாகத் தோன்றியது தலைவிக்கு. அவரைப் பிரிந்து அவளால் எப்படி உயிர் வாழமுடிகிறது என்ற எண்ணம் தலைவிக்குத் தோன்றிக்கொண்டேயிருக்கிறது. ஆனால் ஒரு நம்பிக்கைதான் அவளுடைய உயிர் போகாமல் காத்துவந்தது. அது என்ன நம்பிக்கை? காதலர் வெற்றியுடன் திரும்புவார் என்ற அவரது வருகையை விரும்பிய நம்பிக்கைதான் உயிரைக் காப்பாற்றியது. இப்பொழுது அவர் வீடு திரும்பும் காலம் வந்துவிட்ட வேளையில் 'அவர் வந்துவிடுவார், விரைவில் வந்துவிடுவார்' என்பது அவள் சிந்தையில் மேலோங்கி நிற்கிறது.
'இறவாது இன்னும் உளேனே' என்று அவள் சொல்வது போலவும் இத்தொடர் அமைந்துள்ளது.

இக்குறளின் சாயல் தோன்றும் ஒன்றை பின்னாளில் கம்பரும் யாத்துள்ளார். இராவணனிடம் சீதை 'இராமன் பிரிவில், தான் உயிர் வாழக் காரணம் அவனைப் பின்னர்க் காணலாம் என்னும் ஆவல்தான்; வேறு ஒன்றும் இல்லை' என்று உரைக்கின்றாள். அப்பாடல்:
ஊண் இலா யாக்கை பேணி, உயர் புகழ் சூடாது, உன்முன்
நாண் இலாது இருந்தேன் அல்லேன்; நவை அறு குணங்கள் என்னும்
பூண் எலாம் பொறுத்த மேனிப் புண்ணியமூர்த்தி தன்னைக்
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய்
(கம்ப இராமாயணம், மாயாசனகப் படலம், 22: பொருள்: உணவு இன்றி இளைத்த உடம்பைக் காப்பாற்றிக் கொண்டு (கணவனைப் பிரிந்த உடன் இறந்தாள் என்னும்) பெரும் புகழ் பெறாது உன் முன்னிலையில் நாணம் இல்லாது இருந்தேன் அல்லேன்; குற்றம் அற்ற பண்புகள் என்கிற அணிகலன்களை எல்லாம் தாங்கிய திருமேனியனும் புண்ணிய வடிவினனுமான இராமனை இன்னும் கண்ணால் காணலாம் என்னும் ஆசையால் உயிரோடு இருந்தேன் கண்டாய்)

வெல்லுதற்குரிய வலிமையை நம்பித் தம் ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு சென்றார்; அவர் திரும்பி வருதலில் ஆசைவைத்து இன்னும் உயிரோடு உளேன் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வெற்றியுடன் அவர் வீடு திரும்புவதைக் காண்பதற்காகத்தானே இன்னும் உயிருடன் உள்ளேன் என்னும் தலைவியின் அவர்வயின் விதும்பல்.

பொழிப்பு

வெல்லும் உறுதியை நம்பி ஊக்கத்தோடு சென்றவர் திரும்பி வருதலில் ஆசைவைத்து இன்னும் உயிரோடு உளேன்.