இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1228



அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை

(அதிகாரம்:பொழுதுகண்டு இரங்கல் குறள் எண்:1228)

பொழிப்பு (மு வரதராசன்):ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும் மாலைப் பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாக வருகின்றது.



மணக்குடவர் உரை: நெருப்பையொத்த இம்மாலைப் பொழுதிற்கு முன்பு தூதாகி வந்து இப்பொழுது கொல்லுதற்குப் படையுமாகி வரவல்லது ஆயன் ஊதுங்குழலோ?
இப்பொழுது வருத்துதலின் படை என்றாள்.

பரிமேலழகர் உரை: ஆயன் குழல் - முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல்; அழல் போலும் மாலைக்குத் தூதாகி - இது பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய்; கொல்லும்படை-அது வந்து என்னை கொல்வுழிக் கொல்லும் படையும் ஆயிற்று.
(பின்னின்ற 'போலும்' என்பது உரையசை. முன்னரே வரவுணர்த்தலின் தூதாயிற்று; கோறற் கருவியாகலின் படையாயிற்று. 'தானே சுடவல்ல மாலை, இத்துணையும் பெற்றால் என் செய்யாது'? என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அழல்போலும் மாலைக்கு ஆயன் குழல் தூதாகிக் கொல்லும் படைபோலும்.

பதவுரை: அழல்-தீ, நெருப்பு; போலும்-போன்ற, ஒத்திருக்கிற; மாலைக்குத்-மாலைப்பொழுதிற்கு; தூதாகி-தூது ஆய்; ஆயன்-இடையன்; குழல்-புல்லாங்குழல்; போலும்-ஒத்திருக்கிற, (அசை); கொல்லும்-கொல்லும்; படை-(கொலைக்) கருவி.


அழல்போலும் மாலைக்குத் தூதாகி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெருப்பையொத்த இம்மாலைப் பொழுதிற்கு முன்பு தூதாகி வந்து;
பரிப்பெருமாள்: நெருப்பையொத்த இம்மாலைப் பொழுதிற்கு முன்பு தூதாகி வந்து;
பரிதி: தீப்போலவரும் மாலைப் பொழுதிற்கும்;
காலிங்கர்: இனி இவ்விடத்து வரப்புகுகின்ற வடவைத்தீப் போலும் மாலைப் பொழுதுக்குத் தூதாகி வந்து;
பரிமேலழகர்: இது பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய்;

'நெருப்பையொத்த இம்மாலைப் பொழுதிற்கு முன்பு தூதாகி வந்து' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீப்போன்ற மாலைக்கும் தூதும் ஆகும்', 'நெருப்பைப்போல என் உடலைக் காம வேதனையால் கொதிக்கச் செய்கிற மாலைப் பொழுது வருகிறது என்ற சேதியை அறிவிக்கிற', 'தீப்போலச் சுடுகின்ற மாலைப் பொழுதிற்கு இடையன் குழலானது தூதாக வந்து', 'இப்பொழுது நெருப்பு போலச் சுடுகின்ற மாலைப்பொழுதுக்குத் தூதுமாகி', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு தூதாக வந்த என்பது இப்பகுதியின் பொருள்.

ஆயன் குழல்போலும் கொல்லும் படை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இப்பொழுது கொல்லுதற்குப் படையுமாகி வரவல்லது ஆயன் ஊதுங்குழலோ?
மணக்குடவர் குறிப்புரை: இப்பொழுது வருத்துதலின் படை என்றாள்.
பரிப்பெருமாள்: இப்பொழுது கொல்லுதற்குப் படையுமாகி வரவல்லது ஆயன் ஊதுங்குழலோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: அவர் பிரிவதன்மும் இன்பம் நுகர்தற்குக் காலம் பார்த்து இருந்துழி மாலை வருகின்றது என்று தூதாய் வருதலின், 'தூது' என்றாள். இப்பொழுது வருத்துதலின் படை என்றாள். அழல்போலும் மாலை என்றது பிரிந்த காலத்துக் கொடுமை செய்தலான் அதற்குக் குணமாகக் கூறினாள். இது, மாலையொடு வந்த குழலும் கொடிது என்று கூறியது.
பரிதி: தீப்போலவரும் மாலைப் பொழுதிற்கும் அதன் படை வருவதற்கும் தூது ஆயரின் குழல்; அது வந்து கொல்லும் என்றவாறு.
பரிதி: அதன் படை வருவதற்கும் தூது ஆயரின் குழல்; அது வந்து கொல்லும் என்றவாறு.
காலிங்கர்: நம்மைக் கொல்லும் கருவியானது அம்மாலை தன்வரவு அறிந்தும் சூழாது வரும் ஆயன் விளிக்குங் குழற் கருவி போலும்; எனவே இனி அக்குழல்விளி கேட்பினும் ஆற்றமாட்டேன்;
காலிங்கர் குறிப்புரை: அதனால் அம்மாலைப் பொழுது வரின் என் செய்வல் என்று இங்ஙனம் கூறினாள் தலைமகள் என்றவாறு.
பரிமேலழகர்: முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல் அது வந்து என்னை கொல்வுழிக் கொல்லும் படையும் ஆயிற்று. [கொல்வுழி-கொல்லுமிடத்து]
பரிமேலழகர் குறிப்புரை: பின்னின்ற 'போலும்' என்பது உரையசை. முன்னரே வரவுணர்த்தலின் தூதாயிற்று; கோறற் கருவியாகலின் படையாயிற்று. 'தானே சுடவல்ல மாலை, இத்துணையும் பெற்றால் என் செய்யாது'? என்பதாம்.

