இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1225காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை

(அதிகாரம்:பொழுதுகண்டு இரங்கல் குறள் எண்:1225)

பொழிப்பு (மு வரதராசன்): யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப்பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?மணக்குடவர் உரை: காதலர் பிரிவதன் முன்னம், பிரிவரென்று அச்சத்தைத் தந்த காலைப்பொழுது பிரிந்தபின்பு வருத்தாது ஒழிதற்கு யான் செய்த நன்மை யாதோ? அவரோடு இன்பம் நுகர்தற்கு நட்பாயிருந்த மாலைப்பொழுது பிரிந்த பின்பு வருத்துவதற்கு யான் செய்த பகைமை யாதோ?
இது மாலையது பண்பின்மையை உட்கொண்டு தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) (காலையும், மாலையும், அவர் கூடிய ஞான்று போலாது இஞ்ஞான்று வேறுபட்டு வாராநின்றன; அவற்றுள்) யான் காலைக்குச் செய்த நன்று என் - யான் காலைக்குச் செய்த உபகாரம் யாது? மாலைக்குச் செய்த பகை எவன் - மாலைக்குச் செய்த அபகாரம் யாது?
(கூடிய ஞான்று பிரிவர் என்று அஞ்சப்பண்ணிய காலை, அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது என்னும் கருத்தால், 'நன்று என்கொல்' என்றும், 'கூடிய ஞான்று இன்பம் செய்து வந்த மாலை அஃது ஒழிந்து இஞ்ஞான்றும் அளவில் துன்பஞ் செய்யாநின்றது' என்னும் கருத்தால், 'பகை எவன்கொல்'? என்றும் கூறினாள். பகை - ஆகுபெயர். தன்னோடு ஒத்த காலைபோலாது மாலை தன் கொடுமையால் துன்பம் செய்யாநின்றது என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: காலையும் மாலையும் அவரை முயங்கிய காலத்து உள்ளனபோல் இன்பம் செய்யாது வேறுபட்டுத் துன்பம் செய்கின்றன. அவற்றுள் காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்குச் செய்த தீமை என்ன?


பொருள்கோள் வரிஅமைப்பு:
யான் காலைக்குச் செய்த நன்று என்கொல்? மாலைக்குச் செய்த பகை எவன்கொல்?

பதவுரை: காலைக்கு-காலைப் பொழுதுக்கு; செய்த-செய்த, இயற்றிய; நன்று-உதவி; என்கொல்-என்னவோ?, யாதோ?; எவன்கொல்-என்னவோ?, யாதோ? யான்-நான்; மாலைக்குச்-மாலைப்பொழுதிற்குச்; செய்த-இயற்றிய; பகை-தீமை.


காலைக்குச் செய்தநன்று என்கொல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காதலர் பிரிவதன் முன்னம், பிரிவரென்று அச்சத்தைத் தந்த காலைப்பொழுது பிரிந்தபின்பு வருத்தாது ஒழிதற்கு யான் செய்த நன்மை யாதோ?
பரிப்பெருமாள்: காதலர் பிரிவதன் முன்னம், பிரிவரென்று அச்சத்தைத் தந்த காலைப்பொழுது பிரிந்தபின்பு வருத்தாது ஒழிதற்கு யான் செய்த நன்மை யாதோ?
பரிதி: காலைப் பொழுதுக்குச் செய்த நன்றி ஏது?
காலிங்கர்: நெஞ்சே! மற்று யாம் காலைக்குச் செய்த நன்மைதான் என்கொலோ?
பரிமேலழகர்: (இதுவும் அது.) (காலையும், மாலையும், அவர் கூடிய ஞான்று போலாது இஞ்ஞான்று வேறுபட்டு வாராநின்றன; அவற்றுள்) யான் காலைக்குச் செய்த உபகாரம் யாது? [கூடிய ஞான்று - காதலர் புணர்ந்த காலத்தில்]

யான் காலைக்குச் செய்த நன்மை யாது? என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காலைப் பொழுதுக்கு நான் செய்த நலம் என்ன?', 'காலை வேளைக்கு நான் செய்த உபகாரம் என்ன', 'காலையும் மாலையும் வெவ்வேறு வகையாக வருகின்றன. காலைக்கு நான் செய்த நன்மை யாது?', 'நான் காலைப் பொழுதுக்குச் செய்த நன்மை என்ன?', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நான் காலைப் பொழுதிற்குச் செய்த நன்மை என்னவோ? என்பது இப்பகுதியின் பொருள்.

எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரோடு இன்பம் நுகர்தற்கு நட்பாயிருந்த மாலைப்பொழுது பிரிந்த பின்பு வருத்துவதற்கு யான் செய்த பகைமை யாதோ?
மணக்குடவர் குறிப்புரை: இது மாலையது பண்பின்மையை உட்கொண்டு தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: அவரோடு இன்பம் நுகர்தற்கு நட்பாயிருந்த மாலைப்பொழுது பிரிந்த பின்பு வருத்துவதற்கு யான் செய்த பகைமை யாதோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மாலையது பண்பின்மையை உட்கொண்டு தலைமகள் கூறியது.
பரிதி: மாலைப் பொழுதுக்குச் செய்த குற்றம் யாதோ என்றவாறு.
காலிங்கர் ('யாம்' பாடம்): அஃது அன்றி மற்று இம்மாலைக்கு, யாம் செய்த பகைதான் என்கொலோ? காலிங்கர் குறிப்புரை: எனத்தன் மாட்டு ஒரு பிழை செய்யாதவை பேரிடர் செய்கின்ற இது பெரும்பாவி என்றவாறு.
பரிமேலழகர்: மாலைக்குச் செய்த அபகாரம் யாது?
பரிமேலழகர் குறிப்புரை: கூடிய ஞான்று பிரிவர் என்று அஞ்சப்பண்ணிய காலை, அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது என்னும் கருத்தால், 'நன்று என்கொல்' என்றும், 'கூடிய ஞான்று இன்பம் செய்து வந்த மாலை அஃது ஒழிந்து இஞ்ஞான்றும் அளவில் துன்பஞ் செய்யாநின்றது' என்னும் கருத்தால், 'பகை எவன்கொல்'? என்றும் கூறினாள். பகை - ஆகுபெயர். தன்னோடு ஒத்த காலைபோலாது மாலை தன் கொடுமையால் துன்பம் செய்யாநின்றது என்பதாம். [அஃது ஒழிந்து - அஞ்சப் பண்ணுவது ஒழிந்து; அஃது ஒழிந்து - இன்பம் செய்வது ஒழிந்து]

மாலைக்குச் செய்த பகை யாது? என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பகை என்ற சொல்லுக்குப் பரிதி குற்றம் என்றும் பரிமேலழகர் அபகாரம் என்றும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மாலைப் பொழுதுக்கு நான் செய்த தீமை என்ன?', 'இந்த மாலை வேளைக்கு நான் செய்துவிட்ட அபகாரம் என்னவோ தெரியவில்லை!', 'மாலைக்கு நான் செய்த தீமை யாது?', 'மாலைக்குச் செய்த தீமை என்ன?' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

மாலைப் பொழுதிற்குச் செய்த தீமைதான் என்ன? என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
நான் காலைப் பொழுதிற்குச் செய்த நன்மை என்னவோ? மாலைப் பொழுதிற்குச் செய்த தீமைதான் என்ன? என்பது பாடலின் பொருள்.
பொழுதுகள் ஏன் வேறுபட்டுத் தோன்றுகின்றன தலைவிக்கு?

மாலைப்பொழுது மட்டும் பழி தீர்ப்பதுபோல் என்னை ஏன் இத்துணை துன்புறுத்துகிறது?

காலைப் பொழுதுக்கு யான் செய்த நன்மை என்னவோ? மாலைப்பொழுதுக்கு நான் செய்த பகைச்செயல்தான் என்ன? - எனக் கேட்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாகக் கணவர் பிரிவில் உள்ளார். பிரிவாற்றாமையால் தலைவி மிகுந்த துயருறுகிறாள். மாலைநேரம் தங்கவொண்ணா துன்பம் தருவதாக அவள் உணர்கிறாள்:
'தான் தன் கணவரோடு கூடியிருந்த காலத்து வந்த மாலை இப்பொழுதுபோல் உயிரை உண்ணும் வேல்போல் இருந்ததில்லையே!'; 'மயங்கித் தோன்றும் மாலைப்பொழுதும் தன்னைப்போல் துன்பம் அடைவதால் அதன் துணையும் வன்கண்மை உடையது போலும்!'; 'குளிருடன் வந்து துன்பறுத்தும் மாலைப்பொழுது பிரிவுத் துன்பத்தை நாளும் கூட்டும்படியாகவே வருகின்றதே!'; 'தலைவர் தன்னுடன் இல்லாதபோது வரும் மாலைப்பொழுது கொலைக்களத்திலுள்ள கொலைஞர் போலல்லவா தம்மை அணுகுகிறது!'
இவ்வாறு தலைவரில்லாத ஒவ்வொரு மாலையும் தனக்கு அச்சமூட்டிக்கொண்டிருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாள் மனைவி.

