காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து
(அதிகாரம்:கனவுநிலை உரைத்தல்
குறள் எண்:1211)
பொழிப்பு (மு வரதராசன்): (யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?
|
மணக்குடவர் உரை:
நங்காதலர் விட்ட தூதரோடே வந்த கனவினுக்கு யான் யாது விருந்து செய்வேன்?
இது தலைமகளாற்றுதற் பொருட்டுக் காதலர் வாராநின்றாரென்று தூதர் வரக் கனாக் கண்டேனென்று தோழி சொல்லியது.
பரிமேலழகர் உரை:
(தலைமகன் தூது வரக் கண்டாள் சொல்லியது). காதலர் தூதொடு வந்த கனவினுக்கு -யான் வருந்துகின்றது அறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதினைக் கொண்டு என் மாட்டு வந்த கனவினுக்கு; விருந்து யாது செய்வேன் -விருந்தாக யாதனைச் செய்வேன்?
('விருந்து' என்றது விருந்திற்குச் செய்யும் உபசாரத்தினை. அது கனவிற்கு ஒன்று காணாமையின், 'யாது செய்வேன்' என்றாள்.)
இரா சாரங்கபாணி உரை:
காதலர் விடுத்த தூதினை என்னிடம் கொண்டு வந்த கனவினுக்கு யான் விருந்தாக எதனைச் செய்வேன்?
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாது விருந்து செய்வேன் கொல்? .
பதவுரை: காதலர்-காதலர்; தூதொடு-தூதினைக்கொண்டு, செய்தியுடன்; வந்த-வந்த; கனவினுக்கு-கனாவிற்கு; யாது-எது, என்ன; செய்வேன்-இயற்றுவேன்; கொல்- (அசைநிலை); விருந்து-விருந்துணவு.
|
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நம்காதலர் விட்ட தூதரோடே வந்த கனவினுக்கு;
பரிப்பெருமாள்: நம்காதலர் விட்ட தூதரோடே வந்த கனவினுக்கு;
பரிதி: காதலர் வரவிட்ட தூது கனவிலே கண்டதற்கு;
காலிங்கர் ('கனவிற்கிங்கு' பாடம்): நெஞ்சே! நெருநலொடு கனவு என்கண் வருகின்ற பொழுது எம் காதலர் வரவிட்ட தூதொடும் வந்து தோன்றியது;
பரிமேலழகர்: (தலைமகன் தூது வரக் கண்டாள் சொல்லியது) யான் வருந்துகின்றது அறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதினைக் கொண்டு என் மாட்டு வந்த கனவினுக்கு; [தூது வரக் கண்டாள் - தலைவன் விடுத்த தூதினை வரக் கண்ட தலைவி]
'காதலர் விட்ட தூதரோடே வந்த கனவினுக்கு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'காதலரின் தூதாக வந்த கனவுக்கு', 'என் காதலரே என்னிடம் தூதாக வந்ததாக நான் கண்ட கனாவுக்கு', 'காதலரிடமிருந்து தூதுகொண்டு வந்த கனவினுக்கு', 'நான் வருந்துகின்றதை அறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதினைக் கொண்டு என்னிடம் வந்த கனவினுக்கு', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
காதலரின் செய்தியோடு வந்த கனவுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.
யாதுசெய் வேன்கொல் விருந்து:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யான் யாது விருந்து செய்வேன்?
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகளாற்றுதற் பொருட்டுக் காதலர் வாராநின்றாரென்று தூதர் வரக் கனாக் கண்டேனென்று தோழி சொல்லியது.
பரிப்பெருமாள்: யான் யாது விருந்து செய்வேன்?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகளாற்றுதற் பொருட்டுக் காதலர் வாராநின்றாரென்று தூதர் வரக் கனாக் கண்டேனென்று தோழி சொல்லியது.
பரிதி: யாது செய்வேன் விருந்து என்றவாறு.
காலிங்கர் ('யாதுகொல் செயவென்' பாடம்): அதனால் மற்று இப்பேருதவி செய்த கனவிற்கு யான் விருந்து உபசாரம் செய்யும் இடத்து யாதொன்று யாதொன்று செய்தால் தணிவது அறிகிலேன் என்றவாறு.
பரிமேலழகர்: விருந்தாக யாதனைச் செய்வேன்?
பரிமேலழகர் குறிப்புரை: 'விருந்து' என்றது விருந்திற்குச் செய்யும் உபசாரத்தினை. அது கனவிற்கு ஒன்று காணாமையின், 'யாது செய்வேன்' என்றாள்.
'யான் யாது விருந்து செய்வேன்?' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'என்ன விருந்து நான் செய்வேன்?', 'என்ன பரிசளித்துச் சிறப்புச் செய்தாலும் போதாது', 'நான் என்ன விருந்து செய்வேன்?', 'நான் விருந்தாக எதனைச் செய்வேன்?' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
விருந்தாக நான் என்ன செய்வேன்? என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
காதலரின் தூதாக வந்த கனவுக்கு விருந்தாக நான் என்ன செய்வேன்? என்பது பாடலின் பொருள்.
'விருந்து' என்றதன் பொருள் என்ன?
|
கணவரின் தூது வருகிறது; அவரது செய்தியைச் சுமந்து வரும் கனவுக்கு விருந்தாக என்ன செய்வேன்?
காதலர் விடுத்த தூதினைக் கொண்டு வந்த கனவுக்கு நான் விருந்தாக எதனைச் செய்வேன்?
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாகப் பிரிந்து சென்றுள்ள காதலர் இன்னும் திரும்பவில்லை.
தனித்திருக்கும் தலைவி-தலைவன் இருவரும் தனித்தனியாகத் தங்கள் பிரிவின் துன்பத்தை நினைந்து புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.
