இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1252காமம் எனஒன்றோ கண்ணின்றுஎன் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

(அதிகாரம்:நிறையழிதல் குறள் எண்:1252)

பொழிப்பு (மு வரதராசன்): காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது; அஃது என் நெஞ்சத்தை நள்ளிரவிலும் ஏவல் கொண்டு ஆள்கின்றது.

மணக்குடவர் உரை: காமமென்றொன்று கண்ணோட்டமுடைத்தன்று: என்னெஞ்சத்தை நடுநாள் யாமத்தினும் தொழில்கொள்ளா நின்றது.
தொழில் கொள்ளுதலாவது அப்பொழுது அவர்மாட்டுப் போக விடுத்தல். இது நெஞ்சின் மிக்கது வாய்சோர்ந்து ஆற்றாமையால் தலைமகள் தோழிக்குக் கூறியது.

பரிமேலழகர் உரை: (நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சால் அடக்கப்படும் என்றாட்குச் சொல்லியது.) யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழில் ஆளும் - எல்லாரும் தொழிலொழியும் இடை யாமத்தும் என் நெஞ்சத்தை ஒறுத்துத் தொழில் கொள்ளா நின்றது; காமம் என ஒன்று கண் இன்று - ஆகலாற் காமம் என்று சொல்லப்பட்ட ஒன்று கண்ணோட்டம் இன்றாயிருந்தது.
('ஓ' என்பது இரக்கக் குறிப்பு. தொழிலின்கண்ணேயாடல் - தலைமகன்பாற் செலவிடுத்தல். தாயைப் பணி கோடல் உலகியலன்மையின் 'காமம் என ஒன்று' என்றும் அது தன்னைக் கொள்கின்றது அளவறியாது கோடலின் 'கண்ணின்று' என்றும் கூறினாள். அடக்கப்படாமை கூறியவாறு.)

வ சுப மாணிக்கம் உரை: காமம் என்பது சிறுதும் இரக்கம் இல்லாமல் என் நெஞ்சத்தை நடுயாமத்தும் ஆளுகின்றது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
என் நெஞ்சத்தை யாமத்தும் தொழில் ஆளும் காமம் எனஒன்றோ கண்ணின்று.

பதவுரை: காமம்-காமம், காதல்; என-என்று சொல்லப்பட்ட; ஒன்றோ-(ஒன்று+ஓ) ஒன்றிற்கு, ஓ இரக்கக் குறிப்பு; கண்இன்று-கண்ணோட்டம் இல்லை, இரக்கம் இல்லை; என்-எனது; நெஞ்சத்தை-உள்ளத்தை; யாமத்தும்-இடையாமத்திலும், நள்ளிரவிலும்; ஆளும்தொழில்-பணி கொள்ளும் அதாவது வேலை வாங்கும், கைப்பற்றிக்கொள்ளும் செயல், நடத்தும் செயல்.


காமம் எனஒன்றோ கண்ணின்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காமமென்றொன்று கண்ணோட்டமுடைத்தன்று;
பரிப்பெருமாள்: காமமென்றொன்று கண்ணோட்டமுடைத்தன்று;
பரிதி: காமம் என ஒன்று என்னிடமாக நின்று;
காலிங்கர்: தோழீ! காதலர் பிரிவில் பெருகும் காமநோய் என்கின்ற இது சாலக் கண்ணின்றே;
பரிமேலழகர்: (நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சால் அடக்கப்படும் என்றாட்குச் சொல்லியது.) ஆகலாற் காமம் என்று சொல்லப்பட்ட ஒன்று கண்ணோட்டம் இன்றாயிருந்தது. [கண்ணோட்டம்-இரக்கம்]
பரிமேலழகர் குறிப்புரை: 'ஓ' என்பது இரக்கக் குறிப்பு. தொழிலின்கண்ணேயாடல் - தலைமகன்பாற் செலவிடுத்தல். தாயைப் பணி கோடல் உலகியலன்மையின் 'காமம் என ஒன்று' என்றும் அது தன்னைக் கொள்கின்றது அளவறியாது கோடலின் 'கண்ணின்று' என்றும் கூறினாள். அடக்கப்படாமை கூறியவாறு. [அது - காமம்; தன்னைக் கொள்கின்றது-நெஞ்சத்தைப் பணி கொள்ளுகின்றமை; அடக்கப்படாமை கூறியவாறு- காமம் தன்னால் அடக்கப்படாமையைத் தலைமகள் சொல்லியவாறாம்]

