இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1220



நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்

(அதிகாரம்:கனவுநிலை உரைத்தல் குறள் எண்:1220)

பொழிப்பு (மு வரதராசன்): நனவில் நம்மைவிட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்துப் பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ!

மணக்குடவர் உரை: இவ்வூரார் நனவின்கண்ணே நம்மை நீக்கியகன்றா ரென்று அவரைக் கொடுமை கூறாநிற்பர்: அவர் அவரைக் கனவின்கண் காணார்களோ?
இஃது இவ்வேறுபாடு அலராயிற்று என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) இவ்வூரவர் நனவினான் நம் நீத்தார் என்பார் - மகளிர் நனவின்கண் நம்மை நீத்தார் என்று நம் காதலரைக் கொடுமை கூறாநிற்பார்; கனவினான் காணார்கொல் - அவர் கனவின்கண் நீங்காது வருதல் கண்டறியாரோ?
('என்னொடு தன்னிடை வேற்றுமை இன்றாயின், யான் கண்டது தானும் கண்டமையும், அது காணாது அவரைக் கொடுமை கூறுகின்றமையின் அயலாளேயாம்' என்னும் கருத்தால், 'இவ்வூரவர்' என்றாள்.)

சி இலக்குவனார் உரை: இந்த ஊரில் உள்ளவர்கள் நனவில் நம்மைவிட்டு நீங்கி விட்டார் நம் தலைவர் என்று பழி கூறுவர்; அவர் கனவின்கண் நீங்காது வருதலைக் கண்டறிய மாட்டாரோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூரவர்.

பதவுரை: நனவினால்-விழிப்பு நிலையின் கண்; நம்-நம்மை; நீத்தார்-பிரிந்து சென்றுள்ளவர், நீங்கினார்; என்பர்-என்று சொல்லுவர்; கனவினால்-கனவின் கண்; பதவுரை: காணார்-அறியமாட்டா; கொல்-அசைநிலை (ஐயம்); இவ்வூரவர்-இந்த ஊரிலுள்ளவர்.


நனவினால் நம்நீத்தார் என்பர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நனவின்கண்ணே நம்மை நீக்கியகன்றா ரென்று அவரைக் கொடுமை கூறாநிற்பர் இவ்வூரார் ;
பரிப்பெருமாள்: நனவின்கண்ணே நம்மை நீக்கியகன்றா ரென்று அவரைக் கொடுமை கூறாநிற்பர் இவ்வூரார் ;
பரிதி: நனவினாலே பிரிந்தார் என்று நம்மைத் தூற்றுவார்;
காலிங்கர்: நெஞ்சே! நம் காதலர் நம்மைக் கையகன்றனர் என்று நனவின்கண் அவரைக் கொடுமை கூறா நிற்பர்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) நனவின்கண் நம்மை நீத்தார் என்று நம் காதலரைக் கொடுமை கூறாநிற்பார்; {நீத்தார் - பிரிந்தார்]

'நனவின்கண்ணே நம்மை நீக்கியகன்றா ரென்று அவரைக் கொடுமை கூறாநிற்பர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நனவிலே விட்டுப்பிரிந்தார் என்பர் இவ்வூரார்', 'நனவில் நம்மைவிட்டுப் பிரிந்தார் என்று நம் காதலரைக் குறை கூறுவர்', '(இப்படி என் காதலரை நான் அடிக்கடி கனவில் சந்தித்து இன்பமடைவதை அறியாத ஊரார் என் காதலர் வரவேயில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்) என் காதலர் என்னை விட்டுப் பிரிந்திருப்பதை ஏளனம் செய்கிற', 'நனவில் நம்மைவிட்டு நீங்கி விட்டார் நம் தலைவர் என்று பழி கூறுவர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நனவில் நம்மைவிட்டு நீங்கி விட்டார் என்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் அவரைக் கனவின்கண் காணார்களோ?
மணக்குடவர் குறிப்புரை: இஃது இவ்வேறுபாடு அலராயிற்று என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: இவ்வூரார் அவர் அவரைக் கனவின்கண் காணார்களோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இவ்வேறுபாடு அலராயிற்று என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: கனவிலே வருவது காணார்கொல் இவ்வூரவர் என்றவாறு.
காலிங்கர்: இதற்கு என்னை காரணம்? கனவிடத்து யான் என் காதலரைக் காண்பேன் என்பதனால் அப்பொழுது தாமும் அவரைக் கண்டு கொள்ளாரோ இவ்வூரவராகிய மகளிர்.
காலிங்கர் குறிப்புரை: எனவே இனி அவரைக் கொடுமை கூறுகின்றது என்னை என்றவாறு?
பரிமேலழகர்: அவர் கனவின்கண் நீங்காது வருதல் கண்டறியாரோ இவ்வூரவர் ?
பரிமேலழகர் குறிப்புரை: 'என்னொடு தன்னிடை வேற்றுமை இன்றாயின், யான் கண்டது தானும் கண்டமையும், அது காணாது அவரைக் கொடுமை கூறுகின்றமையின் அயலாளேயாம்' என்னும் கருத்தால், 'இவ்வூரவர்' என்றாள். [என்னொடு தன்னிடை-எனக்கும் அவளுக்கும்; அது காணாது - கனவினிடத்துக் காதலர் நீங்காது வருதலைக் காணாமல்]

