இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1222



புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை

(அதிகாரம்:பொழுதுகண்டிரங்கல் குறள் எண்:1222)

பொழிப்பு (மு வரதராசன்): மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?

மணக்குடவர் உரை: மயங்கிய மாலைப்பொழுதே! நீ வாழ்வாயாக; புன்கண்மையை யுடையையாயிருந்தாய்; எம்முடைய கேளிரைப் போல வன்கண்மையை யுடைத்தோ நின்துணையும்.
இது தன்னுட்கையாறெய்திடு கிளவி.

பரிமேலழகர் உரை: (தன்னுட் கையாற்றை அதன்மேலிட்டுச் சொல்லியது.) மருள்மாலை - மயங்கிய மாலாய்; புன்கண்ணை -நீயும் எம்போலப் புன்கணுடையையாயிருந்தாய்; நின் துணை எம்கேள்போல் வன்கண்ணதோ - நின் துணையும் எம் துணை போல வன்கண்மையுடையதோ? கூறுவாயாக.
(மயங்குதல் - பகலும் இரவும் தம்முள்ளே விரவுதல்; கலங்குதலும் தோன்ற நின்றது. புன்கண் - ஒளியிழத்தல்; அதுபற்றித் துணையும் உண்டாக்கிக் கூறினாள். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. எமக்குத் துன்பஞ் செய்தாய்; நீயும் இன்பமுற்றிலை என்னும் குறிப்பால் 'வாழி' என்றாள்.)

வ சுப மாணிக்கம் உரை: மயங்கும் மாலையே! நீயும் வருந்துகின்றாய்; என் காதலன்போல் நின் காதலனும் கொடியனா?


பொருள்கோள் வரிஅமைப்பு:
மருள்மாலை புன்கண்ணை! எம்கேள்போல் நின் துணை வன்கண்ணதோ வாழி!

பதவுரை: புன்-பொலிவிழந்த, துன்பம்; கண்ணை-கண்களையுடையாய்; வாழி-வாழ்வாயாக; மருள்-மயங்கிய; மாலை-மாலைப்பொழுது; எம்- எமது; கேள்-உறவினர், நண்பர் (காதலர்), [இங்கு கணவர் குறித்தது]; போல்-நிகராக; வன்கண்ணதோ-கொடுமையானதோ; நின்-உனது; துணை-துணை.


புன்கண்ணை வாழி மருள்மாலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மயங்கிய மாலைப்பொழுதே! நீ வாழ்வாயாக; புன்கண்மையை யுடையையாயிருந்தாய்;
பரிப்பெருமாள்: மயங்கிய மாலைப்பொழுதே! நீ வாழ்வாயாக; நீ புன்கண்மை யுடையையாயிருந்தாய்;
பரிதி: மாலைப் பொழுதே! என்கண் பனி வருமாப் போல உன் கண்ணும் பனிதுருகா நின்றது;
காலிங்கர்: மாலாய்! நீ புன்கண்மையை உடையாய் அறப்பொலிவு அழிந்து இராநின்றறய்; மருண் மாலாய் நீ! வாழ்வாயாக;
காலிங்கர் குறிப்புரை: உலகத்து மாலை என்று இங்ஙனம் பெண்மைப்பெயர் வழக்கம் உண்டாகலானும், சந்தியாதேவி என்று வடசொல் இலக்கணம் உண்டாகலானும், இதனைப் பெண்பெயர் கொடுத்துக் கூறினார்.
பரிமேலழகர்: (தன்னுட் கையாற்றை அதன்மேலிட்டுச் சொல்லியது.) மயங்கிய மாலாய்; நீயும் எம்போலப் புன்கணுடையையாயிருந்தாய்; [தன்னுள் கையாற்றை - தன்னிடத்துள்ள துன்பத்தை; அதன்மேலிட்டு - மாலைப் பொழுதின்மேல் வைத்து; மாலாய் - மாலைப் பொழுதே;
பரிமேலழகர் குறிப்புரை: மயங்குதல் - பகலும் இரவும் தம்முள்ளே விரவுதல்; கலங்குதலும் தோன்ற நின்றது. புன்கண் - ஒளியிழத்தல்; [விரவுதல் - கலத்தல்; கலங்குதல் - தெளிவின்றியிருத்தல்]

'மயங்கிய மாலைப்பொழுதே! நீ வாழ்வாயாக; புன்கண்மையை யுடையையாயிருந்தாய்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். புன்கண் என்றதற்குப் பரிதி பனிதுருகா நின்ற கண் என்று பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'மயங்கிய மாலைப்பொழுதே, நீயும் என் போல் துன்பம் உடையாய்!', 'மணந்தார் உயிருண்ணும் நீகூட வருந்தி அழுது வழிகிறாயே! ஏன்?(அப்படியானால் உனக்கு இத்துன்பம் நீங்கி நலமுண்டாக) உன்னை வாழ்த்துகிறேன்', 'மயக்கிய மாலைப்பொழுதே, எம்மைப் போல நீயும் ஒளியிழந்திருக்கின்றாய்', 'மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் என்னைப்போலத் துன்பம் உடையையாய் இருந்தாய்!', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மயங்கிய மாலைப்பொழுதே! துன்பத்தை உடையையாய்! என்பது இப்பகுதியின் பொருள்.

