இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1213



நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்

(அதிகாரம்:கனவுநிலை உரைத்தல் குறள் எண்:1213)

பொழிப்பு (மு வரதராசன்): நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.



மணக்குடவர் உரை: நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவின்கண் காண்டலானே என்னுயிர் உண்டாகா நின்றது. இல்லையாயின், உயிருண்டாதற்குக் காரணமுண்டா என்றவாறு.
இது 'உறங்கினால் காணலாமோ' என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (ஆற்றாள் எனக் கவன்றாட்கு ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது.) நனவினான் நல்காதவரை - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை; கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு - யான் கனவின்கண் கண்ட காட்சியானே என்னுயிர் உண்டாகா நின்றது.
(மூன்றனுருபுகள் ஏழன் பொருண்மைக்கண் வந்தன. 'அக்காட்சியானே யான் ஆற்றியுளேன் ஆகின்றேன். நீ கவலல் வேண்டா', என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை யான் கனவில் கண்டு மகிழ்தலினால் என் உயிர் நிலைத்துள்ளது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நனவினான் நல்காதவரை கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு.

பதவுரை: நனவினால்-விழிப்பு நிலையின் கண்; நல்காதவரை-தலையளி செய்யாதவரை, அன்பு காட்டாதவரை; கனவினால்-கனவின் கண்; காண்டலின்-காண்பதால்; உண்டு-உளது; என்உயிர்-என்னுடைய உயிர்.


நனவினால் நல்கா தவரை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நனவின்கண் நமக்கு அருளாதவரை;
பரிப்பெருமாள்: நனவின்கண் நமக்கு அருளாதவரை;
பரிதி: நனவினாலே நல்காது பிரிந்தவரை;
காலிங்கர்:தோழி! நனவின்கண் நல்காது பிரிந்தவரை;
பரிமேலழகர்: (ஆற்றாள் எனக் கவன்றாட்கு ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது.) நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை;

'நனவின்கண் நமக்கு அருளாதவரை/நல்காது பிரிந்தவரை/தலையளி செய்யாதாரை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நனவிலே வந்து அணையாத காதலரை', 'விழிப்பில் வந்து இன்பம் கொடுக்காத காதலரை', 'நனவிலே வந்து எனக்கு இரக்கங் காட்டாதவரை', 'நினைவின்கண் (பகலில்) வந்து அன்பு செய்யாதவரை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நேரில் வந்து உடனிருந்து நமக்கு அன்பு செய்யாதவரை என்பது இப்பகுதியின் பொருள்.

கனவினால் காண்டலின் உண்டென் உயிர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கனவின்கண் காண்டலானே என்னுயிர் உண்டாகா நின்றது. இல்லையாயின், உயிருண்டாதற்குக் காரணமுண்டா என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: இது 'உறங்கினால் காணலாமோ' என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: கனவின்கண் காண்டலானே என்னுயிர் உண்டாகா நின்றது. இல்லையாயின், உயிருண்டாதற்குக் காரணமுண்டா என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது 'உறங்கினால் காணலாமோ' என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது
பரிதி: கனவிலே வந்தபடியால் என் உயிர் நிலைபெற்றது. என் நாயகர் பெருமை என்னையோ என்றவாறு.
காலிங்கர் ('காண்டலும்' பாடம்): கனவின்கண் ஒரு காலத்துக் காணப்பெறுதலுமே யாயின் அதுவே பற்றுக்கோடாக உளதாயிருக்கின்றது எனது உயிர் என்றவாறு.
பரிமேலழகர்: யான் கனவின்கண் கண்ட காட்சியானே என்னுயிர் உண்டாகா நின்றது.
பரிமேலழகர் குறிப்புரை: மூன்றனுருபுகள் ஏழன் பொருண்மைக்கண் வந்தன. 'அக்காட்சியானே யான் ஆற்றியுளேன் ஆகின்றேன். நீ கவலல் வேண்டா' என்பதாம். [அக்காட்சியானே-காதலரை யான் கனவினிடத்துக் கண்ட காட்சியாலே]

'கனவின்கண் காண்டலானே என்னுயிர் உண்டாகா நின்றது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கனவிலேனும் பார்த்தலின் என் உயிர் உண்டு', 'நான் தூக்கத்திலாவது சொப்பனத்தில் கண்டு இன்பமடைந்துவிட்டதால் என் உயிருக்கு இனிப் பயமில்லை', 'கனவிலே வந்து காண்பதினாலே என் உயிர் இன்னும் நிலைத்திருக்கின்றது', 'கனவில் காண்பதனால் என் உயிர் நிலைத்துள்ளது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

கனவின்கண் காண்பதாலே என்னுயிர் நீங்காமல் நிற்கிறது என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
நனவின்கண் நல்காதவரை கனவின்கண் காண்பதாலே என்னுயிர் நீங்காமல் நிற்கிறது என்பது பாடலின் பொருள்.
'நல்காதவர்' யார்?

