இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1215



நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது

(அதிகாரம்:கனவுநிலை உரைத்தல் குறள் எண்:1215)

பொழிப்பு (மு வரதராசன்): முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுதுமட்டும் இனிதாயிற்று; இப்பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.

மணக்குடவர் உரை: நனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்பொழுதைக்கு இன்பமாம்; அதுபோலக் கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் கண்ட அப்பொழுதைக்கு இன்பமாம்.
இது கனவிற் புணர்ச்சி இன்பம் தருமோவென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நனவினான் கண்டதூஉம் (இனிது) ஆங்கே - முன் நனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பந்தானும் இனிதாயிற்று, அப்பொழுதே; கனவும் தான் கண்டபொழுதே இனிது - இன்று கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அக் கண்டபொழுதே இனிதாயிற்று. அதனான் எனக்கு இரண்டும் ஒத்தன.
(இனிது' என்பது முன்னும் கூட்டப்பட்டது. கனவு -ஆகுபெயர். முன்னும் யான் பெற்றது இவ்வளவே, இன்னும் அது கொண்டு ஆற்றுவல்' என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: நினைவின்கண் கண்டதும் இனிதே. அவ்வாறே கனவின்கண் கண்டபொழுதும் இனிதாயுள்ளது. (நினைவிலும் கனவிலும் அடையும் இன்பங்கள் ஒத்தனவே.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது.

பதவுரை: நனவினால்-விழித்திருக்கும் நிலையில்; கண்டதூஉம்-பார்த்ததும்; ஆங்கேஅப்பொழுதே; கனவுந்தான்-கனவுமே; கண்டபொழுதே-பார்த்த உடனேயே, கண்டவுடனேயே; இனிது-இன்பமானது.


நனவினால் கண்டதூஉம் ஆங்கே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்பொழுதைக்கு இன்பமாம்;
பரிப்பெருமாள்: நனவின்கண் கண்ட இன்பமும் அப்பொழுதைக்கு இன்பம் ஆவதுபோல;
பரிதி: நனவினால் கண்டதும் இனிது;
காலிங்கர்: தோழீ! நம் காதலரை நனவிடத்துக் கண்டால் மற்று அதுவும் அவ்விடத்தே இனிது ஆகும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) முன் நனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பந்தானும் இனிதாயிற்று, அப்பொழுதே;
பரிமேலழகர் குறிப்புரை: இனிது என்பது முன்னும் கூட்டப்பட்டது.

'நனவினால் காதலரைக் கண்டதும் இனிது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிப்பெருமாள் உரையில் ஆவதுபோல என்ற குறிப்பு உள்ளது நோக்கத்தக்கது. இவர் உரைபோன்று பரிமேலழகரும் ஒப்புப் பொருள் பட உரை எழுதினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நனவும் அவரைப் பார்க்கும் அப்போது இனிது', 'நனவில் அவரைக் கண்டு கூடியதும் இனியதாயிற்று', 'நனவில் அனுபவிக்கிற கலவி இன்பமும் கலவி செய்கிற சிறிது நேரத்து மட்டுந்தானே?', 'நனவிலே நுகர்ந்த இன்பம் அப்பொழுதுதான் இனிதாயிற்று', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நனவில் கண்டவுடனேயே எப்படி ஆயிற்றோ என்பது இப்பகுதியின் பொருள்.

கனவுந்தான் கண்ட பொழுதே இனிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோலக் கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் கண்ட அப்பொழுதைக்கு இன்பமாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது கனவிற் புணர்ச்சி இன்பம் தருமோவென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது
பரிப்பெருமாள்: கனவின்கண் கண்ட இன்பமும் அப்பொழுதைக்கு இன்பமாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கனவிற் புணர்ச்சி இன்பம் தருமோவென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது
பரிதி: அதனினும் இனிது நாயகரைக் கனவில் காணுதல் என்றவாறு.
காலிங்கர்: இனி அக்கனவுதானும் அவ்விடத்து அவரைக் கண்ட பொழுதே பெரிதும் இனிது ஆகும் என்றதனால் இங்ஙனம் ஆயினும் எய்தப்பெறின் யாதும் வேற்றுமை இன்றி யாம் அறிதற்கு அரிது என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: இன்று கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அக் கண்டபொழுதே இனிதாயிற்று. அதனான் எனக்கு இரண்டும் ஒத்தன. [இரண்டும் - கணவரை நனவின்கண் கண்டு அனுபவித்த இன்பமும் கனவின்கண் கண்டு அனுபவித்த இன்பமும்]
பரிமேலழகர் குறிப்புரை: கனவு -ஆகுபெயர். முன்னும் யான் பெற்றது இவ்வளவே, இன்னும் அது கொண்டு ஆற்றுவல்' என்பதாம். [இவ்வளவே -இவ்வளவு இன்பமே; அது கொண்டு - அவ்வளவு இன்பங்கொண்டு]

