இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1254நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்

(அதிகாரம்:நிறையழிதல் குறள் எண்:1254)

பொழிப்பு (மு வரதராசன்): யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தேன்; ஆனால், என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.

மணக்குடவர் உரை: யானே நிறையுடையே னென்றிருப்பன்; இப்படி இருக்கவும், என் காமமானது மறைத்தலைக்கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது.
இது தலைமகள் ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறையுடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்கு அவள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) யான் நிறையுடையேன் என்பேன் - இன்றினூங்கெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; என் காமம் மறை இறந்து மன்றுபடும் - இன்று என் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படா நின்றது.
(மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன, மன்று படுதல் - பலரும் அறிதல். 'இனித் தன் வரைத்து அன்று' என்பதாம்.

சி இலக்குவனார் உரை: நானோ என் மனத்தை நிறுத்தும் ஆற்றல் உடையேன் என்று கருதிக்கொண்டிருப்பேன். ஆனால் என் காதல் என் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படுகின்றது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
யானோ நிறையுடையேன் என்பேன்மன்; என் காமம் மறையிறந்து மன்றுபடும்.

பதவுரை: நிறையுடையேன்-நிறை உடைத்தாயிருக்கிறேன், மனஉறுதியுடையேன்; என்பேன்-என்று கருதியிருந்தேன்; மன்-(ஒழியிசை) யானோ-நானோ; என்-எனது; காமம்-காதல் வேட்கை; மறை-மறைத்தல்; இறந்து-கடந்து; மன்று-பலரும் அறிய; படும்-தோன்றும், உண்டாகும்.


நிறையுடையேன் என்பேன்மன் யானோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: [யானே என்பது பாடம்] யானே நிறையுடையே னென்றிருப்பன்;
பரிப்பெருமாள்: யானோ நிறையுடையே னென்றிருப்பன்;
பரிதி: என்னிலே யான் நிறையுடையேன் என்றிருப்பேன்;
காலிங்கர்: தோழீ! என்னுள்ளே யான் பெரிதும் நாணும் குறைபடாமை நிறைவேற்றிக்கொண்டு ஒழுகும் நிறையுடையேன் என்று இருப்பேன் யான் மிகவும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) இன்றினூங்கெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; [இன்றினூங்கெல்லாம்-இதற்கு முன் எல்லாம்]
பரிமேலழகர் குறிப்புரை: மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன.

யானோ நிறையுடையேன் என்று கருதியிருந்தேன் என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உறுதியுடையேன் என்று சொல்லுவேன் நான்', 'முன்பெல்லாம் யானோ மனத்திண்மை உடையேன் என்று கருதிக் கொண்டிருந்தேன்', 'நான் யாரிடத்திலாவது 'நான் காம ஆசையை அடக்கி வைக்கும் திறமுடையவள்' என்று சொல்லிக் கொண்டேயிருக்கிற அப்போதே', 'இதுவரை யான் அடக்கமுடையே னென்றிருந்தேன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நானோ மனத்திண்மை கொண்டவள் என்று கருதிக்கொண்டிருப்பேன் என்பது இப்பகுதியின் பொருள்.

என் காமம் மறையிறந்து மன்று படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இப்படி இருக்கவும், என் காமமானது மறைத்தலைக்கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறையுடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்கு அவள் கூறியது.
பரிப்பெருமாள்: இப்படி இருக்கவும், என் காமமானது மறைத்தலைக்கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறையுடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்கு தலைமகள் கூறியது.
பரிதி: என்னுடைய ஆசை அடக்க மற்று ஊர் மன்றிலே இருக்கும் என்றவாறு.
காலிங்கர்: மற்று இங்ஙனம் இருப்பவும் அவர் பிரிவின்கண் யாம் உற்ற காம நோயானது யான் பிறர் அறியாமல் மறைத்து ஒழுகும் மறைவரம்பைக் கடந்து மன்றத்துச் சென்று உளது ஆம். இஃது என்ன வியப்போ என்றவாறு.
பரிமேலழகர்: இன்று என் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படா நின்றது.
பரிமேலழகர் குறிப்புரை: மன்று படுதல் - பலரும் அறிதல். 'இனித் தன் வரைத்து அன்று' என்பதாம். [வரைத்தன்று - அளவினதன்று]

என் காமமானது மறைத்தலைக்கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என் காமமோ ஒளிவின்றி அம்பலப்படும்', 'ஆனால், இப்பொழுது என் காம வேட்கை நெஞ்சமாகிய அறையைக் கடந்து அம்பலத்திற்கு வந்துவிட்டது. (மறை இறந்து என்று பிரித்து மறைத்தலைக் கடந்து என்றும் கூறலாம்.)', 'என் காமம் 'நான் அதை அடக்கி வைத்திருந்த மறைவிடத்தை விட்டு வெளியில் பாய்ந்தோடி வந்து என் சொல்லைப் பொய்யாக்கும்', 'இப்போது என் காமம் மறைத்தலைக் கடந்து பலரும் அறிய வெளிப்படுவதாயிற்று' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஆனால் என் காதல்வேட்கை மறைத்தலைக் கடந்து பொதுவெளியில் வந்துவிட்டது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நானோ மனத்திண்மை கொண்டவள் என்று கருதிக்கொண்டிருப்பேன்; ஆனால் என் காதல்வேட்கை மறையிறந்து மன்றுபடும் என்பது பாடலின் பொருள்.
'மறையிறந்து மன்றுபடும்' குறிப்பது என்ன?

