இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1237



பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோள் பூசல் உரைத்து

(அதிகாரம்:உறுப்புநலனழிதல் குறள் எண்:1237)

பொழிப்பு: நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?

மணக்குடவர் உரை: நெஞ்சே! இக்கொடுமை செய்தவர்க்கு எனதுதோள் வாடுதலானே ஊரிலெழுந்த அலரைச் சென்று சொல்லி நீயும் நினது வாட்டம் நீங்கி அழகு பெறுவாயோ?
இது நீ அவர்பாற் போகல் வேண்டுமென்று நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (அவ்வியற்பழிப்புப் பொறாது தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) நெஞ்சே - நெஞ்சே; கொடியார்க்கு என் வாடு தோள் பூசல் உரைத்து - இவள் கொடியார் என்கின்றவர்க்கு நீ சென்று என் மெலிகின்ற தோளினால் விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி; பாடு பெறுதியோ - ஒரு மேம்பாடு எய்தவல்லையோ? வல்லையாயின் அதனை ஒப்பதில்லை.
('கொடியார்க்கு' என்பது கொடியர் அல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச்சொல். 'வாடு தோள்' என்பது அவை தாமே வாடாநின்றன என்பது தோன்ற நின்றது. பூசல்: ஆகுபெயர். அஃது அவள் தோள் நோக்கி இயற்பழித்தல் மேலும், அதனால் தனக்கு ஆற்றாமை மிகன் மேலும் நின்றது. 'நின்னுரை கேட்டலும் அவர் வருவர்; இவையெல்லாம் நீங்கும்; நீங்க அஃது எனக்குக் காலத்தினாற்செய்த நன்றியாமாகலின், அதன் பயனெல்லாம் எய்துதி' என்னும் கருத்தால் 'பாடு பெறுதியோ'? என்றாள்.)

வ சுப மாணிக்கம் உரை: காதலர்க்கு மெலியும் தோள்களின் மாறுபாட்டைச் சொல்லி, நெஞ்சே! பெருமை அடையாயா?


பொருள்கோள் வரிஅமைப்பு:
நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோள் பூசல் உரைத்து பாடு பெறுதியோ.

பதவுரை: பாடு-பெருமை, மேம்பாடு; பெறுதியோ-அடைவாயோ; நெஞ்சே-உள்ளமே; கொடியார்க்கு-கொடிய நெஞ்சம் கொண்டவர்க்கு; என்-எனது; வாடு-வாடுகின்ற, மெலிகின்ற; தோள்-தோள்; பூசல்-ஆரவாரம்; உரைத்து-சொல்லி.


பாடு பெறுதியோ நெஞ்சே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெஞ்சே! நீயும் நினது வாட்டம் நீங்கி அழகு பெறுவாயோ?
பரிப்பெருமாள்: நெஞ்சே! நீயும் நினது வாட்டம் நீங்கி அழகு பெறுவாயோ?
பரிதி: ஒரு பெருமை பெறுகிறாயோ, நெஞ்சே!
காலிங்கர்: நெஞ்சே! உற்றவிடத்து உதவும் நட்பாவது இது என்னும் பெருமையைப் பெறுதியோ? பெறுதி எனின் நமக்குப் பெரியதோர் புகழ் என்றவாறு;
பரிமேலழகர்: (அவ்வியற்பழிப்புப் பொறாது தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) நெஞ்சே, ஒரு மேம்பாடு எய்தவல்லையோ? வல்லையாயின் அதனை ஒப்பதில்லை;
பரிமேலழகர் குறிப்புரை: 'நின்னுரை கேட்டலும் அவர் வருவர்; இவையெல்லாம் நீங்கும்; நீங்க அஃது எனக்குக் காலத்தினாற்செய்த நன்றியாமாகலின், அதன் பயனெல்லாம் எய்துதி' என்னும் கருத்தால் 'பாடு பெறுதியோ'? என்றாள். [அஃது - ஆரவாரம்; நின் உரை- உன் சொல்லை; இவை எல்லாம்-தோழி தலைமகனது ஒழுக்கத்தைப் பழித்தலும் கண்கள் நாணுதலும் அழுதலும் தோள்கள் மெலிதலுமாகிய இவை எல்லாம்; அஃது - நின்னுரை; அதன் பயன் எல்லாம் - அந்நன்றியின் பயன்கள் எல்லாம்]

'நெஞ்சே! நீ அழகு பெறுவாயோ/பெருமை பெறுகிறாயோ/பெருமை பெறுதியோ/ மேம்பாடு எய்தவல்லையோ?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சே, நீ மேம்பாடு எய்துவாயோ? கூறுக', 'மனமே! அவரை வரச் செய்து பெருமை அடையலாமே. செய்வாயா?', 'நெஞ்சே! நீ மேம்பாடடைய மாட்டாயா?', 'நெஞ்சே! பெருமை அடைவாயோ?', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நெஞ்சே! பெருமை அடையாயா? என்பது இப்பகுதியின் பொருள்.

