இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1224



காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்

(அதிகாரம்:பொழுதுகண்டிரங்கல் குறள் எண்:1224)

பொழிப்பு (மு வரதராசன்): காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவதுபோல் மாலைப்பொழுது (என் உயிரைக் கொள்ள) வருகின்றது.

மணக்குடவர் உரை: காதரில்லாதவிடத்து இம்மாலைப்பொழுது கொலைக் களத்துப் பகைவரைப்போல வரும்.
இது மாலைக்காலத்து நோய் மிகுதற்குக் காரணமென்னை யென்ற தோழிக்குத் தலைமகள் காரணங்கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) மாலை - காதலர் உள்ள பொழுதெல்லாம் என் உயிர் தளிர்ப்ப வந்த மாலை; காதலர் இல்வழி - அவர் இல்லாத இப்பொழுது; கொலைக்களத்து ஏதிலர் போல வரும் - அஃது ஒழிந்து நிற்றலே அன்றிக் கொல்லுங்களரியில் கொலைஞர் வருமாறுபோல அவ்வுயிரைக் கோடற்கு வாராநின்றது.
(ஏதிலர் - அருள் யாதுமில்லார். 'முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து வந்த பொழுதும், இன்று என்மேற் பகையாய்த் துன்பஞ்செய்து வாரா நின்றது. இனி யான் ஆற்றுமாறு என்னை'? என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: காதலர் இல்லாதபோது மாலைக் காலம் கொலைக்களத்தில் உள்ள கொலைஞர்போல வரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும்.

பதவுரை: காதலர்-காதலையுடையவர்; இல்வழி-இல்லாத போது, இல்லாதவிடத்து; மாலை-மாலைப் பொழுது; கொலை-கொல்லுதல் தொழில்; களத்து-களரியில்; ஏதிலர்-பகைவர், கொலைஞர், அயலவர்; போல-போன்று, ஒக்க; வரும்-வரும்.


காதலர் இல்வழி மாலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காதரில்லாதவிடத்து இம்மாலைப்பொழுது;
பரிப்பெருமாள்: காதரில்லாதவிடத்து இம்மாலைப் போது;
பரிதி: காதலரை இல்லாத மாதருக்கு மாலைப்பொழுது;
காலிங்கர்: நெஞ்சே! நம் காதலர் இன்றி முன்னமே தனித்துயர் உறுகின்ற இடத்தே பின்னரும் இம்மாலையானது;
பரிமேலழகர்:(இதுவும் அது.) காதலர் உள்ள பொழுதெல்லாம் என் உயிர் தளிர்ப்ப வந்த மாலை அவர் இல்லாத இப்பொழுது; [தளிர்ப்ப - செழிக்க]

'காதரில்லாதவிடத்து இம்மாலைப்பொழுது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலர் இல்லாதபோது மாலைக் காலம்', 'காதலர் இல்லாத காலத்தில் மாலைப்பொழுது', 'காதலர் என்னுடன் இல்லாத காரணத்தால் இந்த மாலைப்பொழுது', 'காதலர் இல்லாதவிடத்து, மாலைப்பொழுதானது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காதலர் இல்லாதவேளையில் மாலைப்பொழுது என்பது இப்பகுதியின் பொருள்.

