இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1214



கனவினான் உண்டாகும் காமம் நனவினால்
நல்காரை நாடித் தரற்கு

(அதிகாரம்:கனவுநிலை உரைத்தல் குறள் எண்:1214)

பொழிப்பு (மு வரதராசன்): நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக்கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.

மணக்குடவர் உரை: நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால், அக்கனவின் கண்ணே எனக்கு இன்பம் உண்டாகும்.
இது கண்டாற் பயனென்னை? காம நுகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நனவினான் நல்காரை நாடித்தரற்கு - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை அவர் சென்றுழி நாடிக் கொண்டு வந்து கனவு தருதலான்; கனவினான் காமம் உண்டாகும் - இக் கனவின்கண்ணே எனக்கு இன்பம் உண்டாகா நின்றது.
(காமம் - ஆகுபெயர். நான்காவது மூன்றன் பொருண்மைக்கண் வந்தது. 'இயல்பான் நல்காதவரை அவர் சென்ற தேயம் அறிந்து சென்று கொண்டு வந்து தந்து நல்குவித்த கனவால் யான் ஆற்றுவல்' என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: நனவில் வந்து அன்பு காட்டாதவரைத் தேடிக்கொண்டு வருவதற்குக் கனவு உதவுவதால் அக்கனவினிடத்தே எனக்கு இன்பம் தோன்றும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நனவினால் நல்காரை நாடித் தரற்கு கனவினான் காமம் உண்டாகும்.

பதவுரை: கனவினான்-கனவின்கண்; உண்டாகும்-உண்டாகிறது, உளதாகும்; காமம்-இன்பம்; நனவினால்-நனவின்கண், விழிப்பு நிலையின்கண்; நல்காரை-தலையளி செய்யாதவரை, அருள் செய்யாதவரை; நாடி-தேடி; தரற்கு-தருவதற்கு, தருதலால்.


கனவினான் உண்டாகும் காமம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அக்கனவின் கண்ணே எனக்கு இன்பம் உண்டாகும்.
பரிப்பெருமாள்: காமம் அதன்கண்ணே உண்டாகும்.
பரிதி: இன்பமாகப் பெற்றது கனவிலே கூடினமுறையால் என்றவாறு.
காலிங்கர்: நெஞ்சே! கனவின் கண்ணும் எனக்கு உண்டாகா நின்றது ஓர் ஆசை என்றவாறு.
பரிமேலழகர்: (இதுவும் அது.) இக் கனவின்கண்ணே எனக்கு இன்பம் உண்டாகா நின்றது.
பரிமேலழகர் குறிப்புரை: காமம் - ஆகுபெயர். நான்காவது மூன்றன் பொருண்மைக்கண் வந்தது. [காமம் என்னும் கருவியின் பெயர் அதனால் உண்டாகும் இன்பத்தை உணர்த்துதலால் கருவியாகுபெயராம்]

'கனவின் கண்ணே எனக்கு இன்பம்/ஆசை உண்டாகும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கனவில் காமம் உண்டாகின்றது', 'கனவினாலும் காம இன்பம் கிடைக்கிறது', 'அக்கனவின்பால் எனக்கு அன்புண்டாகிறது', 'கனவின் கண்ணே எனக்கும் இன்பம் உண்டாகின்றது' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கனவினிடத்தே எனக்கு காமஇன்பம் உண்டாகின்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நனவினால் நல்காரை நாடித் தரற்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால்.
மணக்குடவர் குறிப்புரை: இது கண்டாற் பயனென்னை? காம நுகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கண்டாற் பயனென்னை? காம நுகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: நனவினாலே நல்காரைப் பிரிந்தாரைப் பிரிந்தேன் என்ற துன்பம் விட்டு.
காலிங்கர்: நனவினிடத்து நல்காது பிரிந்த நம் காதலரைத் தேடிக் கொணர்ந்து தருதற்கு.
பரிமேலழகர்: நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை அவர் சென்றுழி நாடிக் கொண்டு வந்து கனவு தருதலான்.
பரிமேலழகர் குறிப்புரை: நான்காவது மூன்றன் பொருண்மைக்கண் வந்தது. 'இயல்பான் நல்காதவரை அவர் சென்ற தேயம் அறிந்து சென்று கொண்டு வந்து தந்து நல்குவித்த கனவால் யான் ஆற்றுவல்' என்பதாம். [ஆற்றுவல்=பொறுத்துக் கொள்வேன்]

'நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நனவில் அருளாதாரைத் தேடிக் காட்டுதற்கு', 'நனவில் வந்து எனக்கு இன்பம் தராத காதலரைத் தேடிப்பிடித்து என்னிடம் கொண்டுவந்து விடுவதனால்', 'நனவிலே வந்துஅருள் செய்யாதவரைக் கனவானது தேடிக் கொண்டு வந்து கொடுத்தலால்', 'நினைவின்கண் வந்து அன்பு செய்யாதாரைத் தேடித் தருவதனால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

நனவில் அருளாதாரைத் தேடித் தருவதனால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நனவில் அருளாதாரைத் தேடித் தருவதனால் கனவினிடத்தே உண்டாகும் காமம் என்பது பாடலின் பொருள்.
'உண்டாகும் காமம்' என்ற தொடர் குறிப்பது என்ன?

நனவில் வராத கணவரை என்னிடம் கொண்டுவந்து காட்டுவதால்தான் கனவு காண ஆசைப்படுகிறேன்- தலைவி.

