இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1229



பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து

(அதிகாரம்:பொழுதுகண்டு இரங்கல் குறள் எண்:1229)

பொழிப்பு (மு வரதராசன்): அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னப்போல் துன்பத்தால் வருந்தும்.

மணக்குடவர் உரை: என்மதி நிலைகலங்க மயக்கத்தை யுடைத்தாகிய மாலைக்காலம் வரும்பொழுது இப்பதியெல்லாம் மயங்கித் துன்பமுறாநிற்கும்.
மதி - மானம்

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) (இதற்கு முன்னெல்லாம் யானே மயங்கி நோயுழந்தேன்) மதி மருண்டு மாலை படர்தரும் போழ்து - இனிக் கண்டாரும் மதி மருளும் வகை மாலை வரும்பொழுது; பதி மருண்டு பைதல் உழக்கும் - இப்பதியெல்லாம் மயங்கி நோயுழக்கும்.
('மதி மருள' என்பது 'மதி மருண்டு' எனத் திரிந்து நின்றது. கூற்றமாகக் கருதிக் கூறினாளாகலின் 'மாலை படர்தரும் போழ்து' என்றாள். 'யான் இறந்து படுவல்' என்பதாம். 'மாலை மயங்கி வரும் போழ்து என் மதி நிலை கலங்கி நோயும் உழக்கும்' என்று உரைப்பாரும் உளர்.)

இரா சாரங்கபாணி உரை: மாலைக்காலம் மயங்கி வரும்பொழுது என் அறிவுநிலை கலங்கித் துன்பத்தால் வருந்தும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மாலை மருண்டு படர்தரும் போழ்து மதி பதிமருண்டு பைதல் உழக்கும்.

பதவுரை: பதி-நிலை, ஊர்; மருண்டு-கலங்கி; பைதல் உழக்கும்-துன்பம் உறும்; மதி-அறிவு, திங்கள்; மருண்டு-மயங்கி; மாலை-மாலைப் பொழுது; படர்தரும் போழ்து-பரவும் பொழுது, படைபோல மேலெழுந்து வரும்போது.


பதிமருண்டு பைதல் உழக்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இப்பதியெல்லாம் மயங்கித் துன்பமுறாநிற்கும்;
பரிப்பெருமாள்: இப்பதியெல்லாம் மயங்கித் துன்பம் உறாநிற்கும்;
காலிங்கர்: தோழீ! தன்பதியினுள் தணிந்து நில்லாது; தடுமாறிச் சாலத் துயர் உழக்கும் என் நெஞ்சானது;
பரிமேலழகர்: (இதுவும் அது.) (இதற்கு முன்னெல்லாம் யானே மயங்கி நோயுழந்தேன்) இப்பதியெல்லாம் மயங்கி நோயுழக்கும். [பதி எல்லாம் - ஊரெல்லாம்]

'இப்பதியெல்லாம் மயங்கித் துன்பமுறாநிற்கும்' என்றபடி மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகிய பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'தன்பதியினுள் தணிந்து நில்லாது; தடுமாறிச் சாலத் துயர் உழக்கும் என் நெஞ்சானது' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊரே மயங்கி வருந்தும்', 'இருக்கிற இடம் தடுமாறும்படி துன்பம் உண்டாகிறது', 'நான் மாத்திரமல்லள், ஊர்முழுவதும் மதிமயங்கித் துன்பப்படும்', 'இந்நாட்டில் உள்ளார் மயங்கித் துன்பத்தால் வருந்துவார்கள்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

என்நிலை கலங்கித் துன்பத்தால் வருந்தும் என்பது இப்பகுதியின் பொருள்.

மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்மதி நிலைகலங்க மயக்கத்தை யுடைத்தாகிய மாலைக்காலம் வரும்பொழுது.
மணக்குடவர் குறிப்புரை: மதி - மானம்*
* 'மனன்' என்பது பிரதிபேதம்.
பரிப்பெருமாள்: என்மனன் நிலைகலங்கித் துன்பம் உறாநிற்கும்; மயக்கத்தை யுடைத்தாகி மாலைப்பொழுது வருங்காலம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மதி என்பதனை முன்னே கூட்டுக. மதி-மனம். 'அறிவில்லாதவரைப் போல மயங்குதல் தக்கது அன்று; நமக்கு ஆற்றியிருத்தல் கடன்' என்ற தோழிக்குத் தன் குறிப்பின்றியும் இம்மாலையைக் கண்டபொழுதே என் மனம் மயங்கும் என்று தலைமகள் கூறியது.
காலிங்கர்: பெரும்பகல் எல்லாம் வருந்தி ஆற்றிய என் மனமானது வெண்மையும் கருமையும் வேற்றுமை செய்யும் பகலும் இரவும் போல் அன்றி நிறம் மயங்கு உருபிற்றாகிய மாலையானது இன்னணம் வந்து ஆர்க்கும் நேரத்து.
காலிங்கர் குறிப்புரை: மற்று அதனை அறியாது நீ ஆற்றுகில்லை என்று என்னை இடித்துச் சொல்வது என்னை? என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: இனிக் கண்டாரும் மதி மருளும் வகை மாலை வரும்பொழுது.
பரிமேலழகர் குறிப்புரை: 'மதி மருள' என்பது 'மதி மருண்டு' எனத் திரிந்து நின்றது. கூற்றமாகக் கருதிக் கூறினாளாகலின் 'மாலை படர்தரும் போழ்து' என்றாள். 'யான் இறந்து படுவல்' என்பதாம். 'மாலை மயங்கி வரும் போழ்து என் மதி நிலை கலங்கி நோயும் உழக்கும்' என்று உரைப்பாரும் உளர். [யான் இறந்து படுவல் - மதி மருளும் வகை மாலைக் காலம் வருவதால் நான் மாண்டு போவேன்]

'மதி மருளும் வகை மாலை வரும்பொழுது' என்றபடி மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் இப்பகுதிக்கு உரை கூற காலிங்கர் 'நிறம் மயங்கு உருபிற்றாகிய மாலைப் பொழுது ஆர்க்கும் நேரத்து' என்று பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'திங்களோடு மாலைக்காலம் வரும்போது', 'மாலைப் பொழுதை நினைத்தாலுங்கூட என் அறிவு கலங்கி', 'என் மதிமயங்கும்வண்ணம் மாலைப் பொழுது பரவிய காலத்தில்', 'கண்டார் அறிவு மயங்குமாறு மாலைப்போது வரும் காலத்தில்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அறிவுமயங்கும்வண்ணம் மாலைக்காலம் பரவிவரும்பொழுது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறிவுமயங்கும்வண்ணம் மாலைக்காலம் பரவிவரும்பொழுது என் பதிமருண்டு துன்பத்தால் வருந்தும் என்பது பாடலின் பொருள்.
'பதிமருண்டு' என்ற தொடர் குறிப்பது என்ன?

மாலை வந்தாலே கிறுக்குப் பிடித்ததுபோல் ஆகிவிடுகிறதாம் தலைவிக்கு.

அறிவு மயங்கும் படியாக மாலைப்பொழுது வந்து படர்கின்றபோது, என் அறிவுநிலை கலங்கித் துன்பமுறுகிறது என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
தலைவர் கடமை ஆற்றுவதற்காக அயல் சென்றிருக்கிறார். அவரின் பிரிவு தாங்கமுடியாமல் காதலி வருந்திக்கொண்டிருக்கிறாள். உடல் மெலிகிறது. உறக்கமும் கொள்ள முடியவில்லை. பொழுது வேறு துன்பப்படுத்துகிறது. மாலைப் பொழுது வந்தால் காதல்நோய் மலர்ந்துவிடுகின்றது. தன் துயர் மிகுவதற்குக் காரணம் மாலைப் பொழுதுதான் என்று எண்ணுகிறாள். உயிருண்ணும் வேல், மருள்மாலை, பைதல்கொள் மாலை, கொலைக்களத்துக் கொலைஞன், நோய் செய்யும் மாலை, அழல்போலும், கொல்லும் படை எனத் தன் வெறுப்பை அப்பொழுதின்மீது கொட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
நல்ல வெளிச்சமாய் இருந்த பகற்பொழுது முடிந்து மாலை வரும் நேரம். அது இருளுக்கு முந்தைய காலம். கணவர் அருகில் இல்லாதபோது, பகலும் இருளும் மயங்குகின்ற மாலைப்பொழுதில், மணந்த மகளிர்க்குக், காமநோயால் துன்பம் உண்டகும். இதோ இன்றும் மாலை மயங்கிப் படைபோல மேலெழுந்து வருகிறது. 'என் நிலை கலங்குகிறது. என்ன செய்யப்போகிறேனோ' என்ற எண்ணம் தலைவியைக் கிறங்க வைக்குகிறது.

