இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1221மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும்
வேலைநீ வாழி பொழுது

(அதிகாரம்:பொழுதுகண்டிரங்கல் குறள் எண்:1221)

பொழிப்பு (மு வரதராசன்): பொழுதே! நீ மாலைக்காலம் அல்லை: (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கின்றாய்!

மணக்குடவர் உரை: பொழுதே! நீ வெப்பமுடையை யானமையான் மாலையோ எனின் அல்லை: முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகியவொரு வேலாயிருந்தாய்.
இது மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.

பரிமேலழகர் உரை: (பொழுதொடு புலந்து சொல்லியது.) பொழுது - பொழுதே; நீ மாலையோ அல்லை - நீ முன்னாள்களின் வந்த மாலையோ எனின் அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் வேலை - இருந்த ஆற்றான் அந்நாள் காதலரை மணந்த மகளிர் உயிரையுண்ணும் இறுதிக்காலமாய் இருந்தாய்.
(முன்னாள் - கூடியிருந்த நாள். 'அந்நாள் மணந்தார்' எனவே, பின் பிரிந்தாராதல் பெறுதும். வாழி என்பது குறிப்புச் சொல். 'வாலிழை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்குங்காலை' (கலித்.நெய்தல்.2) என்றாற்போல, ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது. 'மாலை நீ அல்லை' எனவும் பாடம். வேலை என்பது ஆகுபெயர். வேலை என்பதற்கு வேலாயிருந்தாய் என்பாரும் உளர்.)

வ சுப மாணிக்கம் உரை: பொழுதே! நீ மாலைக்காலமா? இல்லை. கூடிப்பிரிந்தார் உயிர் குடிக்கும் கூரியவேல்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பொழுது நீ மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும் வேலை வாழி! .

பதவுரை: மாலையோ-மாலைப்பொழுதோ; அல்லை-இல்லை, நீ ஆகாய்; மணந்தார்- (காதலரை) மணந்த மகளிர், கூடினார்; உயிர்உண்ணும்-உயிர் போக்கும்; வேலை-வேல் ஆயினை, முடிவுக் காலமாக; நீ-நீ; வாழி-வாழ்வாயாக; பொழுது-பொழுதே, மாலைப்பொழுதே!.


மாலையோ அல்லை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('மாலை நீ' பாடம்);: நீ வெப்பமுடையை யானமையான் மாலையோ எனின் அல்லை;
பரிப்பெருமாள் ('மாலை நீ' பாடம்): நீ தட்பம் உடையை அன்மையான் மாலையோ அல்லை;
பரிதி: மாலையாகிய பொழுதல்லவே நீ;
காலிங்கர் (மாலை நீ பாடம்): நீ பண்டுபோலக் காலை கழிந்தால் வரும் மாலையாய் வந்தாய் அல்லை;
பரிமேலழகர்: (பொழுதொடு புலந்து சொல்லியது.) நீ முன்னாள்களின் வந்த மாலையோ எனின் அல்லை;
பரிமேலழகர் குறிப்புரை: முன்னாள் - கூடியிருந்த நாள். [கூடியிருந்த நாள் - தலைமகனைத் தலைமகள் கூடியிருந்த நாள்]

'நீ மாலையோ எனின் அல்லை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நீ காதலரோடு கூடியிருந்தபோது வந்தது போல, இனிமை அல்லை', 'உன்னை மாலைவேளையென்று சொல்வது சரியல்ல', 'நீ மலைக்காலம் அல்லை', 'நீ முன்னாள்களின் வந்த மாலைப் பொழுதே எனின், அல்லை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மாலைப் பொழுதே எனின், அல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

மணந்தார் உயிர்உண்ணும் வேலைநீ வாழி பொழுது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொழுதே! முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகியவொரு வேலாயிருந்தாய்.
மணக்குடவர் குறிப்புரை: இது மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.
பரிப்பெருமாள்: பொழுதே! முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதோர் வேலாகுவை என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: கெடுவாயாக என்னுதல் குறிப்புமொழி. இது, மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையால் கூறியது.
பரிதி: பிரிந்தாருயிரை உண்ணும் வேலன்றோ என்றவாறு.
காலிங்கர்: இக்காலத்து எம்வயின் வந்துற்ற மாலைப் பொழுதே! மற்று நின்னோடு கூடினாராகிய எம்மைப்போலத் தனித்து இருந்தாரை உயிர் பருகுவது ஒரு கூற்று நீ என்று கூறினாள் என்றவாறு.
பரிமேலழகர்: பொழுதே; இருந்த ஆற்றான் அந்நாள் காதலரை மணந்த மகளிர் உயிரையுண்ணும் இறுதிக்காலமாய் இருந்தாய். [அந்நாள் - முன்னாள்]
பரிமேலழகர் குறிப்புரை: 'அந்நாள் மணந்தார்' எனவே, பின் பிரிந்தாராதல் பெறுதும். வாழி என்பது குறிப்புச் சொல். 'வாலிழை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்குங்காலை' (கலித்.நெய்தல்.2) என்றாற்போல, ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது. 'மாலை நீ அல்லை' எனவும் பாடம். வேலை என்பது ஆகுபெயர். வேலை என்பதற்கு வேலாயிருந்தாய் என்பாரும் உளர். [மணந்தார் - கூடினார்]

