இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1212



கயல்உண்கண் யான்இரப்பத் துஞ்சின் கலந்தார்க்கு
உயல்உண்மை சாற்றுவேன் மன்

(அதிகாரம்:கனவுநிலை உரைத்தல் குறள் எண்:1212)

பொழிப்பு (மு வரதராசன்): கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால்,(அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும் தன்மையைச் சொல்வேன்.

மணக்குடவர் உரை: என்னுடைய கயல்போலும் உண்கண் யான் வேண்டிக் கொள்ள உறங்குமாயின் நம்மோடு கலந்தார்க்கு நாம் உய்தலுண்மையைச் சொல்லுவேனென்று உறங்குகின்றதில்லையே.
மன்- ஒழியிசையின்கண் வந்தது. கயலுண்கண்- பிறழ்ச்சி யுடைய கண்.

பரிமேலழகர் உரை: (தூது விடக் கருதியாள் சொல்லியது, ) கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின் - துஞ்சாது வருந்துகின்ற என் கயல் போலும் உண்கண்கள் யான் இரந்தால் துஞ்சுமாயின்; கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன் - கனவிடைக் காதலரைக் காண்பேன், கண்டால் அவர்க்கு யான் ஆற்றியுளேனாய தன்மையை யானே விரியச் சொல்வேன்.
('கயலுண்கண்' என்றாள், கழிந்த நலத்திற்கு இரங்கி. உயல் - காம நோய்க்குத் தப்புதல். தூதர்க்குச் சொல்லாது யாம் அடக்குவனவும், சொல்லுவனவற்றுள்ளும் சுருக்குவனவற்றின் பரப்பும் தோன்றச் சொல்வேன் என்னும் கருத்தால், 'சாற்றுவேன்' என்றாள். இனி, அவையும் துஞ்சா: சாற்றலுங்கூடாது என்பது படநின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. முன்னும் கண்டாள் கூற்றாகலின், கனவு நிலை உரைத்தலாயிற்று.)

வ சுப மாணிக்கம் உரை: கண்கள் தூங்கின் கனவில் வரும் காதலர்க்கு எப்படிப் பிழைத்துள்ளேன் என்பது சொல்வேன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கயல்உண்கண் யான்இரப்பத் துஞ்சின் கலந்தார்க்கு உயல்உண்மை சாற்றுவேன் மன்.

பதவுரை: கயல்-சேற்கெண்டை; உண்கண்-மையுண்டகண்; யான்-நான்; இரப்ப-வேண்டிக் கேட்டுக் கொள்ள, கெஞ்சி நிற்க; துஞ்சின்-உறங்கினால்; கலந்தார்க்கு-என்னுள் கலந்தார்க்கு, கூடுவார்க்கு; உயல்-(இறந்து போகாது)தப்புதல்; உண்மை-உள்ளதன்மை; சாற்றுவேன்-விரியச் சொல்லுவேன், தெளியச் சொல்வேன்; மன்-(ஒழியிசை).


கயல்உண்கண் யான்இரப்பத் துஞ்சின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்னுடைய கயல்போலும் உண்கண் யான் வேண்டிக் கொள்ள உறங்குமாயின்;
மணக்குடவர் குறிப்புரை: கயலுண்கண்- பிறழ்ச்சி யுடைய கண்.
பரிப்பெருமாள்: என்னுடைய கயல்போலும் உண்கண் யான் வேண்டிக் கொள்ள உறங்குமாயின்;
பரிப்பெருமாள் குறிப்புரை: மன்- ஒழியிசையின்கண் வந்தது. கயலுண்கண்- பிறழ்ச்சி யுடைய கண். ஈண்டு எப்பொழுதும் காதலர் வரவு பார்த்திருக்கின்ற தடுமாற்றத்தை உடைத்தாகிய கண் என்றவாறாயிற்று. 'உறங்கவேணும்' என்ற தோழிக்குக் 'கண்கள் நீயும் நானும் வேண்டிக்கொள்ள உறங்குமாயின் இத்துணைநாள் சாவாது இருந்தோம் என்று நம் காதலர்க்கு உரைக்கலாயிற்று' என்று தலைமகள் கூறியது.
பரிதி: கயல்போன்ற கண்ணே! என் நாயகர் கனவில் வரும்படி நீ துஞ்சுவாயாகில் வேண்டி உடனே வரும்படி சொல்லி நிறுத்திக்கொள்வேன்;
காலிங்கர்: [யாமிரப்பத் பாடம்] நீரோடு வாழும் கயல்போல நீந்தும் எம் கலுழ் கண்ணினை ஒருகால் எம்பொருட்டாகவே நீர் துஞ்சவேண்டும் என்று யாம் இரந்துகொள்ள அருளித் துஞ்சுமாயின்;
பரிமேலழகர்: (தூது விடக் கருதியாள் சொல்லியது,) துஞ்சாது வருந்துகின்ற என் கயல் போலும் உண்கண்கள் யான் இரந்தால் துஞ்சுமாயின்; [தூது விடக் கருதியாள் - நினைத்த தலைவி; துஞ்சாது - உறங்காமல்; யான் இரந்தால் - நான் யாசித்து வேண்டினால் ]
பரிமேலழகர் குறிப்புரை: 'கயலுண்கண்' என்றாள் கழிந்த நலத்திற்கு இரங்கி. [கழிந்த நலம் - இழந்த அழகு]

