இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1218



துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து

(அதிகாரம்:கனவுநிலை உரைத்தல் குறள் எண்:1218)

பொழிப்பு (மு வரதராசன்): தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழித்தெழும்போது உடனே விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகின்றார்.

மணக்குடவர் உரை: காதலர் உறங்குங்காலத்துத் தோள்மேலராகி விழித்தகாலத்து விரைந்து மனத்தின்கண்ணே புகுவர்.
இஃது உறக்கம் நீங்கினால் யாண்டுப் போவரென்று நகைக் குறிப்பினாற் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (தான் ஆற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்தாட்கு இயற்பட மொழிந்தது.) துஞ்சுங்கால் தோள் மேலராகி - என் நெஞ்சு விடாது உறைகின்ற காதலர் யான் துஞ்சும் பொழுது வந்து என் தோள் மேலராய்; விழிக்குங்கால் விரைந்து நெஞ்சத்தர் ஆவர் - பின் விழிக்கும் பொழுது விரைந்து பழைய நெஞ்சின் கண்ணராவர்.
(கலவி விட்டு மறையும் கடுமைபற்றி 'விரைந்து' என்றாள். ஒருகாலும் என்னின் நீங்கி அறியாதாரை நீ நோவற்பாலை யல்லை என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: தூங்கும்போது கனவில் தோள்மேல் இருந்து விழித்தவுடன் நெஞ்சிற்குள் போய்விடுவார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

பதவுரை: துஞ்சுங்கால்-உறங்குகின்ற பொழுது; தோள்-தோள்; மேலர்-மேலேயிருப்பவராக; ஆகி-ஆய்; விழிக்குங்கால்-கண் விழிக்கும்பொழுது; நெஞ்சத்தர் ஆவர்-உள்ளத்தின் கண்ணராக ஆகுவார், நெஞ்சினுள் சென்று உறைவர்; விரைந்து-விரைவாக, நேரம் தாழ்க்காமல்.


துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காதலர் உறங்குங்காலத்துத் தோள்மேலராகி;
பரிப்பெருமாள்: காதலர் உறங்குங்காலத்துத் தோள்மேலராகி;
பரிதி: நித்திரையிடத்துத் தோள்மேல் கிடப்பர்;
காலிங்கர்: தோழீ! ஒருகால் இங்ஙனம் கண் துஞ்சப் பெற்றேனாயின் மற்று அப்பொழுது என் மேலராவர்;
பரிமேலழகர்: (தான் ஆற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்தாட்கு இயற்பட மொழிந்தது.) என் நெஞ்சு விடாது உறைகின்ற காதலர் யான் துஞ்சும் பொழுது வந்து என் தோள் மேலராய்; [இயற்பழித்தல் - காதலர் அன்பிலர் என்று தோழி பழித்துப் பேசுதல்]

'யான் உறங்குங்காலத்து வந்து என் தோள் மேலராய்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தூங்கும்போது கனவில் தோள்மேல் இருந்து', 'நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது வந்து என் தோள்களைத் தழுவுகிறார்', 'தூங்கும்போது என் காதலர் என் தோளின்மேல் இருப்பவர்', 'என் நெஞ்சிலிருந்து நீங்காது இருக்கின்ற காதலர் நான் உறங்கும்போது வந்து என் தோள் மேலராய்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நான் உறங்குங்காலத்து என் மேலர் ஆகி என்பது இப்பகுதியின் பொருள்.

விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விழித்தகாலத்து விரைந்து மனத்தின்கண்ணே புகுவர்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உறக்கம் நீங்கினால் யாண்டுப் போவரென்று நகைக் குறிப்பினாற் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: விழித்தகாலத்து விரைந்து மனத்தின்கண்ணே புகுவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உறக்கம் நீங்கினால் யாண்டுப் போவரென்று நகைக் குறிப்பினாற் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: விழித்தபொழுது நெஞ்சத்துள்ளார் மிகவும்; ஆகவே மாயக்கள்ளர் என்றவாறு.
காலிங்கர்: இனி விழிக்குங்காலத்து அப்பொழுது என் நெஞ்சத்தார் ஆவர் விரைந்து.
காலிங்கர் குறிப்புரை: எனவே ஒரு காலும் அவர் என்னைப் பிரிவதிலர்; நீ என்பொருட்டு வருந்த வேண்டுவதில்லை என்றவாறு.
பரிமேலழகர்: பின் விழிக்கும் பொழுது விரைந்து பழைய நெஞ்சின் கண்ணராவர்.
பரிமேலழகர் குறிப்புரை: கலவி விட்டு மறையும் கடுமைபற்றி 'விரைந்து' என்றாள். ஒருகாலும் என்னின் நீங்கி அறியாதாரை நீ நோவற்பாலை யல்லை என்பதாம். [கலவி விட்டு - புணர்ச்சி நீங்கி; நோவற்பாலை அல்லை - நீ பழித்துப் பேச வேண்டா]

