இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1233



தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்

(அதிகாரம்:உறுப்புநலனழிதல் குறள் எண்:1233)

பொழிப்பு (மு வரதராசன்): கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், (இப்போது மெலிந்து) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவைபோல் உள்ளன.

மணக்குடவர் உரை: காதலர் கூடின நாள்களிற் பூரித்ததோள்கள். அவர் நீங்கினமையை மிகவும் பிறர்க்கு அறிவிப்பன போலாகாநின்றன.
கருவியைக் கருத்தாவாகக் கூறினார். பிரிவிடை யாற்றாளாகிய தலைமகள் தனதுதோள் வாட்ட முற்றதுகண்ட தோழிக்குச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) மணந்த நாள் வீங்கிய தோள் - காதலர் மணந்த ஞான்று, இன்ப மிகுதியால் பூரித்த நின் தோள்கள்; தணந்தமை சால அறிவிப்ப போலும் - இன்று அவர் பிரிந்தமையை விளங்க உணர்த்துவது போல் மெலியா நின்றன, இது தகாது.
('அன்றும் அவ்வாறு பூரித்து இன்றும் இவ்வாறு மெலிந்தால், இரண்டும் கண்டவர் கடிதின் அறிந்து அவரைத் தகவின்மை கூறுவர்' என்பதாம்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: நானும் என் காதலரும் மணம் செய்துகொண்ட காலத்தில் பூரிப்பினால் பருத்த என் தேகம் இப்போது என் காதலர் பிரிந்திருப்பதால் உண்டான நிலைமையை முற்றிலும் விவரமாக எல்லாருக்கும் விளக்கிச் சொல்வதுபோல மிகவும் மெலிந்துவிட்டது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மணந்தநாள் வீங்கிய தோள் தணந்தமை சால அறிவிப்ப போலும்.

பதவுரை: தணந்தமை-நீங்கினமை, (கணவர் பிரிந்து சென்றுள்ளமை); சால-மிகுதியாக, நன்கு; அறிவிப்ப--உணர்த்துவனவாய்; போலும்-ஒத்திருக்கும்; மணந்த-மணம் செய்துகொண்ட, வரைந்துகொண்ட; நாள்-காலம்; வீங்கிய-பூரித்த; தோள்-தோள்.


தணந்தமை சால அறிவிப்ப போலும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் நீங்கினமையை மிகவும் பிறர்க்கு அறிவிப்பன போலாகாநின்றன;
பரிப்பெருமாள்: அவர் நீங்கினமையை மிகவும் பிறர்க்கு அறிவிப்பன போலா நின்றன;
பரிதி: நாயகர் பிரிந்தபோது வாடி எல்லார்க்கும் தூற்றியது என்றவாறு;
காலிங்கர்: தோழீ! அவர் இன்று நாளிடையிட்டு நின்ற பிரிவை யாம் மறைப்பவும் தாம் பெரிதும் அறிவிப்ப போலும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) இன்று அவர் பிரிந்தமையை விளங்க உணர்த்துவது போல் மெலியா நின்றன, இது தகாது.

'அவர் பிரிவை மிகவும் பிறர்க்கு அறிவிப்பன போலும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மெலிந்து அவர் பிரிவை அம்பலப்படுத்துவன போலும்', 'இப்பொழுது மெலிந்து அவர் பிரிந்தமையைத் தெளிவாகப் பிறர்க்கு அறிவிப்பன போலும்', 'இப்போது வாட்டமடைந்து, அவர் பிரிவினை நன்கு பிறர்க்கு அறிவிப்பனவாயின', 'பிரிவால் இளைப்பதால், அவர் பிரிந்துள்ளமையை முற்றிலும் அறிவிப்ப போலும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இப்பொழுது அவர் பிரிந்துள்ளமையை நன்றாகவே அறிவிப்ப போலும் என்பது இப்பகுதியின் பொருள்.