'என்னுடைய கயல்போலும் உண்கண் யான் வேண்டிக் கொள்ள உறங்குமாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். கயலுண்கண் என்பதற்குத் தொல்லாசிரியர்கள் தடுமாற்றம் உடைய கண்கள்/கலுழ் கண்கள்/வருந்துகின்ற கண்கள் எனப் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கயல் போன்ற மையுண்ட கண்கள் யான் வேண்டிக்கொள்ள உறங்குமாயின்', 'கெண்டை மீன்கள் போலப் புரளுகிற மையுண்ட என் கண்களை நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறேன். அவை மீண்டும் உறங்கினால்', 'கயல்போலும் என்னுடைய கண்கள் நான் வேண்டிக் கொள்ளுகிறபடி தூங்குமானால்', 'உறங்காது வருந்துகின்ற என்னுடைய கயல்மீன் போலும் மை பூசப்பெற்ற கண்கள் நான் வேண்ட உறங்குமானால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கயல்மீன் போலும் உண்கண்கள், நான் வேண்ட உறங்குமானால் என்பது இப்பகுதியின் பொருள்.

கலந்தார்க்கு உயல்உண்மை சாற்றுவேன் மன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நம்மோடு கலந்தார்க்கு நாம் உய்தலுண்மையைச் சொல்லுவேனென்று உறங்குகின்றதில்லையே.
மணக்குடவர் குறிப்புரை: மன்- ஒழியிசையின்கண் வந்தது.
பரிப்பெருமாள்: நம்மோடு கலந்தார்க்கு நாம் உய்தலுண்மையைச் சொல்லுவோம் உறங்குகின்றதில்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: மன்- ஒழியிசையின்கண் வந்தது.
'உறங்கவேணும்' என்ற தோழிக்குக் 'கண்கள் நீயும் நானும் வேண்டிக்கொள்ள உறங்குமாயின் இத்துணைநாள் சாவாது இருந்தோம் என்று நம் காதலர்க்கு உரைக்கலாயிற்று' என்று தலைமகள் கூறியது.
பரிதி: நீ துஞ்சுவாயாக என்றவாறு.
காலிங்கர்: ['கரந்தார்', 'சாற்றுவென்' பாடம்] சொல்லாது பிரிந்த நம் காதலர்க்கு யாம் உய்தலுடைமைக்கு வேண்டும் உபாயத்தைச் சொல்லிக் கொள்வம் இனி நெஞ்சே! என்றவாறு.
பரிமேலழகர்: கனவிடைக் காதலரைக் காண்பேன், கண்டால் அவர்க்கு யான் ஆற்றியுளேனாய தன்மையை யானே விரியச் சொல்வேன். [ஆற்றி உளேனாய தன்மை - பொறுத்து இருக்கின்றேன் ஆகிய தன்மை]
பரிமேலழகர் குறிப்புரை: உயல் - காம நோய்க்குத் தப்புதல். தூதர்க்குச் சொல்லாது யாம் அடக்குவனவும், சொல்லுவனவற்றுள்ளும் சுருக்குவனவற்றின் பரப்பும் தோன்றச் சொல்வேன் என்னும் கருத்தால், 'சாற்றுவேன்' என்றாள். இனி, அவையும் துஞ்சா: சாற்றலுங்கூடாது என்பது படநின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. முன்னும் கண்டாள் கூற்றாகலின், கனவு நிலை உரைத்தலாயிற்று. [அவையும் துஞ்சா- கண்களும் உறங்கா; சாற்றலும் - தலைவர்க்கு யான் பொறுத்திருக்கின்றேன் ஆகிய தன்மையைக் கூறுதலும்; முன்னும் கண்டாள் - முன்னும் தலைவனைக் கனவினிடத்துக் கண்ட தலைவியது]