கொலைக்களத்து ஏதிலர் போல வரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொலைக் களத்துப் பகைவரைப்போல வரும்.
மணக்குடவர் குறிப்புரை: இது மாலைக்காலத்து நோய் மிகுதற்குக் காரணமென்னை யென்ற தோழிக்குத் தலைமகள் காரணங்கூறியது.
பரிப்பெருமாள்: கொலைக் களத்துப் பகைவரைப்போல வரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மாலைக்காலத்து நோய் மிகுதல் என்னை என்ற தோழிக்குத் தலைமகள் காரணங்கூறியது.
பரிதி: கொலைக்களத்துச் சத்துருபோல வரும் என்றவாறு.
காலிங்கர்: அடுகளத்து உற்ற பகைவரைப்போல வாராநின்றது; எனவே இதற்கு யாம் உய்யுமாறு என்னை? என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அஃது ஒழிந்து நிற்றலே அன்றிக் கொல்லுங்களரியில் கொலைஞர் வருமாறுபோல அவ்வுயிரைக் கோடற்கு வாராநின்றது. [அஃது ஒழிந்து நிற்றல் - உயிர் தளிர்க்க வருதல்; கொல்லும் களரி - கொலைக்களம்; கோடல் - கொள்ளுதல்]
பரிமேலழகர் குறிப்புரை: ஏதிலர் - அருள் யாதுமில்லார். 'முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து வந்த பொழுதும், இன்று என்மேற் பகையாய்த் துன்பஞ்செய்து வாரா நின்றது. இனி யான் ஆற்றுமாறு என்னை'? என்பதாம்.

கொலைக்களத்து பகைவர் போல் வரும் என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் பரிதி ஆகியோர் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் போர்க்களத்துப் பகைவர் போல் வரும் என்றார். பரிமேலழகர் கொலைக்களத்து கொலைஞர் வருமாறு போல எனப் பொருள் உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொலைக்களத்துக்குப் பகைவர்போல் வரும்', 'போர்க்களத்தில் கொலைஞர் போல உயிரைக் கவர வரும்', 'போர்க்களத்தில் பகைவர்கள் சீறி வருவதுபோல் என்மீது சீறி வருகிறது', 'கொலைக்களத்திலே கொல்ல வருவாரைப் போல வருகின்றது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

கொலைக்களத்தில் கொல்லவருவார்போல வரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காதலர் இல்லாதவேளையில் மாலைப்பொழுது, கொலைக்களத்து ஏதிலர் போல வரும் என்பது பாடலின் பொருள்.
'கொலைக்களத்து ஏதிலர்' என்பவர் யார்?

இதோ! இன்னொரு மாலைப்பொழுது என்னுயிரைக் கொண்டுபோக வருகிறதே!