எங்கேள்போல் வன்கண்ண தோநின் துணை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எம்முடைய கேளிரைப் போல வன்கண்மையை யுடைத்தோ நின்துணையும்.
மணக்குடவர் குறிப்புரை: இது தன்னுட்கையாறெய்திடு கிளவி.
பரிப்பெருமாள்: எம்முடைய கேளிரைப் போல வன்கண்மையை யுடைத்தோ நின்துணையும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தன்னுட்கையாறெய்திடு கிளவி.
பரிதி: என்கேள்வன் பிரிந்தாற் போல உனக்கும் ஓர் வன்கண்ணர்பிரிந்தார் உண்டோ என்றவாறு.
காலிங்கர்: நீ செய்கின்றது எம் உறுகேள்போல அருட்கண் இன்றி வன்கண்மை உடையது ஒன்று ஆகின்றது நின் துணையும்;
காலிங்கர் குறிப்புரை: எனவே தன் மேனி பொலிவு அழிந்திட்ட புல்லிமையெல்லாம் புலப்படச் சொல்லினாள் தன் மேலிட்டு என்றவாறு.
பரிமேலழகர்: நின் துணையும் எம் துணை போல வன்கண்மையுடையதோ? கூறுவாயாக. [வன்கண்மை -இரக்கமின்மை.
பரிமேலழகர் குறிப்புரை: அதுபற்றித் துணையும் உண்டாக்கிக் கூறினாள். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. எமக்குத் துன்பஞ் செய்தாய்; நீயும் இன்பமுற்றிலை என்னும் குறிப்பால் 'வாழி' என்றாள்.

'எம்முடைய கேளிரைப் போல வன்கண்மையை யுடைத்தோ நின்துணையும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதற்குக் காரணம் எம் காதலர் போல் நின் துணையும் இரக்கமற்றதோ?', 'என் காதலரைப் போலவே உன் காதலரும் உன்னைப் பிரிந்து வராமலிருக்க கன்னெஞ்சரா?', 'எம் கணவரைப் போல உன் துணையுங் கொடியதோ?', 'நின் துணையும் எம்துணைபோல் வன்கண்மை உடையதோ! கூறுவாயாக' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

என் கணவரைப் போல உனது துணையும் கொடியதோ? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மருள்மாலை! துன்பத்தை உடையையாய்! என் கணவரைப் போல உனது துணையும் கொடியதோ? என்பது பாடலின் பொருள்.
'மருள்மாலை' என்பது என்ன?

காதல்காணவியலா இருட்டில் என்னைத் தனியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டாரே என்கணவர்!

மயங்கிய மாலைப்பொழுதே, துன்பம் தோன்ற உள்ளாய்; எம் கணவரைப் போல உன் துணையுங் கொடியதோ?
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாகப் பிரிந்து சென்றுள்ள கணவனை எப்பொழுதும் நினைத்துக் கொண்டு ஆற்ற முடியாமல் இருக்கிறாள் தலைவி. மாலைப்பொழுதானது காதல் உணர்ச்சிகளைத் தூண்டும் தன்மை கொண்டதாதலால் அந்நேரம் தலைவனை மிகுதியாக நினைக்கச் செய்து துயர் தருகிறது. தன் துயரம் வளர்ந்ததற்குக் காரணம் மாலைப் பொழுதுதான் என்று எண்ணி 'நீ நல்லா இரு!' என்று அவள் வாழ்த்துவது போல அதைப் பழித்துக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
'மயங்கிய மாலைப்பொழுதே! எம்மைப்போலவே நீயும் துன்பமுற்றுத் தோன்றுகிறாயே! உன் துணையும் என் காதலரைப் போலவே கொடுமையுடையது தானோ?' என இங்கு கேட்கிறாள் தலைமகள். பகல் எல்லாம் பளபளன்னு இருந்து மாலையில் ஒளி குறைந்த பொழுதாகக் காட்சி அளிப்பது, அவளை வருத்துகிறது. மாலைப்பொழுதில் காதல் மேலீட்டால் அவள் மருட்சி கொள்கிறாள். பொழுதும் தன்னைப்போல் மயங்கித் துன்புறுவதாக எண்ணுகின்றாள். தன்னிடத்துள்ள துன்பத்தை பொழுதின் மேற்கொண்டு அதனை விளித்துச் சொல்கிறாள்: 'மயங்கிய மாலாய்! துன்பம் தாங்கி நிற்கின்றாய்! என் காதலர்தான் இரக்கமின்றி என்னைப் பிரிந்து சென்றிருக்கிறார் என்று நினைத்திருந்தேன்! உன் துணையும் அப்படித்தானா! நல்லது விரைவில் நடக்கட்டும்! வாழ்க!' இவ்வாறு தம்மைப்போல் வருத்தப்படும் மாலைப்பொழுது கண்டு இரங்கிச் சொல்கிறாள் அவள்.

