செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்
(அதிகாரம்:நிறையழிதல்
குறள் எண்:1256)
பொழிப்பு (மு வரதராசன்): வெறுத்து நீங்கிய காதலரின்பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்தக்காமநோய் எத்தன்மையானது? அந்தோ?
|
மணக்குடவர் உரை:
செறுத்தார்பின்னே யான் சேறலை வேண்டுதலால் என்னை யடைந்த துயர் எத்தன்மைத்து; நன்றாக இருக்கின்றது.
இது தனித்திருந்து துயருறுதல் காமத்திற்கு இயற்கையென்று கூறிய தலைமகளை நோக்கி இது நின்போல்வார்க்குத் தகாதென்ற தோழிக்கு அவள் சொல்லியது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) செற்றவர் பின் சேறல் வேண்டி - என்னை அகன்று சென்றார் பின்னே யான் சேறலை வேண்டுதலான்; என்னை உற்ற துயர் எற்று அளித்து - என்னை உற்ற துயர் எத்தன்மையது? சால நன்று.
(செற்றவர் என்றது ஈண்டும், அப்பொருட்டு. 'வேண்ட' என்பது, 'வேண்டி' எனத் திரிந்து நின்றது. 'அளித்து' என்பது இகழ்ச்சிக் குறிப்பு. 'இக்காமநோய் யான் சொல்லவும் கேட்கவும் ஆவதொன்றன்று; சாலக்கொடிது' என்பதாம்.)
நாமக்கல் இராமலிங்கம் உரை:
துன்பம் செய்தவரிடமே போய் அடைக்கலம் புகச் சொல்லி ஆசை மூட்டுகிறதே; அம்மா! எனக்கு வந்த இந்தக் கவலை எப்படிப்பட்ட விசித்திரமான கவலையாக இருக்கிறது (பார்த்தீர்களா!)
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
செற்றவர் பின்சேறல் வேண்டி என்னை உற்ற துயர் எற்று அளித்து அரோ.
பதவுரை: செற்றவர் பின்-பகைத்தவர் பின், அகன்று சென்றவர் பின்; சேறல்-செல்லுதல்; வேண்டி-விரும்பி; அளித்து அரோ-நன்றாகத்தான் உள்ளது! எற்று-எத்தன்மையது; என்னை-என்னை; உற்ற-அடைந்த; துயர்-துன்பம்.
|
செற்றவர் பின்சேறல் வேண்டி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செறுத்தார்பின்னே யான் சேறலை வேண்டுதலால்;
பரிப்பெருமாள்: செறுத்தார் பின்பே யான் சேறலை வேண்டி;
பரிதி: சத்துருக்களை யான் பின் செல்லவேண்டியும்;
காலிங்கர்: தோழீ! இங்ஙனம் அறிந்திருந்தும் பெருந்தன்மை பேணாதே, தான் நம்மைச் செற்றவர் பின் செல்லுதலையே விரும்பி;
பரிமேலழகர்: (இதுவும் அது.) என்னை அகன்று சென்றார் பின்னே யான் சேறலை வேண்டுதலான்; [சேறலை-செல்லுதலை]
பரிமேலழகர் குறிப்புரை: செற்றவர் என்றது ஈண்டும், அப்பொருட்டு. 'வேண்ட' என்பது, 'வேண்டி' எனத் திரிந்து நின்றது.
'செறுத்தார்பின்னே யான் சேறலை வேண்டுதலால்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். வேண்டி என்ற சொல்லுக்கு வேண்ட என்று மணக்குடவர், காலிங்கர், பரிமேலழகர் ஆகியோர் பொருள் கொள்ள பரிப்பெருமாளும் பரிதியும் வேண்டி எனக் கொண்டனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வெறுத்தவரின் பின்னே செல்ல விரும்புதலால்', 'தம்மை வெறுத்துச் சென்ற தலைவர் பின்னே யான் செல்லுதலை விரும்புதலால்', 'வெறுத்தவர்பின் செல்லுதலை விரும்பும்படி', 'துன்பம் செய்தவரிடமே போய் அடைக்கலம் புகச் சொல்லி ஆசை மூட்டுகிறதே', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அகன்று சென்றார் பின்னே நான் செல்ல விரும்புதலால் என்பது இப்பகுதியின் பொருள்.
அளித்தரோ எற்றென்னை உற்ற துயர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்னை யடைந்த துயர் எத்தன்மைத்து; நன்றாக இருக்கின்றது.
மணக்குடவர் குறிப்புரை: இது தனித்திருந்து துயருறுதல் காமத்திற்கு இயற்கையென்று கூறிய தலைமகளை நோக்கி இது நின்போல்வார்க்குத் தகாதென்ற தோழிக்கு அவள் சொல்லியது.
