இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1230பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்

(அதிகாரம்:பொழுதுகண்டு இரங்கல் குறள் எண்:1230)

பொழிப்பு (மு வரதராசன்): (பிரிவுத்துன்பத்தால்) மாயாமல் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்துசென்ற காதலரை நினைத்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.

மணக்குடவர் உரை: பொருள் தேடுதலையே தமக்கு இயல்பாக உடையவரை நினைத்து மயங்கின மாலைப்பொழுதிலே எனது சாகமாட்டாத உயிர் மெலியாநின்றது.
இது மாலையாலடர்ப்புண்ட தலைமகள் தலைமகன் அன்பும் அறனும் இலனென்று நினைத்துத் தன்னுள்ளே சொல்லியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) மாயா என் உயிர் -காதலர் பிரிவைப் பொறுத்து இறந்துபடாதிருந்த என் உயிர்; பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை மாயும் - இன்று பொருளியல்பே தமக்கியல்பாக உடையவரை நினைந்து, இம்மயங்கும் மாலைக்கண்ணே இறந்துபடாநின்றது.
('குறித்த பருவம் கழியவும், பொருள் முடிவு நோக்கி வாராமையின் சொல் வேறுபடாமையாகிய தம்மியல்பு ஒழிந்தவர் அப்பொருளியல்பே தம் இயல்பாயினார், காலம் இதுவாயிற்று, இனி நீ சொல்கின்றவாற்றால் பயனில்லை', என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: காதலரின் பிரிவைப் பொறுத்து இறந்து படாதிருந்த என் உயிர், பொருள் இயல்பே தமக்கு இயல்பாக உடையவரை நினைந்து மயக்கத்தைத் தரும் மாலைப்போதில் இறக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பொருள்மாலை யாளரை உள்ளி மாயா என் உயிர் மருள்மாலை மாயும்.

பதவுரை: பொருள்-சொத்து; மாலையாளரை-இயல்பாகவுடையவரை; உள்ளி-நினைத்து; மருள்-மயக்கம் தரும், மயங்கிய; மாலை-மாலைப் பொழுது; மாயும்-அழியும், இறந்துபடா நின்றது; என்-எனது; மாயா-இறவா; உயிர்-உயிர்.


பொருள்மாலை யாளரை உள்ளி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருள் தேடுதலையே தமக்கு இயல்பாக உடையவரை நினைத்து;
பரிப்பெருமாள்: பொருள் தேடுதலை செய்தலே தமக்கு இயல்பாக உடையவரை நினைத்து;
பரிதி: பொன்மேலே ஆசைவைத்த நாயகரை நினைந்து;
காலிங்கர்: தோழீ! நம்மை இனிது ஆளும் முறைமை அன்றித் தான் தெளித்த சொல் தேராது பொருள் வளர்த்தலை ஓர் இயல்பாக ஆண்டு 'அகன்றவரை நினைந்து நினைந்து;
பரிமேலழகர்: (இதுவும் அது.)இன்று பொருளியல்பே தமக்கியல்பாக உடையவரை நினைந்து;
பரிமேலழகர் குறிப்புரை: 'குறித்த பருவம் கழியவும், பொருள் முடிவு நோக்கி வாராமையின் சொல் வேறுபடாமையாகிய தம்மியல்பு ஒழிந்தவர் அப்பொருளியல்பே தம் இயல்பாயினார், காலம் இதுவாயிற்று, இனி நீ சொல்கின்றவாற்றால் பயனில்லை', என்பதாம். [குறித்த பருவம் - காதலர் வருவேன் என்று குறிப்பிட்டுக் கூறிய காலம்]

'பொருளியல்பே தமக்கியல்பாக உடையவரை நினைந்து' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொருள் மயக்கம் உடையவரை நினைந்து', 'பொருள் ஈட்டுதலையே தமக்கு இயல்பாகக் கொண்ட காதலரைநினைத்து', 'பொருள் சம்பாதிக்கும் முறையில் என்னைப் பிரிந்து போயிருக்கிற காதலர் வந்துவிடுவார் என்ற ஆசையால்', 'பொருள் கருதி அதன் தன்மையே தமக்கியல்பாகச் சென்றவரை நினைந்து', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொருள் தேடுதலையே தமக்கு இயல்பாக உடையவரை நினைத்து என்பது இப்பகுதியின் பொருள்.