இக்காட்சி:
காலைப் பொழுதுக்கு யான் செய்த நன்மை என்னவோ? மாலைப்பொழுது, இப்பொழுது, துயரம் தருவதற்கு, அதற்கு நான் செய்த பகைச்செயல்தான் என்ன? என்று புலம்புகிறாள் தலைமகள் இங்கு.
கணவர் பிரிந்துசென்றுள்ள காலத்தில் காலையில் தான் துன்பம் எய்துவதில்லை; ஏனென்றால் 'காலைப்பொழுதுக்குத் தான் ஏதாவது நன்மை செய்திருப்பேன் போலும். அதனால்தான் அது தன்னைத் துன்புறுத்துவதில்லை' என்கிறாள் தலைவி.
ஆனால் மாலைப்பொழுதில் காதல் நோய் மிகுந்த துயர் உண்டாக்குகின்றது. கணவர் உடனிருந்த காலமெல்லாம் இனிமையாய்க் காட்சி தந்த மாலைப்பொழுது, அவர் பிரிந்துள்ள இப்பொழுது தாங்கவொண்ணா துன்பம் தருவதற்கு, அதற்கு நான் ஏதாவது தீங்கு செய்துவிட்டேனோ?' என்று அவள் ஆற்றமாட்டாமல் கூறுகிறாள். என்ன நன்மை, தீமை செய்தாள் என்பது சொல்லப்படவில்லை.
மாலையில் தனியாக இருக்கும்போது தலைவருடன் கூடி இருந்த காதல் நினைவுகள் வலிய வந்து துன்புறுத்துகின்றன. இதைத்தான் 'மாலைப்பொழுதுக்கு நான் என்ன தீமை செய்துவிட்டேன் என்று என்னை அது வருத்துகிறது? எனக் கேட்கிறாள்.

பொழுதுகள் ஏன் வேறுபட்டுத் தோன்றுகின்றன தலைவிக்கு?

கணவர் உடனிருந்தபோது காலையும் மாலையும் தலைவிக்கு வேறுபாடின்றித் தோன்றின; அவை வழக்கம்போல்தான் வந்தன; சென்றன. அவை இவளது நன்மைக்காகவோ துன்பத்திற்காவோ வந்து போனதில்லை. ஆனல் அவர் பிரிந்து சென்றுள்ள இப்பொழுது காலையும் மாலையும் நேர்மாறான இயல்பு கொண்டவையாக வெவ்வேறு வகையாக வந்து போவது போன்று அவளுக்குத் தோன்றுகின்றன. பிரிவு நிலையில்‌ இரவு என்னும் துன்பக்கடலைக் கடந்து ஏறும் கரையாகக் காலைப்பொழுது இருப்பதால் அது துன்பப்படுத்தாத காலமாக உள்ளது. துன்பம் இல்லை என்பதால் அது தலைவி காலைக்குச் செய்த ஏதோ ஒரு நன்மைக்கு எதிர்நன்மையாகச் செய்வதாக இருக்குமோ? என அவள் எண்ணுகிறாள்.
பிரிவில், நாளின் எல்லாப்‌ பொழுதுமே‌ தலைவரை நினைவுறுத்தித் துன்பம் செய்யக்கூடியனவே; ஆனால் மாலைப்‌பொழுது காமத் துயர் வாட்டுவதை மிகுவிக்கக்கூடியது‌. இதைத்தான் மாலைப்பொழுதுக்கு தான் ஏதோ தீங்கு செய்துவிட்டதனால் அது தன் மீது பழி தீர்க்கும் வகையில் என்னைத் துன்புறுத்திறதோ என நினைக்கிறாள் தலைவி.
காலை அரும்பிப் பகல்எல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய் என இவ்வதிகாரத்து மற்றொரு குறள் (1227) கூறும். 'துன்பம் தரும் காதல்நோய், விடியற்காலையில் அரும்பி, பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து, மாலைக்காலத்தே மலராக விரிந்து நிற்கும்' என்கிறது. இதன் பொருள். காலை என்பது காதல் நோய் அரும்பும் நேரம். தலைவியின் முயற்சி இல்லாமலும் அந்நோய் தரும் துன்பம் குறைவாகவே இருக்கும். ஆனால் மாலைப்பொழுது நெருங்க நெருங்க அது வளர்ந்து பெரிதாகி விடும். அது தலைவியைப் பகைத்துத் துன்புறுத்துவதுபோல் இருக்கிறது.

பிரிவுத் துன்பம் காலை நேரத்தில் அவ்வளவாக இல்லை; ஆனால் மயங்குகிற மாலை நேரத்தில் கணவருடன் இல்லாமல் தனிமையில் இருக்கும் தலைவிக்கு காமநோய் தரும் துன்பம் மிகையாக வந்து கலங்கச் செய்கிறது. இத்துன்பநிலையே பொழுதுகள் அவளுக்கு வேறுபட்டுத் தோன்றுவதற்கான காரணம்.அதிகார இயைபு

பிரிவில் தீயது எனத் தலைவி மாலைப்பொழுதுகண்டு இரங்கல்.

பொழிப்பு

காலைக்கு நான் என்ன நலம் புரிந்தேன்? மாலைக்கு என் மேல் ஏன் பகை?