இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1238



முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்

(அதிகாரம்:உறுப்புநலனழிதல் குறள் எண்:1238)

பொழிப்பு (மு வரதராசன்): தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, (அவ்வளவு சிறிதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.

மணக்குடவர் உரை: யான் பிரிவதாக நினைத்து அவள் முயங்கிய கைகளை நீக்கினேனாக; அதனை யறிந்து பசுத்ததொடியினையுடைய பேதை நுதல் பசந்தது.

பரிமேலழகர் உரை: (வினைமுடிதது மீளலுற்ற தலைமகன், முன் நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) முயங்கிய கைகளை ஊக்க - தன்னை இறுக முயங்கிய கைகளை 'இவட்கு நோம்' என்று கருதி ஒருஞான்று யான் நெகிழ்ந்தேனாக; பைந்தொடி பேதை நுதல் பசந்தது - அத்துணையும் பொறாது பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது, அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கு யாது செய்யுமோ?
('இனிக்கடிதிற் செல்லவேண்டும்' என்பது கருத்து.)

வ சுப மாணிக்கம் உரை: அணைத்த கைகளைத் தளர்த்திய அளவிற்கே இப்பேதையின் நெற்றி பசலை பெற்றது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
முயங்கிய கைகளை ஊக்கப் பைந்தொடிப் பேதை நுதல் பசந்தது.

பதவுரை: முயங்கிய-தழுவிய; கைகளை-கரங்களை; ஊக்க-நெகிழ்க்க; பசந்தது-நிற வேறுபாடு உற்றது, பொலிவிழந்தது, பசப்புற்றது; பைம்-பசும் பொன்னாலாகிய; தொடி-வளை; பேதை-இளம் நங்கை, மடமையுடையவள்; நுதல்-நெற்றி.


முயங்கிய கைகளை ஊக்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யான் பிரிவதாக நினைத்து அவள் முயங்கிய கைகளை நீக்கினேனாக;
பரிப்பெருமாள்: யான் பிரிவதாக நினைத்து அவளை முயங்கிய கைகளை நீக்கினேன்;
பரிதி: இழுத்து அணைத்த கை கலவிப் புலவியில் நெகிழ;
காலிங்கர்: நெஞ்சே! அவர் இவளைப் பிரிவதன் முன்னமே தமது அன்பினான் அருளி முயங்குமிடத்து அதற்கு எதிர் முயங்கிய கைகளைப் புலந்தார்போல் நயந்து ஊக்கினாராக;
பரிமேலழகர்: (வினைமுடித்து மீளலுற்ற தலைமகன், முன் நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) தன்னை இறுக முயங்கிய கைகளை 'இவட்கு நோம்' என்று கருதி ஒருஞான்று யான் நெகிழ்ந்தேனாக;

மணக்குடவர்/பரிப்பெருமாள் 'பிரிவதாக நினைத்து அவள் முயங்கிய கைகளை நீக்கினேன்' என்றும் பரிதி/காலிங்கர் 'அணைத்த கை புலவியில் நெகிழ' என்றும் பரிமேலழகர் 'அவளுக்கு நோகும் என்று கையைச் சிறுது நீக்கினேன்' என்றும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இறுகத் தழுவிய கைகளை இவளுக்கு நோவும் என்று நினைத்துச் சிறுது தளர்த்த', '(இந்தச் சமயத்தில் வெளியூரிலிருக்கும் காதலனும் காதலியை நினைக்கிறாள்) நான் அவளைக் கட்டித் தழுவிய என் கைகளைத் தளர்த்தினாலும்', 'இறுகத் தழுவிய கைகளைச் சிறிது நெகிழ்ந்தவுடன்', 'இறுகத் தழுவிய கைகளைத் தளர்த்த', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இறுகத் தழுவிய கைகளைத் தளர்த்த என்பது இப்பகுதியின் பொருள்.

பசந்ததுபைந்தொடிப் பேதை நுதல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனை யறிந்து பசுத்ததொடியினையுடைய பேதை நுதல் பசந்தது.
பரிப்பெருமாள்: அதனை யறிந்து பசுத்ததொடியினையுடைய பேதையது நுதல் பசந்தது.
பரிதி: பசலை கொண்டது, வளையுடையாள் திருநுதல் என்றவாறு.
காலிங்கர்: பசந்தது இப்பைந்தொடிப் பேதையாளது நுதல்; காலிங்கர் குறிப்புரை: எனவே இன்று இவள் ஆற்றாமல் தளர்தற்குச் சொல்ல வேண்டுமோ என்று இவள் தான் ஆற்றாளாயினள் என்று தோழி தன் நெஞ்சிற்குச் சொல்லுவாள் என்றவாறு.
பரிமேலழகர்: அத்துணையும் பொறாது பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது, அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கு யாது செய்யுமோ? [பைந்தொடிகளை-பசும் பொன்னால் செய்த வளைகளை; அப்பெற்றித்தாய-அத்தன்மையதாகிய;]
பரிமேலழகர் குறிப்புரை: 'இனிக்கடிதிற் செல்லவேண்டும்' என்பது கருத்து. [கடிதின் -விரைந்து]

'பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதனைப் பொறுக்க இயலாது பசுமையான வளையல் அணிந்த பெண்ணின் நெற்றி பசந்தது', 'அவள் முகம் பசந்துவிடுமே!', 'பச்சை வளையணிந்த மடந்தையின் நெற்றி நிறம் வேறுபட்டது. (பிரிவாற்றாமையால், எவ்வாறாயினளோ?)', 'பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசப்புற்றது. (இப்பிரிவிற்கு யாது செய்யுமோ?)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பசுமையான வளையல் அணிந்த இளம்பெண்ணின் நெற்றி பசந்தது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முயங்கியகைகளை ஊக்க பசுமையான வளையல் அணிந்த இளம்பெண்ணின் நெற்றி பசந்தது என்பது பாடலின் பொருள்.
'முயங்கியகைகளை ஊக்க' என்ற தொடர் குறிப்பது என்ன?

தலைவனின் இறுகத்தழுவல் விலகவே கூடாது என எண்ணினாள் அவள்.

அணைத்த கைகளைத் தளர்த்தினேன். அப்பொழுதிலேயே, அக்கால இடைவெளிக்குள் பசிய வளைகளை அணிந்துள்ள, கள்ளமற்ற, இவளது முகம் வாடிவிட்டதே என்கிறான் தலைமகன்.
காட்சிப் பின்புலம்:
கணவர் பணி காரணமாக நெடுந்தொலைவு சென்றிருக்கிறார். அவர் பிரிவை ஆற்றமுடியாமல் மனைவி தவிக்கிறாள். அவனையே நினைந்து நினைந்து அழுது கொண்டிருந்ததால் கண்கள் ஒளி இழந்து பார்ப்போரை இரங்கச் செய்கின்றன. தலைவர் உடனிருந்த நாட்களில் பருத்திருந்த தோள்கள், இப்போது மெலிவடைந்து வளைகள் கழன்றன. அவர் விரைந்து திரும்பி வராத 'கொடிய செயலை' எண்ணுகிறாள். தலைவியின் தோள் ஆகியன அழகு கெட்டு நலிகின்றதை 'அவர் வந்தால் காட்டி பெருமை கொள்வாயோ!' எனத் தன் நெஞ்சை விளித்துப் புலம்பிக் கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
பிரிந்து சென்றபின் இதுவரை காணப்படாத தலைவன் சேய்மையிலுள்ள பணிசெய்யும் இடத்தில் தோன்றுகிறான். வினை முடித்து இல்லம் திரும்பும் நேரம் இது. அதுபொழுது தலைவியிடம் விடைபெறும்போது பசும்பொன்வளையணிந்த இளையாளது உளநிலை, உடல்நிலை எவ்வாறு இருந்தன என்பது அவனது நினைவுக்கு வருகின்றது. பிரியும் நேரத்தில் இருவரும் ஆரத் தழுவிக்கொண்டனர். தலைவன் அணைப்பிலிருந்து விடுபட சிறுது கைகளைத் தளர்த்துகிறான். அந்தப் பிரிவையே பொறுக்க இயலாமல் வருந்தி, அந்த நொடியே அவளது முகம் தன் பொலிவை இழந்தது. பிரிவுப்பொழுதில் அதாவது கணவன் அருகில் இல்லாத காலத்தில் இல்லாளுக்குப் பசலை படரும் அதாவது நிறம் மாறும். ஆனால் இங்கு பிரிவுநேரத் தழுவலில் கைகளை நீங்கிய மறுகணமே அவளுக்குப் பசலை உண்டாயிற்றாம். அத்தகைய மெல்லியலாளது முகம் இந்த நீண்ட பிரிவிற்கு என்ன ஆகியிருக்குமோ! இனி விரைந்து இல்லம் திரும்பவேண்டும் என எண்ணுகிறான் கணவன்.

இக்குறளுக்கான உரையில் நாமக்கல் இராமலிங்கம் 'இங்கே முழு முகத்தையும் சொல்லாமல் நெற்றியை மட்டும் சொல்லுவது குறிப்பிடத் தகுந்தது. ஏனென்றால் இறுகத் தழுவிக் கொண்டிருக்கிற இருவர் ஒருவரையொருவர் முழு முகத்தையும் பார்க்க முடியாது, கொஞ்சம் தளர்த்தினால் நெற்றியை மட்டும்தான் பார்க்கலாம் என்பதைக் குறிப்பது' என நயம் கூறினார்.
முகத்தில் நெற்றிமட்டும் தனித்து நிறம் மாறுவதில்லை. நுதல் என்ற சொல் முகத்தைக் குறிப்பதாகவே குறளில் பல இடங்களில் ஆளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே இங்கும் தலைவியின் முகத்தில் பசலை படர்ந்தது எனக் கொள்ளலாம்.