பிரிவை ஆற்றமுடியாமல் இருக்கிறாள் தலைவி. காதலரிடமிருந்து எதிர்பார்க்கக்கூடிய தூதும் காணப்படவில்லை. காதலர் எங்கே இருக்கிறாரோ, என்ன செய்கிறாரோ, எப்போது திரும்புவாரோ, அவரைப் பற்றிய செய்தி ஒன்றுமே தெரியவில்லையே. அவர் யாரிடமேனும் செய்தி சொல்லி அனுப்பக் கூடாதோ என்று பற்பலவாறு எண்ணங்கள் தோன்றி மறைகின்றன. எப்பொழுது அவரைக் காண்பேன் என்று ஏக்கத்துடன் இருக்கிறாள்.
இக்காட்சி:
பிரிந்து அயல் சென்றுள்ள கணவரை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கும்போது, ஓர் இரவில், தலைவியின் கனவில் அவரது அன்புச் செய்தி ஒன்று கூறப்பட்டது. காதலரது இன்பச் செய்தியால் தலைவி பெருமகிழ்ச்சி கொண்டாள். இந்தக் கனவு தன்னுடைய துயரத்தை முற்றிலும் மாற்றிவிட்டதே என்று உணர்கிறாள். நன்றி பாராட்டவும் மகிழ்ச்சியைக் கொண்டாடவும் அக்கனவுக்கு விருந்தளிக்க வேண்டுமே! விருந்துணவாக என்ன பண்ணுவேன்? இப்பேருதவி செய்த கனவிற்கு யான் விருந்தளிக்க யாதொன்று யாதொன்று செய்தால் தணிவது அறியமாட்டேனே! கனவுக்கு எப்படி விருந்தளிப்பது? கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லையே எனப் பலவாறான மன ஓட்டங்கள் நிறைந்த மகிழ்ச்சி மிகுதி கொண்ட மனநிலையில் கூறுகிறாள் தலைவி. இவையனைத்தும் கனவுநிலையில் நிகழ்ந்தன.
மனதில் எந்த நினைவு மேலோங்கி நிற்கிறதோ, எதை மிகுதியாக நினைந்து ஏங்குகிறதோ, அதுவே கனவில் வந்து அமையும். பகலெல்லாம் கணவரையே நினைந்து நினைந்து கழிந்ததால் இரவில் உறங்கும்போதும் அவர்பற்றிய எண்ணமே மேலெழுந்து நின்றது. தூக்கத்தில் கனவு வந்து அதில் ஒரு செய்தி உரைக்கப்பட்டது. செய்தி கேட்ட காதலி இறும்பூதெய்துகிறாள்.
கனவே தூதாக வந்தது இங்கு. இத்தூது சற்று வேறுபாடானது. கதவுகளைத் தட்டாமல் அனுமதிக்கும் காத்திராமல் நேரே அயர்ந்திருந்த கண்ணினுக்குள் பயமின்றி போயமர்ந்து காதலரின் காட்சியோடு செய்தி தந்தது. கனவையே தன் காதற்தலைவனிடமிருந்து வந்த தூதாக எண்ணிப் பாடியது ஒரு புதுமை.
தூதுவரக் கனாக் கண்டேன் எனத் தோழி தலைவியை ஆற்றுதற் பொருட்டுக் கூறியதாக மணக்குடவர் காட்சி அமைப்பார்.
எம் காதலர் வரவிட்ட தூதொடும் வந்து தோன்றியது கனவு என்று தன் நெஞ்சிற்குக் கூறியதாக காலிங்கர் கொள்வார்.
தலைமகன் தூதுவரக் கண்ட தலைவி கூறியது என்று சூழல் அமைத்தார் பரிமேலழகர்.
‘காதலர் தூதொடு என்பதற்கு காதலரையும் தூதுவரையும் என்றும் உரை உள்ளது. காதலரே கனவில் வந்தார் என்னும் போது தூதும் உடன் கூறுவதால் பயன் இல்லை. காதலரே தூதாய் கனவில் வருவதாகவும் உரைத்தனர். ஆனால் காதலரே தூதாக வந்தார் என்று கூறுவது மரபில்லை என்பார் இரா சாரங்கபாணி.
|
'விருந்து' என்றதன் பொருள் என்ன?
'விருந்து' என்ற சொல்லுக்கு விருந்து, விருந்து உபசாரம், பெருமை எனப் பொருள் கூறினர், விருந்து என்னுஞ்சொல் விருந்தாளியையும் விருந்துணவையும் குறிக்கும். இங்கு விருந்தென்றது விருந்திற்குப் படைக்குஞ் சிறப்புணவை. நல்ல செய்தி கொண்டுவந்த தூதான கனவுக்கு ஏதாவது பரிசளிக்க எண்ணுகிறாள் தலைவி. ஏன் விருந்தே படைக்கலாமே எனவும் சிந்தனை செல்கிறது. ஆனால் கனவுக்கு எப்படி விருந்து அளிப்பது?
தலைவியின் மகிழ்ச்சியை வெளிக்காட்ட விருந்து கொடுக்க அவள் நினைப்பதாகச் சொல்லப்பட்டது.
'விருந்து' என்ற சொல்லுக்கு விருந்துணவு என்று பொருள்.
|
காதலரின் தூதாக வந்த கனவுக்கு விருந்தாக நான் என்ன செய்வேன்? என்பது இக்குறட்கருத்து.
தூதாக வந்த கனவுநிலைஉரைத்தல்.
காதலரின் தூதாக வந்த கனவுக்கு விருந்தாக எதனைச் செய்வேன்?
|