இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1255செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று

(அதிகாரம்:நிறையழிதல் குறள் எண்:1255)

பொழிப்பு (மு வரதராசன்): தம்மை வெறுத்து நீங்கியவரின்பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அன்று.

மணக்குடவர் உரை: தம்மை யிகழ்ந்தார்பின் செல்லாத பெரிய தகைமை காம நோயுற்றாரால் அறிவதொன்று அன்று.
இது தம்மை யிகழ்ந்து போனவர்பின்சென்று இரங்குதல் பெரியார்க்குத் தகாது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (நம்மை மறந்தாரை நாமும் மறக்கற்பாலம் என்றாட்குச் சொல்லியது.) செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை - தம்மை அகன்று சென்றார்பின் செல்லாது தாமும் அகன்று நிற்கும் நிறையுடைமை; காமநோய் உற்றார் அறிவது ஒன்று அன்று - காமநோயினை உறாதார் அறிவதொன்று அன்றி உற்றார் அறிவதொன்று அன்று.
(இன்பத்தோடு கழியுங் காலத்தைத் துன்பத்தொடு கழியுமாறு செய்தலின் 'செற்றார்' என்றாள். பின் சேறல் - மனத்தால் இடைவிடாது நினைத்தல். பெருந்தகைமை - ஈண்டு ஆகுபெயர். காம நோய் உறாதார் - மானம் உடையார். 'நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும், யான் அறிவதொன்று அன்று' என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: வெறுத்தவர்பின் செல்லாத மானவுணர்ச்சி காமநோயாளிக்குத் தெரியக் கூடியதன்று.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று.

பதவுரை: செற்றார்பின்-அகன்று சென்றவர் பின்னே; செல்லா-போகாத; பெருந்தகைமை-நிறையுடமை, பெருமைப் பண்பு, கெழுதகைமை; காமநோய்-காமமாகிய பிணி; உற்றார்-அடைந்தார்; அறிவது-தெரிவது; ஒன்று-ஒன்று; அன்று-இல்லை.


செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மை யிகழ்ந்தார்பின் செல்லாத பெரிய தகைமை;
பரிப்பெருமாள்: தம்மை யிகழ்ந்தார்பின் செல்லாத பெரிய தகைமை;
பரிதி: மாற்றாரைப் பின் செல்லோம் என்ற மேம்பாடு;
காலிங்கர்: தோழீ! 'அன்பிலாதார் பின்பு செல்லேன்' என்னும் முதுசொல்படியே நம்மைச் செற்றார்பின் சென்று நில்லாமையாகின்ற பெரிய தகைமைப்பாடு ஆகின்றது;
பரிமேலழகர்: (நம்மை மறந்தாரை நாமும் மறக்கற்பாலம் என்றாட்குச் சொல்லியது.) தம்மை அகன்று சென்றார்பின் செல்லாது தாமும் அகன்று நிற்கும் நிறையுடைமை; [மறக்கற்பாலம் - மறந்து விடுவோம்]
பரிமேலழகர் குறிப்புரை: இன்பத்தோடு கழியுங் காலத்தைத் துன்பத்தொடு கழியுமாறு செய்தலின் 'செற்றார்' என்றாள். பின் சேறல் - மனத்தால் இடைவிடாது நினைத்தல். பெருந்தகைமை - ஈண்டு ஆகுபெயர்.

'இகழ்ந்தார்பின் செல்லாத பெரிய தகைமை' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் கூற, பரிதி 'மாற்றார் பின் செல்வோம் என்ற மேம்பாடு' என்றார். காலிங்கர் 'அன்பிலாதார் பின் சென்று நில்லாமையாகின்ற பெரிய தகைமைப்பாடு' என்றும் பரிமேலழகர் 'அகன்று சென்றார்பின் செல்லாத நிறையுடைமை' என்றும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வெறுத்தவர்பின் செல்லாத மானவுணர்ச்சி', 'நம்மை வெறுத்த காதலர் பின் செல்லாத நிறையுடைமை (மனத்திண்மை) என்னும் சிறந்த பண்பு', 'நமக்குத் தீமை செய்துவிட்ட ஒருவரிடத்திற்கே போய் (அத்தீமையைத் தீர்த்துக்கொள்ள)- அவரை வணங்கக் கூடாது என்ற பெரிய நியாயம்', 'தம்மை வெறுத்தார் பின்னே செல்லாது இருக்கும் பெருங்குணம்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அகன்று சென்றார்பின் செல்லாத பெருங்குணம் என்பது இப்பகுதியின் பொருள்.

காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காம நோயுற்றாரால் அறிவதொன்று அன்று.
மணக்குடவர் குறிப்புரை: இது தம்மை யிகழ்ந்து போனவர்பின்சென்று இரங்குதல் பெரியார்க்குத் தகாது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: காம நோயுற்றாரால் அறிவதொன்று அன்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தம்மை யிகழ்ந்து போனவர்பின்சென்று இரங்குதல் பெரியார்க்குத் தகாது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: காமம் மேற்கொண்டார்க்கு இல்லை என்றவாறு.
காலிங்கர்: காம நோய் உற்றவர் அறியும் கடப்பாடு உடையது ஒன்று அன்று என்றவாறு.
பரிமேலழகர்: காமநோயினை உறாதார் அறிவதொன்று அன்றி உற்றார் அறிவதொன்று அன்று.
பரிமேலழகர் குறிப்புரை: காம நோய் உறாதார் - மானம் உடையார். 'நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும், யான் அறிவதொன்று அன்று' என்பதாம்.

'காமநோயினை உற்றார் அறிவதொன்று அன்று' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமநோயாளிக்குத் தெரியக் கூடியதன்று', 'காமநோய் உற்றவரால் அறியப்படாத ஒன்றாகும்', 'காம நோய் கொண்டுவிட்ட (மனைவி) அறிய வேண்டிய ஒரு நீதியல்ல', 'காதல் நோய் அடைந்தார் அறிவது ஒன்றன்று' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

காதல் நோய் கொண்டார் அறியக்கூடிய ஒன்றன்று என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செற்றார் பின்செல்லாத பெருங்குணம் காதல் நோய் கொண்டார் அறியக்கூடிய ஒன்றன்று என்பது பாடலின் பொருள்.
'செற்றார்' யார்?

துன்புத்தில் ஆழ்த்திப் பிரிந்து சென்ற கணவர்பின் செல்வதில் மானம்கெடும் என்றால் அது நீங்கட்டுமே என்கிறாள் காதல்நிறைதலைவி.

அன்பில்லாமல் நீங்கிப் போனவர் பின் செல்லாத பெருஞ்சிறப்பை காதல்நோய் கொண்டவர் அறியமாட்டார்.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகத் தலைவியிடம் விடைபெற்றுத்தான் கணவர் சென்றிருக்கிறார். இருந்தாலும் அவர் பிரிவை அவளால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. எப்பொழுது திரும்பி வருவார் என்று ஏங்கித் தவித்துக் கொன்டிருக்கிறாள்.
பிரிவில் துயருறும் தலைவியின் நாண் என்ற கதவினை காமநோய் என்னும் கோடாலி தகர்த்தெரிகிறது; நள்ளிரவிலும் அது இரக்கமின்றி மனத்தை ஆட்கொள்கிறது; நான் எவ்வளவு மறைக்க முயன்றாலும் அது தும்மல்போல் அதுவாக வெளிப்பட்டு விடுகிறது; தன் உள்ளத்தைக் கட்டுப்படுத்தக் கூடியவள் என நம்பிக்கை கொண்டிருக்கும்போது தன் காதல் வெளியில் தெரிந்துவிடுகிறது. இவ்வாறு தலைவி தன் எண்ணங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
தன்னிடம் சொல்லிவிட்டுத்தான் தலைவர் சென்றாராயினும் அவர் தன்னைத் தவிக்கவிட்டு அகன்றுள்ளாரே என மனைவியின் உள்ளம் பொருமுகிறது. கணவர்மீது அளவற்ற காதல் கொண்டிருப்பதால் அவர் பிரிந்து சென்றதை அன்பு காட்டவில்லை என்ற கோணத்திலேயே தலைவி காண்பதால், அவரைச் செற்றார் என அழைக்கிறாள். 'அன்பற்று அகன்றவர் பின் செல்வது நிறைகுணம் கொண்ட பெண்டிர்க்கு அழகல்ல. எனினும் அதையும் நான் செய்வதாக உள்ளேன்' என்கிறாள். நம்மைத்தான் பிரிந்துபோனாரே, அவர் பின்னேயே ஏன் அவரை நாடிச் செல்ல வேண்டும்? நாமும் அவரை மறந்திருப்போம் என்று அவளால் இருக்க முடியவில்லை. 'நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்' என்பது தலைவியின் பெருங்குணாமாகிறது. காதல் மிகுதியால் அவளது மனம் அமைதியடையாமல் பிரிந்த தலைவர்பால் செல்ல அலைகிறது. இது நிறையழிந்த தன்மை என்றாலும் காதல்நோயுற்ற தலைவி அதையும் மேற்கொள்வாளாம். காதலுடையார்க்கு பகை என்பது இல்லை. இவ்வாறு, தலைவி தான் ஏன், பொதுவியல்புக்கு எதிராக, அருள் செய்யாத தலைவர் பின் செல்கிறாள் என்றதற்குத் தன்னிலை விளக்கம் தருகிறாள்.