'நேரில் வந்து அரவணைத்து அன்பு காட்டாத கணவரைக் காணவைத்து உயிர் நிலைக்கத் துணை செய்கிறது கனவு' - தலைவி.

நனவில் வந்து தண்ணளி செய்யாத கணவரைக் கனவிலாவது காண முடிவதால், அதுவே வாழ்வதற்குப் பற்றுக்கோடாக உள்ளது; அதனாலே என் உயிர் நிலைபெற்று உள்ளது என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
செயல் கருதித் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றுள்ள கணவர் வெகுதொலைவில் இருக்கிறார். பிரிவின் துயர் தாங்கமுடியாமல் வருந்திக் கொண்டிருக்கிறாள் இவள் இங்கு.
அதுசமயம் அவளது வருத்தம் நீங்க கனவு வழி ஒரு நல்ல செய்தி கிடைக்கிறது. இதைக் கொண்டுவந்த கனவுக்கு என்ன வகையான விருந்து செய்வேன்? என மனம் நிறைய மகிழ்ச்சி அடைந்தவளாயுள்ளாள் அவள்; தானும் அவருடன் கனவில் பேசி தான் பிழைத்துள்ளதைச் சொல்லவேண்டுமே என்பதற்காகத் தனக்காக வருந்தித் தூங்காதிருக்கும் தன் கண்களை மூடித் துயில்கொள்ளச் சொல்லி இறைஞ்சிக் கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
பிரிந்து போயுள்ள காதலரை நேரில் பார்க்க முடியவில்லையே என்று வேதனையுறும் தலைவியின் தவிப்பையும், அன்பையும், பற்றையும், பிணைப்பையும் கலந்து உணர்த்தும் குறட்பா இது.
தலைவர் பிரிந்து சென்றபின்னர், அவளது நினைவில் முழுதும், அவரே நிறைந்து இருக்கிறார். பிரிவுக் காலத்தில், தன் துயரைப் போக்குவதற்காகத் காதலரோடு கூடி வாழ்ந்த காலத்திலுள்ள இன்ப நிகழ்ச்சிகளை எல்லாம் நினைக்கிறாள். அவ்வினிய காட்சிகளையும் கணவரையும் கனவிலும் கண்டு் மகிழ்கிறாள். தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தலைவரைக் கனவில்தான் காணமுடிகிறது. அவரைக் கனவில் காண்பதால் மனதுக்கு ஓரளவு ஆறுதல் உண்டாகிறது. இந்தக் கனவும் இல்லாவிட்டால் தன் உயிர் பிரிந்திருக்கும்; நனவில் அவர் அன்பைத் துய்க்கும் வாய்ப்புக் கிட்டாத தனக்குக் கணவர் கனவில் வந்து செல்வதே தான் உயிர் வாழ்வதற்குக் காரணம் என்கிறாள்.

'நல்காதவர்' யார்?

நல்காதவர் என்ற சொல்லுக்கு அருளாதவர், தலையளி செய்யாதார், அணையாத காதலர், அன்பு செய்யாத காதலர், இன்பம் கொடுக்காத காதலர், நன்மை செய்யாத துணைவர், இரக்கங் காட்டாதர் என்றவாறு பொருள் கூறினர் உரையாசிரியர்கள்.

‘நல்காதவர்’ என்பது அகப்பாடல்களில் அருளாதார் என்னும் பொருளிலேயே பயின்று வரும். அதற்கு அருள் செய்யாதார் அதாவது அன்பு காட்டாதவர் எனப் பொருள் கொள்வது மரபாகும். நசைஇயார் நல்கார் எனினும்.... (குறள்1199) ....... நனவினால் நல்காரை நாடித் தரற்கு (குறள் 1214) நனவினால் நல்காரை நோவர்........ (குறள் 1219) பரிந்தவர் நல்கார் என்றேங்கி....... (1248) என்னும் குறளின் பிற இடங்களிலும் நல்கார் என்பது தண்ணளி செய்யாதவர் என்ற பொருளிலேயே ஆளப்பட்டது.

'நல்காதவர்' என்ற சொல்லுக்கு அருள் செய்யாதவர் என்று பொருள்.

நனவின்கண் உடனிருந்து நமக்கு அன்பு செய்யாதவரை கனவின்கண் காண்பதாலே என்னுயிர் நீங்காமல் நிற்கிறது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கணவரை அங்கு மட்டுமே காண்பதால் கனவில் மட்டும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று தலைவி கனவுநிலை உரைத்தல்.

பொழிப்பு

நனவில் காட்சி அளிக்காதவரைக் கனவிலாவது காண்பதால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.