'இப்பொழுது கொல்லுதற்குப் படையுமாகி வரவல்லது ஆயன் ஊதுங்குழலோ?' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'புல்லாங்குழல் என்னைக் கொல்லும் படையாகும்', 'இடையனுடைய புல்லாங்குழலின் ஓசைகூட என்னைக் கொல்லவரும் ஆயுதம் போல் அச்சமுண்டாக்குகிறது', 'பின் கொல்லும் ஆயுதம்போலவுமிருக்கின்றது', 'ஆயனுடைய புல்லாங்குழல், அது வந்து என்னைக் கொல்லும்போது கொல்லும் கருவியும் ஆயிற்று' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

ஆயனின் புல்லாங்குழல் என்னைக் கொல்லும் படைக்கருவி போலும் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு தூதாக வந்த ஆயன் குழல் என்னைக் கொல்லும் படைக்கருவி போலும் என்கிறாள் தலைவி என்பது பாடலின் பொருள்.
'கொல்லும் படை' குறிப்பது என்ன?

புல்லாங்குழல் ஓசை கேட்கிறதே! மாலைப் பொழுது வந்துவிட்டதே! என் செய்வேன்? என்கிறாள் காதலி.

நெருப்பைப் போலச் சுடுகின்ற மாலைப் பொழுது வருவதை அறிவிக்கும் ஆயனுடைய புல்லாங்குழல், என்னைக் கொல்லும் கருவியாக உள்ளதே என வருந்திச் சொல்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
தலைவன் தொழில் காரணமாகப் பிரிந்து சென்றுள்ளதால் அதை ஆற்றமாட்டாத காதலி வருந்திக் கொண்டிருக்கிறாள். அவனையே எப்பொழுது நினைத்துக்கொண்டிருப்பதால் அவளது உடல் மெலிந்து உறக்கமுமின்றி இருக்கிறாள். பொழுதும் துன்பத்தை மிகுவிக்கிறது. விடியற்காலை பார்த்த தோற்றத்தில் நண்பகலில் அவள் இல்லை. மயங்கும் மாலை நெருங்கினால் முற்றிலும் மாறித் துவண்டு போகிறாள். மாலைப் பொழுதுக்கு நான் செய்த தீமைதான் என்னவோ? கணவர் உடன் இல்லாதவிடத்து மாலைப்பொழுது, கொலைக்களத்துக் கொலைஞர் போல, என்னுயிரைக் கொண்டுபோக வருகிறதே! எனப் புலம்பிக்கொண்டிருக்கிறாள்.

இப்போது:
மாலைப் பொழுது நெருப்பாய் நெருங்கிவர, தொலைவில் கேட்கும் ஆயனின் புல்லாங்குழலின் ஓசை உயிர் நீக்க வரும் படைக்கருவி போலும் எனத் தலைவி கூறுகிறாள். மாலைக் காலம் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் நேரம். அமைதியான மாலை நேரத்தில் தொலைவில் இருந்து வரும் ஆயனின் புல்லாங்குழல் இசை கேட்பதற்கு இன்பமாகவும் உள்ளத்திற்கு இதமாகவும் இருக்கும். ஆனால் காதலன் உடன் இல்லாத நிலையில் அவன் நினைவால் தனிமையில் வாடும் தலைவிக்கோ அது துன்ப காலத்தை அறிவிக்கும் தூதுவனாகவும் தன்னைக் கொல்லவரும் படைக்கருவி போலவும் தோன்றுகிறது.
சிற்றூர்களில் மேய்ச்சலுக்குப் போன மாடுகள் மாலை நேரத்தில் வீடு திரும்பும். பல திசைகளில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளைத் திரும்பத் தன்னிடம் வந்து சேர்வதற்காக ஆயன் புல்லாங்குழலை எடுத்து ஊதுவான். மாடுகளை அழைப்பதற்காக ஊதப்பட்ட குழல் ஓசை தலைவிக்குக் கேட்கிறது. மாலை நேரம் நெருங்குகிறது என்பதை அறிகிறாள். காமநோயால் ஏற்கனவே வருந்திக்கொண்டிருக்கும் அவளுக்கு ஒருபுறம் மாலைநேரம் நெருப்பாகத் தோன்றுகிறது. மறுபக்கம் எங்கிருந்தோ காற்றினிலே வரும் குழல் ஓசையை, கொல்வதற்குப் பயன்படுத்தப்படும் கருவி தன்னை நெருங்குவதுபோல் உணர்கிறாள்.

