இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1260நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்துஊடி நிற்போம் எனல்

(அதிகாரம்:நிறையழிதல் குறள் எண்:1260)

பொழிப்பு (மு வரதராசன்): கொழுப்பைத் தீயில் இட்டாற் போன்ற உருகும் நெஞ்சு உடைய என்னைப்போன்றவர்க்கு, 'இசைந்து ஊடிநிற்போம்' என்று ஊடும் தன்மை உண்டோ?

மணக்குடவர் உரை: தீயின்கண்ணே நிணத்தையிட்டாற்போல, உருகும் நெஞ்சினை யுடையார்க்குக் காதலரை யெதிர்ப்பட்டு வந்து ஊடி நிற்போமென்று நினைத்தல் உளதாகுமோ?

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு - நிணத்தைத் தீயின்கண்ணே யிட்டால் அஃது உருகுமாறு போலத் தம் காதலரைக் கண்டால் நிறையழிந்து உருகும் நெஞ்சினையுடைய மகளிர்க்கு; புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ - அவர் புணர யாம் ஊடிப் பின்பு உணராது அந்நிலையே நிற்கக்கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ? ஆகாது.
(புணர்தல் - ஈண்டு மிக நணுகுதல்; எதிர்ப்படுதலுமாம். 'புணர' என்பது 'புணர்ந்து' எனத் திரிந்து நின்றது. 'யான் அத்தன்மையேன் ஆகலின் எனக்கு அஃது இல்லையாயிற்று', என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: நிணத்தைத் தீயில் இட்டால் உருகுவதைப் போல, உருகும் நெஞ்சினை உடையார்க்குக் காதலனை நெருங்கி ஊடி நிற்போம் என்று கூறுதல் முடியுமோ? (முடியாது)


பொருள்கோள் வரிஅமைப்பு:
நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு புணர்ந்துஊடி நிற்போம் எனல் உண்டோ.

பதவுரை: நிணம்-கொழுப்பு, புண்; தீயில்-நெருப்பின்கண்; இட்டு-போட்டு; அன்ன-போல நெஞ்சினார்க்கு-உள்ளம் உடையவர்க்கு; உண்டோ-உளதோ; புணர்ந்து-மிக நணுக சேர, எதிர்ப்பட்டு, இசைந்து, தலைக்கூடி நிற்பது; ஊடி-பிணங்கி; நிற்போம்-நிற்கக் கடவோம்; எனல்-என்று கருதல்.


நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தீயின்கண்ணே நிணத்தையிட்டாற்போல, உருகும் நெஞ்சினை யுடையார்க்கு;
பரிப்பெருமாள்: தீயின்கண்ணே நிணத்தை இட்டல் ஒக்க, உருகும் நெஞ்சினை யுடையார்க்கு;
பரிதி: நெருப்பைச் சேர்ந்த நெய்போலே நெஞ்சம் உருகும்;
காலிங்கர்: கேளாய் தோழீ! சென்று உற்ற பொழுதே உருகுவதாகிய நிணத்தைத் தீயிலிட்டால் எத்தன்மை, மற்று அத்தன்மைபோல் அவரைக்கண்ட இடத்தே நிலை நெகிழ்ந்து உருகும் நெஞ்சினை உடையார்க்கும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) நிணத்தைத் தீயின்கண்ணே யிட்டால் அஃது உருகுமாறு போலத் தம் காதலரைக் கண்டால் நிறையழிந்து உருகும் நெஞ்சினையுடைய மகளிர்க்கு; [நிணம் கொழுப்பு; அஃது - நிணம்]

'தீயின்கண்ணே நிணத்தையிட்டாற்போல, உருகும் நெஞ்சினை யுடையார்க்கு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீயில் இட்ட கொழுப்புப்போல் உருகுபவர்க்கு', 'கொழுப்பை நெருப்பில் போட்டது போல (காம வெப்பத்தால்) உருகிக் கொண்டிருக்கும் மனமுடையவர்க்கு', 'தலைவரைக் கண்டவுடன் தீயிலேயிட்ட நெய் போல உருகுவார்க்கு', 'நிணத்தை (கொழுப்பு) நெருப்பில் இட்டால் அஃது உருகுமாறு போலத் தம் காதலரைக் கண்டால் நிறையழிந்து உருகும் நெஞ்சினை உடையார்க்கு', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நெருப்பில் இட்ட கொழுப்பு உருகுமாறு போலத் தம் காதலரைக் கண்டால் உருகும் நெஞ்சினை உடையார்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.