தம்மை இகழந்து போனவரது பின்னால் வெட்கத்தை விட்டுச் செல்வது உலகநடைமுறை அன்று. ஆனால் அவள் மனதில் அவரே நிறைந்திருப்பதால் அவர்பின் நினைவெல்லாம் செல்லலைத் தடுக்க முடியவில்லை. தலைவர் மீது கொண்ட காதல் உணர்வை அடக்க முடியாத நிலையில் அதனை வாய்விட்டுக் கூறுகிறாள். ஆனால் அதைச் சொல்லும்போது தன்னைவிட்டுத் தலைவர் நீங்கிச் சென்றாலும், அவர் பின் செல்லா நிறையுடைமை தனக்கில்லை; காதல் நோய் உற்றவர் மன அடக்கம் அறியமாட்டார் எனச் சொல்கிறாள். இது தன்‌ பெண்மைக்கு அணிகலனாக உள்ள நிறையழிந்தாலும் உள்ளத்தில் வேட்கை மிகுதியுண்டு என்பதைப் புலப்படுத்துவதாகும். காதல் விருப்பத்தை அடக்க முடியாமல், மானம் கருதாமல், தன் கணவரைத் தேடி மனம் ஓடுகின்றது என்பதுதான் அவள் சொல்கிற செய்தி. இவ்வகைச் சூழ்நிலையில் காமநோய் உற்றார் பெருமை சிறுமை பாரார்; காமம் மான உணர்வை அழிக்கும் எனத் தலைவி நிறையழிந்த சொற்களால் தனது உண்மை நிலையை உரைக்கிறாள்.

'செற்றார்' யார்?

'செற்றார்' என்ற சொல்லுக்கு இகழ்ந்தார், மாற்றார், அன்பிலாதார், அகன்று சென்றார், வெறுத்து நீங்கியவர், வெறுத்துச் சென்று வருத்தியவர், வெறுத்தவர், நம்மை வெறுத்த காதலர், பகைவர்-தீங்கிழைப்பவர், வெறுப்புற்று நீங்கின துணைவர், வெறுத்த காதலர், தம்மை வெறுத்தார், தள்ளிவைத்துப் போனவர், தம்மைப் பிரிந்து சென்றார், தம்மைத் துன்புறுத்திப் பிரிந்துசென்றார், துறந்துவிட்டுப்போன தீயவர், தம்மை மறந்து பிரிந்துசென்ற தலைவர், நம்மை விட்டு நீங்கிப் போனவர், பகைத்தாற்போல் விட்டுச் சென்றார், தன் நிறையை அழித்த தலைவர் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

செற்றார் என்ற சொல்லுக்கு வெறுத்தார், பகைவர், மாற்றார் என்பன பொருள்கள். கணவர் அன்பில்லாமல் தன்னைத் தனிமையில் விட்டுவிட்டுச் சென்றதாலும் தன்னைக் காமத் துன்பத்தில் உழலும்படி செய்துவிட்டாரே என்பதாலும் இயல்பாகவே தலைவிக்கு அவர்மேல் வெறுப்பு ஏற்படுகிறது. பிரிவுநிலையில் தனக்கேற்பட்ட துயர் தலைவராலேயே உண்டானதால் அவரைப் பகைவராகக் கருதுகிறாள். பகைவரை நினைத்து அவர் பின் செல்லுதல் பெருந்தகையாளர் இயல்பாகாது. எனினும் அவளுக்குத் துன்பம் ஏற்படுத்திய செற்றாரான தலைவரை நினையாது இருக்க முடியவில்லை.
இச்சொல்லுக்கு இங்கு அகன்று சென்றார் என்று பொருள் கூறி 'இன்பத்தோடு கழியுங் காலத்தைத் துன்பத்தொடு கழியுமாறு செய்தலின் 'செற்றார்' என்றாள்' என ஏன் செற்றார் எனச் சொல்லப்பட்டது என்பதையும் விளக்குவார் பரிமேலழகர். மேலும் இக்குறளில் சொல்லப்பட்டுள்ள ‘பெருந்தகைமை’ என்பதற்குத் 'தாமும் அகன்று நிற்கும் நிறையுடைமை' எனப் பொருள் தந்து நிறையுடைமையானது காம நோயை அடையாதவரால் அறியப்படுமே யன்றிக் காம நோயை அடைந்தவரால் அறியப்படுவதன்று எனத் தலைவியின் கூற்றைப் பரிமேலழகர் நேர்த்தி செய்கிறார்.

'செற்றார்' என்றதற்கு இங்கு அன்பிலாதார் என்ற பொருள் பொருத்தம். அது தலைவரைக் குறித்தது.

அகன்று சென்றார் பின்செல்லாத பெருங்குணம் காதல் நோய் கொண்டார் அறியக்கூடிய ஒன்றன்று என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நிறையழிதல் கருதி காதலரை நினையாமல் இருக்கமாட்டேன் என்கிறாள் தலைவி.

பொழிப்பு

அன்பில்லாமல் நீங்கிச் சென்றவர் பின் செல்லாத மனத்திண்மை என்னும் சிறந்த பண்பு காதல்நோய் கொண்டவர் அறியமாட்டார்.