மணந்தநாள் வீங்கிய தோள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காதலர் கூடின நாள்களிற் பூரித்ததோள்கள்.
மணக்குடவர் குறிப்புரை: கருவியைக் கருத்தாவாகக் கூறினார். பிரிவிடை யாற்றாளாகிய தலைமகள் தனதுதோள் வாட்ட முற்றதுகண்ட தோழிக்குச் சொல்லியது.
பரிப்பெருமாள்: அவர் கூடின நாள்களிற் பூரித்ததோள்கள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: கருவியைக் கருத்தாவாகக் கூறினார். பிரிவிடை யாற்றாளாகிய தலைமகள் தனதுதோள் வாட்ட முறக்கண்டு தோழிக்குச் சொல்லியது.
பரிதி: நாயகரைப் புணர்ந்தபோது களித்ததோள்.
காலிங்கர்: யாவை எனில் இன்றுபோல் என்றும் இராதே. அவர் மணந்த நாள் வீங்கிய தோள்களானவை.
காலிங்கர் குறிப்புரை: எனவே இதனாலும் இயற்பட மொழிந்தமை பொருளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: காதலர் மணந்த ஞான்று, இன்ப மிகுதியால் பூரித்த நின் தோள்கள்.
பரிமேலழகர் குறிப்புரை: 'அன்றும் அவ்வாறு பூரித்து இன்றும் இவ்வாறு மெலிந்தால், இரண்டும் கண்டவர் கடிதின் அறிந்து அவரைத் தகவின்மை கூறுவர்' என்பதாம். [அன்றும்-கூடிய நாளிலும்; இன்றும்-பிரிந்த நாளிலும்; இரண்டும் - பூரித்தும் மெலிதலுமாகிய இரண்டையும்; தகவு இன்மை கூறுவர் என்பதாம்-குறித்த பருவத்து வாராமை, அன்பில்லாமை. சொல் தவறினமை முதலியவற்றைக் கூறிப் பழிப்பார் என்பதாம்; தகவு-குறித்த பருவத்தில் வருதல் என்பதாம்]

'காதலர் கூடின நாள்களிற் பூரித்ததோள்கள்', 'நாயகரைப் புணர்ந்தபோது களித்ததோள்', 'மணந்த நாள் வீங்கிய தோள்களானவை', 'மணந்த ஞான்று இன்ப மிகுதியால் பூரித்த நின் தோள்கள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கூடியநாளில் பெருத்த தோள்கள்', 'காதலரைக் கூடிய நாளில் பருத்த தோள்கள்', 'காதலர் மணந்த காலத்திலே மலிந்த நின் தோள்கள்', 'கூடிய நாளில் மகிழ்ச்சியால் பெருத்த தோள்கள்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

மணந்த காலத்திலே பெருத்த தோள்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மணந்தநாள் பெருத்த தோள்கள் இப்பொழுது அவர் பிரிந்துள்ளமையை நன்றாகவே அறிவிப்ப போலும் என்பது பாடலின் பொருள்.
'மணந்தநாள்' குறிப்பது என்ன?

செழுமையாயிருந்த தலைவியின் உடற்கட்டு கணவர் நீங்கியபின் வற்றலாகி விட்டதே!

கணவர் உடனிருந்த நாட்களில் பருத்திருந்த தோள்கள், இப்போது மெலிவடைந்துள்ளதால், அவர் நீங்கிச் சென்றுள்ளமையை நன்றாகச் சொல்பவை போல் உள்ளன.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகப் பிரிந்து சென்றுள்ளார் தலைவர். காதலிக்கு அப்பிரிவு ஆற்றொண்ணாத் துயர் தருகிறது. ஊணும் உறக்கமும் இழந்து உடல் மெலிந்து வாடுகிறாள்.
எந்த நேரமும் அவரையே நினைந்து அழுது கொண்டிருந்ததால், மலர்களே தன் கண்களைப் பார்த்து வெட்கப்படும் அளவு அழகாயிருந்த கண்கள் இப்பொழுது ஒளியிழந்து வாட்டமுற்றிருக்கின்றன; அவரை நினைந்து கலுழ்ந்து நீர் சொரிந்துகொண்டிருக்கும் கண்கள் விரும்பிய கணவர் அன்பு செய்யாமலிருப்பதாக ஊராரை எண்ண வைப்பதாக உள்ளனவே எனத் தலைவி வேதனையுற்றிருக்கிறாள்.