'விழித்தகாலத்து விரைந்து மனத்தின்கண்ணே புகுவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'விழித்தவுடன் நெஞ்சிற்குள் போய்விடுவார்', 'காதலர் விட்டாரென்ற மகிழ்ச்சியோடு நான் விழித்தவுடனே என் மனத்துக்குள் ஓடி மறைந்துவிடுகிறார்', 'தூங்கி விழிக்கும்போது விரைந்து நெஞ்சிற்போய்த் தங்குகின்றார்', 'பின் விழிக்கும் போது விரைந்து பழைய நெஞ்சின் கண்ணராவார்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

விழிக்கும் போது மறுபடியும் என் நெஞ்சிற்குள் விரைந்து போய்விடுவார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நான் உறங்குங்காலத்து என் மேலர் ஆகி, விழிக்கும் போது மறுபடியும் என் நெஞ்சிற்குள் விரைந்து போய்விடுவார் என்பது பாடலின் பொருள்.
'தோள்மேலர் ஆகி' என்ற தொடர் குறிப்பது என்ன?

கனவோ நனவோ என் நெஞ்சினின்று எப்பொழுதும் நீங்காது நிறைந்திருக்கிறார் என் தலைவர்.

தூங்கும்போது என் மெய்மேலும் விழித்து எழும் போது விரைவாக என் நெஞ்சில் உள்ளவராகவும் ஆகின்றார் என் கணவர்!
காட்சிப் பின்புலம்:
தலைவர் கடமையாற்ற அயல் சென்றபின் தலைவிக்குப் பிரிவின் துயர் அகலாது இருக்கிறது. சென்றவரிடமிருந்து ஒரு செய்தியும் வரவில்லையே என்று வருந்திக்கொண்டிருக்கும்போது அவர் கனவில் வந்து தோன்றினார். துன்பத்தை ஆற்றக் கனவு காண்பது உதவுகிறது என எண்ணுகிறாள்-
தன் துயரத்தையெல்லாம் போக்கிய கனவுக்கு எதை நான் விருந்தாகச் செய்வேன்?; அடுத்தமுறை அவர் கனவில் வரும்போது நான் தூங்கிவிட்டால் நான் உயிருடனிருக்கிறேன் என்பதை எப்படித் தெரிவிப்பேன்?; நான் தூங்காதிருக்கும்போது வந்து அன்பு செலுத்தாதவரைக் கனவில் காண்பதால் என் உயிர் நிலைத்துள்ளது; நனவில் வந்து அன்பு செய்யாதவரைக் கனவு தேடித் தருவதானால் கனவின்கண்ணே எனக்குக் காதல் உண்டாகிறது; நனவில்போல் அவரைக் கண்டாலும் மகிழ்ச்சி உண்டாகிறது; நனவு வந்து கனவில் வரும் அவரை நீங்கச்செய்கிறது; நேரில் வந்து எனக்கு இன்பம் அளிக்காமல் கனவில் வந்து ஏன் என்னை வருத்துகிறார்? இவ்வாறு தலைவி தன் கணவர் கனவில் வருவதுபற்றி நினைத்துக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
கனவில் காதலரைப் பார்க்கமுடிகிறது; கனவுநிலை இன்பமும் தருகிறது. கனவில் உடலொடுஉறவாடும் காட்சிகள் மிகவாக எழுகின்றன. கனவில் அவர் அவள் தோள் மீது படர்ந்து தழுவுகிறார். காதலர் தன்னுடன் கலந்து மகிழ்வது போலவே கனவு காண்கிறாள். அது இனிமையாக இருக்கிறது. எவ்வளவு நேரம்தான் கனவு நீடிக்கும்? விழிப்பு உண்டாகிறது. அவர் அவள் மனத்துள் மிக விரைவாகச் சென்று பழையபடி அமர்ந்து கொள்கிறார். 'படுத்துக் கண்மூடி உறங்கியபோது, அவர் என் தோள்மேல் கிடந்தார். விழித்த பிறகு என் நெஞ்சிலே நிறைந்து நிற்கிறார். நனவிலும் உடற்பிரிவு இல்லை! அவர் என்னைவிட்டு உடலாலும் உள்ளத்தாலும் எப்பொழுதும் நீங்கவில்லையே' என்று சொல்லித் தேற்றிக் கொள்கிறாள் தலைவி.