வேலை என்பதற்கு வேல் என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் ஆகியோரும் பரிதியும் பொருள் கொள்ள பரிமேலழகர் காலம் எனக் கொண்டார். காலிங்கர் கூற்று என்றார். பொழுதே! கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகியவொரு வேல்/கூற்று/இறுதிக்காலம் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மாலைப்பொழுதே, நீ செய்யும் கொடுமையைக் கருதின் காதலரைக் கூடிய மகளிர் உயிரை உண்ணும் வேலாயிருந்தாய். நீ வாழ்க. (ஒழிக என்னும் குறிப்பினது.)', 'மாலைப் பொழுதே! மணந்து பிரிந்திருக்கும் காதலர்களின் உயிரை வதைக்கும் காலமென்று சொல்லுவதுதான் பொருந்தும். நீ வாழ்க', 'பொழுதே, நீ நன்றாக யிருப்பாய்! மணந்த மகளிரது உயிரை உண்ணும் இறுதிக் காலமே', 'பொழுதே! காதலரை மணந்த மகளிர் உயிரை உண்ணும் இறுதிக் காலமாய் இருந்தாய்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பொழுதே! மணமான மகளிர் உயிரை உண்ணும் வேல் ஆயினை நீ! வாழ்க! என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொழுதே! நீ மாலையோ எனின் அல்ல; மணமான மகளிர் உயிரை உண்ணும் வேல் ஆயினை நீ! வாழ்க! என்பது பாடலின் பொருள்.
'வேலை' என்பதன் பொருள் என்ன?

எங்களுக்குத் தெரிந்த மாலைப்பொழுது உயிர்குடிப்பது அல்ல - தலைவி.

பொழுதே, நன்றாக இரு! நீ மாலைக்காலமே அல்லை; மணமான மகளிர் உயிரைக் குடிக்கும் வேல் ஆயினை!
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகக் கணவர் பிரிந்து அயல் சென்றிருக்கிறார். காதலிக்கு பிரிவுத்துயரைத் தாங்க இயலவில்லை. கனவில் அவரைக் கண்டு ஆறுதல் தேட முயற்சிக்கிறாள். 'அவர்தான் தம்மைவிட்டு நீங்கி வெகுதொலைவு சென்றுவிட்டாரே என இகழும் ஊரார், கனவில் அவர் நீங்காது வருவதை அறிவார்களா' எனத் தனக்குள் கேட்டுக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
காலை கழிந்து மாலை வந்து சூழ்கிறது. மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாளாகிறாள். முன்பு கணவருடன் இருந்த மாலை நேரங்கள் இனிமையாக இருந்தன. ஆனால் இப்பொழுதோ அவர் உடன் இல்லை; மாலைப் பொழுது பெருந்துயரை அளிக்கின்றது. இதோ மாலை நெருங்குகிறது. அதைக் கண்டு, தனித்திருக்கும் தலைவி பொழுதுடன் உரையாடத் தொடங்குகிறாள். 'மாலைப்பொழுதே வந்தாயா? நான் காதலரோடு கூடியிருந்தபோது வந்து இன்பம் அளித்த மாலையா நீ? இல்லை. மணம் முடித்த பெண்டிரின் உயிரை உண்ணும் இறுதிக்காலப் பொழுதுதான் நீ. நல்லா இரு! நல்லா இரு போ!' என்று அதை வாழ்த்துவதுபோலப் பொருமித் தீர்க்கிறாள். மாலை காமத்துயர் வாட்டும் பொல்லாத காலமாயிற்று. இன்பம் அளித்த மாலை இப்பொழுது தனித்து இருப்போர்க்குத் துன்பம் அளிப்பதாய் உள்ளது; கணவரைக் கூடிப் பிரிந்திருப்பார்க்கு மாலைப்பொழுது உயிர் போகும் வண்ணம் வருத்துகிறது.

இக்குறளின் கருத்தமைந்த கலித்தொகைப் பாடலில் காதலி சொல்வது: “வாலிழை மகளிர் உயிர்பொதி அவிழ்க்கும் காலை ஆவ தறியார் மாலை என்மனார் மயங்கி யோரே” (கலி: 119: பொருள்: 'தூய்மையான அணிகளையுடைய மகளிருயிரை அதனை மறைத்து நின்ற உடலினின்றும் போக்குங் காலத்தினது இயல்பாவதறியாராய் மாலைக்காலமென்று அதுவும் ஒருகாலமாகக் கூறாநிற்பர்'). பொழுது சாயுங்காலத்தை மாலை என்று சொல்வோர் அறிவுகெட்டோர் என்கிறாள் சங்கத் தலைவி. காதலரின் பிரிவு மகளிரின் உயிரை உண்ணும் என்ற இக்குறள் கருத்தையே சிலம்பில் வரும் கானல்வரித் தலைவியும் கூறுகிறாள். அது:
பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ
வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை
மாலை நீ ஆயின், மணந்தார் அவர் ஆயின்,
ஞாலமோ நல்கூர்ந்தது; வாழி, மாலை!
(சிலப்பதிகாரம் 7 கானல்வரி எண்: 50; பொருள்: துன்பமாகிய நோய் மிக, ஞாயிறு மேல்கடலிற் சென்று வீழ, வையத்துள்ளார் கண்ணினை மூட, மயக்கத்தையுடைய மாலையே வந்தாய், மாலைப் பொழுது நீயேயாயின், முன் மணந்தவர் தணந்து சென்ற அவரே யாயின், மாலையே இவ்வுலகந்தான் (நான் இறந்துபடுதல் உறுதியாவதால்) வறுமையுற்றதாக ஆகும், வாழ்வாயாக!)

