இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1231



சிறுமை நமக்கொழியச் சேண்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்

(அதிகாரம்:உறுப்புநலனழிதல் குறள் எண்:1231)

பொழிப்பு (மு வரதராசன்): இத்துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணிவிட்டன.

மணக்குடவர் உரை: நமக்குத் துன்பம் ஒழிய வேண்டி நெடுநெறிக்கண் சென்றாரை நினைத்துக் கண்கள் நறுவிய பூக்களைக் கண்டு நாணா நின்றன.
பலகால் அழுதலால் நிறங்கெட்டதென்றாவா றாயிற்று.

பரிமேலழகர் உரை: (ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி - இவ்வாற்றாமை நம்கண்ணே நிற்பத் தாம் சேணிடைச் சென்ற காதலரை நீ நினைந்து அழுதலால்; கண் நறுமலர் நாணின - நின் கண்கள் ஒளியிழந்து முன் தமக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன.
(நமக்கு என்பது வேற்றுமை மயக்கம். 'உள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப்பெயர் காரியத்திற்காய ஆகுபெயர். 'இவை கண்டார் அவரைக் கொடுமை கூறுவர், நீ ஆற்றல் வேண்டும்', என்பது கருத்து.)

சி இலக்குவனார் உரை: இவ் ஆற்றாமைத் துன்பம் நம்மிடம் இருக்குமாறு நம்மை விட்டு நீண்ட தொலை சென்றுள்ள காதலரை நினைத்து, அழுதலால் கண்கள் ஒளியிழந்து நல்ல மலரைக் கண்டு நாணி விட்டன.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சிறுமை நமக்கொழியச் சேண்சென்றார் உள்ளி கண் நறுமலர் நாணின.

பதவுரை: சிறுமை-துன்பம்; நமக்கு-நம் கண்ணே; ஒழிய-நிற்க, நம்மிடத்துத் தங்க, நம்மிடத்து நீங்க; சேண்-நெடுந்தொலைவு, தொலைவில்; சென்றார்-போனவர்; உள்ளி-நினைத்து; நறு-நல்ல, மணமுள்ள; மலர்-பூ; நாணின-வெட்கமுற்றன; கண்-விழி.


சிறுமை நமக்கொழியச் சேண்சென்றார் உள்ளி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நமக்குத் துன்பம் ஒழிய வேண்டி நெடுநெறிக்கண் சென்றாரை நினைத்து;
பரிப்பெருமாள்: நமக்குத் துன்பம் ஒழிய வேண்டி நெடுநெறிக்கண் சென்றாரை நினைத்து;
பரிதி: சிறுமை தீரத்தக்க காததூரம் பொருள்மேற் பிரிந்து போன நாயகரை நினைத்து;
காலிங்கர்: கேளாய் நாயகி! இன்பம் அனைத்தும் நீங்கித் துன்பம் ஒன்றும் நமக்கு நிலைநிற்பதாகத் துணிந்து, அருள் நீங்கிச் சேணிடைச் சென்றவரை நினைந்து வருந்திச் சேறலான்;
பரிமேலழகர்: (ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) இவ்வாற்றாமை நம்கண்ணே நிற்பத் தாம் சேணிடைச் சென்ற காதலரை நீ நினைந்து அழுதலால்; [சேணிடை-தொலைவிலுள்ள நாடு]
பரிமேலழகர் குறிப்புரை: நமக்கு என்பது வேற்றுமை மயக்கம். 'உள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப்பெயர் காரியத்திற்காய ஆகுபெயர்.

மணக்குடவர்/பரிப்பெருமாள் பரிதி ஆகியோர் 'துன்பம் ஒழிய வேண்டி (பொருள்தேடி) நெடுந்தொலைவு சென்றாரை நினைத்து' என்றும் காலிங்கர், பரிமேலழகர் இருவரும் 'ஆற்றாமை தம்கண் நிற்ப தொலைவு சென்ற காதலரை நினைத்து' என்றும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நமக்குத் துன்பம் தந்து தொலை சென்றாரை நினைந்தழுத', 'பிரிவிடை ஆற்றாமைத் துன்பம் நம்மிடம் நிற்ப, நெடுந்தொலைவு பிரிந்து சென்ற காதலரை நினைத்து', 'துன்பமெல்லாம் எனக்கு விட்டுவிட்டுத் (தாம் துன்பமின்றி) தூரதேசம் போயிருக்கிற என் காதலரை நினைத்து (நினைத்துக் கலங்கி)', 'பிரிவாற்றாமையாகிய தாழ்வு நமக்குண்டாகும்படி நெடுந்தூரம் போனவரை நினைந்து', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பிரிவாற்றாமையாகிய தாழ்வு நம்மிடம் நிற்ப நெடுந்தொலைவு போனவரை நினைத்து என்பது இப்பகுதியின் பொருள்.

