இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1235கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்

(அதிகாரம்:உறுப்புநலனழிதல் குறள் எண்:1235)

பொழிப்பு (மு வரதராசன்): வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு வாடிய தோள்கள், (என் துன்பம் உணராத) கொடியவரின் கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.மணக்குடவர் உரை: கொடியாரது கொடுமையைச் சொல்லாநின்றன வளையோடே கூடப் பழையவாகிய அழகினை யிழந்த தோள்களும்.
இது தலைமகளாற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்துத் தோழி கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) கொடியார் கொடுமை உரைக்கும் - கவவுக்கை நெகிழினும் ஆற்றாதாட்கு இக்கால நீட்டத்து என்னாம் என்று நினையாத கொடியாரது கொடுமையைத் தாமே சொல்லாநின்றன; தொடியோடு தொல் கவின் வாடியதோள் - வளைகளும் கழன்று பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள், இனி அதனை யாம் மறைக்குமாறு என்னை?
('உரைக்கும்' என்பது அப்பொருண்மை தோன்ற நின்ற குறிப்புச் சொல். ஒடு - வேறு வினைக்கண் வந்தது. 'அவரோடு கலந்த தோள்களே சொல்லுவனவானால், அயலார் சொல்லுதல் சொல்ல வேண்டுமோ'? என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: வளைகளும் கழன்று பழைய இயற்கையழகும் இழந்த இத்தோள்கள் பிரிவினால் துன்புறுத்தும் காதலரின் கொடுமைகளைத் தாமே அறிவிக்கின்றன.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தொடியோடு தொல் கவின் வாடியதோள் கொடியார் கொடுமை உரைக்கும்.

பதவுரை: கொடியார்-கொடுமையுடையார்; கொடுமை-கொடிய செயல்; உரைக்கும்-சொல்லும்; தொடியொடு-தொடர் வளைகளுடன், கைவளையோடு; தொல்-பழமையான; கவின்-இயற்கை அழகு; வாடிய-குறைந்து போயுள்ள, இழந்த; தோள்-தோள்கள்.


கொடியார் கொடுமை உரைக்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொடியாரது கொடுமையைச் சொல்லாநின்றன;
பரிப்பெருமாள்: கொடியாரது கொடுமையைச் சொல்லாநின்றன;
பரிதி: கொடியார் கொடுமையால் பிரிந்த செயலை யான் உரைத்தேன் இல்லை;
காலிங்கர்: தோழி! 'நின்னிற் பிரியேன் பிரிவின் ஆற்றேன்' என்று தாம் முன்னம் உரைத்து மற்று அதனைத் தெரியாராய், என்னின் நீங்கிப் பிரிந்தவர் சாலக்கொடியர் அன்றே; மற்று, அவர் கொடுமையை யான் மறைப்பவும் இவை பிறர்க்கு இன்னர் என்று உரைக்கும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) கவவுக்கை நெகிழினும் ஆற்றாதாட்கு இக்கால நீட்டத்து என்னாம் என்று நினையாத கொடியாரது கொடுமையைத் தாமே சொல்லாநின்றன; [கவவுக்கை (கலித்தொகை: பாலைக் கலி.32) 'கவவுக்கை நெகிழாது' பொருள்: அகத்திடுதலையுடைய கையை நெகிழாமல் என்பது;]
பரிமேலழகர் குறிப்புரை: 'உரைக்கும்' என்பது அப்பொருண்மை தோன்ற நின்ற குறிப்புச் சொல்.

'கொடியாரது கொடுமையைச் சொல்லாநின்றன' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொடியவரின் கொடுமையைச் சொல்லுகின்றன', 'கொடியவராகிய என் காதலர் எனக்குச் செய்திருக்கிற கொடுமையை அவருக்குக் காட்டும்', 'கொடிய காதலரது கொடுமையை யாவர்க்கும் தெரிவிக்கும்', 'அன்பின்றிப் பிரிந்துள்ள கொடிய தலைவரது கொடுமையைச் சொல்லுகின்றன', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கொடிய காதலரது கொடுந்தன்மையை மற்றவர்க்கு எடுத்துரைப்பவையாக இருக்கின்றன என்பது இப்பகுதியின் பொருள்.

தொடியொடு தொல்கவின் வாடிய தோள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வளையோடே கூடப் பழையவாகிய அழகினை யிழந்த தோள்களும்.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகளாற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்துத் தோழி கூறியது
பரிப்பெருமாள்: வளையோடே கூடப் பழையவாகிய அழகினை யிழந்த தோள்களும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தலைமகள் கூறிய சொற்கேட்டு 'யான் முன்பே தோள் கண்டு அறிந்தேன் அவர் கொடிய ராதலை' என்று தலைமகளாற்றுதற் பொருட்டுத் தலைமகனை இயற்பழித்துத் தோழி கூறியது.
பரிதி: அழகு பெற்றதோளும் வளையும் உரைத்தது என்றவாறு.
காலிங்கர்: எவை எனின் நிலையெய்யாது ஆடும் தொடியும், தொல்லை அழகின் பொலிவு அழிய வாடிய தோளும்;
காலிங்கர் குறிப்புரை: எனவே யான் வருந்தி ஆற்றவும் இவை சாற்றுமாயின் என்னை செய்வது என்றவாறு.
பரிமேலழகர்: வளைகளும் கழன்று பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள், இனி அதனை யாம் மறைக்குமாறு என்னை? [அதனை - கொடியாரது கொடுமையை]
பரிமேலழகர் குறிப்புரை: ஒடு - வேறு வினைக்கண் வந்தது. 'அவரோடு கலந்த தோள்களே சொல்லுவனவானால், அயலார் சொல்லுதல் சொல்ல வேண்டுமோ'? என்பதாம்.