இவ்வூரார் அவரைக் கனவின்கண் காணார்களோ? என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கனவிலே வருவதை அறியமாட்டார்களோ?', 'இவ்வூர்ப் பெண்டிர் நம் காதலர் கனவில் நீங்காது வருதலைக் கண்டறியாரோ?', 'இந்த ஊரார், நானும் அவரும் கனவில் கலந்து மகிழ்வதைத் தாங்களும் கனவில் காண்பார்களானால் இப்படி ஏளனம் செய்ய மாட்டார்கள்', 'இந்த ஊரில் உள்ளவர்கள் அவர் கனவின்கண் நீங்காது வருதலைக் கண்டறிய மாட்டாரோ?' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அவர் கனவில் நீங்காது வருதலை இவ்வூரார் அறியார்கள் போலும்! என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நனவில் நம்மைவிட்டு நீங்கி விட்டார் கணவர் என்பர்; கனவினால் காணார்கொல் இவ்வூரார்! என்பது பாடலின் பொருள்.
'கனவினால் காணார்கொல்' குறிப்பது என்ன?

'என் கணவர் எங்கே பிரிந்துள்ளார்? அவர் தான் நாளும் என்கனவிலே வந்து சேர்கிறாரே!' - தலைவி

நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று தலைவரைப் பழித்து பேசுகின்றனர் இந்த ஊரார். என் கனவில் அவர் வருவதை அவர்கள் அறியமாட்டார்களோ? எனக் கேட்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
தலைவர் பணி காரணமாகத் தலைவியிடம் விடைபெற்றுத்தான் சென்றிருக்கிறார். ஆனாலும் தலைவிக்கு அவர் பிரிவைத் தாங்க முடியவில்லை. எந்நேரமும் அவரையே நினைத்து அவர் தன்னுடன் இல்லையே என வருந்துகிறாள். கனவானது ஆறுதலாக இருப்பதாக எண்ணுகிறாள்:
'கனவில் தன் கணவர் தோன்றுவது தன் தனிமைத் துன்பம் நீக்க உதவுவதால் அக்கனவுக்கு எதை தான் விருந்தாகச் செய்வேன்?' என எண்ணத் தொடங்கிவிட்டாள் தலைவி; 'அவர் கனவில் அடுத்த தடவை வரும்போது தான் தூங்கிவிட்டால் தான் பிழைத்துள்ளதை அவர்க்கு எப்படித் தெரிவிப்பேன்?'; 'தான் தூங்காதிருக்கும்போது அளிசெய்யாதவரைக் கனவில் காண்பதால் தன் உயிர் நிலைத்துள்ளது'; 'நனவில் வந்து அன்பு செய்யாதவரைக் கனவு தேடித் தருவதானால் அதன்கண்ணே தனக்குக் காதல் உண்டாகிறது'; 'கனவில் காண்பதில் அவரை நேரில்கண்டதுபோல் மகிழ்ச்சி உண்டாகிறது; நனவு வந்து கனவு கலைந்து அவர் நீங்கிச்செல்கிறார்'; 'நனவு என்று ஒன்று இல்லையாயின் அவர் கனவில் என்னைவிட்டு நீங்கமாட்டாரே!'; 'நேரில் வந்து எனக்கு இன்பம் தராமல் கனவில் வந்து ஏன் என்னை வருத்துகிறார்?'; 'கணவர் தன்னுடன் கலந்து மகிழ்வது போலவே கனவு காணும் தலைவி அவர் தன் தோள் மீது படர்ந்து தழுவி. விழிப்பு வந்தவுடன் அவர் தன் மனத்துள் மிக விரைவாகச் சென்று பழையபடி அமர்ந்து கொள்வதால், அவர் என்னைவிட்டு உடலாலும் உள்ளத்தாலும் எப்பொழுதும் நீங்கவே இல்லையே'; 'கனவில் கணவரைக் காண இயலாதவரே தம் கணவரை அன்பிலர் என்று கூறுவர்'; இவ்வாறு கனவில் அவரைச் சந்தித்து இன்புறுகிறாள் தலைவி.

