இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1219



நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்

(அதிகாரம்:கனவுநிலை உரைத்தல் குறள் எண்:1219)

பொழிப்பு (மு வரதராசன்): கனவில் காதலர் வரக் காணாத மகளிர் நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை (அவர் வராத காரணம் பற்றி) நொந்துகொள்வர்.

மணக்குடவர் உரை: நனவின்கண் வந்து காதலரை நோவாநிற்பர், கனவின்கண் அவரைக் காணாதவர்: காண்பாராயின், நோவார்.
இது தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனை யியற்பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) கனவினான் காதலர்க் காணாதவர் - தமக்கு ஒரு காதலர் இன்மையின் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்; நனவினான் நல்காரை நோவர் - தாம் அறிய நனவின்கண் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் என நோவர் நிற்பர்.
(இயற்பழித்தது பொறாது புலக்கின்றாள் ஆகலின், அயன்மை தோன்றக் கூறினாள். தமக்கும் காதலருளராய அவரைக் கனவிற் கண்டறிவாராயின், நம் காதலர் கனவின்கண் ஆற்றி நல்குதல் அறிந்து நோவார் என்பதாம்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: கனவிலே காதலரைக் காணாதவர்கள், நனவிலே வந்து அவர் அருள் செய்யவில்லையென்று வருத்தப்படுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கனவினால் காதலர்க் காணாதவர், நனவினால் நல்காரை நோவர்.

பதவுரை: நனவினால்-விழித்திருக்கும் நிலையில்; நல்காரை-அருள் செய்யாதவரை, தலையளி செய்யாதவரை; நோவர்-நொந்து கொள்வர், வருத்தப்படுவர்; கனவினால்-கனவில்; காதலர்-காதலர், இங்கு காதல் கணவர்; காணாதவர்-காணமாட்டாதவர்.


நனவினால் நல்காரை நோவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நனவின்கண் வந்து நல்காத காதலரை நோவாநிற்பர்;
பரிப்பெருமாள்: நனவின்கண் வந்து நல்காத காதலரை நோவாநிற்பர்;
பரிதி: நனவினால் நல்கார் என்று விதனப்படுவர்;
காலிங்கர் ('நல்காமை' பாடம்): நெஞ்சே! நம் காதலர் நம்மை நனவிடத்து வந்து நல்காமையைக் குறித்து இவள்மாட்டு அருளும் அன்பும் இலர் என்று இங்ஙனம் நொந்து உரைப்பர் யார் எனின்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) தாம் அறிய நனவின்கண் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் என நோவர் நிற்பர். [நல்காத - அருள் செய்யாத]

'தாம் அறிய நனவின்கண் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் என நொந்து உரைப்பர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தாம் நேரிலே அருளாத அவரைப் பழிப்பர்', 'நனவில் வந்து அன்பு காட்டாத எம் காதலரைக் குறை கூறி நொந்து கொள்வர்', 'தம்முடைய காதலர் நனவில் வராததற்கு நொந்துகொள்ள வேண்டும். நான் ஏன் அவரை நோக வேண்டும்?', 'தாம் அறிய நனவில் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் எனப்பழி கூறுவார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நேரிலே அருளாத அவரை நொந்து கொள்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

கனவினால் காதலர்க் காணாதவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கனவின்கண் அவரைக் காணாதவர்: காண்பாராயின், நோவார்.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனை யியற்பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: கனவின்கண் அவரைக் காணாதவர்: காண்பாராயின், நோவார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனை யியற்பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது.
பரிதி: கனவினாலே காதலரைக் காணாத மாதர் என்றவாறு.
காலிங்கர்: இங்ஙனம் நனவிடைப் பிரிந்த தம் காதலரைக் கனவிடைக் கண்டு இன்புறாதவர். காலிங்கர் குறிப்புரை: எனவே அங்ஙனம் கூறிய அயலார் கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லுவாளாய்ச் சொல்லினாள் என்றவாறு.
பரிமேலழகர்: தமக்கு ஒரு காதலர் இன்மையின் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்.
பரிமேலழகர் குறிப்புரை: இயற்பழித்தது பொறாது புலக்கின்றாள் ஆகலின், அயன்மை தோன்றக் கூறினாள். தமக்கும் காதலருளராய அவரைக் கனவிற் கண்டறிவாராயின், நம் காதலர் கனவின்கண் ஆற்றி நல்குதல் அறிந்து நோவார் என்பதாம். [புலக்கின்றாள் - பிணங்குகின்றாள்] 'நன்மை தோன்றக் கூறினாள்' என்றும் பாடமுண்டு.