காதலர் என்னுடன் இல்லாமல் பிரிந்துசென்ற நிலையில், கொலைக் களத்திற்கு வருகின்ற கொலைஞர் போல, இம்மாலைப்பொழுது, என்னை அச்சுறுத்திக் கவர்ந்து செல்ல வருகின்றது.
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாகப் பிரிந்து சென்றுள்ள கணவனை நினைந்து நினைந்து வருந்திக் கொண்டிருக்கிறாள் தலைவி. தன் துயர் மிகுவதற்கு மாலைப் பொழுது காரணம் எனச் சொல்கிறாள். மாலைப்பொழுதே, நான் காதலரோடு கூடியிருந்தபோது வந்தாய், ஆனால் அப்பொழுது இப்பொழுதுபோல் உயிரை உண்ணும் வேலாய் இருந்ததில்லையே! 'நீ நல்லா இரு!' என்று வாழ்த்துவது போல அதைப் பழிக்கிறாள் அவள். உயிருண்ணும் வேல், மருள்மாலை, பைதல்கொள் மாலை என்று சொல்லித் தன் வெறுப்பை அம்மாலைப்பொழுதின்மீது காட்டிக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
காமப்பொழுதாகிய மாலைமயங்கி வரப்போகின்றது. இருள் பரவத் தொடங்கும் நேரம். தலைவன் உடன் இல்லாது ஏற்கனவே தனித்திருந்து துயருற்றிருக்கும் தலைமகளுக்கு ஒவ்வொரு மாலைவரும்பொழுதும் ஒவ்வொரு துன்பக் களமாக இருக்கிறது.
கடுங்குற்றம் புரிந்தவர்க்கு அரசுதரும் கொலைத் தண்டனை உண்டு. அத்தண்டனையை நிறைவேற்றுவதற்குக் கொலைக்களம் கொண்டு சென்று தண்டனை பெற்றவரின் கைகள் கட்டப்பட்டு அங்கும் இங்கும் நகராதவாறு நிறுத்தப்படுவர். கொலைத்தண்டனை என்பது, வழக்கமாக, குற்றம் செய்தவர் தலையைக் கொய்து உயிர் களைவதைக் குறிக்கும். அரசின் கொலைக்களப் பணியை செய்பவர் கொலைஞர் என்று அழைக்கப்படுவார். தான் தாக்கப்போவது யார் எவர் என்று அவர் பார்க்கமாட்டார். அவரிடம் இரக்கக்குணம் எதிர்பார்க்கமுடியாது. அவர் கடமை வாள் வீசி உயிர் நீக்குவது மட்டுமே. அசைய முடியாதபடி நிறுத்தப் பெற்றிருக்கும் - தன்னைக் காப்பாற்ற யாரும் இல்லாத நிலையில் - தொலைவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக, ஓங்கிய கையுடன் வாளைவீசித் தன்னைக் கொல்ல நெருங்கிவரும் கொலைஞனைப் பார்க்கும்போது கொலை செய்யப்படுபவர் உளநிலை அச்சத்தில் உறைந்து போயிருக்கும். அது போன்ற அச்சம். நெருங்கிவரும் மாலைப்பொழுதை உணரும்போது, காதலிக்கு உண்டாகிறது என்கிறது பாடல். கணவன் உடனில்லாதது, மாலைநேரம் காமத்துன்பம் மிகுவது ஆகியவற்றால் அச்சம் மேலிடுகிறது அவளுக்கு. இதனால் மாலைப் பொழுதுக்கு உவமையாகக் கொலைக்களத்துத் தோன்றும் கொலைஞன் காட்டப்படுகிறான். மாலைப் பொழுது கண்டால் அவ்வளவு பயம் உண்டாகிறது காதல் கொண்டவளுக்கு. அருள் இல்லாத மாலைப்பொழுது என்பதும் அது காதலியின் உயிர் நீக்க வருகிறது என்பதும் குறிப்புப் பொருள்.
பழைய உரை ஒன்று 'காதலர் அவ்விடத்து இல்லாத காலம் அறிந்து மாலைப் பொழுது கொலை செய்யும் செருக்களத்தில் பகைவர் போல வரும். படைத்தலைவரில்லாத செருக்களத்தில் கொல்லப் பகைவர் போலச் செவ்வானத்துடன் மாலைப் பொழுதும் வரும் என்றது. செவ்வானம் செருக்களத்துக்கு ஒப்பு' என்கிறது. காதலரில்லாத பொழுது என்பதற்குப் படைத்தலைவரில்லாத செருக்களம் என்றும் செருக்களத்து ஏதிலர் என்பதற்குச் செவ்வானத்துடன் மாலைப்பொழுது என்றும் கூறும் இவ்வுரை சுவைக்கத்தக்கதாய் உள்ளது.

இக்குறட்கருத்தை உளங்கொண்டு மாலைப் பொழுதின் கொடுமையைச் சீவக சிந்தாமணி வேறுவகையிற் காட்டும். ஒரு பல்லை உடைய பெரும்பேய் தன் அகன்ற வாயைத் திறந்து உலகத்தை விழுங்க வந்ததுபோல் சீவகன் பிரிவினால் வருந்தும் கனகமாலைக்கு மலைப்பொழுது தோன்றியது என்று அவர் புனைந்துள்ளார்:
ஒன்றே எயிற்றது ஒரு பெரும்பேய் உலகத்தை அங்காந்து
நின்றாற் போல நிழல் உமிழ்ந்து நெடு வெண் திங்கள் எயிறு இலங்க
இன்றே குருதி வான வாய் அங்காந்து என்னை விழுங்குவான்
அன்றே வந்தது இம் மாலை அளியேன் ஆவி யாதாம் கொல்
(சீவக சிந்தாமணி கனகமாலை 104 (1650) பொருள்: ஓர் பல்லை உடையதான ஒரு பெரிய பேய் ,உலகை விழுங்குதற்கு வாயைத் திறந்து நின்றாற் போல, ஒளியைச் சொரிந்து நீண்ட வெண்மதியாகிய பல் விளங்க செக்கர் வானமாகிய வாயைத் திறந்து, என்னை விழுங்குவதற்கன்றோ இம்மாலையானது இப்போதே வந்தது?; இரங்கத் தக்கேன் உயிர் என்னாகுமோ?