இக்காட்சி:
நனவில் அதாவது நேரில் தலைவனும் தலைவியும் ஒன்றாகத் தோன்றாததினால், அவளை விட்டு விட்டு அவர் நீங்கி விட்டதாக ஊர் மக்கள் பேசத் தொடங்குகின்றனர். இதைக் கேள்விப்பட்ட தலைவிக்கு தலைவர் மீது வீண் பழியாகிறதே என்று சினம் உண்டாகிறது. அவள் அவரைக் கனவில் கண்டு இன்பம் துய்ப்பது அவர்கட்குத் தெரியாது. நனவு நிலையை மட்டும் வைத்து அவர்கள் பேசிக் கொள்கிறார்கள் - கனவு நிலை பற்றி அவர்கள் அறிய வாய்ப்பில்லை. கணவர் பிரிந்து சென்றுள்ளார் என்பதில் மிகுந்த வருத்தத்துடன் இருந்தாலும் ஊரார் அவர் தன்னைப் பிரிந்து விட்டார் என்று குறையாகச் சொல்வதை அவளால் சற்றும் பொறுத்துகொள்ள இயலவில்லை. எனவே 'நாங்கள் கனவில் நீங்காது இருக்கிறோமே, பின் ஏன் ஊரார் அவரைப் பழிக்கிறார்கள்' எனக் கேட்கிறாள்.

‘இவ்வூரவர்’ என்பது தோழியை அயலராக்கிக் கூறியதாகப் பரிமேலழகர் கொள்கிறார். இச்சொல்லுக்கு ஊர்மக்கள் என்று நேரடியாகப் பொருள் கொள்வது சிறக்கும்.

'கனவினால் காணார்கொல்' குறிப்பது என்ன?

'கனவினால்காணார்கொல் என்றதற்கு அவரைக் கனவின்கண் காணார்களோ?, கனவிலே வருவது காணார்கொல், கனவிடத்து யான் என் காதலரைக் காண்பேன் என்பதனால் அப்பொழுது தாமும் அவரைக் கண்டு கொள்ளாரோ, கனவில் அவரைக் காண்பதில்லையோ!. என்னைப்போலத் தாமும் கண்டறியார் போலும், கனவிலே வருவதை அறியமாட்டார்களோ?, கனவில் நீங்காது வருதலைக் கண்டறியாரோ?, (நானும் என் காதலரும் கனவிற் சந்தித்ததை) தாமும் கனவிற் காணவில்லை போலிருக்கிறது, அவரவர் கனவினில் அவரவர் துணைவரைக் காண மாட்டார் போலும்!, கனவிலே காதலர் வருவதை யறியாது, அவர் கனவின்கண் நீங்காது வருதலைக் கண்டறிய மாட்டாரோ?, அவர் கனவின் கண் தப்பாது வருதலை என்போலக் கண்டறியார், கனவில் என் காதலர் கூடியிருப்பதைப் பாராதவர் என்றவாறு பொருள் கூறினர்.

கனவினால் என்ற சொல் கனவின்கண் என்றும், காணார்கொல் என்றது காணமாட்டாரோ? என்றும் பொருள்படுவன. கனவினால் காணார்கொல் என்றதற்குக் கனவினால் நீங்காது இருத்தலை காணார்போலும்! என்பது பொருள்.
யார் கனவில் யார் காணமாட்டார்? இப்பாடல் தலைவி தான் காணும் கனவில் தலைவர் வருவதை இவ்வூரார் அறிய மாட்டார்கள் போலும் எனச் சொல்வதாக அமைந்துள்ளது.
நனவில் நம்மைவிட்டுக் கணவர் பிரிந்தார் என்று பழி தூற்றுகிறார்கள் ஊர்மக்கள்; அவர் அவளது கனவில் தவறாது வருகின்றதை அறியார்கள். இவளது கனவில் தலைவர் வருவதை ஊரார் எப்படி அறியமுடியும்? தம்மைப் பிரிந்துவிட்டாரென்று அவரைக் குறை கூறுவதை அவளால் தாங்கிக் கொள்ளமுடியாது இவ்விதம் பேசுகிறாள் தலைவி.
சென்ற குறளில் ....கனவினால் காதலர்க் காணா தவர் (1219) என்று கனவில் காதலரைக் காணமாட்டாரோ என்று தலைவி வினவினாள். இங்கு கனவினால் இன்பம் காணமாட்டாரோ எனப் பொருள்படுமாறு கேட்கிறாள்.

சில உரையாளர்கள் தலைவி தன் காதலரைக் கனவில் காண்பதை ஊரார் தாமும் காணமாட்டார் போலும் என்றும் ஊர்மக்கள் அவரவர் கனவினில் அவரவர் துணைவரைக் காணவில்லை போலிருக்கிறது என்றும் இத்தொடர்க்கு உரை செய்தனர்.

'கனவினால் காணார்கொல்' என்றதற்குத் (தலைவர் என்) கனவின்கண் நீங்காது வருதலை (ஊர்மக்கள்) கண்டறிய மாட்டாரோ? என்பது பொருள்.

நனவில் நம்மைவிட்டு நீங்கி விட்டார் கணவர் என்பர்; அவர் கனவில் நீங்காது வருதலை இவ்வூரார் அறியார்கள்போலும்! என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

'கனவில் வாழும் வாழ்வு' என்று ஒன்று இருப்பது இவ்வூரார்க்குத் தெரியாதா என்ற தலைவியின் கனவுநிலை உரைத்தல்.

பொழிப்பு

என் காதலர் நனவிலே விட்டுப்பிரிந்தார் என்பர் இவ்வூரார்; அவர் கனவிலே வருவதை அறியமாட்டார்களோ?