கொடியார்க்கென் வாடுதோள் பூசல் உரைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இக்கொடுமை செய்தவர்க்கு எனதுதோள் வாடுதலானே ஊரிலெழுந்த அலரைச் சென்று சொல்லி.
மணக்குடவர் குறிப்புரை: இது நீ அவர்பாற் போகல் வேண்டுமென்று நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.
பரிப்பெருமாள்: இக்கொடுமை செய்தவர்க்கு எனதுதோள் வாடுதலானே ஊரிலெழுந்த அலரைச் சென்று சொல்லி.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நீ அவர்பாற் போகல் வேண்டுமென்று நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது. நெஞ்சின் வலியழிதலும் கூறியவாறாயிற்று.
பரிதி: கொடுமை கூடிய நாயகனுக்குப் பூசல் எடுத்துரைத்து என்றவாறு.
காலிங்கர்: என் வாடுதோள் வருத்தம் கண்டு பலரும் அலைக்கின்ற வார்த்தை முன்னம் நமக்குக் கூறியருளாக் கொடியவர்க்கு நீ சென்று சொல்லி.
பரிமேலழகர்: இவள் கொடியார் என்கின்றவர்க்கு நீ சென்று என் மெலிகின்ற தோளினால் விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி.
பரிமேலழகர் குறிப்புரை: 'கொடியார்க்கு' என்பது கொடியர் அல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச்சொல். 'வாடு தோள்' என்பது அவை தாமே வாடாநின்றன என்பது தோன்ற நின்றது. பூசல்: ஆகுபெயர். அஃது அவள் தோள் நோக்கி இயற்பழித்தல் மேலும் அதனால் தனக்கு ஆற்றாமை மிகன் மேலும் நின்றது. [அவை-தோள்கள்; பூசல்-சண்டை; அஃது - ஆரவாரம்]

'இக்கொடுமை செய்தவர்க்கு எனதுதோள் வாடுதலானே ஊரிலெழுந்த அலரை/ பூசல்/பலரும் அலைக்கின்ற வார்த்தை/ஆரவாரத்தைச் சொல்லி' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிரிவால் இக்கொடுமை செய்த தலைவருக்கு என் தோள் வாட்டத்தாலே ஊரில் எழுந்த அலரைக் கூறி', 'எனக்கு இவ்வளவு கொடுமை செய்துவிட்ட அவரிடம் நீ சென்று என் தேகம் மிகவும் மெலிந்து கையிலுள்ள வளையல்கள் தொளதொளத்து ஓசையிடுவதைச் சொல்லி', 'மெலிகின்ற என் தோள்களினால் விளைகின்ற ஆரவாரத்தை அக் கொடியவர்க்குச் சொல்லி', 'என்னைப் பழிக்கும் கொடிய மகளிர்க்கு என் மெலிகின்ற தோளினால் விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பிரிவால் இக்கொடுமை செய்த காதலர்க்கு என் தோள் வாட்டத்தால் ஊருக்குள் எழுந்த ஆரவாரத்தைக் கூறி என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நெஞ்சே! பிரிவால் இக்கொடுமை செய்த காதலர்க்கு என் தோள் வாட்டத்தால் ஊருக்குள் எழுந்த பூசல் பற்றிக் கூறிப் பெருமை அடையாயா? என்பது பாடலின் பொருள்.
என்ன பூசல் அது?

நெஞ்சே! என் உடல் மெலிவை ஊரார் தெரிந்து கொண்டனரே! இதைத் தலைவரிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ளேன்!