'நம்மோடு கலந்தார்க்கு நாம் உய்தலுண்மையைச் சொல்லுவேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவ்வுறக்கத்தில் என்னைக் கூடிய காதலரைக் கண்டு அவர்க்கு யான் பிரிவுத்துயரைத் தாங்கி உயிர்வாழும் தன்மையை உரைப்பேன்', 'என காதலரை மீண்டும் கனவிற் கண்டு நான் ஏன் இன்னும் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றிய உண்மையைச் சொல்லி விடுவேன்', 'காதலர்க்கு நான் பிழைத்திருப்பதை நேரே விரியச் சொல்லுவேன்', 'கனவில் என் காதலர்க்கு நான் எவ்வாறு பிழைத்துள்ளேன் என்பதை விரியச் சொல்லுவேன்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

கனவில் என்னைக் கூடும் காதலர்க்கு நான் எவ்வாறு பிழைத்துள்ளேன் என்பதை விரியச் சொல்லுவேன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கயல்உண்கண் நான் வேண்ட உறங்குமானால் கனவில் என்னைக் கூடும் காதலர்க்கு நான் எவ்வாறு பிழைத்துள்ளேன் என்பதை விரியச் சொல்லுவேன் என்பது பாடலின் பொருள்.
'கயல்உண்கண்' குறிப்பது என்ன?

தூங்காமல் கண்ணீரில் இங்கும் அங்கும் அலைகின்றனவே என் விழிகள்.

கயல்போலும் உண்கண்கள் நான் வேண்டிக் கொள்ளுகிறபடி தூங்குமானால் கனவில் காட்சி தரும் காதலர்க்கு நான் பிரிவைத் தாங்கிக்கொண்டு உயிருடன் உள்ளமையை விரிய எடுத்துக் கூறுவேன்.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகப் பிரிந்து சென்றுள்ள கணவர் இன்னும் இல்லம் திரும்பவில்லை. தனித்திருக்கும் தலைவி பிரிவை ஆற்றமுடியாமல் இருக்கிறாள். அவரைப் பற்றிய செய்தி ஒன்றுமே வரவில்லையே. அவர் யாரிடமேனும் செய்தி சொல்லி அனுப்பியிருக்கலாமே எனப் பலவாறு எண்ணங்கள் தோன்றி மறைகின்றன. எப்பொழுது அவரைக் காணப்போகிறோனே என்று ஏங்கிய உள்ளத்துடன் இருக்கிறாள். அதுசமயம் அவர் கனவில் தோன்றி செய்தி ஒன்றைச் சொல்கிறாராம். அந்தக் கனவு தன்னுடைய துயரத்தை முற்றிலும் மாற்றிவிட்டதே என்று உணர்கிறாள். அதற்காக கனவுக்கு நன்றி பாராட்ட எண்ணுகிறாள்! அக்கனவுக்கு விருந்து பண்ணுவேனா? விருந்துணவாக என்ன பண்ணப்போகிறேன்? மகிழ்ச்சி மிகக் கொண்டு 'கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை' என்ற நிலையில் உள்ளாள் தலைவி.

இக்காட்சி:
தலைவர் பிரிவை ஆற்றமாட்டாத காதலி எப்பொழுதும் அவரைப் பற்றிய நினவாகவே உள்ளாள். தண்ணீரில் கயல்மீன்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருப்பதைப்போல, அவளது கண்ணீர் நிறைந்த கண்கள் பிறழ்ந்து கொண்டிருப்பதால் அவளுக்குத் தூக்கம் வர இயலாதிருக்கிறது. இன்றும் என் கனவில் அவர் வருவார். வந்தால் எப்படி தான் பொறுமையாக அவர் வரவுக்காக உயிருடன் உள்ளேன் என்பது பற்றி அவருடன் பேச நிறைய உள்ளது. ஆனால் கனவு வரவேண்டுமே. நான் கண்களை 'எனக்காக உறங்கவேண்டும்' எனக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். நான் வேண்டியபடி அவை உறங்கினால் கனவில் அவரைச் சந்தித்துப் பிரிவைப் பொறுத்து உயிர் வைத்திருக்கும் இயல்பை விரித்துப் பேசிவிடுவேன். ஆனால் இந்தக் கண்கள் தூங்காமல் கயல்மீன் போல் கலுழுவதால் உறங்குவதில்லையே! தூங்காமல் எப்படிக் கனவு காணமுடியும்? என் செய்வது? அதற்குக் கண்களை இரந்தாவது வேண்டிக் கொள்வேன் என்று கனவுநிலைக்குக் காத்திருக்கிறாள் தலைவி.