உண்டோ புணர்ந்ததுஊடி நிற்போம் எனல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காதலரை யெதிர்ப்பட்டு வந்து ஊடி நிற்போமென்று நினைத்தல் உளதாகுமோ?
பரிப்பெருமாள்: காதலரை யெதிர்ப்பட்டு வந்து ஊடி நிற்பேம் என்று நினைத்தல் உளதாகுமோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நிறையழிந்து கூறிய தலைமகள் ஆற்றுதற் பொருட்டு, 'நம் காதலர் வந்தால் ஊடுவையோ' என்று நகைக் குறிப்பினால் கூறிய தோழிக்கு, 'ஊடுதல் அரிது' என்று தலைமகள் கூறியது.
பரிதி: ஆதலால் காதலர்க்கு இல்லை, புணர்ந்தாரிடத்து ஊடுதல் என்றவாறு.
காலிங்கர்: உளதோ, அவரோடு அணுகி நின்று வைத்துஊடி அகல்கிற்பேம் என்று இருத்தல்; எனவே அந்நிணம் இறுகி நிற்குமாயின் என் நெஞ்சம் இறுகி நிற்கும் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அவர் புணர யாம் ஊடிப் பின்பு உணராது அந்நிலையே நிற்கக்கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ? ஆகாது. [அந்நிலையே-அப்பிணங்கிய நிலையிலேயே.
பரிமேலழகர் குறிப்புரை: புணர்தல் - ஈண்டு மிக நணுகுதல்; எதிர்ப்படுதலுமாம். 'புணர' என்பது 'புணர்ந்து' எனத் திரிந்து நின்றது. 'யான் அத்தன்மையேன் ஆகலின் எனக்கு அஃது இல்லையாயிற்று', என்பதாம். [யான் அத்தன்மையேன் ஆகலின்-யான் நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினேன் ஆகலாம்; அஃது-ஊடி நிற்பேம் எனல்]

'காதலரை யெதிர்ப்பட்டு வந்து ஊடி நிற்போமென்று நினைத்தல் உளதாகுமோ?' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்குப் பொருள் கூறினர். பரிதி 'புணர்ந்தாரிடத்து ஊடுதல் இல்லை' என்றார். காலிங்கர் 'அவரோடு அணுகி நின்று வைத்துஊடி அகல்கிற்பேம் என்று இருத்தல் உளதோ என்றும் பரிமேலழகர் 'அவர் புணர யாம் ஊடிப் பின்பு உணராது அந்நிலையே நிற்கக்கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ?' என்று இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலரை நெருங்கி ஊடி நிற்க முடியுமா?', 'தழுவிக் கொண்டு (அதன்பின்) பிணங்கி நிற்போமென்பது முடியுமா?', 'முதலிற் பிணங்கிப் பின் புணர்வேமென்று உறுதியுண்டோ?', 'கூடிவிட்டு ஊடி நிற்போம் என்ற நிலை உண்டோ?' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

காதலரை நெருங்கி ஊடி நிற்போம் என்று நினைக்க முடியுமா? என்பது இப்பகுதியின் பொருள்.

தீயின்கண்ணே நிணத்தையிட்டாற்போல, உருகும் நெஞ்சினை யுடையார்க்கு

நிறையுரை:
கணவரைக் கண்டால் நெருப்பில் இட்ட கொழுப்பு உருகுமாறு நெஞ்சினை உடைய தலைவிக்கு புணர்ந்ததுஊடி நிற்போம் என்று நினைக்க முடியுமா? என்பது பாடலின் பொருள்.
'புணர்ந்துஊடி நிற்போம்' என்ற தொடரின் பொருள் என்ன?

ஊடுவோம் என்ற உறுதி கணவரைக் கண்டவுடனேயே உருகிப்போய் விடுகிறது.