மனத்துள் நிறைந்திருக்கும் காமம், தலைவியின் நிறையையே குலைத்துவிடுகின்றது!

நான் மனக்கட்டுபாடு உடையவள்தான். ஆனால் என் காதல்விருப்பங்கள் என்னாலேயே ஒளிவின்றி ஊர் மன்றத்துக்குச் சென்றுவிட்டது போலும். எல்லாம் வெட்டவெளிச்சமாகி விட்டது!
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாகப் பிரிந்து சென்றுள்ள கணவரை நாளும் நினைந்து நினைந்து துயருறுகிறாள் தலைவி. அவரை எப்பொழுது காணப்போகிறோமோ என்ற காதல் வேட்கை மிகுந்து கொண்டே செல்கிறது.
பிரிவில் துயருறும் தலைவி நாண் என்னும் கதவுபோட்டு மூடி வைத்திருந்தும் அதைக் காமநோய் என்னும் கோடாலி தகர்த்தெறிந்துவிடுகிறது; நள்ளிரவிலும் அது இரக்கமின்றி மனத்துள் உணர்வுகளைத் தூண்டிக் காமவேட்கையை உண்டுபண்ணித் துன்புறுத்துகிறது; தான் எவ்வளவுதான் மறைக்க முயன்றாலும் தும்மல்போல் அதுவாக வெளிப்பட்டு விடுகிறது.
இவ்வாறு காதல் எண்ணங்களை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள் தலைவி.

இக்காட்சி:
இங்கு தலைவி நிறையிழந்த நிலையில் உள்ளாள். இதுவரை அவளது காதல் வேட்கையைப் பற்றி அவள் யாரிடமும் சொன்னதில்லை. இதற்கு முன் எல்லாம் அது காப்பற்றப்பட்டது அவள் மன உறுதியால் என்று நம்பிக்கொண்டிருந்தாள். இவ்வுறுதி குலைந்து அவள் வேட்கை அவள் வாயாலே சொல்லப்பட்டு அது பொதுவெளிக்கு வந்துவிட்டது. ஆம் இப்பொழுது அது ஊர்மன்றம் வரை சென்றுவிட்டதை அறிகிறாள். 'என் காதலைப் பிறர் அறியாமல் மறைத்து வைக்கும் ஆற்றல் உடையேன் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், என்னுடைய காதல் விருப்பத்தால் அப்பெருமை குலைந்து, மனதுக்குள் மறைத்து வைத்திருந்த எண்ணங்கள் தாமாக வெளிப்பட்டு வீதிக்கு வந்து விட்டது. அது பலர் கூடும் மன்றில் பேசப்படுகிறதாம். இப்பொழுது 'நிறையுடையேன்' என்று நான் எப்படிச் சொல்லிக் கொள்ள முடியும்? என் நிறையழிந்து வருகிறது' என ஆற்றாது வருந்துகின்றாள் தலைவி.

மனத்திண்மை கொண்ட மகளிரும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலாத காமத்தால் நிறையழிவர். நிறையழிதலாவது வேட்கை மிகுதியால்‌ தன்‌ நிலைமை அழிந்து தலைமகள்‌ கூறுவதாம்‌.
தன் உள்ளத்தைக் அடக்கிஆளக் கூடியவள் என நம்பிக்கை கொண்டிருந்தவள் தலைவி. எனவே தனக்குள்ளாகவே தன் காதல்வேட்கையை மறைத்து வைத்திருந்தாள். ஆயினும் அவளை அறியாமல் தான் தலைவரை உடனடியாகக் காணவேண்டுமென்று துடிப்பதையும் அவருடன் சேர்ந்திருக்கவேண்டும் என்ற வேட்கையுடன் இருப்பதையும் சொல்லத் தொடங்குகிறாள். இப்பொழுது அவளது காதல்உணர்வுகள் ஊரார்க்குத் தெரிந்துவிடுகின்றன. இதனையே 'என் காதல் விருப்பங்களை வெளியில் சொல்லாமல் மறைக்கத்தான் முயல்கிறேன். ஆனால், என்ன செய்ய? அது முன் அறிவிப்பின்றி வரும் தும்மலைப்போல என்னிடமிருந்து வெளிப்பட்டு விடுகின்றதே!' என்றாள் முற்குறளில். தும்மலைப் போல வெளிவந்த அவள் நிறையிழந்த நிலையிலுள்ள செய்தி மறைவரம்பைக் கடந்து மன்றத்துச் சென்று உளது அதாவது ஊர் மன்றத்திலும் பேசப்படுகிறது என்கிறாள்.
இக்குறட்கருத்தை ஒட்டியும் இதன் பிற்பகுதியின் சொல்லாட்சியும் கொண்ட குறள் முன்னும் வந்தது; இங்கு தலைவி கூற்றாக இருக்க அது தலைவன் கூறுவதாக உள்ளது. அது: நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறைஇறந்து மன்று படும் (நாணுத்துறவு உரைத்தல் 1138 பொருள்: நிறைகுணம் கொண்டவன், இரங்கத்தக்கவன் தான் என்பவை கருதப்படாமல் தன் காமம் ஊரார் முன் வெளிப்பட்டுத் தான் நாணிழக்க நேரிடுமே).