அழல் என்பதற்கு மற்ற தொல்லாசிரியர்கள் வாளா நெருப்பு என்று உரைக்க காலிங்கர் பலமடங்கு மேலே சென்று 'உலகம் அழியும் ஊழிக் காலத்தில் தோன்றக் கூடிய வடவைத்தீ' என்று பொருள் கூறி மாலைப்பொழுது வரின் என் செய்வல் எனத் தலைவி பெரிதும் கவல்வதாக விளக்குவார்.

முத்தொள்ளாயிரத்தில், சோழ மன்னனின் காதலி, அவனைப் பிரித்த துயரில், இக்குறட் கருத்தைத் தழுவிய, குழலோசையை வெறுத்துப் பேசுவதாக உள்ள பாடல் ஒன்று உள்ளது:
தெண்ணீர் நறுமலர்த்தார் சென்னி இளவழகன்
மண்ணகம் காவலனே என்பரால், மண்ணகம்
காவலனே ஆனக்கால் காவானோ மாலைக்கண்
கோவலர்வாய் வைத்த குழல்.
(முத்தொள்ளாயிரம் பாடல் 40 பொருள்: தெளிந்த நீர்நிலைகளில் பூத்த செங்கழுநீர் மலர்களை மாலையாய் தொடுத்த அணிந்த சென்னி என்றும் இளவளவன் என்றும் பாராட்டப்படுகிற சோழன் உலகத்தைக் காக்கிறான் என்று சொல்லுகிறார்கள். அவன் கட்டளை இட்டு தடுக்க மாட்டானா இந்த மாலை பொழுது வந்துவிட்டதை அறிவிக்கும் ஆயன் வாய்வைத்து ஊதுகின்ற புல்லாங்குழலை)

'கொல்லும் படை' குறிப்பது என்ன?

கொல்லும் படை என்பதற்கு உயிர்நீக்கும் கருவி என்று பொருள்.
காதல் கொண்ட மகளிர்க்கு எல்லாக் காலமும் வருத்தமுளவாயினும், விடியலும் நண்பகலும் போல் அல்லாது மாலைப்பொழுது மிகுந்த துயர் அளிக்கும். இங்கு மாலைப் பொழுதை தலைவி தீ என்றே அழைக்கிறாள். அந்த அளவு வாட்டி வதைப்பதாம் மாலைநேரம். காதலன் உடன் இல்லாத இரவு கொடுமையானது என்பதால் மாலை துன்பத்திற்கு காரணமாகின்றது. தலைவி ஏற்கனவே தலைவன் பிரிவால் காமநோய் மிகுந்து உடலாலும் உள்ளத்தாலும் வேதனையுற்றிருக்கிறாள். அப்பொழுது தொலைவிலிருந்து வரும் புல்லாங்குழலிசை கேட்கிறது. மேய்புலன்களிலிருந்து மாடுகளை ஒன்று சேர்த்து ஊருக்குள் ஓட்டிவருவதற்காக ஆயர் ஊதும் புல்லாங்குழலிருந்து வரும் இன்னிசை அது. காதுக்கு இனிமையாக இருக்கவேண்டிய அவ்விசை, பிரிவின் துயரத்தில் இருக்கும் தலைவிக்கு மாலைக் காலத்தை அறிவிக்கும் செய்தியாளாக மட்டுமே தெரிகிறது. ஐயோ மாலை வந்துவிட்டதா! அது என்னைக் கொன்றுவிடுமே! இந்தக் குழலோசை எனக்குத் கொல்லும் கருவியாகத் தோன்றுகிறதே என அவள் அரற்றுகிறாள். நெருப்பாய் வரவுள்ள மாலைநேரத்தை அறிவித்துத் தன் துயரைக் கூட்டிய புல்லாங்குழலிசை கொலைக்கருவிதானே! அந்தப் புல்லாங்குழல்தானே மாலையை வரவழைத்தது எனக் குழலைப் பழிக்கிறாள். இவ்விதம் அழல்போலும் மாலைக்கு ஆயன் குழல் தூதாகிக் கொல்லும் படைபோலும் எனத் தலைவி மாலைப் பொழுதின் கொடுமையை உரைக்கிறாள்.

'கொல்லும் படை' என்பது ஆயன் குழலைக் குறிக்கும்.

நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு தூதாக வந்த ஆயனின் புல்லாங்குழல் என்னைக் கொல்லும் படைக்கருவி போலும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புல்லாங்குழல் வரவழைத்த மாலைப் பொழுதுகண்டு இரங்கல்.


பொழிப்பு

ஆயனின் புல்லாங்குழல் ஓசை தீப்போன்ற மாலைப்பொழுது நெருங்குவதைத் தூதாக வந்து அறிவித்து என்னைக் கொல்லும் கருவியுமாகிற்று.