இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1239



முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்

(அதிகாரம்:உறுப்புநலனழிதல் குறள் எண்:1239)

பொழிப்பு (மு வரதராசன்): தழுவுதலுக்கு இடையே குளிர்ந்த காற்று நுழையக் காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலைநிறம் அடைந்தன.

மணக்குடவர் உரை: யான் பிரிவதாக நினைத்து முயக்கத்தின்கண்ணே எனது உடம்பை அகற்ற, அம்முயக்கிடையே சிறு காற்று ஊடறுத்தலானே எனது நீக்கத்தைப் பொறாது பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்புற்றன.
இது முதலாக மூன்று குறள் தலைமகன் கூறுவன.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) முயக்கிடைத் தண் வளி போழ - அங்ஙனம் கைகளை ஊக்குதலான் அம் முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக; பேதை பெருமழைக்கண் பசப்புற்ற - அத்துணையிடையீடும் பொறாது, பேதையுடைய பெரிய மழைக் கண்கள் பசப்புற்றன; அத்தன்மையவான கண்கள், மலைகளும் காடும் நாடுமாய இவ்விடையீடுகளையெல்லாம் யாங்ஙனம் பொறுத்தன?
(தண்மை - ஈண்டு மென்மைமேல் நின்றது. 'போழ' என்றது, உடம்பு இரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது. மழை - குளிர்ச்சி)

சி இலக்குவனார் உரை: தழுவிய காலத்தில் உண்டான சிறு இடைவெளியில் சிறு காற்று நுழைந்ததாக அவ்வளவு இடையீடும் பொறாது பேதைப் பெண்ணின் குளிர்ந்த கண்கள் பசப்புற்றன.


பொருள்கோள் வரிஅமைப்பு:
முயக்கிடைத் தண்வளி போழப் பேதை பெருமழைக் கண் பசப்புற்ற.

பதவுரை: முயக்கு-தழுவல்; இடை-நடுவில்; தண்-குளிர்ந்த; வளி-காற்று; போழ-பிளக்க, நுழைய; பசப்புற்ற-அழகு கெட்டன, நிறவேறுபாடடைந்தன; பேதை-மடமையுடையவள், களங்கமற்ற இளமங்கை; பெரும்-மிக்க; மழை-குளிர்ச்சியையுடைய, நீர்நிறைந்த; கண்-கண்கள்.


முயக்கிடைத் தண்வளி போழ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யான் பிரிவதாக நினைத்து முயக்கத்தின்கண்ணே எனது உடம்பை அகற்ற, அம்முயக்கிடையே சிறு காற்று ஊடறுத்தலானே எனது நீக்கத்தைப் பொறாது;
பரிப்பெருமாள்: யான் பிரிவதாக நினைத்து முயக்கத்தின்கண்ணே எனது உடம்பை அகற்ற, அவ்விடைச் சிறு காற்று ஊடறுத்தலானே எனது நீக்கத்தை அறிந்து;
பரிதி: முயங்கிய விடத்துத் தென்றல் ஊர;
காலிங்கர்: தோழீ! அவர் என்றும் எமக்கு இனியர் ஆகலின் தாம் என்னை இறுக முயங்கிய முயக்கத்திடையே இடம் பார்த்துத் தண் என்றதோர் சிறு தென்றற் கொழுந்து ஊடுபோக;
பரிமேலழகர்: (இதுவும் அது.) அங்ஙனம் கைகளை ஊக்குதலான் அம் முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக; [ஊக்குதலால் - தளர்த்துதலால்]
பரிமேலழகர் குறிப்புரை: தண்மை - ஈண்டு மென்மைமேல் நின்றது. 'போழ' என்றது, உடம்பு இரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது.