'அதுபோலக் கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் கண்ட அப்பொழுதைக்கு இன்பமாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் சிறப்புரையில் 'கனவில் புணர்ச்சி இன்பம் தருமோவென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது' எனப் புணர்ச்சி இன்பத்தைச் சேர்த்துக் கூறுகின்றனர். காலிங்கர் 'கனவிலும் அவரைக் கண்டபொழுதே இன்பம் உண்டாயிற்று' என்று கூறினார். பரிமேலழகர் 'நனவிலும் கனவிலும் பெற்ற இன்பத்தில் வேற்றுமை காணவில்லை; அது கொண்டு ஆற்றுவேன்' என்று தலைவி கூறுவதாக உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கனவும் பார்க்கும் அப்போது இனிது', 'அதுபோலவே, கனவிலும் அவரைக் கூடியதாகக் கண்டபொழுது இனியதாயிற்று', 'கனவில் அனுபவித்த கலவியின்பம் கனவு காணும் சிறிது நேரத்துக்குத்தான் என்றால்', 'அதுபோலக் கனவிலே அவரைக் கண்ட போதுண்டான இன்பமும் இப்பொழுது இனிதாயிற்று; ஆதலாற் கனவும் நனவும் எனக்கு ஒத்தவையே' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

கனவிலும்தான் கண்டபொழுதே இனிது ஆயிற்று என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நனவில் அவரைக் கண்டவுடனேயே எப்படி இனிதானதோ ஆங்கே கனவிலும்தான் அவரைக் கண்டபொழுதே இனிது ஆயிற்று என்பது பாடலின் பொருள்.
'ஆங்கே' என்ற சொல் குறிப்பது என்ன?

நனவானாலும் கனவானாலும் அவரைக் கண்டதும் இன்பமாகிறது.

கணவரை நேரில் பார்க்கும்பொழுது உடனேயே மகிழ்ச்சி பொங்கும். அதுபோலவே கனவிலும் அவரைக் கண்டபொழுதிலே இன்பம் உண்டாயிற்று.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகப் பிரிந்து சென்றுள்ள கணவர் இன்னும் திரும்பிவரவில்லை. தலைவி பிரிவை ஆற்றமுடியாமல் துயருற்று அவரை எப்பொழுது காணப்போகிறோமோ என்று ஏங்கிய உள்ளத்துடன் இருக்கிறாள்.
அதுசமயம் அவர் கனவில் தோன்றியபோது அது அவளுடைய துயரத்தை முற்றிலும் மாற்றிவிட்டதாக உணர்கிறாள். அதற்காக கனவுக்கு நன்றி பாராட்ட என்ன விருந்து பண்ணுவேனோ என்று தலைகால் புரியாத மகிழ்ச்சிப் பெருக்கில் இருக்கிறாள்; மறுபடியும் அவர் கனவில் வரவேண்டி தன் கண்களை உறங்குமாறு வேண்டுகிறாள்; நேரில் வந்து அன்பு செய்யாதவரைக் கனவில் காண்பதால் தன் உயிர் நிலைத்திருக்கிறது என்கிறாள்; கனவு அவரைத் தேடித் தருவதனால் அதன்கண் தனக்குக் காமம் பிறக்கிறது எனவும் கூறுகிறாள். இவ்விதம் கனவுதரும் நன்மைகளை எண்ணியபடி தலைவி இருக்கிறாள்.