'வளையோடே கூடப் பழையவாகிய அழகினை யிழந்த தோள்களும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வளையல்களும் வனப்பும் சுருங்கிய தோள்கள்', 'முன் இருந்த பண்புகளை இழந்து மெலிந்து போயிருக்கிற என் கைகள் இந்த வளையல்களோடு இருந்தால்தான்', 'வளையல்களும் கழன்று பழைய வனப்பு மிகுந்த நின் கைகள்', 'வளையல்களோடு பழைய அழகையும் இழந்த தோள்கள்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

ஆடும் தோள்வளைகளும் பழைய அழகின் பொலிவு குறைந்த தோள்களும் என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
ஆடும் தோள்வளையும் பழைய அழகின் பொலிவு குறைந்த தோள்களும் கொடியார் கொடுமையை மற்றவர்க்கு எடுத்துரைப்பவையாக இருக்கின்றன என்பது பாடலின் பொருள்.
'கொடியார் கொடுமை' குறிப்பது என்ன?

எப்படியிருந்த இவள் இப்படி மெலிந்து போனாளே!

அணிந்திருந்த தொடிகளையும் நெகிழச்செய்து, முன்னம் இருந்த அழகினையும் இழந்து, வாடிக் கிடக்கும் தோள்களே காதலர் விரைந்து வாராமல் செய்யும் கொடுமையைப் புலப்படுத்தும்.
காட்சிப் பின்புலம்:
கணவர் பணி காரணமாக தொலைவு சென்றிருக்கிறார். அவர் பிரிவை ஆற்றமுடியாமல் தலைவி ஏக்கத்துடன் காத்திருக்கிறாள். அவரையே நினைந்து நினைந்து அழுது கொண்டிருந்ததால் கண்கள் பொலிவிழந்து கண்ணீரால் நிறைந்து காட்சியளிக்கின்றன. அவர் உடனிருந்த நாட்களில் பூரித்திருந்த தோள்கள், இப்போது மெலிவடைந்து வளைகள் கழன்றன. தனிமை நீண்டுகொண்டே போவதால் தன்னுடைய உறுப்புக்கள் எல்லாம் நலங்குறைந்து போனதை எண்ணி மனக்கசப்புடனே தனக்குள்ளே சொல்லி வருந்திக்கொண்டிருக்கின்றாள்.

இக்காட்சி:
கணவரது பிரிவால் ஊண் குறைந்து, உறக்கமும் தொலைந்து. தலைவியின் உறுப்புநலன்கள் குன்றுகின்றன. செழுமையான அவளது தோள்கள் மெலிந்தன; இதனால் தோளில் அணியும் வளை அங்கு நில்லாமல் கழன்றுகொண்டே இருக்கிறது. 'உன்னைப் பிரியமாட்டேன், பிரிந்தால் அதை எப்படித் தாங்குவேன்' என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அதை மறந்து என்னை நீங்கிப் பிரிந்ததால் அவர் மிகவும் கொடியர்தானே! அவர் செய்யும் இக் கொடுமையை நான் மறைக்க முடியாதவளாகவும் இருக்கிறேனே! என் வாடிய தோளிலிருந்து நெகிழ்ந்து கொண்டிருக்கும் வளை பார்ப்போர்க்கு அவர் கொடியர் என்று சொல்லுமே, பிரிந்து சென்று விரைந்து திரும்பி வராத 'கொடியவரின்' அருளற்ற தன்மையை வெளிக்காட்டிவிடுமே!' என்று புலம்புகிறாள் அவள்.

'தொடிக்கும் தோளுக்கும் வாடிய என ஒரே வினை வருகிறது. தொடி கழலுமே ஒழிய வாடாது. தோள் வாடி அழகு கெடுவது உண்டு. அதனால் ஈண்டு ஒடு என்னும் உருபு உடனிகழ்ச்சிப் பொருளில் வரவில்லை. இவ்விடத்துப் பரிமேலழகர் 'ஒடு வேறு வினைக்கண் வந்தது' என்று எழுதினார். வாடுதல் தொடிக்கு வேறுபடுதலால் தொடியொடு என்ற இடத்து ஒடு ஒரே வினையின் உடனிகழ்ச்சியில் வாராமல் வேறுவினைக்கண் வந்தது என்றார்' என்ற பரிமேலழகரின் உரை நயத்தை வியந்து பாராட்டுவார் ச சீனிவாசன்.
ஒரே சொல்லமைப்புக் கொண்ட ஈற்றடிகளை உடைய குறள்கள் ஐந்து இடங்களில் குறளில் காணப்படுகின்றன (1234 & 1235, 355 & 423, 115 & 118, 132 & 242, 311 & 312). இதற்கு முந்தைய குறளின் ஈற்றடியான 'தொல்கவின் வாடிய தோள்' என்பது அப்படியே ஈற்றடியாக இக்குறளிலும் ஆளப்பட்டுள்ளது. பணைநீங்கப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள் (1234; பொருள்: துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன) என்பது அப்பாடல்.