பேதை என்ற சொல்லுக்கு அறிவிலி, இளம்பெண், களங்கமற்ற பெண் என்பதாகப் பலபொருள் உண்டு. பழைய ஆசிரியர்கள் பொதுவாக அறிவிலி என்ற பொருளே கூறுவர். பேதை என்பது 5-7 வயதான சிறுமியின் பருவம் குறிப்பிடும் சொல்லாகவும் உள்ளது. பருவம் காரணமாக இப்பொருள் இப்பாடலுக்கு இயையாது. பேதை என்பதற்குக் களங்கமற்ற பெண் என்னும் பொருள் இங்கு பொருந்தும்.

'முயங்கியகைகளை ஊக்க' என்ற தொடர் குறிப்பது என்ன?

'முயங்கிய கைகளை ஊக்க' என்ற பகுதிக்கு முயங்கிய கைகளை நீக்க, இழுத்து அணைத்த கை கல்விப் புலவியில் நெகிழ, முயங்குமிடத்து அதற்கு எதிர் முயங்கிய கைகளைப் புலந்தார்போல் நயந்து ஊக்கினாராக, தன்னை இறுக முயங்கிய கைகளை 'இவட்கு நோம்' என்று கருதி ஒருஞான்று யான் நெகிழ்ந்தேனாக, தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, இறுகத் தழுவிய என் கைகளை யான் தலைவிக்கு நோகுமோ எனக் கருதிச் சிறுது தளர்த்தினேனாக, அணைத்த கைகளைத் தளர்த்திய அளவிற்கே, இறுகத் தழுவிய கைகளை இவளுக்கு நோவும் என்று நினைத்துச் சிறுது தளர்த்த, நான் அவளைக் கட்டியணைத்த என் கைகளைத் தளர்த்தினதற்கே, இறுகத் தழுவிய கைகளைச் சற்றே தளர்த்தி விட்ட அளவில், இறுகத் தழுவிய கைகளைச் சிறிது நெகிழ்ந்தவுடன், இறுகத் தழுவிய கைகளைத் தளர்த்த, அணைத்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தினேன் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

'முயங்கிய கைகளை ஊக்க' என்பதற்கு இறுகத் தழுவிய கைகளை நெகிழ்த்த என்பது பொருள்.
அணைத்த கைகளின் தளர்ச்சியே அவளை வாட்டியது. இப்பொழுது இவ்வளவு காலம் பிரிந்துள்ளேமே, அவள் எவ்வாறு தாங்கிக்கொள்கிறாளோ?' எனச் சேய்மையிலுள்ள தலைவன் எண்ணுகிறான்.
எதற்காக தலைவன் கைகளை நெகிழவிடுகிறான் என்பதை, பிரியும் நேரத்தில் அவன் கைகளை நீக்க, கலவிப் புலவியில் கை நெகிழ, அவன் பிரியும் சமயம் அவன் முயங்க அதற்கு எதிர் முயங்கிய கைகளை புலந்தார்போல நயந்து பிரிதலை விரும்பவில்லை என்று தெரிவிக்க, இறுக முயங்கிய கைகள் 'இவளுக்கு வருத்தும்' என்று கருதி ஒருஞான்று யான் நெகிழ்ந்தேன் எனச் சுவைபட விளக்கினர் பழம் ஆசிரியர்கள்.
இப்பாடல் புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில அள்ளிக்கொள் வற்றே பசப்பு (பசப்புறுபருவரல் 1187; பொருள்: காதலருடன் தழுவியிருந்த நேரத்தில் புரண்டு படுத்ததன் இடைவெளியிலே பசலை வாரிக்கொள்ளும் அளவில் என் உடலில் நிறைந்து படர்ந்தது என்கிறாள் தலைவி) என்னும் குறட்கருத்தை ஒத்ததாக உள்ளது.

'முயங்கிய கைகளைஊக்க' என்ற தொடர் அணைத்த கைகளை நீக்க எனப்பொருள்படும்.

இறுகத் தழுவிய கைகளை நான் தளர்த்த பசுமையான வளையல் அணிந்த இளம்பெண்ணின் நெற்றி பசந்தது எனத் தலைவன் கூறுகிறான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பிரிந்துவந்தநேரத்தில் தலைவியின் நுதல் உறுப்புநலனழிதல் பற்றிய நினைவு உண்டாகிறது தலைவனுக்கு.

பொழிப்பு

தழுவிய கைகளைத் தளர்த்திய பிரிவிற்கே இளம்பெண்ணின் நெற்றி பசலை பெற்றது.