பரிப்பெருமாள்: இத்துயர் உற்றதென்று கொள்ளப்படும்; அளித்து; அதற்கு மற்றுப் பயன் என்னை என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது 'தனித்திருந்து துயருறுதல் காமத்திற்கு இயற்கை' எனக் கூறிய தலைமகளை நோக்கி 'நின்போல்வார்க்கு இது தகாது' என்ற தோழிக்கு அவள் கூறியது.
பரிதி: என் பலத்தையும் அறிவையும் கெடுக்கவேண்டியும் காமத்துயர் உண்டாயிற்று என்றவாறு.
காலிங்கர்: மற்று யானுற்ற காமத்துயரம் தணிக்கத்தக்கது எத்தன்மைத்து ஆகின்றது; எனவே அவர் மாட்டு அன்புகொள் நெஞ்சம் எனப்படுகின்றது என்றவாறு.
பரிமேலழகர்: என்னை உற்ற துயர் எத்தன்மையது? சால நன்று. [சால நன்று - மிக நல்லது]
பரிமேலழகர் குறிப்புரை: 'அளித்து' என்பது இகழ்ச்சிக் குறிப்பு. 'இக்காமநோய் யான் சொல்லவும் கேட்கவும் ஆவதொன்றன்று; சாலக்கொடிது' என்பதாம். [சாலக்கொடியது-மிகவும் கொடுமை உடையது]
மணக்குடவரும் பரிமேலழகரும் 'என்னை யடைந்த துயர் எத்தன்மைத்து; நன்றாக இருக்கின்றது' என்று இகழ்ச்சிக் குறிப்புள்ளதாக இப்பகுதிக்கு உரை கூறினர். பரிப்பெருமாள் 'இத்துயர் உற்றதென்று கொள்ளப்படும்; அளித்து; அதற்கு மற்றுப் பயன் என்னை' என்றார். 'உற்ற காமத்துயரம் தணிக்க அவர் மாட்டு அன்புகொள் நெஞ்சம்' என காலிங்கர் உரை அமைகிறது. ‘அழித்து’ என்பது பரிதி கொண்ட பாடமாகலாம் எனத் தெரிகிறது.
இன்றைய ஆசிரியர்கள் 'என்னைச் சேர்ந்த நோய் இரங்கத்தக்கது', 'என்னை உற்ற காமத்துன்பம் எத்தன்மையது? (இரங்கத்தக்கது)', 'என்னை யடைந்த துயர் எத்தன்மையத்து? மிகவும் அஃது இரங்கத் தக்கதே', 'அம்மா! எனக்கு வந்த இந்தக் கவலை எப்படிப்பட்ட விசித்திரமான கவலையாக இருக்கிறது (பார்த்தீர்களா!)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
என்னை அடைந்த (காதல்)துன்பம் எப்படிப்பட்டதாயிருக்கும்? அது நல்லாத்தான் இருக்கு! என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
அகன்று சென்றார் பின்னே நான் செல்ல வேண்டி இருத்தலால் என்னை அடைந்த (காதல்)துன்பம் எப்படிப்பட்டதாயிருக்கும்? அளித்தரோ! என்பது பாடலின் பொருள்.
'அளித்தரோ!' என்றால் என்ன?
|
விட்டுவிட்டுப் போனவரின் பின்னால் ஏன் போகத் துடிக்கிறாய்?
நீங்கிச் சென்றவரின் பின்னே நான் செல்லுதல் வேண்டும் என்று என்னைத் துயருறுத்தும் காதல்நோய் எப்படிப்பட்டது! அது நல்ல்ல்லாய்த்தான் இருக்கு!
காட்சிப் பின்புலம்:
தொழில் காரணமாகத் தலைவன் காதலியைப் பிரிந்து சென்றுள்ளான். அவளிடம் விடைபெற்றுத்தான் சென்றான். ஆனாலும் அவனது பிரிவைத் தாங்கமுடியாமல் அவள் வேதனையுறுகிறாள். மனஉறுதி என்னும் கதவினைக் காதல்நோய் என்னும் கோடாலி உடைக்கிறதாம். காதல் வேட்கையைத் தான் மறைத்தாலும் தும்மல் உண்டாவது போல் நினைக்காத நேரத்தில் அது வெளிப்பட்டு விடுகிறதே! அன்பற்றுச் சென்றுவிட்டானே என அவள் உள்ளம் குமுறுகிறது. எந்த நேரமும் அவனையே நினைத்து அவன் வரவு நோக்கிக் காத்திருக்கிறாள். நம்மைத்தான் பிரிந்துபோனாரே, பின் ஏன் மனம் அவரை நாடி அவர் பின்னேயே அலைகிறது? இத்தகைய எண்ணங்களிலிருந்து மீளமுடியாமல் நாட்கள் நகர்கின்றன.