மருள்மாலை மாயும் என் மாயா உயிர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மயங்கின மாலைப்பொழுதிலே எனது சாகமாட்டாத உயிர் மெலியாநின்றது.
மணக்குடவர் குறிப்புரை: இது மாலையாலடர்ப்புண்ட தலைமகள் தலைமகன் அன்பும் அறனும் இலனென்று நினைத்துத் தன்னுள்ளே சொல்லியது.
பரிப்பெருமாள்: மயங்கின மாலைப்பொழுதிலே எனதாய்ச் சாவமாட்டாத உயிர் மெலியாநின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மாலையாலடர்ப்புண்ட தலைமகள் 'தலைமகன் அன்பும் அறனும் இலன்' என்று நினைத்துத் தன்னுள்ளே சொல்லியது.
பரிதி: நமக்கு மயக்கம் செய்யப்பட்ட மாலை என்னும் பெண் மாயமாவது கண்டிருந்தும் என் உயிர் மாய்ந்தது இல்லை என்றவாறு.
காலிங்கர்: இம்மருண்மாலைப் பொழுதுடனே இனி மாய்வது போலும் என் மாயாத உயிர்;
காலிங்கர் குறிப்புரை: எனவே முன்னமும் மாயாதிருந்து வருந்தும் உயிர் வாழ்க்கைதன்னைப் பெரிது முனிந்து உரைத்தாள் என்றவாறு.
பரிமேலழகர்: காதலர் பிரிவைப் பொறுத்து இறந்துபடாதிருந்த என் உயிர் இம்மயங்கும் மாலைக்கண்ணே இறந்துபடாநின்றது.

'பிரிவைப் பொறுத்து இறந்துபடாதிருந்த என் உயிர் இம்மயங்கும் மாலைக்கண்ணே இறந்துபடாநின்றது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொறுத்த என்னுயிர் இம்மாலையில் போகும்', 'பகலும் இருளும் மயங்குகின்ற மாலைப்பொழுதில் சாகாமல் நின்ற உயிர் சாகின்றது', 'மாயாமல் இருந்துகொண்டிருக்கிற என் உயிர் என்னை நடுங்கச் செய்கிற இந்த மாலைப்பொழுதால் மாய்ந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்', 'மயக்கஞ்செய்யு மாலைப் பொழுதின்கண், என் அழியா உயிர், மறைந்தொழிகின்றது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

சாகாமல் நின்ற என் உயிர், மயங்குகின்ற மாலைப்பொழுதில் அழிகின்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொருள்மாலையாளரை நினைத்துச் சாகாமல் நின்ற என் உயிர், மயங்குகின்ற மாலைப்பொழுதில் அழிகின்றது என்பது பாடலின் பொருள்.
'பொருள்மாலையாளர்' யார்?

'நீங்கள் பொருள் தேடியது போதும். விரைவில் திரும்பிவந்து என் உயிரைக் காப்பாற்றுங்கள்' எனத் தலைவனை நினைந்து வேண்டுகிறாள் மனைவி.

பொருள்தேடிப் போயுள்ள தலைவரை நினைத்து, பிரிவுத் துன்பத்தாலே, போகாமல் நின்ற என் உயிரானது, மயங்கும் இந்த மாலைப்பொழுதால் அழியப்போகின்றதே!
காட்சிப் பின்புலம்:
இல்லறவாழ்வு சிறப்புறப் பொருளீட்டும் நோக்கில் கணவர் நெடுந்தொலைவு பயணம் சென்றிருக்கிறார். அவரின் பிரிவை ஆற்றமுடியாமல் தலைவி தனிமையில் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் உடலும் மெலிந்தது. தூக்கம் தொலைந்தது. பொழுது ஒருபக்கம் துன்பப்படுத்துகிறது. மாலைப்பொழுது எப்பொழுதும் அச்சமூட்டுகிறது. காதல்நோயை மலரச்செய்யும் அதை, உயிருண்ணும் வேல், மருள்மாலை, பைதல்கொள் மாலை, கொலைக்களத்துக் கொலைஞன், நோய் செய்யும் மாலை, பகையாய்க் காட்சியளிக்கும் மாலை, அழல்போலும், ஊராரை மயக்கும் மாலை என வைது கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
மாலைப்பொழுது வந்துவிட்டால் யாரோ அவளைக் கொல்லவருவது போல உணர்கிறாள் தலைவி. காதலனை நினைத்துத்தான் அவள் உயிர் போகாது இருக்கிறது; ஆனாலும் இரவும் பகலும் மயங்குதற்குரிய மாலை நேரம் வந்துவிட்டால் அதுவும் நீங்கிவிடும்போல் இருக்கிறது என்கிறாள். மாலைப்பொழுதின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் ஒவ்வொரு மாலையும் செத்துப் பிழைப்பதாக எண்ணுகிறாள். 'பொருள் தேடுதலைச் செய்தலே தமக்கு இயல்பாக உடையவர்' என்று காதலனை நினைத்து அவள் திட்டுவது 'இங்கே நான் ஒருத்தி காதல் நோயால் செத்துக் கொண்டிருக்கிறேன்; அங்கே அப்படி என்ன பொருள் தேடவேண்டியிருக்கிறது அவர்க்கு' என்பதை உணர்த்துகிறது. மாலைப்பொழுது தனிமையில் உள்ள தலைவிக்கு உயிர் போவதுபோன்ற துன்பம் தருகிறது. அவரைப் பிரிந்தபோது மாயாத அவள்உயிர் இம்மாலை தரும் துன்பத்தால் சாகும் என்கிறாள் தலைமகள்.