நறுமலர் நாணின கண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்கள் நறுவிய பூக்களைக் கண்டு நாணா நின்றன.
மணக்குடவர் குறிப்புரை: பலகால் அழுதலால் நிறங்கெட்டதென்றாவா றாயிற்று.
பரிப்பெருமாள்: கண்கள் நறுவிய பூக்களைக் கண்டு நாணா நின்றன.
பரிப்பெருமாள் குறிப்புரை: பலகால் அழுதலால் நிறங்கெட்டதென்றாவா றாயிற்று. 'வரைந்து கோடற்குப் பொருள் தேடி வருகின்றேன்' என்று பிரிந்த தலைமகனை நினைந்து ஆற்றாளாய்த் தலைமகள் தனது பொலிவழிந்தது என்று கூறியது.
பரிதி: மாறாத கண் நீர் பொழிகையினாலே கண்ணைச் செங்கழுநீர் வென்றது என்றவாறு.
காலிங்கர்: இன்று நறுவிய குவளைச் செவ்விய மலரினை நின் கண்ணினை தாம் பெரிதும் நாணிற்று; எனவே பண்டு அவை நாணிக் கழியுமாறு கொழுவிய நின் சேயரிக்கண் இங்ஙனம் பொலிவு அழியப் போயினார் கொடியர் என்று இயற்பழித்தனள் தோழி என்றவாறு.
பரிமேலழகர்: நின் கண்கள் ஒளியிழந்து முன் தமக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன.
பரிமேலழகர் குறிப்புரை: 'இவை கண்டார் அவரைக் கொடுமை கூறுவர், நீ ஆற்றல் வேண்டும்', என்பது கருத்து.

'கண்கள் நறுவிய பூக்களைக் கண்டு நாணா நின்றன' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி செங்கழுநீர் என்றும் காலிங்கர் குவளை என்றும் மலர்களின் பெயர்களை சொல்லி உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கண்கள் மலருக்கு நாணின', 'தொடர்ந்து அழுதலால் அழகழிந்து நம் கண்கள் மணமலர்களுக்குத் தோற்று நாணமுற்றன', 'என் கண்கள் (இப்போது) வாசனையுள்ள மலர்களுக்குத் தோற்றுப் போயின', 'என் கண்கள் வாடி, நல்ல வாசனையுடைய மலர்களுக்கு வெட்கப்பட்டன. (முன் அம்மலர்களினுஞ் சிறந்திருந்து பின் இழிவடைந்தமையால்.)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

கண்கள் நல்ல மலர்களுக்குத் தோற்று வெட்கப்பட்டன என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிரிவாற்றாமையாகிய சிறுமை நம்மிடம் நிற்ப நெடுந்தொலைவு போனவரை நினைத்துக் கண்கள் நல்ல மலர்களுக்குத் தோற்று வெட்கப்பட்டன என்பது பாடலின் பொருள்.
'சிறுமை' என்பதன் பொருள் என்ன?

அன்று நாணிய குவளை மலர்கள் இன்று பழிதீர்த்துக் கொண்டனபோல் ஆயிற்றே!

'இத்துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவாகச் சென்றுவிட்ட காதலரை நினைத்து அழுவதனாலே, என் கண்கள் அழகிழந்து நல்ல மலர்களுக்கு நாணின' எனச் சொல்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
காதலர் பணி காரணமாக நெடுந்தொலைவு சென்றிருக்கிறார். தலைவிக்கு அவர் பிரிவை ஆற்றமுடியவில்லை. அதனால் அவள் உடல் மெலிந்தது. தூக்கமொழிந்த அவள் தோற்றத்தையும் அவளது கண்கள் சொரியும் நீரையும் மறைக்க முடியவில்லை. பிரிவுத்துன்பத்தால் உண்டான தன் உடல் நிறவேறுபாட்டாலும் அவளது அழகு குறைந்தது. மாலைப்பொழுது வந்தாலோ துயர் இன்னும் மிகுகிறது. உறக்கம் தொலைந்ததாலும் அவரையே நினைத்துக் கலங்கித் தொடர்ந்து அழுததாலும் அவளது கண்கள் தம் பொலிவை இழந்து காட்சியளிக்கின்றன.