உயல் உண்மை என்ற தொடர் (இறவாமையிலிருந்து) தப்பித்து உள்ள தன்மை எனப் பொருள்படும். உயலுண்மைக்குக் காரணமாக ... அவரொடு யான் உற்ற நாள் உள்ள உளேன் (நினைந்தவர் புலம்பல் குறள் 1206 பொருள்:....அவரோடு கூடி இன்பம் நுகர்ந்த நாளை நினைப்பதாற் பிழைத்திருக்கின்றேன்) என்றதை நாமக்கல் இராமலிங்கம் காட்டுவார்.

'கயல்உண்கண்' குறிப்பது என்ன?

'கயல்உண்கண்' என்றதற்குக் கயல்போலும் உண்கண், கயல்போன்ற கண்ணே!, நீரோடு வாழும் கயல்போல நீந்தும் எம் கலுழ் கண், [துஞ்சாது வருந்துகின்ற] கயல் போலும் உண்கண்கள், கண்கள், கயல்மீன்போல் பிறழும் மையெழுதிய என் கண்கள், கயல் போன்ற மையுண்ட கண்கள், கெண்டைமீன் போலும் கண்ணே!, கயல்போலும் என்னுடைய கண்கள், [உறங்காது வருந்துகின்ற என்னுடைய] கயல்மீன் போலும் மை பூசப்பெற்ற கண்கள், கயல்மீன்கள் போன்ற என் கண்கள், தூக்கம் பெறாது வருந்துகின்ற என் கயல் மீன்போலும் மையுண்ட கண்கள், (தூங்காது தொல்லைப்படுத்தும்) மீனைப் போன்ற மையுண்ட கண்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

கயல் என்ற சொல் மீன் என்ற பொருள் தருவது. பெண்ணின் கண் வடிவத்தை மீன் போன்றது எனப் புனைவது மரபு. உண்கண் என்பதற்கு குறளில் பிற இடங்களில் மையுண்ட கண்கள் என்றே பொருள் கொள்வர். எனவே கயலுண்கண் என்பதற்கு கயல் போன்ற மையுண்ட கண் என்ற பொருளில் இன்றைய ஆசிரியர்களில் பலர் உரை செய்தனர். ஆனால் பிரிவில் வருந்திக் கொண்டிருக்கும் தலைவி மையிடுவாளா என்று பழம் ஆசிரியர்கள் அனைவரும் எண்ணினர் போலும். அவர்கள் மையுண்ட கண்கள் என்ற பொருளைத் தவிர்த்தனர். அவர்கள் பிறழ்ச்சியுடைய கண், எப்பொழுதும் காதலர் வரவு பார்த்திருக்கின்ற தடுமாற்றத்தை உடைத்தாகிய கண், நீரோடு வாழும் கயல்போல நீந்தும் எம் கலுழ் கண், துஞ்சாது வருந்துகின்ற என் கயல் போலும் உண்கண் எனத் துயரத்தால் அலைபாயும் கண்கள் எனவே உரைத்தனர். பரிமேலழகர் கழிந்த நலத்திற்கு [அதாவது இழந்த அழகு] இரங்கி 'கயலுண்கண்' என்றாள் என்று உரைத்தார்.
கயல் என்பது கெண்டை என்ற மீன் வகையைக் குறிப்பது. தேவநேயப் பாவாணர் கயல் என்பது சேல்கெண்டை மீன் என்கிறார். கவிஞர்கள் பெண்ணின் கண்ணை கயல்மீன் என்று சொல்லிப் பாடி மகிழ்வர். இப்பாடலில் அதன் வடிவத்தைவிட அது நீரில் பிறழும் தன்மையே பொருந்தி வருகிறது.
கயலுண்கண் என்பதற்குப்

தொல்லாசியர்கள் கூறியது போல கயலுண்கண் என்பதற்கு அழுத நீர் நிறைந்த கண்ணில் நீந்தும் கயல்போன்ற கண்கள் என்ற பொருள் பொருந்தும்.

கயல்மீன் போலும் உண்கண்கள், நான் வேண்ட உறங்குமானால் கனவில் என்னைச் சந்திக்கும் காதலர்க்கு நான் எவ்வாறு பிழைத்துள்ளேன் என்பதை விரியச் சொல்லுவேன் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

'அவரைக் கனவில் காணவேண்டும். உறங்குங்களேன்!' எனக் கண்களை இறைஞ்சும் தலைவியின் கனவுநிலை உரைத்தல்.

பொழிப்பு

கயல் போன்ற கண்கள் யான் வேண்டிக்கொள்ளத் தூங்குமாயின், கனவில் என்னைக் கூடும் காதலரிடம் யான் பிரிவுத்துயரைத் தாங்கி உயிர்வாழும் தன்மையை விரித்துரைப்பேன்.

.