புன்கண்ணை என்றதற்கு ஒளியிழந்த கண்ணையுடையாய் என்பது நேர்பொருள். இங்கு துன்பத்தைச் சுமந்து நிற்கும் கண்களை உடையாய் என்று பொருள்படும். தலைவன் பிரிவால் துயரம் தாங்க முடியாமல் தலைவி சோர்வடைந்து இருக்கிறாள். அது போலவே மாலைப்பொழுதும் பொலிவற்று இருக்கிறதாம். ஒளியிழந்து கொண்டிருக்கும் அதன் தன்மை துன்பமாக இப்பாடலில் உருவகம் செய்யப்பட்டது.
துயரமுற்றவர்க்குப் பிறரும் தம்மைப்போல் வருந்துவதாகத் தோன்றும். ஆகவே, ஒளியிழந்த மாலைப்பொழுதும் தன்னைப்போல் தலைவனைப் பிரிந்து வருந்துவதாகத் தலைவி எண்ணுகிறாள். அதை ஆறுதல்படுத்துவதுபோல 'வாழி மாலையே!' என வாழ்த்துக்கூறி 'உன் துணையும் கொடியதோ?' என வினவுகிறாள். இவ்வாறு தலைமகள் தன் செயலற்ற நிலையை மாலைப்பொழுதின் மேல்ஏற்றிக் கூறினாள்.

'மருள்மாலை' என்பது என்ன?

'மருள்மாலை' என்ற தொடர்க்கு மயங்கிய மாலைப்பொழுதே!, மாலாய்!, மயங்கிய மாலாய், ஒளிமங்கி மயங்கிய நிலையிலுள்ள மாலைப்பொழுதே! மயங்கும் மாலையே! மயங்கிய மாலைப்பொழுதே, மருண்டிருக்கிற மாலைப் பொழுதே!, மயக்கமுறுத்துகின்ற மாலைப் பொழுதே! ஒளி மங்கும் கண்களோடு வந்த மாலைநேரமே! பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! மயக்கத்தைக் கொடுக்கிற சிறிய மாலைப் பொழுதே என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

மருளுதல் என்பது மயங்குதலைக் கூறுவது. அதற்குப் 'பகலிரவும் தம்முள்ளே விரவுதல்; கலங்குதலும் தோன்ற நின்றது' என்பது பரிமேலழகர் தரும் பொருள்.
பகலும் இரவும் தம்முட்கலக்கும் காலம் மருள்மாலை எனச் சொல்லப்பட்டது; ஒளிகுன்றி, இருள் சூழ்ந்து பகல் மறையப் போகிற பொழுது மருள்மாலை எனப்படுகிறது. கணவர் பிரிவால் துயருற்றிருக்கும் தலைவிக்கு அம்மாலைப் பொழுதும் தன்னைப்போல் கலங்கிப் பொலிவிழந்து காட்சியளிக்கிறது. சாயுங்காலம் வரைக்கும் விலங்குகளும் புள்ளினங்களும் ஓடியாடி ஆரவாரமாக இருந்தன. மாலைப் பொழுது வந்ததும் பரபரப்பு எல்லாம் ஓய்ந்து எங்கும் அமைதி குடிகொண்டது. இது தலைவிக்கு தன்னைப்போல் பொழுதும் வாட்டமுறும் நிலையைப்போலத் தோன்றுகிறது. அதனால் அப்பொழுதுக்கும் ஒரு துணையைப் புனைந்து அதுவும் கொடியதோ என ஆறுதல் மொழி கூறுகிறாள்.

'மருள்மாலை' என்றதற்கு பகலோ இரவோ என அறியமுடியாதவாறு மயங்கித்தோன்றும் மாலைப்பொழுது என்பது பொருள்.

மயங்கிய மாலைப்பொழுதே! துன்பத்தை உடையையாய்! என் கணவரைப் போல உனது துணையும் கொடியதோ? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மாலைப் பொழுதின் மயக்கம் காணும் தலைவியின் பொழுதுகண்டிரங்கல்.

பொழிப்பு

மயங்கும் மாலையே! வருந்துகின்றாய்; என் காதலன்போல் நின் துணையும் கொடியதுதானா?