'கொலைக்களத்து ஏதிலர்' என்பவர் யார்?

'கொலைக்களத்து ஏதிலர்' என்றதற்குக் கொலைக் களத்துப் பகைவர், கொலைக்களத்துச் சத்துரு, அடுகளத்து உற்ற பகைவர், கொலை செய்யும் இடத்தில் பகைவர், கொலைக் களத்தில் பகைவர், கொலைக்களத்துக்குப் பகைவர், போர்க்களத்தில் கொலைஞர், யுத்த களத்தில் பகைவர், கொலைக் களத்திற்கு வருகின்ற பகைவர், கொலைக்களத்திலே கொல்ல வருவார், கொலைக்களத்தில் உள்ள கொலைஞர், கொலைக்களத்திற் கொலைஞர், கொலைக்களத்தில் கொலைசெய் பகைவர் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

கொலைக்களத்து ஏதிலர்' என்ற தொடர்க்குப் போர்க்களத்திலுள்ள பகைவர் என்றும் கொலைத்தண்டனை நிறைவேற்றும் கொலைஞர் என்றும் இருதிறமாகப் பொருள் கண்டுள்ளனர். பகைவர் என்பதினும் கொலைஞர் என்பதே பொருத்தம். போர்க்களம் என்றால் பகைகொண்ட இருவரிடமும் கொல்லும் கருவிகள் இருக்கும். ஒருவரோடு ஒருவர் சண்டையிடமுடியும். கொலைக் களம் என்பது குற்றம் செய்தவரைக் கொலை செய்யும் இடம். போர்க்களத்தில் பகைமை இருப்பது போன்று கொலைக் களத்தில் குற்றவாளி, கொலைஞர் இருவரிடையேயும் பகைமை இல்லை. இங்கே குற்றவாளிக்கு உயிர் போகப் போகிறது என்று தெரிந்தும் அவரால் ஒன்றும் செய்ய இயலாது; எதிர்த்துப் போராட முடியாது. கொலைக் களத்தில் தப்பி ஓட முடியாது. அரசின் கொலைக்களப் பணியாயினும், அது கொடுமையானதே; இரக்கமற்ற செயலே; அச்சத்திற்கு உரியதே.
இங்கு பிரிவுக் காலத்து மாலைக்குக் கொலைஞர் உவமிக்கப்படுகிறார். அவரே கொலைக்களத்து ஏதிலர் எனப்படுகிறார். காதலனோடு இருக்கும் போதும் இதே மாலைப்பொழுதுதான் வந்தது. அப்பொழுது இந்த மாலைநேரம் இத்துணை அருளற்றதாகத் தெரியவில்லை. ஆனால் காதல்கணவர் இல்லாத இப்பொழுது அது உயிரை எடுக்க வரும் கொலையாளி போலத் தோன்றுகிறது.

'கொலைக்களத்து ஏதிலர்' என்பதற்குக் கொலை செய்யுமிடத்திலுள்ள கொலைஞர் என்பது பொருள்.

காதலர் இல்லாதவேளையில் மாலைப்பொழுது, கொலைக்களத்தில் கொல்லவருவார்போல வரும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கொல்ல வரும் பகைபோன்ற மாலைப் பொழுதுகண்டிரங்கல்.

பொழிப்பு

காதலர் இல்லாதபோது மாலைப்பொழுது கொலைக்களத்துக் கொலைஞர் போல வரும்.