'உறக்கம் நீங்கினால் யாண்டுப் போவர் என்று நகைக் குறிப்பினால் கூறிய தோழிக்குத் தலைவி கூறியது' என்று சூழல் அமைப்பார் மணக்குடவர். 'ஒரு காலும் அவர் என்னைப் பிரிவதிலர்; நீ என்பொருட்டு வருந்த வேண்டுவதில்லை' என்று தோழியிடம் தலைவி கூறுவதாகக் கொள்வார் காலிங்கர்.
விழித்துக் கொண்டவுடன் கணவர் தன் நெஞ்சத்துள் விரைந்து சென்று ஒளிக்கின்றார் என்று தலைவி சொல்வதாக இக்குறள் அமைந்துள்ளது. அவர் தனக்கு உரிமையுள்ள மனைவியைத்தானே கூடினார். பின் ஏன் ஒளியவேண்டும்? இதற்குப் பரிமேலழகர் 'கலவி விட்டு மறையும் கடுமைபற்றி 'விரைந்து' என்றாள்' என நயம் கூறுவார்.

இக்குறட்கருத்துக் கொண்ட பாடல் ஒன்று சங்க இலக்கியமான கலித்தொகையில் உள்ளது. அது:
ஓஒ! கடலே!
தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமை எடுத்து,
'பற்றுவேன்' என்று, யான் விழிக்குங்கால், மற்றும் என்
நெஞ்சத்துள் ஓடி ஒளித்து, ஆங்கே, துஞ்சா நோய்
செய்யும், அறனில்லவன்
(கலித்.144 பொருள்: ஓஓ! யான் உற்ற வருத்தத்தைக் கடலே! நின்னை ஒழியப் போக்குவாரை வேறுடையே னல்லேனென்றுங் கூறினாள்; அங்ஙனங் கூறிப் பின்னும், கடலே! அறனில்லாதவன் தெளிய என் கண்ணுள்ளேவந்து தோன்றுகையினாலே கூடின இமையை விழித்துப் பிடித்துக் கொள்வேனென்று கருதி யான்விழிக்கப் பின்னையும் ஓடிப்போய் என்னெஞ்சத்துள்ளே மறைந்துநின்று அப்பொழுதே யான் துயிலாத காமநோயைத் தாராநிற்கும்).

'தோள்மேலர் ஆகி' என்ற தொடர் குறிப்பது என்ன?

இத்தொடர்க்குத் தோள்மேல் கிடப்பர், என் தோள் மேலராய், என் மேலராவர், தோள்மேலர் ஆகி, தோள் மேல் உள்ளவராகி, தோள் மீது படுத்திருக்கிறவராக இருந்து, தோள் மேல் இருப்பவராகி, தோள்மேல் சாய்ந்திருப்பவராகி, தோள்மீது உள்ளவராகி, என் தோள் மேலராய்க் கூடி இருந்து, என் தோள் மேலராய்ச் சாய்ந்து கிடந்து, தோளைத் தழுவிக் கிடப்பார், என் தோள்மேலமர்ந்திருந்து, தோள் மேல் படர்ந்தவர் எனப் பொருள் கூறினர்.

'தோள்மேலர் ஆகி' என்பதற்கு தோள் மேல் உள்ளவராகி என்பது நேர்பொருள். தோள் என்ற சொல் உடல் முழுவதையும் குறிப்பதாகவே காமத்துப்பாலில் ஆளப்பட்டது. இங்கு தலைவியின் உடல்மேல் தலைவர் படர்ந்துள்ளதாகத் தலைவி கனவு காண்பதைத் தோள்மேலர் ஆகி என்ற தொடர் குறிக்கிறது.
இத்தொடர் இடக்கரடக்கலாகச் சொல்லப்பட்டது. கனவில் மெய்யுறு புணர்ச்சி கண்டு மகிழ்ந்ததைச் சொல்லவந்த தலைவி கனவில் 'என்தோள்மீது இருந்தவராகி' என்கிறாள்.
நாமக்கல் இராமலிங்கம் இதை விளக்கம்போது 'தோள் மேலராகி- என் உடலைத் தழுவினராகி, காமப்பகுதியில் 'தோள்' என்பது தழுவி அணைப்பதையே குறிக்கும். நான் தூங்கும்போது கனவில் வந்து புணரும் காதலர்... என்பது கருத்து' என்றார்.

'தோள்மேலர் ஆகி' என்றதற்குத் தோள் மேல் படர்ந்தவராகி என்பது பொருள்.

நான் உறங்குங்காலத்து என் மேலர் ஆகி, விழிக்கும் போது மறுபடியும் என் நெஞ்சிற்குள் விரைந்து போய்விடுவார் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சேய்மைக்கண் உள்ள காதலரால் தலைவி காம இன்பமும் பெற வகைசெய்யும் கனவுநிலைஉரைத்தல்.

பொழிப்பு

உறங்கும்போது கனவில் என் தோள்மேல் இருந்து விழித்தவுடன் என் நெஞ்சிற்குள் விரைந்து போய்விடுவார்.