தலைவரைக் கண்டவுடனேயே நெருப்பில் இட்ட கொழுப்புப்போல உருகும் நெஞ்சினை உடையவள் காதலி. அவர் நெருங்கியவுடனேயே நெகிழ்ந்து அவர் நெஞ்சுடன் கலந்து விடுவாள். பின் எப்படி அவருடன் ஊடி நிற்பாள்?
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகக் கணவர் தொலைவு சென்றுள்ளார். அவர் பிரிவு தாங்கமுடியாமல் காதல்மனைவி வேதனையுடன் அவரது வரவு நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறாள். அவர் பிரிந்து செல்வதற்கு முன் நிகழந்த புலவிக் காட்சிகளையும் தான் நிறைஅழிந்த நிலைகளையும் அப்பொழுது நினைவுகூர்கிறாள்.
நாணம் என்ற தாழ்ப்பாள் இட்ட கதவை காம வேட்கை என்ற கூரிய கருவி உடைக்கும்; ஊரெல்லாம் உறங்கும் நள்ளிரவிலும் காமம் இரக்கமின்றி என் நெஞ்சத்தை வருத்தி ஆளும்; காம உணர்வுகளை மறைக்க முயன்றாலும் அது எனக்குத் தெரியாமல் தும்மல்போல் வெளிப்பட்டுவிடும்; என் மனத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றலுடையேன் என எண்ணிக்கொண்டிருக்கும்போது என் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படும்; என்போன்ற காதல் நோய் உற்றவர் மட்டுமே தன்னை வெறுத்தவர் பின் செல்வர்; வெறுத்தவர் பின்னே செல்லும் என் இரங்கத்தக்க நிலையை என்னவென்று சொல்வேன்?; தான் விரும்பும் காதலர் விரும்பியவற்றைச் செய்யும்போது நாண் என்ற ஒன்றை அறியமாட்டோம்; பலவிதமான மாயங்களைச் செய்து மயக்கும் காதலனது மென்மையான இனிய சொற்களில் என் பெண்தன்மை உடைந்து போகிறது; ஊடும் எண்ணத்தோடு சற்று விலகிச் சென்றேன், ஆனால் நெஞ்சம் கூட விரும்பியதால் பிணங்காமல் அவரைத் தழுவிக்கொண்டேன். இவ்வாறு மனத்தில் மறைத்துக் காக்க வேண்டியவற்றைப் பொறுக்க முடியாமல் சொல்லிக் கொண்டிருக்கிறாள் தலைவி.

இக்காட்சி:
முன்னர் நிகழ்ந்த காட்சி ஒன்று தலைவிக்கு நினைவில் தோன்றுகிறது. அது சமயம் கணவருடன் சிறு சண்டை ஒன்று போடவேண்டுமென்று காத்திருக்கிறாள். இன்று என்ன நேர்ந்தாலும் அவருடன் பேசப்போவதில்லை என்ற உறுதியுடன் நிற்கிறாள். தலைவர் வருகிறார். அவரைக் கண்டதும் தான் கொண்ட உறுதியெல்லாம் எங்கோ மறைந்துவிட்டது. அவனுடன் மல்லுக்கட்ட வேண்டும் என்று நினைத்தவள் அவனைக் கட்டிப்பிடித்து அவனுள்ளே கரைகிறாள். நெருப்பில் கொழுப்பை இடும்பொழுதே எப்படி உருகுமோ அதுபோல காதலரைக் கண்டவுடனேயே நெஞ்சம் உருகி அவருடன் இரண்டறக் கலந்துவிடுகிறாள். முன் எண்ணியிருந்தபடி அவரை எதிர்கொண்டு ஊடமுடியாமல் உள்ளார்ந்த உந்துணர்வுடன் அவனுள் ஒன்றிவிடுகிறாள். அவளது ஆற்றல், உறுதி எல்லாம் கணவரைக் காணாதவரைதான். நேரில் கண்டுவிட்டால் தீயிலிட்ட கொழுப்பு போன்றதுதான். இவ்விதம் நெகிழ்ந்து கலத்தல் உறும் நெஞ்சுடையவளாய் மாறிய அவளுக்குக் காதல் கணவரோடு ஊடியே தீருவேன் என்று நிற்பது இயலாது.
தலைவரை எதிர்த்து ஒரு சிறு சண்டைகூட போடமுடியாமல் அவரைக் கண்டதும் உருகிய காட்சி நினைவுக்கு வரவும் பிரிந்து நிற்கும் அவரை அப்பொழுதே காணவேண்டும் என்ற வேட்கை உண்டாகிறது. இது பற்றிப் பிறரிடம் கூறவும் தயங்காத தலைவியின் செயல் நிறையழிதல் ஆயிற்று.