இக்காட்சி:
தலைவரை நேரில் காணும்போது மனைவியின் மனம் இன்பத்தால் நிறையும். அதைப்போலவே, அவரைக் கனவில் கண்ட பொழுதிலும், அவளுக்கு அவரை நேரில் கண்டது போன்ற இன்பமாயிற்று. நனவிற்போல் கனவிலும் அவரைக் கண்ட அப்பொழுது இனிதாய் இருப்பதால் கனவுமே தனக்கு இனிமை உண்டாக்குவதாகத் தலைவி நினைக்கிறாள்.
கடமையை முடித்து விரைவில் கணவர் திரும்பி வரமாட்டாரா என்ற நினைப்போடு உறங்கச் சென்ற காதலிக்குக் கனவு வந்தது. கனவில் காதலனைக் கண்டாள்; நனவில் வந்து நல்கமுடியாத தலைவரைக் கனவில் கண்டதால் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி, மேலும் கனவு பற்றி இப்பொழுது எண்ணுகிறாள். நனவில் அவரைப் பார்க்கும்பொழுதெல்லாம் தன் மனம் பெரிதும் மகிழ்ச்சியுறும். அதுபோலவே கனவிலும் அவரைக் கண்டபோது இன்பம் உண்டானது. தனக்கு வேற்றுமை ஒன்றும் தெரியவில்லையே என்கிறாள் அவள். நேரில் பார்ப்பதுபோல் கனவில் அதே இன்பம் உண்டாகாது. எனினும் தனக்குத்தானே ஆறுதல் சொல்லும் வகையில் தலைவி அதே இன்பம் பெற்று பிரிவுத் துன்பம் அகன்றது என்கிறாள்.

இக்குறள் காட்சிதரும் தலைவர் தரும் இன்பம் பற்றியது. அவரை நேரில் பார்ப்பதால் பெறும் களிப்பு, மற்றும் கனவில் அவரைக் காண்பதால் எய்தும் மகிழ்ச்சி இவை இரண்டும் வேற்றூமையின்று ஒன்று போலவே உள்ளது எனத் தலைவி சொல்வதாக உள்ளது. குறள் நடையும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் உரையாளர்களில் சிலர், காணும் இன்பம் தாண்டி, இப்பாடல் புணர்ச்சி இன்பம் பற்றியதாக எண்ணி பொருளுரைத்தனர்; கனவில் புணர்ச்சி இன்பம் பெறுவது பற்றிய பாடல்கள் இவ்வதிகாரத்து இறுதிப்பகுதியில் உள்ளன.

'ஆங்கே' என்ற சொல் குறிப்பது என்ன?

'ஆங்கே' என்றதற்கு அப்பொழுதைக்கு, அதனினும், அவ்விடத்தே, அப்பொழுதே, அப்பொழுதுமட்டும், அப்போது, அதுபோலவே, அப்போது மட்டும்தான், அப்பொழுதுக்கு, அப்பொழுதுதான், அவ்வாறே, அந்தந்த நேரத்தில் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஆங்கே என்றதற்கு அப்பொழுதே அல்லது அவ்விடத்தே என்பது பொருள். இங்கும் அவ்விரைவுப் பொருள் குறிப்பதாகவே உள்ளது. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு (நட்பு 788; பொருள்: உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக் காப்பது போல், அப்பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு), பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர் அறிவுடையவர் (காலமறிதல் 487; பொருள்: பகைவர் தீங்கு செய்த அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார்; காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர்) என்ற இடங்களிலும் இச்சொல்லாட்சி காணப்படுகிறது.

'ஆங்கே' என்ற சொல்லுக்கு அப்பொழுதே என்பது பொருள்.

நனவில் அவரைக் கண்டவுடனேயே எப்படி இனிதானதோ கனவிலும்தான் கண்டபொழுதே இனிது ஆயிற்று என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கணவரைக் கனவில் காணும்போதும் நேரில் பார்க்கும் அதே இன்ப உணர்வு ஏற்படுவதாகத் தலைவி தன் கனவுநிலை உரைத்தல்.

பொழிப்பு

நனவில் காதலரைப் பார்த்தவுடனே எப்படி இன்பம் உண்டாயிற்றோ அப்படியே கனவிலும் அவரைப் காணும்பொழுதே இனிதாயிற்று.