'கொடியார் கொடுமை' குறிப்பது என்ன?

'கொடியார் கொடுமை' என்றதற்குக் கொடியாரது கொடுமை, 'நின்னிற் பிரியேன் பிரிவின் ஆற்றேன்' என்று தாம் முன்னம் உரைத்து மற்று அதனைத் தெரியாராய் என்னின் நீங்கிப்பிரிந்தவர் சாலக்கொடியர் கொடுமை, இக்கால நீட்டத்து என்னாம் என்று நினையாத கொடியாரது கொடுமை, (என் துன்பம் உணராத) கொடியவரின் கொடுமை, பிரிந்து குறித்த காலத்துத் திரும்பாத கொடியவரது கொடுமை, பிரிவினால் துன்புறுத்தும் காதலரின் கொடுமைகள், கொடியவராகிவிட்ட என் காதலர் (எனக்குச் செய்திருக்கிற) கொடுமைகள், பிரிந்து சென்ற துணைவரின் கொடுமை, கொடிய காதலரது கொடுமை, அன்பின்றிப் பிரிந்துள்ள கொடிய தலைவரது கொடுமை, பிரிவுத் துயர் தந்த கொடியவரின் கொடுமை, கட்டியணைத்த கை சற்று நெகிழினும் ஆற்றாதவள் இத்துணைக் கால நீட்டியது என்னவாறென்று எண்ணாத கொடியவரின் கொடுமை, எனக்குத் துன்பத்தைக் கொடுத்த தலைவரின் கொடிய செயல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

கொடியார் கொடுமை என்ற தொடர்க்குக் கொடியவர் புரியும் கொடிய செயல் என்பது பொருள். அது இங்கு 'தலைவியைப் பிரிந்த கொடிய உள்ளத்தினர் செய்துள்ள கொடுமை' எனப்பொருள்படும். தலைவர் அப்படி என்ன கொடுமை செய்துவிட்டார் தன் காதலிக்கு? கணவர் பிரிவைத் தாங்கமுடியாமல் உடல் மெலிந்த தலைவியைப் பார்த்த அனைவரும் அவர் இன்னுமா ஊர் திரும்பவில்லை என இரக்கம் கொள்கின்றனர். அது அவளுக்கு வெறுப்புணர்ச்சியை ஊட்டுகிறது. இதற்கெல்லாம் அவர்தானே காரணம் என்ற எண்ணம் தோன்ற கொடியவர் என்று வைகிறாள். அவள் தாங்கமாட்டாதவள் என்று அறிந்தும் தலைவியை வருந்துமாறு விட்டு நீங்கியசெயலையும், தன் துயர் கண்டு இரங்காது. சென்றவர் விரைந்து திரும்பி வாராமல் கால நீட்சி செய்வதையும் அவள் கொடியார் கொடுமை எனச் சொல்கிறாள்.
வளையல் கழன்று விழும் அளவு மெலிந்து, தோள்கள் துவண்டு காதலனோடு கலந்திருந்த காலத்து இருந்த அழகை எல்லாம் இழந்த இந்தத் தோள்களே காதலனின் 'கொடிய செயலை' - அவர் பிரிவினால் அவள் துன்பப்படுகிறாள் என்றமையை - காட்டிவிடுமே; தன் துயரத்தை அவர் புரிந்துகொள்ளவில்லையே என்ற ஆற்றாமையால் உரிமையோடு அவரைக் கொடியவர் என்றும் அவரது செயலைக் கொடுமை என்றும் குறிக்கிறாள்.

'கொடியார் கொடுமை' என்ற தொடர் 'கொடிய' கணவரது 'கொடிய செயல்' என்பதைச் சொல்வது.

ஆடும் தோள்வளையும் பழைய அழகின் பொலிவு குறைந்த தோள்களும், பிரிந்துள்ள கொடிய காதலரது கொடுந்தன்மையை, மற்றவர்க்கு எடுத்துரைப்பவையாக இருக்கின்றன என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

பிரிவினால் வளைகள் நழுவும்அளவு காதலியின் தோள் உறுப்புநலனழிதல்.

பொழிப்பு

நழுவும் வளையல்களும் பழைய அழகை இழந்த தோள்களும் 'கொடிய' காதலரின் 'கொடுமை'யைத் தெரிவிக்கின்றன.