இப்பாடலிலுள்ள பதி என்ற சொல்லுக்கு நிலை என்றும் ஊர் என்றும் இருவகையாகப் பொருள் கொள்கின்றனர். அதனால் இரு வேறுபட்ட உரைகள் காணப்படுகின்றன. நிலை என்று பொருள் கூறுபவர்கள் பதி மருண்டு என்பதற்கு நிலை கலங்கி என்றும் ஊர் என்று பொருளுரைத்தவர்கள் ஊர் மயங்கி என்றும் கூறி உரை கண்டனர்.
முன் ஒரு குறளில் (1116) 'பதி' என்ற சொல்லிற்கு நிலை என்று பொருள் கொள்ளப்பட்டது. அப்பொருளே இங்கும் பொருந்துவதாக உள்ளது. இதன்படி காதலன் நினைவு வந்து தவிக்கும் தலைவி 'மாலை மயங்கி பரவி வரும்பொழுது என் அறிவு நிலைதடுமாறி துயருறும்' எனச் சொல்வதாக உரை அமையும்.
'மாலை மருண்டு படர்தரும் போழ்து, மதி பதிமருண்டு பைதல் உழக்கும்' என்று வாசித்தால் இக்குறளின் பொருள் தெளிவாகும்.

வ சுப மாணிக்கம் மதி என்பதற்குத் திங்கள் எனப் பொருள் கண்டு 'திங்களோடு மாலைக்காலம் வரும்போது ஊரே மயங்கி வருந்தும்' எனப் பொருள் கூறுவார்.

ந.மு. வேங்கடசாமி நாட்டார், பரிமேலழகர் சுட்டியுள்ள உரையில் இருந்த பிழையை எடுத்துக்காட்டி விளக்கிச் சரியான பாடத்தையும் நிறுவியுள்ளார். பரிமேலழகர் பிறர் உரையாக எடுத்துக் காட்டியுள்ள உரை ஒவ்வொரு பதிப்பிலும் வேறுவேறாக உள்ளது. 'இத்தனை பதிப்புகளிலும் உண்மைப் பாடம் வெளிவராதிருப்பது நமக்கு வியப்பைத் தருகின்றது' என்று சொல்லி உண்மையான பாடம் எது என்றும் ஆராய்ந்து ந.மு. வேங்கடசாமி நாட்டார் தெளிவுபடுத்துகின்றார்: “நாவலர் 4, 7-ஆம் பதிப்புக்களில் உள்ள பாடத்தில் ('மாலை மயங்கி வரும் போழ்தென மதிநிலை கலங்கி நோயுழக்கும் என்று உரைப்பாருமுளர்'), “போழ்தென” என்றிருப்பதைப் “போழ்தென்” என்று திருத்திக் கொண்டால் பொருள் பொருத்தமுறுகின்றது. அதுவே உண்மைப் பாடமும் ஆம். ஓர் புள்ளியில்லாத குறையால் புலவர் பலரும் இங்ஙனம் மயங்குவாராயினர்”(மு வை அரவிந்தன் -"உரையாசிரியர்கள்").

'பதிமருண்டு' என்ற தொடர் குறிப்பது என்ன?