'கனவின்கண் அவரைக் காணாதவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கனவிலும் காதலரைக் காணாதவர்கள்தாம் நேரிலே அருளாத அவரைப் பழிப்பர்', 'தம் காதலரைக் கனவிடத்துக் கண்டறியாத மகளிர்', 'கனவிற்கூடத் தம்முடைய காதலரைக் கண்டு மகிழாத பெண்கள்தாம்', 'தமக்கு ஒரு காதலர் இல்லாமையினால் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தம் காதற்கணவரைக் கனவிடைக் கண்டு இன்புறாதவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தம் காதற்கணவரைக் கனவிடைக் கண்டு இன்புறாதவர் நேரிலே அருளாத அவரை நோவர் என்பது பாடலின் பொருள்.
'நோவர்' குறிப்பது என்ன?

நனவில் செய்யும் அனைத்தையும் கணவர் கனவில் வந்து செய்கிறாரே, பின் எனக்கு எனக்கு என்ன வருத்தம்?

கனவிலே காதலரைக் கண்டு இன்பம் எய்தாவர்கள்தாம், நனவிலே வந்து அவர் அருள் செய்யவில்லையென்று வருந்திக் கூறுவர்.
காட்சிப் பின்புலம்:
கணவர் கடமை காரணமாகப் பிரிந்து சென்றிருக்கிறார். தலைவிக்கு அவரது பிரிவு பெரும் துயர் தருகிறது. பிரிவாற்றாமல் இருக்கும் அவளுக்கு அவரது தூதாகக் கனவு வருகிறது. கனவில் அவர் தோன்றுவது தன் தனிமைத் துன்பம் நீக்க உதவுகிறது என நினைக்கிறாள்.
தன் துயர் போக்கிய கனவுக்கு எதை நான் விருந்தாகச் செய்வேன்?; அடுத்தமுறை அவர் கனவில் வரும்போது நான் உறங்கிவிட்டால் நான் பிழைத்துள்ளதை எப்படித் தெரிவிப்பேன்?; நான் தூங்காதிருக்கும்போது நல்காதவரைக் கனவில் காண்பதால் என் உயிர் நிலைத்துள்ளது; நேரில் வந்து அன்பு செய்யாதவரைக் கனவு தேடித் தருவதானால் கனவின்கண்ணே எனக்குக் காதல் உண்டாகிறது; கனவில் அவரை நேரில்கண்டதுபோல் மகிழ்ச்சி உண்டாகிறது; கனவில் வரும் அவரை நனவு வந்து நீங்கச்செய்கிறது; நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லையாயின் அவர் என்னைவிட்டு நீங்கமாட்டாரே!; நேரில் வந்து எனக்கு இன்பம் அளிக்காமல் கனவில் வந்து ஏன் என்னை வருத்துகிறார்?; கணவர் தன்னுடன் கலந்து மகிழ்வது போலவே கனவு காண்கிறாள், கனவில் அவர் அவள் தோள் மீது படர்ந்து தழுவுவது இனிமையாக இருந்ததானாலும். விழிப்பு வந்தவுடன் அவர் அவள் மனத்துள் மிக விரைவாகச் சென்று பழையபடி அமர்ந்து கொள்கிறாராம், அவர் என்னைவிட்டு உடலாலும் உள்ளத்தாலும் இப்பொழுதும் நீங்கவில்லையே' என்று சொல்லித் தேற்றிக் கொண்டிருக்கிறாள் தலைவி.

இக்காட்சி:
கனவில் தம் கணவரைக் கண்டுஇன்புறாதவரே நேரில் வந்து அருளாத அவரைக் குறித்து வருத்தப்பட்டு நொந்து உரைப்பர் என்கிறாள் தலைவி.
நனவில் போல கனவிலும் அவருடனிருந்து மகிழ்ச்சி பெறுகிறாள் அவள்; கனவிலும் அவருடன் கலந்து உறவாடுகிறாள். இவ்விதம் கனவு தரும் இன்பத்தைக் கிடைக்கக்கூடாத பேறு பெற்றதாக உணர்கிறாள். பிரிந்து சென்ற பின், அவர் நேரில் வந்து இன்பம் தரவில்லையாயினும் கனவுகள் அந்த இன்பத்தைக் குறைவில்லாமல் கொடுத்து வருகின்றன என்கிறாள். மேலும் 'யாராவது பிரிந்து சென்ற கணவர் தமக்கு அருளவில்லையே என்று சொன்னால் அவர்கள் தம்தம் காதல்கணவரைக் கனவில் காண்பதவராய்த்தான் இருக்கவேண்டும். கனவு கண்டு அவருடன் இன்பம் எய்தியிருந்தால் இங்ஙனம் நொந்து பேசமாட்டார்கள்' எனவும் சொல்கிறாள் நம் தலைவி. தலைவரை அவள் கனவில் கண்டு மகிழ்ச்சியுறுவதால், வருத்தமுற்று எதனையும் யாரிடமும் உரைக்கத் தேவையிருக்கவில்லை.