'முயக்கத்தின்கண்ணே எனது உடம்பை அகற்ற, அம்முயக்கிடையே சிறு காற்று ஊடறுத்தலானே எனது நீக்கத்தைப் பொறாது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தழுவலிடைக் குளிர்காற்றுப் புகுந்த அளவிற்கே', 'முயக்கத்தில் தலைவன் கைகளைத் தளர்த்தவே இடையில் குளிர்ந்த மென்காற்று ஊடறுத்து வீச, அச்சிறு இடையீட்டையும் பொறாமல்', 'நாங்களிருவரும் புணரும்போது தழுவியிருக்கும் எங்கள் மத்தியில் சந்துண்டாகிக் குளிர்காற்றுப் புகுந்தாலும்', 'தழுவுங் காலத்தே குளிர்ந்த காற்று நுழைந்ததாக, அதனைப் பொறாது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தழுவலிடைக் குளிர்காற்றுப் புகுந்த பிரிவுக்கே என்பது இப்பகுதியின் பொருள்.

பசப்புற்ற பேதை பெருமழைக் கண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்புற்றன.
மணக்குடவர் குறிப்புரை: இது முதலாக மூன்று குறள் தலைமகன் கூறுவன.
பரிப்பெருமாள்: பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்புற்றன.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவையிற்றின் கருத்துப் போக்கிச் சொல்லுதும். இது முதலாக மூன்று குறள் தலைமகன் கூற்று.
பரிதி: பசலையாச்சு; கண்ணும் மழை பொழிந்தது; நாயகிக்கு என்றவாறு.
காலிங்கர்: பசப்பு உற்றன; எனது அழுது ஒழியாக் கண் ஏதும் அறியாது. வெறும்பேதை; எனவே அவரும் அன்புடையார்; யானும் ஆற்றுவல்; இவை அன்றும் இன்றும் தமது அறியாமையின் பசந்து அழும் என்றவாறு.
பரிமேலழகர்: அத்துணையிடையீடும் பொறாது, பேதையுடைய பெரிய மழைக் கண்கள் பசப்புற்றன;
பரிமேலழகர் குறிப்புரை:அத்தன்மையவான கண்கள், மலைகளும் காடும் நாடுமாய இவ்விடையீடுகளையெல்லாம் யாங்ஙனம் பொறுத்தன? மழை - குளிர்ச்சி. [இவ்விடையீடுகளை - இத்தடைகளை]

'பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்புற்றன' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் ஆகியோரும் பரிமேலழகரும் மழை என்றதற்குக் குளிர்ச்சி என்று பொருள் கொள்ள, பரிதியும் காலிங்கரும் மழைபொழியும் அதாவது அழும் என உரை காண்பர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இப்பேதையின் குளிர்ந்த கண்கள் பசந்தன', 'இப்பெண்ணின் பெரிய குளிர்ந்த கண்கள் பசப்பெய்தின', 'அவள் கண் பசந்து அழுதுவிடுவாளே!', 'மங்கையது பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் வேறுபட்டன. (இப்போது அவை எவ்வாறாயினவோ?)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

களங்கமற்ற இளமங்கையின் பெரிய குளிர்ந்த கண்கள் அழகு கெட்டன என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தழுவலிடைக் குளிர்காற்றுப் புகுந்த பிரிவுக்கே களங்கமற்ற இளமங்கையின் பெருமழைக் கண் அழகு கெட்டன என்பது பாடலின் பொருள்.
'பெருமழைக் கண்' குறிப்பது என்ன?

தழுவலின்போது ஒரு சிறுகாற்றளவு பிரிவைக்கூடப் பொறுக்கமாட்டாத என் மனைவி இத்துணை காத தொலைவின் பிரிவை எப்படித் தாங்குவாள்?- தலைவர்.