இக்குறளில் மாலைக்கு “மருள்‌” என்னும்‌ அடை கொடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. ‘மருண்மாலை’ என்ற தொடர்க்கு மயங்கும் மாலை, மயக்கந் தரும் மாலை, மயக்கஞ்செய்யு மாலை, மருட்டும் மாலை நேரம் என்றவாறு பொருள் கூறினர். இத்தொடர் இரவும் பகலும் மயங்குதற்குரிய மாலைப் பொழுது எனப்பொருள்படும். மாலை வந்து சூழும்‌ பொழுது தலைவரைப்‌ பிரிந்து தனித்துறையும்‌ துன்பம்‌ காரணமாகத்‌ தலைவிக்கு அடர்ப்புண்டாகிறது.

'பொருள்மாலையாளர்' யார்?

பொருள்மாலையாளர் என்றதற்கு பொருள் தேடுதலையே தமக்கு இயல்பாக உடையவர், பொன்மேலே ஆசைவைத்த நாயகர், பொருள் வளர்த்தலை ஓர் இயல்பாக ஆள்பவர், பொருளியல்பே தமக்கியல்பாக உடையவர், பொருள்தேடும் இயல்பினர், பொருள் மயக்கம் உடையவர், பொருள் ஈட்டுதலையே தமக்கு இயல்பாகக் கொண்ட காதலர், பொருள் தேடும் முறையில் சென்றுள்ள காதலர், பொருள் தேடுதலையே இயல்பாக உடைய துணைவர், பொருள் கருதி அதன் தன்மையே தமக்கியல்பாகச் சென்றவர், பொருள் இயல்பே தமக்கு இயல்பாக உடையவர், பொருள் ஈட்டுதலையே இயல்பாக உடைய தலைவர், பொருள் மயக்கமே பெரிதாக உடையவர், பொருளையே விரும்பி என்னைப் பிரிந்த காதலர், செல்வமே முக்கியமாக நினைப்பவர் என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பொருள்மாலையாளர் என்பதிலுள்ள மாலை என்ற சொல்லுக்கு இயல்பு எனப் பொருள் கொள்வர். எனவே பொருள்மாலையாளர் என்பது பொருள் செய்வதையே தமக்கு இயல்பாக உடையவர் எனப் பொருள்படும்.
பல காரணங்களுக்காக கணவன் -மனைவியிடை பிரிவு நிகழும். பொருள்வயிற் பிரிவும் பகைதணிவினை அல்லது வேந்தர்க்கு உற்றுழிப் பிரியும் பிரிவும் குறளில் குறிப்பால் உணர்த்தப்படுகின்றன. பரத்தையர் பிரிவு பற்றி குறள் கூறவே கூறாது. பொருள்மாலையாளர் எனச் சொல்லப்பட்டதால் பொருள்வயிற் பிரிவு சுட்டப்படுகிறது என அறியலாம்.
குடும்பநலம் மேம்பட பொருள் ஈட்டுவதற்காக கணவர் தொலைவு சென்றிருப்பது வழக்கமான ஒன்றுதான். தலைவிக்கும் அது நன்கு தெரியும். அவளிடம் சொல்லி விடைபெற்றுத்தான் சென்றிருக்கிறார். ஆயினும் பிரிவின் கொடுமை தாங்கமுடியாமல் 'பொருள் மயக்கம் கொண்டவர்' என்று அவரை வசை பாடுகிறாள்.

'பொருள்மாலையாளர்' என்பதற்கு பொருள் தேடுதலைச் செய்தலையே தமக்கு இயல்பாக உடையவர் என்பது பொருள்.

பொருள் தேடுதலையே தமக்கு இயல்பாக உடையவரை நினைத்துச் சாகாமல் நின்ற என் உயிர், மயங்குகின்ற மாலைப்பொழுதில் அழிகின்றது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பிரிவுத் துன்பத்திலும் போகாத என்னுயிரை இம்மாலைப்பொழுது செத்தொழியச் செய்கின்றது என்னும் தலைவியின் பொழுதுகண்டு இரங்கல்.

பொழிப்பு

பொருள் தேடுதலை இயல்பாய் உடையவரை நினைந்து பொறுத்திருந்த என் உயிர் மயங்குகின்ற மாலையில் அழியும்.