'நோவர்' குறிப்பது என்ன?

'நோவர்' என்றதற்கு நோவாநிற்பர், விதனப்படுவர், நொந்து உரைப்பர், நொந்துகொள்வர், நோகின்றார்கள், பழிப்பர், நொந்து கொள்ளுவார்கள், வருந்தியுரைப்பர், வருத்தப்படுவர், பழி கூறுவார், பழிப்பார்கள், பழித்து நொந்து கொள்வர், இகழ்ந்து வருந்துவார் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பிரிவில் சென்றுள்ளமையால் நேரிலே வந்து அன்பு செய்யமுடியாத கணவரை அவரது மனைவியர் குறைகூறுவதாக அமைந்த பாடல் இது.
கடமை காரணமாகப் பிரிந்து சென்றுள்ள கணவர் நினைவாகத் தலைவி இருக்கிறாள். அவளது நிலையைக் காண்போர், அவளுக்கு ஆறுதல் கூறும்வண்ணம் துணைவரைப் பிரிந்து வருந்திக் கலங்கும் மகளிர் ஊரில் நீ மட்டும் அல்லள்; பலர் உண்டு எனச் சொல்லிச் செல்கின்றனர். உடனே தன் நிலையை எண்ணிப் பார்க்கிறாள். தன் கனவில்தான் கணவர் வந்து இன்பம் தருகிறாரே. அதுபோல் மற்றவர்கள் கனவில் அவர்களது கணவன்மார் தோன்றுவது இல்லையோ; அதனால்தான் அவர்கள் நோகிறார்கள் போலும் என ஆற்றிக்கொள்கிறாள். தன்னைப்போல் கணவரைக் கனவில் கண்டு இன்பம் எய்துவராக இருப்பின். அம்மகளிர் இவ்வாறு அவரை நொந்து கொள்ள மாட்டார் எனக் கூறுகிறாள் தலைமகள்.
நனவில் அவர் வரவில்லை என்று தான் ஏன் நோகவேண்டும்? தான்தான் அவரைக் கனவில் கண்டு அவருடன் கலந்து கொள்கின்றேனே; கனவில் காணமாட்டாதவரன்றோ அவ்வாறு நோவர். நனவிலே தலைவர் வராததால் நொந்ததாக, கனவிலே அவரைக் காணாத தலைவியரே கூறுவர் என்கிறாள் அவள்.

யார் எதற்காக நோவர் என்பதற்கு 'நனவிடைப் பிரிந்த தம் காதலரைக் கனவிடைக் கண்டு இன்புறாதவர், நம் காதலர் நம்மை நனவிடத்து வந்து நல்காமையைக் குறித்து இவள்மாட்டு அருளும் அன்பும் இலர் என்று இங்ஙனம் நொந்து உரைப்பர்' என்று தலைவிமாட்டு அன்பில்லா கணவர் என்று மற்றவர் நொந்து உரைப்பர் என்று பலர் உரை கண்டனர். 'தலைவியின் கணவரின் அன்பை அறிந்திராதவர்கள்', 'தமக்கொரு காதலரின்மையால் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்', 'இன்னும் திருமணம் ஆகாத அல்லது ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத பெண்கள்' போன்றோர் நோவர் என்று வேறு சிலர் விளக்கம் கூறினர்.
கனவினால் கணவரைக் கண்டு மகிழமாட்டாதவரே நொந்துகொள்வர் என்பது நல்ல விளக்கமாம்.

'நோவர்' என்ற சொல் வருந்தியுரைப்பர் என்ற பொருள் தருவது.

தம் காதலரைக் கனவிடைக் கண்டு இன்புறாதவர் நேரிலே அருளாத அவரை நொந்து கொள்வர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கனவில் காதலரைக் கண்டுஇன்புறத் தெரியாத பெண்களுக்காக தலைவி தனது கனவுநிலை உரைத்தல்.

பொழிப்பு

கனவில் காதலருடன் இன்பம் காணாதவர்கள்தாம் நேரில் வந்து அருள் செய்யாத காதலரைப் பற்றி நொந்துரைப்பர்.