நெஞ்சமே! என் தோள்களின் வாட்டத்தால் எழும் ஆரவாரத்தைப் பிரிந்து சென்றுள்ள கொடியவரான தலைவர்க்கு எடுத்துரைத்துப் பெருமை பெற மாட்டாயா?
காட்சிப் பின்புலம்:
காதலர் கடமை காரணமாக நெடுந்தொலைவு சென்றிருக்கிறார். அவர் வரவு நீட்டித்துக் கொண்டு போவதாகத் தலைவி உணர்கிறாள். பிரிவாற்றாது அழுதழுது மனையின் கண்கள் மலரைக் காணவும் நாணுகின்றன; தம்மை விரும்பினார், காதலித்தார், இப்பொழுது அவரது அன்பில்லாமையை என்னுடைய ஒளியிழந்த கண்கள் பிறர்க்கு அறிவிக்கின்றனவே; அவரை மணந்த மகிழ்வால் என் தோள்கள் பெருத்திருந்தன, இப்பொழுது இளைத்திருந்து அவர் பிரிவை நன்கு தெரிவிக்கின்றனவே!; அவர் என்னுடனில்லாததால் பழைய அழகை இழந்த என் தோள்கள் மெலிந்து பசிய வளைகள் கழலுகின்றன; பழைய அழகும் மறைந்து, வளையல்களை இழந்து தோள்கள் வாடி நிற்கின்றமையும் அவரது கொடுமையைச் சொல்லுமே; நான் பொறுத்திருக்கிறேன்; நீயோ வளையல்கள் கழலுமாறு தோள் மெலிந்ததைக் கண்டு அவரைக் கொடியர் என்று கூறுதலைப் பொறாது வருந்துவேன்;
இவ்வாறு தன் அழகு குறைந்து வருவதையும் தன் கணவரைக் கொடியார் எனப் பிறர் கூறுவதையும் பொறாதவளாய்த் தலைவி இருக்கிறாள்.

இக்காட்சி:
பிரிவின் கொடுமை தாங்கமுடியாமல் ஊண், உறக்கம் இன்றித் தலைவி துயருறுகிறாள். உடல் வாடுகிறது, தோள்கள் மெலிந்து வளைகள் நெகிழ்கின்றன. அதனால் அவள் வாட்டம் பிறர் தெரியும்படி ஆகிறது. ஊராரும் இது பற்றிப் பேசுவதாக அவள் அறிகிறாள். அவளது இந்நிலைமை குறித்து நொந்து அவள் உள்ளுணர்வுகளை நெஞ்சத்திடம் கூறி ஆறுதல் பெற முயல்கிறாள். தன் நெஞ்சையே காதலரிடம் தூது அனுப்ப எண்ணுகிறாள். நெஞ்சை விளித்து 'காதலர்க்கு என் மெலியும் தோள்கள் விளைத்த ஆரவாரத்தைச் சொல்லி, பெருமை அடையாயா?' என்கிறாள். அவளது உடல் மெலிவு தலைவரது பிரிவால்தானே உண்டானது. அக்கொடியாரான கணவர் பற்றி ஊரார் பேசுவதை ஆரவாரம் எனக் குறிப்பிடுகிறாள் தலைவி. ('கொடியார்' என்பது கொடியர் அல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச்சொல் என்பார் பரிமேலழகர்).

'பாடு பெறுதியோ' எனத் தன் நெஞ்சை நோக்கிக் கேட்கிறாள். பாடு என்பதற்கு அழகு, பெருமை, மேம்பாடு எனப் பொருள் கூறினர். பெருமை என்பது பொருத்தம். பெருமை பெறுவாயா? எனக் கேட்கிறாள். நெஞ்சம் என்ன பெருமை அடைய முடியும்?
தலைவியின் உடல் வாடுவதனால் பலரும் பிரிவிற் சென்றுள்ள தலைவன் விரைந்து திரும்பாததை பற்றிப் பலவிதமாகப் பேசி ஆரவாரத்தை உண்டு பண்ணுகிறார்கள்; தன் நெஞ்சை விளித்து 'இவ்வலர் பற்றித் தலைவரிடம் கூறு. அதனைக் கேட்டு அவர் உடனே மீள்வர்; யான் நன்மையடைவேன்; இத்தகைய பேருதவியைச் செய்தமைக்காக நீயும் பெருமையடையலாம்' என்கிறாள் தலைவி.
ஒருபுறம் தலைவியின் உடல் மெலிந்தது, இன்னொரு புறம் ஊரார் இதை வைத்து அலர் பரப்புகிறார்கள். இத்தகைய சூழலில் தன் நிலைமை குறித்து வருந்திய தலைவி, தன் நெஞ்சிடம் பேசி, தன் துயர் குறைக்க முயல்கிறாள்.