நாங்கள் இறுக அணைத்திருக்கும் வேளையில் இருவருக்குமிடையில் குளிர் காற்று புகுந்துவிட்டது. அந்தக் காற்றுநுழை இடைவெளிக்கே களங்கமற்ற இம்மங்கையின் குளிர்ந்த பெரிய கண்கள் துயருற்று அழகு கெட்டன.
காட்சிப் பின்புலம்:
தலைவர் கடமைக்காக நெடியபயணம் மேற்கொண்டிருக்கிறார். தலைவி அவரது பிரிவை ஆற்றமுடியாமல் அழுதழுது கண்களின் ஒளியை இழக்கிறாள்; பசப்படைந்த அவள் கண்கள் கணவரது அன்பு செய்யாமையை பிறர்க்கு அறிவித்துக்கொண்டிருக்கின்றன; அவர் உடனிருந்த நாட்களில் பருத்திருந்த தோள்கள், இப்போது வளைகள் கழலும் அளவு மெலிவடைந்தன; அவளது பழைய அழகு தொலைந்துவிட்டதாக எண்ணுகிறாள் அவள்; உடல்மெலிவும் அழகு இழப்பும் காதல் கணவரது கொடுமையைச் சொல்லுவனவாக இருக்கின்றன; எனினும் இதற்காக அவரைக் கொடியர் என்று சொன்னால் அது எனக்கு வருத்தத்தையே தரும் என்கிறாள்; 'என் உடல் மெலிவை அவர்க்குச் சொல்லி பெருமை கொள்வாயோ நெஞ்சே!' எனப் பழிப்பதுபோலத் தன் வருத்தத்தை தன் நெஞ்சுடன் பகிர்ந்து கொள்கிறாள்.
இனி, பிரிந்து சென்றுள்ள இடத்தில் கணவர் தலைவியைப் பற்றி என்ன நினைக்கிறார்? பிரிவு நேரும் கால நிகழ்வுகள் அவர்க்குத் தோன்றுகின்றன.

இக்காட்சி:
நெடுந்தொலைவு சென்றிருந்த தலைவர் பணி முடித்து இல்லம் திரும்பும் வேளை இது. அது சமயம் தலைவியையும் பிரியும் சமயம் அவள் இருந்த மனநிலையையும் மன ஓட்டத்தில் எண்ணிப் பார்க்கிறார். காதல் வயப்பட்ட அவர்கள் வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு (புணர்ச்சி மகிழ்தல் 1108 (பொருள்: காற்றும் ஊடே நுழைந்து பிளக்க இயலாதவாறு இறுகத் தழுவிக் கொண்டிருப்பது ஒருவரையொருவர் காதலிக்கும் இருவர்க்கும் இன்பமாம்) என்று முற்குறள் ஒன்றில் சொல்லப்பட்டதுபோல் காற்றுகூட நுழைய முடியாதபடி இறுகத் தழுவி அணைத்து மகிழ்பவர்கள். பிரியும் நேரத்திலும் அப்படி அணைத்துக் கொண்டனர். அப்பொழுது தலைவர் கைகளைச் சிறுது நெகிழ்த்தினார். அச்சமயத்தில் தண் என்றதோர் சிறு தென்றற் கொழுந்து ஊடுபோனதைத் தலைவி உணர்ந்தாள். அப்போது காற்று புகுந்துவிட்டதே-காற்று நுழையுமளவு பிரிந்துவிட்டோமோ என வருந்தி அவளது பெரிய குளிர்ந்த கண்கள் வாடத் தொடங்கின. இறுகத் தழுவிய நிலை தளர்ந்ததால், அக்காற்று, அவர்களது உடல்களிடை பிளந்து கொண்டு போக நேர்ந்தது. ஆனாலும் பிரிவதற்காகக் கணவர் தழுவிய கைகளை நீக்குகிறார் என்பதை உணர்ந்ததால் தலைவியின் கண்கள் பசலையுற்று அழகை இழந்ததைத் தலைவன் நினைத்துப் பார்க்கிறான். அந்த அளவு உணர்வுநுட்பம் உள்ள காதல்மனைவிக்கு-அச்சிறு பிரிவையும் தாங்க முடியாதவளுக்கு- மலைகள், காடுகள், நாடுகள் கடந்து தான் இங்கு இருக்கத் தொலைவாலும் காலத்தாலும் இந்த அளவு உள்ள பெரிய இடைவெளியை எப்படிப் பொறுத்திருக்க முடியும்? என்பதாக அவரது நினைவுகள் செல்கின்றன.