மணக்குடவர் ’மாலை நீ யல்லை' என்று பாடலின் தொடக்கப் பகுதிக்குப் பாடம் கொண்டார். 'மாலை நீ, வேலை நீ' என வருதல் எதுகைச் சிறப்புடையதாயினும் நீ என்பது ஈரிடத்தும் வேண்டாது வருதலான், மாலையோ அல்லை எனப் பரிமேலழகர் பாடம் கொண்டார் என ஆய்வாளர் கூறுவர்.
இப்பாடலில் உள்ள மணந்தார் என்ற சொல் கலந்த காதலரைப் பிரிந்த மணந்த மகளிர் குறித்தது; தன்னைப் போல் காதலரைப் பிரிந்த பிறரையும் உளப்படுத்தி 'மணந்தார்' என்றாள்.
வாழி என்ற சொல்லைப் பரிப்பெருமாள் 'கெடுவாயாக' என்னுதல் குறிப்புமொழி என்றார். அதாவது 'வாழமாட்டாய்', 'ஒழிக' என்னும் குறிப்புப் பொருள் உடையதான இகழ்ச்சிச் சொல் எனச் சொல்கிறார். இச்சொல் இங்கு நிந்தனையாக வாழ்த்துவதாக உள்ளது.

'வேலை' என்பதன் பொருள் என்ன?

'வேலை' என்ற சொல்லுக்கு வேலாயிருந்தாய், வேலாகுவை, வேலன்றோ, ஒரு கூற்று, இறுதிக்காலமாய் இருந்தாய், முடிவுக் காலமாக இருக்கின்றாய், ஒரு வேலாக ஆகின்றாய்!, கூரியவேல், வேலாயிருந்தாய், மரண காலம், வேல் ஆயினை!, இறுதிக் காலமே, இறுதிக் காலமாய் இருந்தாய், வேல்- (கூரிய வேல்), இறுதிக் காலமாகவே யிருக்கின்றாய், விஷமாக மாறி வந்திருக்கிறாய் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

‘வேலை’ என்பதனை முன்னிலை ஒருமையாகக் கொண்டு விளியாக ‘வேலாக இருந்தாய்’ என உரைக்கும் மணக்குடவர் உரையே சிறப்பினது என்று கூறி நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்(நிலையாமை குறள் 334 பொருள்: நாள் என ஒன்றுபோலத் (ஒரே மாதிரி மாறாது இருப்பதுபோல) தோன்றி, உயிர்தங்கும் வாழ்நாளை அறுத்துக் குறைவுபடுத்துகின்ற வாள்ஆகும் அதனை அறியக் கூடியவர்களுக்கு) என்பதனை இவ்வுரைக்கு ஒப்பு நோக்குக என்பார் இரா சாரங்கபாணி.
வேலை என்பதற்கு வேளை (காலம்) என்பது பரிமேலழகர் கொண்ட பொருள். இதை ஆகுபெயராகக் கொண்டு இறுதிக் காலம் என உரைத்தார். ஆனாலும் அவர் 'வேலை' என்பதற்கு வேலாயிருந்தாய் என்பாருமுளர் என்றும் கூறியதால் அதுவும் அவர்க்கு உடன்பாடுதான் என்றாகிறது.
தேவநேயப் பாவாணர் வேலை என்பதற்கு எல்லை எனப் பொருள் கூறி, இங்கு வாழ்நாளெல்லையைக் குறித்தது என்கிறார். வேறுசிலர் இச்சொல்லுக்கு கூற்று, நஞ்சு, கடல், தொழில் என்றவாறு பொருள் கூறினர்.

'வேலை' என்பதற்கு 'வேல் ஆயினை!' என்பது பொருள்.

பொழுதே! நீ மாலையோ எனின் அல்லை; காதலரைக் கூடிய மகளிர் உயிரை உண்ணும் வேல். நீ நல்லா இரு! என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பிரிந்து நிற்கும் மகளிரின் உயிரை உண்பது மாலைப்பொழுது என்னும் தலைவியின் பொழுதுகண்டிரங்கல்.

பொழிப்பு

பொழுதே! நீ மாலைக்காலமா? அல்ல. காதலரைக் கூடிப்பிரிந்த மகளிர் உயிர் குடிக்கும் வேல் ஆயினை நீ! வாழ்க!