நனவில் அன்பு செய்யாதவரைத் தேடிக் கொண்டு வந்து என்னிடம் தருவதால் கனவு காண்பதில் காதல் உண்டாகின்றது.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகப் பிரிந்து சென்றிருக்கும் தலைவரை எப்பொழுதும் நினைத்துக் கொண்டு துயருறுகிறாள் தலைவி. தன்னுடன் அவர் இல்லையே- அவரைக் காணமுடியவில்லையே என்பதை அவளால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. இச்சூழலில் அவர் கனவில் தோன்றியபோது அது அவளுடைய துயரத்தைத் துடைத்துவிட்டதாக உணர்கிறாள்.
கணவர் விடுத்த தூதினைக் கொண்டுவந்த கனவுக்கு நன்றி பாராட்ட என்ன விருந்து பண்ணுவேனோ என்று உள்ளம் முழுதும் மகிழ்ச்சி வழிந்தோடியது அவளுக்கு; மறுபடியும் அவரைக் கனவில் காணவேண்டி தன் கண்களை உறங்குமாறு வேண்டுகிறாள் தலைவி; நினைவின் கண் வந்து அன்பு செய்யாதவரைக் கனவில் காண்பதால் தன் உயிர் நிலைத்துள்ளது என்கிறாள்;
கனவுதரும் நன்மைகளை இவ்வாறு போற்றிக் கொண்டிருக்கிறாள் மனைவி.

இக்காட்சி:
பிரிவில் உள்ள கணவரைத் தேடிக் கனவு தன்னிடம் தருவதனால் அதன்கண் தனக்குக் காமம் பிறக்கிறது எனக் கூறுகிறாள் தலைவி. அவர் எங்கோ தொலைவில் இருப்பதால் இப்பொழுது நனவில் அவர் வந்து அன்பு செய்ய இயலாது. எனவே கனவில் அவரைக் காண ஆசைப்படுகிறேன். நாடித் தரற்கு என்ற தொடர்க்குக் கனவு அவரைத் தேடிப்பிடித்து என்னிடம் கொண்டுவந்து தருவதனால் என்பது பொருள். நனவில் வந்து அன்பு செய்யாத என் காதலரைக் கனவானது தேடிக் கொண்டு வந்து கொடுப்பதால் என்பதாம். கனவானது தன் தலைவர் உலகில் எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து தன்னிடம் கொண்டுவந்து சேர்ப்பிப்பதனால் அக்கனவு மீது காதல் கொள்கிறாள்; கனவில் அவருடன் கலக்கிறாள். இதைக் கனவின்கண் இன்பம் உண்டாகின்றது என உரைக்கிறாள் அவள்.

'உண்டாகும் காமம்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'உண்டாகும் காமம்' என்ற தொடர்க்கு (கனவின் கண்ணே) எனக்கு உண்டாகும் காமம், காமம் அதன்கண்ணே (கனவின் கண்ணே), இன்பமாகப் பெற்றது கனவிலே கூடினமுறையால், (கனவின் கண்ணும்) எனக்கு உண்டாகா நின்றது ஓர் ஆசை, (கனவின்கண்ணே) எனக்கு இன்பம் உண்டாகா நின்றது, (கனவில்) அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன, காமஇன்ப உணர்வுகள் உளவாகின்றன, (கனவில்) காமம் உண்டாகின்றது, (அக்கனவினிடத்தே) எனக்கு இன்பம் தோன்றும், (கனவினாலும்) காம இன்பம் கிடைக்கிறது, எனக்கு ஆவல் உண்டாகின்றது, எனக்கு அன்புண்டாகிறது, (கனவின் கண்ணே) எனக்கும் இன்பம் உண்டாகின்றது, (அக்கனவினிடத்து) எனக்கு இன்பம் உண்டாகிறது, ஏதுவான இன்ப நிகழ்ச்சிகள் கனவின்கண் நிகழ்கின்றன, (கனவிலே) எனக்கு இன்பம் உண்டாகிறது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

காமம் என்ற சொல்லுக்குக் காதல் என்ற பொருளும் உண்டு. நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால் கனவின்கண்ணே காமம் (காதல்) உண்டாகும் என்று ஒருசாராரும், கனவு நிலையில் தலைவருடன் கூடுவதால் காமத்தால் வரும் இன்பம் உண்டாகும் என்று மற்றொரு சாராரும் இக்குறளுக்குப் பொருள் கூறினர். மேலும் 'நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக்கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன' என்றும் உரைக்கப்பட்டது. காம நுகர்ச்சிக்குக் கனவு துணை செய்கின்றது என்ற பொருள் இங்கு சிறக்கும். நேரில் வந்து கலவாத கணவரைத்தேடித் தருதலால் கனவிலே எனக்கு காமஇன்பம் உண்டாகிறது என்பது கருத்து.

'உண்டாகும் காமம்' என்றது கனவின்கண் என் கணவரால் எனக்குக் காமஇன்பம் கிடைக்கிறது என்ற பொருள் தருவது.

நனவில் அருளாதாரைத் தேடித் தருவதனால் கனவினிடத்தே எனக்குக் காமஇன்பம் உண்டாகின்றது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கனவில் அவரைக் காணமுடிவதால் அதன்மீது எனக்குக் காதல் உள்ளது எனத் தலைவி கனவுநிலை உரைத்தல்.

பொழிப்பு

நனவில் வந்து அன்பு காட்டாதவரைத் தேடிக்காட்டுவதால் கனவினிடத்தே எனக்குக் காதல் உண்டாகிறது.