பாடு பெறுதியோ என்பதற்குக் கூறப்பட்ட உரைகளிலிருந்து சில:

  • மனமே! கொடியர் கொடியர் எனத் தோழியால் பழி தூற்றப்படுகின்ற என் காதலர்க்கு, என் தோள் மெலிந்து பறை சாற்றுவதை அறிவித்துப் பெருமை எய்துவையாயின் நல்லது.
  • 'இவ்வாரவாரம் பற்றித் தலைவரிடம் கூறுக. அதனைக் கேட்டு அவர் உடனே மீள்வர். யான் நன்மையடைவேன். இத்தகைய பேருதவியைச் செய்தமைக்காக நீயும் பெருமையடையலாம். செய்வாயா? பெருமையடைவாயா?' என நெஞ்சை வேண்டுகிறாள் தலைவி.
  • என் வாடுதோள் வருத்தம் கண்டு பலரும் அலைக்கின்ற வார்த்தை முன்னம் நமக்குக் கூறியருளாக் கொடியவர்க்கு நீ சென்று சொல்லி உற்றவிடத்து உதவும் நட்பாவது இது என்னும் பெருமையைப் பெறுதியோ?
  • தலைவரை விரைந்து திரும்புமாறு செய்தலால், துன்பம் நீங்கும். அதனால் நெஞ்சிற்குப் பெருமை உண்டாகும்.
  • உடனே அவரிருக்குமிடம் சென்று என் நிலைமையைச் சொல்லி, அவரை வரச் செய்து கொடுமையைப் போக்கிப் பெருமையடையலாமே? செய்.
  • நெஞ்சு சென்று உரைத்தலால், காதற் தலைவன், தலைவியின் துயரை ஆற்ற மீண்டும் வருவார். அந்த நற்செயலுக்குண்டான பயனை நீ பெறுவதால் அழகுறுவாய்.
  • நீ சென்று, உரைப்பாயானால் ,அவர் நிச்சயம் வருவார், இந்தப்பூசல் எல்லாம் நீங்கும் , அவை எனக்கும் பெருமையை உண்டாக்கும்.

தன் தோள் உறுப்பு நலன் குறைந்ததனால் எழுந்த பூசலை தலைவர் உடனே தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறாள் தலைவி.

என்ன பூசல் அது?

பூசல் என்ற சொல்லுக்கு ஊரிலெழுந்த அலர், பூசல், பலரும் அலைக்கின்ற வார்த்தை, ஆரவாரம், பழிப்பேச்சு, மாறுபாடு, அலர், வளையல்கள் ஒன்றோடொன்று மோதி எழுகின்ற ஓசை, பழி, வீண் பழி, தோழி இயற்பழித்தல், தலைமகள் அதை மறுத்துரைத்தல் முதலியன, துன்பம் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பூசல் என்னும் சொல் சண்டை, வருத்தம் என்னும் பொருட்களில் பயின்று வந்தாலும் இங்கு ஆரவாரம் என்னும் பொருளிலேயே வந்துள்ளது. பூசல் என்னும் கருவிப் பெயர் அதனாலாகிய ஆரவாரத்தை உணர்த்துதலின் கருவியாகு பெயர். ‘வாடுதோட் பூசல்’ என்பது தோள்வாட்டங் கண்டு தோழி இயற்பழித்தலும் (தலைவனின் இயல்பைப் பழித்துரைத்தலும்) தலைமகள் அதை மறுத்துரைத்தலும் முதலியவற்றைக் குறிக்கும் என்றனர். மணக்குடவர் ஊரார் அலரைக் குறிக்கும் எனக் கொள்வார். இவற்றுள் மணக்குடவர் கொண்ட பொருளே பொருத்தமாக உள்ளது.

ஊரிலெழுந்த அலர் பூசல் எனக் குறிக்கப்பெற்றது.

நெஞ்சே! பிரிவால் இக்கொடுமை செய்த காதலர்க்கு என் தோள் வாட்டத்தால் ஊருக்குள் எழுந்த ஆரவாரம் பற்றிக் கூறிப் பெருமை அடையாயா? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தன் உடல் உறுப்புநலனழிதல் பற்றிக் காதலர் அறியவேண்டும் எனத் தலைவி விரும்புகிறாள்.

பொழிப்பு

என் தோள் வாட்டத்தாலே எழுந்த ஆரவாரத்தைக் கொடுமை செய்த தலைவருக்குக் கூறி நீ பெருமை அடையாயா?