'காமம் என்று சொல்லப்பட்ட ஒன்று கண்ணோட்டம் இன்றாயிருந்தது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆதலால், காமம் என்று சொல்லப்படும் கொடிய ஒன்று இரக்கம் இல்லாததாய் இருக்கின்றது', 'தாட்சண்யம் இல்லாமல் இந்தக் காமமென்றும் ஒன்றுதானா?', 'காமமென்னுங் கொடியதொன்று கண்ணோட்டம் இல்லாமல்', 'ஆதலின் காதல் என்று சொல்லப்படும் ஒன்றிற்கு இரக்கம் என்பது இல்லை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர். பரிதி 'காமம் என ஒன்று என்னிடமாக நின்று' என்று கண்ணின்று என்பதைக் கண்+நின்று எனப் பிரித்துச் சிறிது மாறுபாடாக உரை தந்தார்.

காமம் என்ற ஒன்றிற்கு இரக்கம் என்பது இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

என் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்னெஞ்சத்தை நடுநாள் யாமத்தினும் தொழில்கொள்ளா நின்றது.
மணக்குடவர் குறிப்புரை: தொழில் கொள்ளுதலாவது அப்பொழுது அவர்மாட்டுப் போக விடுத்தல். இது நெஞ்சின் மிக்கது வாய்சோர்ந்து ஆற்றாமையால் தலைமகள் தோழிக்குக் கூறியது.
பரிப்பெருமாள்: என்னெஞ்சத்தை நடுநாள் யாமத்தினும் தொழில்கொள்ளா நின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: தொழில் கொள்ளுதலாவது அப்பொழுதினால் அவர்மாட்டுப் போக விடுதல். இது நெஞ்சின் மிக்கது வாய்சோர்ந்து ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது.
பரிதி: என் நெஞ்சே இருட்டிலும் அடிமைத்தொழில் கொள்ளுவது என்றவாறு.
காலிங்கர்: என் எனில் யான் உறுதுயர் யாதும் காணாது இடையிருள் யாமத்தும் என்னைத் தன் தொழிற்கண்ணே ஆளும்.
காலிங்கர் குறிப்புரை: எனவே தன் தொழிலாவது அரற்றலும், உலற்றலும், அலமரலும் பிறவும் அன்றே. அவை அனைத்தும் யான் உறப்பண்ணும் என்றவாறு.
பரிமேலழகர்: எல்லாரும் தொழிலொழியும் இடை யாமத்தும் என் நெஞ்சத்தை ஒறுத்துத் தொழில் கொள்ளா நின்றது. [இடையாமம் - நள்ளிரவு; ஒறுத்து - தண்டித்து]

'என்னெஞ்சத்தை நடுநாள் யாமத்தினும் தொழில்கொள்ளா நின்றது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என் நெஞ்சத்தை எல்லாரும் துயில் கொள்ளும் நள்ளிரவிலும் காமம் ஏவல் கொண்டு துன்புறுத்துகின்றது', 'என் மனதை நடுராத்திரியிலும் ஆண்டு அடிமை கொள்ளும் காரியம்', 'நள்ளிரவிலும் என்னைத் துயரப்படுத்தி மேற்கொண்டுள்ளது', 'எல்லாரும் உறங்கும் நள்ளிரவிலும் என் நெஞ்சத்தை வருத்தி ஆள்கின்றது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நள்ளிரவிலும் என் நெஞ்சத்தைத் துயரப்படுத்தி ஆள்கின்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காமம் என்ற ஒன்றிற்கு இரக்கம் என்பது இல்லை; நள்ளிரவிலும் என் நெஞ்சத்தைத் துயரப்படுத்தி ஆளும் தொழில் செய்கின்றது என்பது பாடலின் பொருள்.
'ஆளும் தொழில்' குறிப்பது என்ன?

'நேரம் காலமின்றி காமத்திற்கு அடிமையானேன்' - தலைவி.