பதிமருண்டு என்ற தொடர்க்கு இப்பதியெல்லாம் மயங்கி, தன்பதியினுள் தணிந்து நில்லாது, என் அறிவுநிலை கலங்கி, (என் அறிவு கலங்கி) இடம் தடுமாறும்படி, இவ்வூர் முழுவதுமே என்னைப்போல் மயங்கி, இவ்வூரினர் மயங்கி, ஊரே மயங்கி, இவ்வூர் முழுவதுமே மயங்கி, ஊர்முழுவதும் மதிமயங்கி, இந்நாட்டில் உள்ளார் மயங்கி, உலகமே மயங்கி, இவ்வூரார் அனைவரும் மயங்கி, இந்நகர் முழுதும் மயங்கி, இந்த ஊரே மயங்கி, இந்த ஊரும் மருண்டு, இந்த ஊராரும் மயங்கி என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மணக்குடவரும் பரிமேலழகரும் பதி என்றதற்கு ஊர் என்று பொருள் கொள்வதால் பின்வந்த உரையாளர்களில் பலரும் பதிமருண்டு என்றதற்கு ஊர் மயங்கி எனப் பொருள் கொண்டு 'என் மதிமயங்கும்வண்ணம் மாலைப் பொழுது பரவிய காலத்தில், நான் மாத்திரமல்லள், ஊர்முழுவதும் மதிமயங்கித் துன்பப்படும்' என்ற பொருள்படும்படி உரை வரைந்தனர்.
பரிமேலழகர் தனது விளக்கவுரையில் ''மாலை மயங்கி வரும் போழ்து என் மதி நிலை கலங்கி நோயும் உழக்கும்' என்று உரைப்பாரும் உளர்' எனக் குறித்துள்ளார். இவ்வுரையின்படி பதிமருண்டு என்ற தொடர்க்கு நிலை கலங்கி எனப் பொருளாகிறது. இப்பொருள் காலிங்கரது உரைக்குப் பொருந்தி வருகிறது. இரா சாரங்கபாணியும் இப்பொருளிலேயே இக்குறளுக்கு உரை தருகிறார். பதிமருண்டு என்பதற்கு 'ஊரே மயங்கி', '(என்) அறிவுநிலை கலங்கி' இவற்றுள் எது சரி?
'பதி-நிலை என்னும் பொருளாதாதலைப் ........பதியிற் கலங்கிய மீன் (நலம் புனைந்து உரைத்தல், குறள் 1116 பொருள்: ...தம் இடத்திலிருந்து மயங்கித் திரியும் வானத்து மீன்கள்)’ என்ற குறளால் அறியலாம். அக்குறளுக்குப் பரிமேலழகர் வழங்கும் உரையில் 'ஓரிடத்து நில்லாது எப்பொழுதும் இயங்குதல் பற்றிப் 'பதியிற் கலங்கிய' என்றான் (தலைவன்)' எனக் குறித்தார். அதுபோல் இங்கும் 'பதிமருண்டு' என்னும் தொடர்க்கு நிலை கொள்ளாமல் தவித்தல் என்னும் பொருள் பொருந்தி வருகிறது. ஊரார் மயங்கி என்பதினும் நிலை கலங்கி (வருந்துவது) என்றுரைப்பது சிறக்கும்.

சி இலக்குவனார் 'திங்கள் (சந்திரன்) ஞாயிறு போன்று காலையில் தோன்ற வேண்டும். அறிவு மயங்கி மாலையில் வந்து விட்டதாகக் கருதுகின்றாள் தலைவி. அம்மதி வந்ததும் மாலைப்பொழுதில் நகர் முழுவதும் இனிய காட்சிகள் விளங்குகின்றன. காதலர்கள் தத்தம் துணையுடன் ஆடிப்பாடிப் பொழுது போக்குகின்றனர். இக்காட்சிகள் தலைவிக்குத் தலைவன் நினைப்பை மிகுதிப்படுத்துகின்றன. இதனால் தலைவி வருந்துகின்றாள். இக்குறட்பாவுக்குப் பிற உரையாசிரியர்கள் கூறும் உரை பொருத்தமற்றதாகத் தோன்றுகின்றது' என்று வேறொரு வகையில் பொருளுரைக்கிறார். இவர் பதிமருண்டு என்பதற்கு நகரைக் கண்டு உளங்கலங்கி எனப் பொருள் கூறுகிறார்.

பதிமருண்டு என்ற தொடர்க்கு நிலை கலங்கி என்பது பொருள்.

அறிவுமயங்கும்வண்ணம் மாலைக்காலம் பரவிவரும்பொழுது என்நிலை கலங்கித் துன்பத்தால் வருந்தும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தலைவியை நிலைகுலையச் செய்யும் மாலைப் பொழுதுகண்டு இரங்கல்.

பொழிப்பு

மாலைக்காலம் மயங்கி வரும்பொழுது என் நிலை கலங்கித் துன்பத்தால் வருந்தும்.