இப்போது:
நாட்கள் கழியக் கழிய அவனைக் காணவேண்டும் அவனுடன் சேர்ந்திருக்க வேண்டும் என்ற வேட்கை மிகுந்துகொண்டே செல்கிறது. நெஞ்சம் அவன் பின்னே செல்கிறது. தானே நேரடியாக அவன் இருக்குமிடம் நாடிச் செல்லவும் துணிகிறாள். இவை நாணிழந்த செயல்களாகக் கருதப்படும் என்று தெரிந்தும் வெளியில் சொல்லத் தொடங்குகிறாள். அவளது நிறை அழிகிறது. 'அன்பற்றுப் பிரிந்தவர் பின் செல்லத் தூண்டும் காமநோய் எத்தன்மையது பாருங்கள்! என் துன்பம் என்பால் கொண்டுள்ள பரிவு நன்றாயிருக்கிறது!' எனத் தன்னிரக்கமாகக் கூறுகிறாள் அவள்.
இக்கூற்று, தனித்திருந்து துயருறுதல் காமத்திற்கு இயற்கையென்று கூறிய தலைமகளை நோக்கி இது நின்போல்வார்க்குத் தகாதென்ற தோழிக்கு அவள் சொல்லியது என்று மணக்குடவரும் 'நம்மை மறந்தாரை நாமும் மறக்கற்பாலம் என்றாட்குச் சொல்லியது' என்று பரிமேலழகரும் காட்சி பின்னணி தருவர்.
|
'அளித்தரோ!' என்றால் என்ன?
'அளித்தரோ!' என்றதற்கு நன்றாக இருக்கின்றது, அளித்து, அதற்கு மற்றுப் பயன் என்னை, அவர் மாட்டு அன்புகொள் நெஞ்சம் எனப்படுகின்றது, சால நன்று-'அளித்து' என்பது இகழ்ச்சிக் குறிப்பு, ஐயோ, மிகவும் இரங்கத்தக்கதாயிருக்கிறது!, இரங்கத்தக்கது, ஐயோ! எனக்கு வந்த இந்தத் துயரம் எப்படிப்பட்ட புதுமையாக இருக்கிறது!-எப்படிப்பட்ட விசித்திரமான கவலையாக இருக்கிறது (பார்த்தீர்களா!) - அளித்து-ஆசையுள்ளதாக இருக்கிறது. 'அரோ' அதிசயப் பொருளையும் வருத்தத்தையும் சேர்த்துக் குறிக்கும் அசைச்சொல், இரங்கத் தக்கதே, மிக நன்றாயிருக்கிறது என்றவாறு உரையாளர்கள் விளக்கம் தந்தனர்.
அளித்தரோ என்ற சொல் அளித்து+அரோ என விரியும். தேவநேயப்பாவாணர் அளித்து-ஐயோ! இரங்கத்தக்கது!. 'அளித்து' எதிர்மறைக் குறிப்பு என்றும் 'அரோ' அசைநிலை என்றும் விளக்குவார். பரிமேலழகர் 'அளித்து' என்பது இகழ்ச்சிக் குறிப்பு என்றார். அளித்து என்பது மிகக் கொடியது என்னும் பொருளில் வந்த இகழ்ச்சிக் குறிப்புச் சொல்.
அரிதரோ தேற்றம்.... (1153) என்று மற்றோர் பாடலிலும் அரோ பயன்படுத்தப்பட்டது. 'இவ்விரு ஈரிடங்களில் 'அரோ' அசையாக வருகின்றது. அசை நிலை என்பது பொருள் உணர்த்தாத சொல் என்று கூறினாலும் 'அளித்தரோ' என்னும் சொல்லில் தலைவியின் ஆற்றாமை தொனிக்கக் காணலாம்.
''அளித்து' என்னும் இகழ்ச்சிக் குறிப்போடு 'அரோ' என்னும் அசையும் இணைத்து நுட்பமாய் விளங்குவதை இந்நடை யமைப்பில் காணலாம்' என்பார் இ சுந்தரமூர்த்தி.
'அளித்தரோ!' என்றது இரங்கத்தக்கதே! (மிகக் கொடியதே!) எனப்பொருள்படும்.
|
அகன்று சென்றார் பின்னே நான் செல்ல வேண்டி இருத்தலால் என்னை அடைந்த (காதல்)துன்பம் எப்படிப்பட்டதாயிருக்கும்? அது நல்லாத்தான் இருக்கு! என்பது இக்குறட்கருத்து.
நிறையழிதலுக்கு இட்டுச் செல்லும் காதல்நோய் எவ்வளவு கொடியது!
அன்பற்று நீங்கிச் சென்றவர் பின்செல்ல வேண்டி இருத்தலால் என்னை அடைந்த (காதல்)துன்பம் எத்தன்மைத்து? நல்லாத்தான் இருக்கு!
|