இப்போது:
மகளிரின் விழிகளுக்கு மலரின் அழகு மற்றும் அதன் குளிர்மை ஒத்துள்ளமையால், அவற்றை மலர்களுக்கு ஒப்பிடுவர். தலைவி தன் அழகில் பெருமிதம் கொண்டவள். அவளது கண்கள் ஒளிவீசி பொலிவுடன் திகழ்பவை. காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று. (நலம் புனைந்து உரைத்தல் குறள் எண்: 1114: பொருள்: குவளை மலர்கள் காணும் தன்மைபெற்றுக் கண்டால், 'இவளுடைய கண்களுக்கு யாம் ஒப்பாகவில்லையே' என்று தலைகவிழ்ந்து நிலத்தை நோக்கும்.) என்று அவள் கண்களைப் பார்த்தால் மலர்கள் வெட்கப்படும் என்று என்று பலர் வியக்கும் வண்ணம் அவ்வளவு அழகாக இருந்தன அவள் கண்கள். ஆனால் இன்றோ சேயிடைச் சென்ற தலைவனை நினைந்து, அழுதழுது, ஆற்றாமையால் வாட்டமுறுகின்றன கண்கள். அதனால் முன்னர் வெட்கப்பட்டு நின்ற மலர்களை இப்போது பார்க்கத் தன் கண்கள் நாணுகின்றன என்று தலைவி எண்ணும்படி ஆயிற்று. மலர்க்கிருந்த பொலிவுகூட தம் கண்களுக்கு இல்லாமல் போனதே என அவள் வருந்துகிறாள்

இப்பாடலைத் தோழி கூற்றாகப் பரிமேலழகரும் தலைவி கூற்றாகப் பரிப்பெருமாளும் தோழி இயற்பழித்தலாகக் காளிங்கரும் கொள்கின்றனர். தலைவி கூற்றாகக் கொள்வது சிறந்தது.

'சிறுமை' என்பதன் பொருள் என்ன?

சிறுமை என்ற சொல்லுக்குத் துன்பம், சிறுமை, ஆற்றாமை, பிரிவுத் துன்பம் என்ற சிறுமை, பிரிவிடை ஆற்றாமைத் துன்பம், பிரிவாற்றாமையாகிய தாழ்வு, இப்பொறுக்க முடியாத வறுமை என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பொருளீட்டும் நோக்கில், வீட்டின் வறுமையைப் போக்கும் வகையில், மனைவியைப் பிரிந்து செல்கின்றான் கணவன் என்று உரை கண்டவர்கள் சிறுமை என்பதற்கு வறுமை எனப் பொருள் காண்பர்.
சிறுமை என்பதற்குத் துன்பம் என மணக்குடவரும் காலிங்கரும் பொருள் கூறினர். பரிமேலழகர் ஆற்றாமைத் துன்பம் என்றார். சிறுமை பல செய்து சீரழிக்கும் சூதின்... (சூது 934 பொருள்: துன்பம் பலசெய்து பெருமையைக் கெடுக்கும் சூதைவிட..) என்னும் பாடலில் சிறுமை என்ற சொல் துன்பம் என்ற பொருளில் ஆளப்பட்டது. சிறுமை என்பதற்கு இங்கும் துன்பம் அதாவது பிரிவிடை ஆற்றாமையாகிய துன்பம் என்பது பொருள்.

சிறுமை என்ற சொல் துன்பம் எனப்பொருள்படும்.

பிரிவாற்றாமையாகிய துன்பம் நம்மிடம் நிற்ப நெடுந்தொலைவு போனவரை நினைத்துக் கண்கள் நல்ல மலர்களுக்குத் தோற்று வெட்கப்படுமளவு நலமழிந்தன என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

காதலரை எண்ணியெண்ணி மாறாத நீர் பொழிகையினாலே தலைவியின் கண்உறுப்புநலனழிதல்.

பொழிப்பு

நம்மிடம் பிரிவுஆற்றாமைத் துன்பம் தங்க நெடுந்தொலைவு சென்றாரை நினைத்துக் கண்கள் பொலிவிழந்து நல்லமலர்களைக் காண வெட்கப்பட்டன.