நடு இரவிலும் என் உள்ளத்தை ஆட்சி செய்யும் காமம் இரக்கம் இல்லாதது.
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாக அயல் சென்றிருக்கும் கணவர் வரவை நோக்கி ஆற்றமாட்டாமல் தலைவி இருக்கிறாள். எப்பொழுதும் அவர் நினைவாகவே உள்ளாள்.
அவள் நாணம் என்ற தாழ் போட்ட மனஉறுதி என்னும் கதவால் தற்கட்டுப்பாடுடன், காதல் நினைவுகள் வந்து உள்ளத்தைக் கலக்காமல், காத்து வருகிறாள். ஆனாலும் காமமே வெல்கிறது. கோடரி கொண்டு தாழையும் கதவையும் சேர்த்து உடைத்து எறிந்து விடுவதுபோல காமம் அவளது நிறையைத் தகர்த்து எறிந்து விடுகிறது எனச் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
காமம் என்னும் கொடியது இரக்கமில்லாமல் தன் உள்ளத்தை நள்ளிரவுப் பொழுதிலும் ஆட்டிப்படைக்கின்றது என்கிறாள் தலைவி.
ஊரெல்லாம் அடங்கி ஓய்வுகொள்ளும் இரவுப்பொழுதிலும் காமமானது தன் நெஞ்சை ஏவல் செய்து வேலை வாங்குகிறது. அதற்குக் கொஞ்சங்கூட இரக்கம் என்பதேயில்லை என்கிறாள் அவள். காமம் பணி கொள்ளுதல் என்பது அவளது நெஞ்சத்தில் உணர்வுகளைத் தூண்டிக் காமவேட்கையை உண்டுபண்ணித் துன்புறுத்துவதை.
இரவில் எல்லோரும் அமைதியாக உறங்கும்போது தலைவி மட்டும் காதலன் நினைவால் உறங்காது விழித்துக் கொண்டுள்ளாள். காதல் வேட்கை அவளை உறங்கவிடாது ஆட்டிப் படைக்கின்றது. இரவென்றுகூடப் பாராது காமம் தூங்கவிடாமல் கொடுமைப்படுத்துவதால் காதல் வேட்கைக்குக் கண்ணோட்டம் இல்லை என்று கூறி தலைவி வருந்துகின்றாள்.
நெஞ்சம் தன்வழி நடக்காது காமத்தின் ஏவல்வழி செல்கிறது. எல்லோரும் தூங்குமிரவுப் பொழுதிலும் கூட காமமானது தலைவியுடைய நெஞ்சத்தை மேலாண்மை செய்து காமநினைவுகளைத் தூண்டுகிறது. தலைவிக்குக் வேட்கை மிகுதலால் அடக்க இயலாமல் நிறை அழிய முனைகிறது என்பது கருத்து.

'ஆளும் தொழில்' குறிப்பது என்ன?

'ஆளும் தொழில்' என்ற தொடர்க்குத் தொழில்கொள்ளுதல், அவர்மாட்டுப் போக விடுதல், அடிமைத்தொழில் கொள்ளுவது, அரற்றலும் உலற்றலும் அலமரலும் பிறவும் ஆகிய தன் தொழிற்கண்ணே ஆளும், ஏவல் கொண்டு ஆள்கின்றது, ஆட்டிப்படைக்கின்றது, ஆளுகின்றது, ஏவல் கொண்டு துன்புறுத்துகின்றது, ஆண்டு அடிமை கொள்ளுதல், ஆட்சிக்கு அடிமைப்படுத்தி விடுகின்றது, துயரப்படுத்தி மேற்கொண்டுள்ளது, வருத்தி ஆள்கின்றது, ஆதிக்கம் பண்ணும் பொல்லாதது, ஏவல் கொள்ளும், வேலை செய்யத் தூண்டுகிறது, வேலை வாங்குகிறது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

காமமானது தலைவனை நினைக்கச் செய்து அவன்பால் தலைவியைச் செல்ல விடுகிறது; அவளது காம உணர்வுகளைக் கிளறச் செய்து காதல் வேட்கையை மிகுவிக்கிறது. இச்செயல் இங்கு தொழில் என்று சொல்லப்படுகின்றது. காலிங்கர் 'தொழிலாவது அரற்றலும், உலற்றலும், அலமரலும் பிறவும் அன்றே. அவை அனைத்தும் யான் உறப்பண்ணும்' என விரித்துரைத்தார்.
காமம் தன் நெஞ்சைத் தன்வயப்படுத்திக் கொண்டு, தகாத நேரத்திலும் இரக்கமின்றி தன்னை வருத்துகின்றது என்கிறாள் தலைவி. அது அவளது நெஞ்சத்தை இரவிலும் தன்தொழிலால் ஆட்கொள்கிறது என்று காதல்நோயின் கொடுமை பேசப்பட்டது.

'ஆளும் தொழில்' என்பது இங்கு நெஞ்சை ஏவி வேலைவாங்குவதைக் குறிக்கிறது.

காமம் என்ற ஒன்றிற்கு இரக்கம் என்பது இல்லை; நள்ளிரவிலும் என் நெஞ்சத்தைத் துயரப்படுத்தி ஆள்கின்றது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காமவிருப்பத்தைத் தன்னால் கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை என்ற தலைவியின் நிறையழிதல்.

பொழிப்பு

காதல் வேட்கை என்பது இரக்கம் இல்லாமல் என் நெஞ்சத்தை நள்ளிரவிலும் ஆளுகின்றது.