'மறையிறந்து மன்றுபடும்' குறிப்பது என்ன?

'மறையிறந்து மன்றுபடும்' என்றதற்கு மறைத்தலைக்கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது, அடக்க மற்று ஊர் மன்றிலே இருக்கும், பிறர் அறியாமல் மறைத்து ஒழுகும் மறைவரம்பைக் கடந்து மன்றத்துச் சென்று உளது ஆம், மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படா நின்றது, என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது, யான் மறைத்தலையும் கடந்து பலருமறிய அம்பலமாகிவிட்டது., ஒளிவின்றி அம்பலப்படும், நெஞ்சமாகிய அறையைக் கடந்து அம்பலத்திற்கு வந்துவிட்டது, மறைவிடத்தக் கடந்து வெளியே பாய்ந்து வந்துவிடும், மறைப்பைத் தானே கடந்து ஊரறிய வெளிப்பட்டு விடும், மறைத்தலைக் கடந்து பலரும் அறிய வெளிப்படுவதாயிற்று, என் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படுகின்றது, தடைகடந்து தாண்டி ஊர் நடுவில் உலா வருகின்றதே, கட்டிற்கடங்காது அம்பலப்பட்டுவிட்டது, என் இரகசியங்களை அம்பலப்படுத்தி நிறையையழித்துவிட்டது, மறைப்பை விலக்கி மன்றேறிவிட்டது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்,

மறை இறந்து என்ற தொடர் மறைத்தலைக் கடந்து என்ற பொருளது. 'இரகசியம்' என்று வழக்கில் உள்ளதே மறை எனப்படுவது. கமுக்கம் என்று வழக்கில் உள்ள சொல்லும் இதே பொருளைத் தரும். 'மந்தணம்' என்ற சொல்லும் 'மறை' என்னும் பொருளில் வழங்கப்படுகின்றது.
மன்று என்பது பொதுவெளி அல்லது மன்றத்தைக் குறிப்பது. ஊரின் நடுவில் ஆல் அல்லது பிற பெரிய மரத்தினருகில் உள்ள பொதுவிடமே மன்று எனப்படும். அங்கு ஊரவை கூடும். மேலும் விழாவெடுக்கவும் விளையாட்டுக்களுக்கும் ஊரார் அனைவரும் அவ்விடத்துக் கூடுவது வழக்கம். இன்றும் இத்தகைய பொதுவிடத்தைச் சிற்றூர்களில் காணலாம். மன்றுபடும் என்றது பலர் கூடும் ஊர்மன்றத்தில் வெளிப்பட்டது என்ற பொருள் தரும். அதாவது தலைவியின் காதல் விருப்பம் எல்லாரும் அறிந்த இரகசியம் ஆயிற்று. அதாவது இனி அது மறை அல்ல. ஊர் அறிந்த ஒன்றாகிவிட்டது.
நாமக்கல் இராமலிங்கம் 'நான் காமத்தை அடக்கி என் மானத்தைக் காத்துக் கொள்ளக் கூடியவள் என்று வாயால் சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் காமம் என் முகத்தின் பசப்பினாலும் கண்களின் நீரினாலும் நான் சொல்வது பொய்யென்று காட்டி என் மானத்தைக் கெடுத்துவிடுகிறது. அதனால் காமத்தை அடக்கிவிடுவேன் என்று வாயாற் சொல்லலாம். ஆனால் என்னால் உண்மையில் அடக்க முடியவில்லை' எனக் காதல் வெளிப்படுவதை விளக்கினார்.

'மறையிறந்து மன்றுபடும்' என்ற தொடர் மறைப்பை விலக்கி மன்றின்கண் வெளிப்பட்டு நிற்கிறது என்ற பொருள் தரும்.

நானோ மனத்திண்மை கொண்டவள் என்று கருதிக்கொண்டிருப்பேன்; ஆனால் என் காதல்வேட்கை மறைத்தலைக் கடந்து பொதுவெளிக்கு வந்துவிட்டது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதல் வேட்கைச் செய்தி மன்றம் வரை சென்று தலைவியின் நிறையழிதல்.

பொழிப்பு

இதுகாறும் மனத்திண்மை உடையேன் என்றிருந்தேன்; ஆனால் இப்போது என் காமவேட்கை ஒளிவின்றி பொதுவெளிக்கு வந்துவிட்டது.