இப்பாடலுக்கும் மற்றும் இவ்வதிகாரத்து மற்றும் மூன்று குறட்பாக்களுக்கும் (1257,1258,1259) பரிமேலழகர் 'பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு நிறையழிதலாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது' என்று தலைவன் பரத்தை இல்லிலிருந்து வருவதாகக் காட்சிப் பின்னணி அமைக்கிறார். பரத்தையர் தொடர்பின்றி காமத்துப்பால் அமைந்திருப்பதால், அதன்பொருட்டுத் தலைவன் பிரிந்தான் எனக் கூறுவது முற்றிலும் பொருத்தமாகாது.

'புணர்ந்துஊடி நிற்போம்' என்ற தொடரின் பொருள் என்ன?

'புணர்ந்துஊடி நிற்போம்' என்ற தொடர்க்கு எதிர்ப்பட்டு வந்து ஊடி நிற்போம், புணர்ந்தாரிடத்து ஊடுதல் இல்லை, அவரோடு அணுகி நின்று வைத்துஊடி அகல்கிற்பேம் என்று இருத்தல், அவர் புணர யாம் ஊடிப் பின்பு உணராது அந்நிலையே நிற்கக்கடவேம் என்று கருதுதல், இசைந்து ஊடிநிற்போம், அக்காதலர் அருகில் வந்து கூடுங்கால், ஊடி எதிர்த்து நிற்போம் எனக் கருதுதல், காதலரை நெருங்கி ஊடி நிற்க, காதலனை நெருங்கி ஊடி நிற்போம் என்று கூறுதல், தழுவிக் கொண்ட பின் பிணங்கி (விலகி) நிற்போம் என்பது, கூடிப் பிணங்குவோம் என்னும் உறுதிப்பாடு, முதலிற் பிணங்கிப் பின் புணர்வேமென்று உறுதி, கூடிவிட்டு ஊடி நிற்போம் என்ற நிலை, காதலர் தம்மை நெருங்கத் தாம் ஊடிப் பின் உணராது நிற்பேம் என்று கூறுதல், அவர் அணுகி நிற்க யாம் ஊடி அந்நிலையிலேயே நிற்கக் கடவேம், தலைவனைக் கூடி பின்னர் பிணங்கியிருப்போம் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

காமத்தை முற்றத் துய்க்கும் முறைமையாக ஊடல், உணர்தல், கூடல் இவற்றைச் சொல்வார் வள்ளுவர். அதையே தலைவியும் எண்ணியிருந்தாள். ஆனால் தலைவர் எதிர்ப்பட்ட அவ்விடத்தே நிலை நெகிழ்ந்து நெஞ்சுருகிப் போனாள் தலைவி. ஊடல் செய்யத் தெரியாதவளாகி விடுகிறாள். அந்நிலையில் அவரோடு ஊடிப் பின்னர் அவர் உணர்த்தத் தெளிந்து கூடுவோம் என்று 'முற்ற முடிய ஊடியே நிற்போம்' என்பது ஆகாத செயலாம்.

'புணர்ந்து' என்ற சொல்லுக்கு மணக்குடவர் எதிர்ப்பட்டு எனப் பொருளுரைத்தார். பரிமேலழகர் புணர்தல் - ஈண்டு மிக நணுகுதல்; எதிர்ப்படுதலுமாம் என்று கூறி 'புணர' என்பது 'புணர்ந்து' எனத் திரிந்து நின்றது என விளக்கமும் தருகிறார். இசைந்து என மு வரதராசன் பொருள் கொள்கிறார். தேவநேயப் பாவாணர்: புணர்தல்- தலைக்கூடி நிற்றல் என்கிறார்.

கணவரைக் கண்டால் நெருப்பில் இட்ட கொழுப்பு உருகுமாறு நெஞ்சினை உடைய தலைவிக்கு அவரை நெருங்கி ஊடி நிற்போம் என்று நினைக்க முடியுமா? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தலைவரைக் கண்டவுடன் தலைவி நெஞ்சம்‌ நெகிழ்ந்து அவரைக் கலந்துகொள்ளும் நிறையழிதல்.

பொழிப்பு

(காதலரைக் கண்டால் தீயில் இட்ட கொழுப்புப்போல் உருகும் நெஞ்சினை உடையார்க்கு அவரை நெருங்கி ஊடி நிற்போம் என்று கருதுதல் இயலுமோ?