இப்பாடலில் தண்வளி அதாவது குளிர்ந்த காற்று என்று சொல்லப்பட்டது. வெறுங்காற்று ஒட்டிக்கொண்டிருக்கும் உடல்களின் இடையில் புகுந்தால் அறிய முடியாது. குளிர் காற்று உடலில் பட்டவுடன் உணர இயலும். எனவே தண்வளி என்ற சொல்லாட்சி.
ஈருடல் ஓருடலாய் ஆனதுபோல் தழுவி நின்றபோது காற்று அதனூடு பிளந்து சென்றதை 'போழ' என்ற சொல் குறிக்கிறது.
கண் பசத்தல் என்பது தழுவலின் பிரிவில் தலைவியின் கண்கள் வேதனையால் நீர் நிறைந்து அழகுகெட்ட நிலையைச் சொல்வது. இதற்கு 'அவனைப் பிரியப்போகிறோமே என்ற சோர்வும், அச்சமும் உடைய பார்வையாம்' என விளக்கம் தருவார் ஜி வரதராஜன்.
இக்குறள் நடை முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதைநுதல் என்னும் முந்தைய பாடல் (1238) நடையை ஒத்தது.

தோழிக்குத் தலைவி கூறியதாக இக்குறளைக் கொள்வர் காளிங்கர். பிற தொல்லாசிரியர்கள் தலைவன் கூற்றாகக் கொண்டனர்.

'பெருமழைக் கண்' குறிப்பது என்ன?

'பெருமழைக் கண்' என்றதற்குப் பெருத்த குளிர்ந்த கண்கள், பெரிய மழைக் கண்கள், கண்ணும் மழை பொழிந்தது, அழுது ஒழியாக் கண், பெரிய மழைக் கண்கள் (மழை- குளிர்ச்சி), பெரிதாய குளிர்ச்சிமிக்க கண்கள், குளிர்ந்த கண்கள், பெரிய குளிர்ந்த கண்கள், பெரிய மழைக் கண்கள், விசாலமான மழைக்கண்கள் (மழைபோல் கண்ணீர் வடிப்பது), குளிர்ந்த கண்கள், குளிர்ந்த பெரிய கண்கள், நீர் நிறைந்த கண்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பெருத்த குளிர்ந்த கண்கள், மழைபொழிந்த கண்கள், நீர் நிறைந்த கண்கள் என்பவற்றில் பெருத்த குளிர்ந்த கண்கள் என்பது பொருத்தம்.
நாமக்கல் இராமலிங்கம் 'பெரு மழைக்கண்-விசாலமான மழைக்கண்கள். மழைக்கண்கள் என்று பெண்களின் கண்களைக் குறிப்பது தமிழ் வழக்கு. ஏன் எனில் பெண்கள் இயல்பாகவே மிக்க இரக்க முள்ளவர்கள். சிறு துன்பத்தைக் கண்டாலும் மனமுருகி மழைபோல் கண்ணீரைக் கொட்டி விடுவார்கள். மேலும் எக்காரணத்தாலும் பெண்கள் நினைத்த உடனே மழைபோல் கண்ணீர் வடிக்க முடியும். அதனால் பெண்களின் கண்கள் மழைக்கண் எனப்படும்' என விளக்கம் செய்தார்.
குளிர்ந்த கண்கள் துயருற்று அழகு கெட்டன எனச் சொல்லப்பட்டது.

'பெருமழைக் கண்' என்பது பெரிதாய குளிர்ச்சிமிக்க கண்கள் என்ற பொருள் தருவது.

தழுவலிடைக் குளிர்காற்றுப் புகுந்த பிரிவுக்கே களங்கமற்ற இளமங்கையின் பெரிய குளிர்ந்த கண்கள் அழகு கெட்டன என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சிறுகாற்றளவு பிரிவு உண்டானதற்கே தன் கண் உறுப்புநலனழிதல் தன்மை கொண்டவளாயிருக்கிறாள் தலைவி.

பொழிப்பு

தழுவுங் காலத்தே குளிர்ந்த காற்று இருவர்க்கிடையே நுழைந்ததாக, அதனைப் பொறாது பேதையின் பெரிய குளிர்ந்த கண்கள் அழகு கெட்டன.