இக்காட்சி:
கணவரின் உறவு உண்டான காலத்தில் இன்பநிறைவால் பூரித்த என் தோள்கள் இப்பொழுது மெலிந்திருப்பது அவர் பிரிந்து சென்றுள்ளமையை நன்றாகவே அறிவிக்கின்றன என்கிறாள் தலைவி. மணந்து தலைவரோடு இணைந்து வாழ்ந்த காலத்தில் பருத்து அழகுடன் விளங்கிய தோள்களைக் கண்டவர்கள் இப்பொழுது அழகு குன்றி அவை மெலிவடைந்துள்ளமையைக் கண்ட பொழுது அவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுள்ளார் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வர்; பருத்திருந்த தலைவியின் தோள்கள் தம் மெலிவால் இப்பொழுது அவர் பிரிவை வெளிப்படுத்துவன ஆயிற்று.
தணந்தமை என்பதற்குப் பிரிந்துள்ளமை என்று பொருள். தலைவருடன் கலந்து இன்பமடைந்த மனைவி அவர் பிரிந்த நிலையில் அந்த இன்பத்தை எண்ணி ஏங்குகிறாள். அவர் உடன்இல்லா நிலையில் வருத்தத்தில் உடல் இளைத்து அழகு கெடுகிறது. இங்கு தோள்கள் பற்றிய நிலைகள் பேசப்படுகின்றன. தலைவன் அருகிருந்து நெருக்கம் காட்டியபொழுது கட்டமைவாய் இருந்த தோள்கள் பிரிவால் நிலை திரிந்தன. அன்று நன்கு பொலிவுற்றிருந்த தலைவி இன்று வாடிக் காணப்படுவதைத் தோள்கள் நன்கு அறிவிக்கின்றன. மகிழ்ச்சியால் உடல் செழிப்படைவதும் வருத்தத்தால் உடல் இளைப்பதும் இயல்பு. இங்கு தோள்கள் மெலிந்தன என்றது உடல் இளைத்ததைக் குறித்து நிற்கின்றது.

தலைவன் நீங்குகையில் தலைவியின் தோள்கள் சோர்வதைச் சங்கப் பாடல் ஒன்று இவ்வாறு கூறுகிறது:
மற்று-அவன் மணப்பின் மாண்நலம் எய்தி, தணப்பின் ஞெகிழ்ப, எம் தடமென்தோளே? (குறுந்தொகை:299:6-8 பொருள்: எமது பரந்தமெல்லிய தோள்கள், அவன் எம்மைமணந்தால், மாட்சிமைப்பட்ட அழகைப்பெற்று, அவன் பிரிந்தால், சோர்வன)

'மணந்தநாள்' குறிப்பது என்ன?

'மணந்தநாள்' என்ற தொடர்க்குக் காதலர் கூடின நாள்கள், காதலர் மணந்த ஞான்று, நாயகரைப் புணர்ந்தபோது, மணந்த நாள், காதலர் மணந்தபொழுது, கூடியநாள், காதலரைக் கூடிய நாள், மணந்து கொண்ட காலம், காதலர் மணந்த காலம், அவருடன் கூடிக் குலவிய நாள், காதலரை மணந்த நாட்கள், காதலர் மணந்த நாள், தழுவிக் கிடந்த போது, அவர் என்னை மணந்தபோது, கூடியிருந்த காலம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இவற்றுள் காதலர் மணந்த காலம் என்ற பொருள் சிறக்கும்.
மணந்தநாள் என்ற சொல் மணம் செய்து கொண்ட காலத்தைக் குறிப்பது. இல்லற வாழ்க்கையில் மறக்க முடியாத காலம் இதுவாகும். புதுமண இணையர்கள் கழித்த அந்த நாள்கள் இருவரது வாழ்க்கையின் பசுமையான நாள்களாம். தலைவி துய்த்த புது இன்பம் அவளது உடலைப் பூரிக்கச் செய்து அழகு கூட்டியது. அதை உடல் மெலிந்த நாட்களில் அவள் எண்ணிப்பார்க்கிறாள்.

'மணந்தநாள்' என்றதற்குக் காதலர் மணந்த காலம் என்பது பொருள்.

மணந்த காலத்திலே பெருத்த தோள்கள் இப்பொழுது அவர் பிரிந்துள்ளமையை நன்றாகவே அறிவிப்ப போலும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கணவர் நீங்கிச்சென்றுள்ளமையால் மெலிந்த தோள் உறுப்புநலனழிதல்.

பொழிப்பு

மணந்த காலத்திலே பெருத்த தோள்கள் (இப்பொழுது மெலிந்து) அவர் பிரிந்தமையை நன்றாகவே அறிவிப்பன போலும்